×

காப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள்- சித்திரகுப்தர்

சித்ரா பௌர்ணமி : 26 - 4 - 2021

கயிலாய மலையின் பனிச்சிகரங்கள், அடியார்களின் உள்ளம்போல உருகிக் கொண்டிருந்தன. அடியார்களின் மனக் கோவிலில் குடிகொண்ட சிவபெருமான், கயிலையில் வீற்றிருக்கிறார்; அருகிலே  அம்பிகை வீற்றிருக்கிறார். அமைதியாக இருந்த அந்நேரத்தில் மௌனத்தைக் கலைத்தார் சிவபெருமான்; ‘‘தேவி! அவரவர் செய்கின்ற பாவ - புண்ணியங்களை எழுதிவைக்க ஒருவன் வேண்டும்’’ என்றார்.  அம்பிகை அதை ஆமோதித்தார்.உடனே சிவபெருமான், ‘‘சரி! எண்ணத்தைச் செயலாக்குவோம். சித்திரக்கோலும் தங்கப் பலகையும் கொண்டு வா!’’ என்றார். அம்பிகையும் அவற்றைக் கொண்டு வந்தார்.  சிவபெருமான், வண்ணங்களைக் குழைத்துத் தன்னைப் போலவே ஓர்அழகான குழந்தை வடிவை, தங்கப் பலகையில் வரைந்தார்; வரைந்து முடித்ததும் அதை ஒரு தடவை நன்றாகப் பார்த்து விட்டு, சற்று  விலகியிருந்த அம்பிகையை அருகில் அழைத்து, ‘‘தேவி! ஓவியத்தைப் பார்!’’ என்றார்.

ஓவியத்தை முழுமையாகப் பார்த்த அம்பிகை, ‘‘சுவாமி! ஓவியத்தில் இருக்கும் இந்தக் குழந்தையை, நீங்களே கூப்பிடுங்கள்!’’ என்றார். சிவபெருமானும் மனம் நிறைந்த அன்புடன், ‘‘மகனே வா!’’  என்றழைத்துக் கைகளை நீட்டினார். ஓவியத்தில் இருந்த குழந்தை உயிர்பெற்று எழுந்து, உலகிற்கே தாயும் தந்தையுமாகிய அம்பிகையையும் சிவபெருமானையும் வணங்கியது. அக்குழந்தையின்  தலையில் தம் திருக்கரங்களை வைத்து ஆசிர்வாதம் செய்த சிவபெருமான், ‘‘குழந்தாய்! நீடூழி வாழ்வாய் நீ!

உலகில் உள்ள ஜீவராசிகள் செய்யும் எல்லாச் செயல்களையும் கவனித்து, ஒன்று விடாமல் கணக்கெழுதும் பணியைச் செய்து வா!’’ என்றார். அதன்பின் அம்பாளும் சிவபெருமானும், அக்குழந்தைக்குப்  பலவிதமான ஆபரணங்களைச் சூட்டினார்கள்; குழந்தையின் கழுத்தில் பொன்மாலை, கைகளில் தங்கக்காப்புகள், இடுப்பில் தங்க ஒட்டியாணம், காது களில் ஔிவீசும் குண்டலங்கள் எனக் குழந்தை  பேரழகோடு ஜொலித்தது. சித்திரத்தில் இருந்து உருவானதால் அக்குழந்தைக்கு, சிவபெருமானும் அம்பிகையும் ‘சித்திரபுத்திரன்’ என்று, அக் குழந்தைக்குப் பெயர் சூட்டினார்கள். (நாமறிந்த சித்திரகுப்தன்  கதை பின்னால் வரும்).

பெயர் சூட்டியதோடு மட்டுமல்லாமல்,சிவபெருமானும் அம்பாளும் அக்குழந்தைக்கு, அதிகாரத்தைக் குறிக்கும் மோதிரத்தை அளித்து, ‘‘குழந்தாய்! சித்திரபுத்திரா! அவரவர் பாவ-புண்ணியக் கணக்குகளை  எழுதி, எங்களிடம் அவ்வப்போது தெரிவிக்க வேண்டும்!’’ என்றார்கள், ஈஸ்வர தம்பதிகள்.சித்திரபுத்திரனும் அங்கேயே சிவ சந்நதியில் இருந்தவாறே, ஜீவராசிகளின் பாவ - புண்ணியக் கணக்குகளைச்  சிறப்பாக எழுதி வந்தார். அதே சமயம் சித்திரபுத்திரன், சித்திரகுப்தனாக மாறுவதற்கான சம்பவம், மற்றொரு பகுதியில் அரங்கேறத் தொடங்கியது.

தேவர்கள் சூழ்ந்துவர, குழந்தைச் செல்வம் பெற வேண்டித் தவம் செய்வதற்காக வந்து கொண்டிருந்தார் இந்திரன். நல்ல எண்ணம்தான்; ஆனால், தேவேந்திரனின் பார்வையை, எண்ணத்தைப் பாதை மாற்றி  விட்டது விதி. குளிப்பதற்காக வந்து கொண்டிருந்த அகலிகையின் மீது விழுந்தது தேவேந்திரனின் பார்வை;அவ்வளவுதான்; ‘‘அழகு! அழகு! அழகின் எல்லையே  இவள்தான்’’ என்று வியந்தார்,  தேவேந்திரன். புத்தி அகலிகையிடம் போய்விட்ட பிறகு, தவமாவது ஒன்றாவது? தேவேந்திரனை விட்டுத் தவம் செய்யும் எண்ணம் விடை பெற்றது.

 அகலிகையின் நினைவி லேயே இருந்த தேவேந்திரன், கௌதம முனிவரின் ஆசிரமத்து அருகில் சேவலாக வடிவம் மாறிப்போய், பொழுது விடிவதற்கு முன் நேரங்கெட்ட நேரத்தில் கூவினார். சேவல்  கூவும் ஓசையைக் கேட்ட கௌதம முனிவர், ‘‘பொழுது புலரப்போகிறது. நாம் நீராடப் போகலாம்’’ என்றபடிக் கங்கையை நோக்கி நடந்தார்; நதியில் இறங்க முயற்சித்த போது, கங்காநதி உறங்குவது  தெரிந்தது முனிவருக்கு. (நதிகள் முதலானவை உறங்குவதை முனிவர்கள் அறிவார்கள். இக்காலத்திலும் உத்தமமான சிற்பிகளுக்கு, கல் தூங்கும் நேரம் தெரியும்) கங்காநதி உறங்குவதைக் கண்ட  முனிவர், ‘‘இப்போது நீராட வேண்டாம்’’ என்று எண்ணி, அங்கிருந்து திரும்பத் தொடங்கினார்.

(கண்ட நேரத்தில் கிணறு, குளம், நதி ஆகியவற்றில் நீராடக்கூடாது எனும் சாஸ்திர விதியைக் கடைப் பிடித்தார் கௌதம முனிவர்).
ஆசிரமத்திற்குள் நுழைந்த கௌதமர், ‘‘கோழி கூவியது; ஆனால் பொழுது புலரவில்லையே! என்ன இது? சரி! நந்தவனத்தில் போய்ப் பார்ப்போம்’’ என்று தனக்குள் சொல்லியபடி,நந்தவனத்தை நோக்கி  நடந்தார்.அங்கே மலர வேண்டிய மலர்கள் எல்லாம், அரும்புகளாக - மொட்டு களாகவே இருந்தன. மலராத நிலையில் இருந்த அரும்புகளைக் கண்ட கௌதமர், ‘‘ப்ச்! என்னவோ நடக்கிறது’’ என்று  வாய்விட்டுச் சொன்னபடியே நந்தவனத்தை விட்டு வெளியேறத் தொடங்கினார். அதே சமயம்... ஆசிரமத்தின் உள்ளே தேவேந்திரன் கௌதம முனிவராக உருமாறி, அகலிகையின் எதிரில் நின்றபடி, தன்  ஆசையைத் தெரிவிக்கத் தொடங்கினான்.அகலிகை உண்மையைப் புரிந்துகொண்டாள்; முனிவர் வடிவில் வந்திருப்பது தேவேந்திரன் என்பதைத் தெரிந்து கொண்டாள்.

அறிவுரை கூற ஆரம்பித்தாள்; ‘‘தேவேந்திரா! பாவி! பாவி! எவ்வளவுதான் உயரத்தில் பறந்தாலும், கழுகின் பார்வை, பூமியில் கிடக்கும் செத்த எலியின் மீதுதான் இருக்கும். அதுபோல, தேவேந்திரன் எனும்  உயர்ந்த பதவியில் இருக்கும் உன் புத்தியும் மட்டமாகத்தான் இருக்கிறது.‘‘உனக்குக் கெட்டகாலம் வரப்போகிறது.எச்சரிக்கையாக இரு! தெய்வம் யாருக்காவது தண்டனை கொடுக்க வேண்டுமானால், கையில் குச்சியை எடுத்துக்கொண்டு வந்து அடிக்காது. அவன் புத்தியைத்  தீயவழியில் திருப்பிவிடும். உனக்குத் தண்டனை தருவதற்காகத்தான், தெய்வம் இப்படித் தீயவழியில் உன் புத்தியைத் திருப்பியிருக்கிறது.

‘‘கெட்ட எண்ணத்தை விட்டுவிடு!
திருந்து! இல்லையேல் உனக்குக் குழந்தையும் கிடையாது; நீயும் அழிவாய்’’ என அறிவுரை சொன்னாள். அந்த நேரத்தில், கௌதம
முனிவர் உள்ளே நுழைந்தார். அவரைக் கண்டதும் பயந்துபோன தேவேந்திரன், பூனையாக மாறி வெளியே போக முயற்சித்தார். கௌதமருக்கு உண்மை தெரிந்தது; தேவேந்திரனைச் சபித்தார். (அகலிகை  கல்லாகக் கிடந்து ராமரால்,
சாப நீக்கம் பெற்றது, தெரிந்த கதை).

இவ்வாறு, குழந்தை செல்வத்திற்காகத் தவம் செய்யப்போன தேவேந்திரன், முனிவரிடம் சாபம் பெற்றார். (நாமறிந்த தேவேந்திரன் - அகலிகை கதைக்கும்; இதற்கும் வேறுபாடுள்ளது. இதை நினைத்துக்  குழம்ப வேண்டாம். இவ்வாறு மாறுபட்ட தகவல்களைக் ‘கல்பாந்திர பேதம்’ என்பார்கள். சரித்திரம் மீண்டும் திரும்புகிறது என்பதைப்போல, யுகங்கள் தோறும் ஒவ்வொரு மாதிரி நடந்திருக்கும் எனப்  பெரியோர்கள் சொல்வார்கள். ஆகையால், அடிப்படையைமட்டும் எடுத்துக் கொள்வோம்).

அகலிகையைக் கண்டு மனதை அழுக்காக்கிக் கொண்ட தேவேந்திரன், குளிக்கப் போனவன் சேற்றை அள்ளிப் பூசிக் கொண்டு திரும்பியதைப் போல, சாபம் பெற்றுத் திரும்பினார். அதைக்கண்ட இந்திராணி  புலம்பினாள்.‘‘நீங்கள் பெற்ற சாபத்தின் காரணமாக, தேவ உலகமே மலடாகிப் போய் விட்டது. இங்கு உள்ள மரங்கள் எல்லாம் மொட்டை மொட்டையாகி நிற்கின்றன; பசுக்கள் பால்வற்றிப் போய் விட்டன.  முனிவர்கள், பத்தினிகள் ஆகியோரின் சாபம் பலிக்காமல் போகாது. அதன் காரணமாகவே நமக்குக் குழந்தை இல்லை’’ என்று தேவேந்திரனை ஏசினாள். தேவேந்திரன் அவமானத்தால் தலைகுனிந்தார்;  ‘‘தவறு செய்து விட்டேன் இந்திராணி! வா! இருவருமாக, சிவபெருமானையும் அம்பாளையும் எண்ணித் தவம்
செய்வோம்’’ என்று, இந்திராணியுடன் கைலாயத் தை அடைந்தார் தேவேந்திரன்.

கைலாயத்தில் நந்தி பகவான் வழிகாட்ட, அதன்படி தவம் செய்தார்கள். தவம் செய்த இந்திரனையும் இந்திராணியையும் சுற்றிப் புற்று வளர்ந்தது. பாம்புகளை ஆபரணமாக அணிந்த பரமேஸ்வரன்,  அப்போதும் தரிசனம் தரவில்லை. தவத்தை மேலும் கடுமையாக்கினார் தேவேந்திரன். ஆழமான பள்ளத்தில் தீ எரிய, அத்தீயின் நடுவில் நின்றபடி தவம் செய்தார் தேவேந்திரன்.

தவத்தின் விளைவாகப் பரமேஸ்ரவன், நந்தியை அழைத்து, ‘‘நந்தி! நீ போய் தவம் செய்யும் அவர்களை இங்கு அழைத்து வா!’’ என உத்தரவிட்டார். அதன்படியே நந்திபகவான் போய் அழைத்துவர, இந்திரத்  தம்பதிகள், உலகிற்கே அன்னையும் தந்தையுமான அம்பாளையும் சிவபெருமானையும் வணங்கினார்கள்; கூடவே, ‘‘பரமேஸ்வரா! தேவ உலகிற்கே தலைவனாக இருந்தாலும், பிள்ளையில்லாத குறை  என்னை வாட்டுகிறது. தாங்கள் அருள்புரிய வேண்டும்’’ என வேண்டினார் இந்திரன்.

‘‘உனக்கினி கவலை வேண்டாம் தேவேந்திரா!’’ என்று சிவபெருமான் சொல்ல, இந்திர தம்பதிகள் கைலாயத்தில் இருந்து புறப்பட்டார்கள். அதன்பின் சிவபெருமான் காமதேனுவை அழைத்து, ‘‘நீ போய்த்  தேவேந்திரத் தம்பதியர்க்கு ஒரு குழந்தையைப் பெற்றுக் கொடுத்துவிட்டு வா!’’ என்றார். காமதேனு கவலையுடன், ‘‘பரம்பொருளே! எனக்கு எப்போது முக்தி?’’ எனக் கேட்டது. சிவபெருமான் பதில் சொன்னார்; ‘‘காமதேனுவே! ஒரு குழந்தையைப்பெற்று நீ அவர்களுக்கு அளித்தவுடன், ஒரு  பூந்தேரை அனுப்பி உன்னை இங்கே வரவழைத்துக் கொள்வேன்’’ என்றார்.

சிவபெருமானையும் அம்பிகையையும் வணங்கிப் புறப்பட்டது காமதேனு; ஓர் இளங்கன்றாக மாறி, இந்திரனும் இந்திராணியும் வரும் வழியில்,துள்ளல் நடைபோட்டதது. அதைப் பார்த்ததும்  இந்திரத்தம்பதிகள் மகிழ்ந்தார்கள்;’’ ஆகா! என்ன அழகு! என்ன அழகு! நமக்காகவே சிவபெருமான் அனுப்பியதைப்போல் இருக்கிறது’’ என்று சொல்லி, இளங்கன்றான காமதேனுவையும்  அழைத்துக்கொண்டு
இந்திரலோகம் சென்றார்கள்.

அந்தப் பசுங்கன்றுக்கு, வைகாசி மாத - 21ம் நாள் - திருவாதிரை - வெள்ளிக்கிழமை அன்று வியாசபகவான் ‘மாவேந்திரி’ எனப் பெயர் சூட்டினார். மாவேந்திரியைத் தன் சொந்தக் குழந்தையாகவே கருதி, வளர்த்தாள் இந்திராணி; நாள்தோறும் அக்கன்றை நன்றாகக் குளிப்பாட்டி, மலர்களைச் சூட்டி அலங்கரித்து, பூஜை செய்து உணவூட்டி  வந்தாள்.நாட்கள் கடந்தன. இந்திராணி தன் வழக்கமான புலம்பலைத் தொடங்கிவிட்டாள்; ‘‘சுவாமி! நான்தான் மலடு என நினைத்தேன். பார்த்தால், நாம் வளர்க்கும் இப்பசுவும் மலடாக இருக்கிறதே!’’ என்று அழுதாள்.

மனைவிக்கு ஆறுதல் சொன்ன தேவேந்திரன், ‘‘தேவி ! நாம் செய்த பாவம், இன்னும் ஏதோ இருக்கிறது போல் தெரிகிறது. மாதொரு பாகனான மகேசுவரனை நோக்கி, மனம் உருகித் தவம்செய்து  திரும்புகிறேன்’’ என்று கூறி, மீண்டும் தவம்செய்யக் கிளம்பினார். தவம் செய்த தேவேந்திரனின் மனம் முழுதும் சிவனையே தியானித்துக்கொண்டிருந்தது. அதே வேளையில் சித்திரபுத்திரரை அழைத்த  சிவபெருமான், ‘‘குழந்தாய்! பாவ-புண்ணியக் கணக்குகளை எழுதுவதில், மிகுந்த திறமைசாலியாக இருக்கிறாய் நீ! குழந்தை வரம்வேண்டித் தவம் செய்கிறான் இந்திரன். அதோ
பார் !’’ என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே, சித்திரபுத்திரர் குறுக்கிட்டார்.

‘‘ஆதியும் அந்தமும் இல்லாத அரும்பெரும் ஜோதியே! என்னதான் கடுமையாகத் தவம் செய்தாலும் தேவேந்திரனுக்குப் பிள்ளை பிறக்க, கணக்குப்படி வழியில்லை’’ என்றார்.பேசிக்கொண்டே போன  சித்திரபுத்திரரைச் சிவபெருமான் இடைமறித்து, ‘‘இருக்கட்டும் சித்திரபுத்திரா! இப்படிச் சொன்ன நீயே, தேவேந்திரனுக்குக் குழந்தையாக ஆவாய்! இந்திராணி வளர்க்கும் பசு தண்ணீர் குடிக்கும் குளத்தில், நீ  தாமரைப்பூவாக இரு! பசு தண்ணீர் குடிக்கும்போது, தாமரை மலராக இருக்கும் உன்னையும் சேர்த்தே உண்ணும். அதன் வயிற்றில் இருந்து நீ, சித்திரை மாத - சித்திரை நட்சத்திரம் -
திங்கட்கிழமையன்று, குழந்தையாக அவதரிப்பாய்!

‘‘அதன் காரணமாகத் தேவேந்திரனின் குறையும் தீரும்; உன் கணக்கெழுதும் பணி அப்போதும் தொடரும்’’ என்று கூறி முடித்தார் சிவபெருமான். சித்திரபுத்திரர் வாயே திறக்கவில்லை. இறைவனிடமோ மகான்களிடமோ, அருகிலேயே இருப்பதை விட அவர்கள் சொன்னபடிச் செயல் படுவதே சிறந்தது. அதன்படியே சித்திரபுத்திரர் ஒரு குளத்தில்  தாமரை மலராக மாறி, பசுவை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டு இருந்தார். அன்றிரவு இந்திராணி ஓர் அற்புதமான கனவு கண்டாள்; கனவு கலைந்ததும் தன் பணிப்பெண்களை அழைத்து, ‘‘அற்புதமான கனவொன்று கண்டேன். கேளுங்கள்! கேளுங்கள்!’’ என்று விவரிக்கத்  தொடங்கினாள்.

‘‘தேவேந்திரனைப் போலவே, சூரிய - சந்திரர் களின் ஔியுடன் கூடிய குழந்தை ஒன்று, என் மடியில் இருந்தது. அது எல்லோருடைய பாவ-புண்ணியக் கணக்குகளையும் எழுதுவதற்காகத் தங்கத்தாலான  ஓர் எழுத்தாணியைத் தன் கையில் வைத்திருந்தது. எனக்குத் தோள்கள் துடித்து, என் பச்சை உடம்பில் பால் சுரந்தது. காய்க்காத பலாமரமும் வாழைமரமும் காய்த்தன’’ என்று வியப்போடு விவரித்தாள்  இந்திராணி.

அதன்பிறகு இந்திராணி தூங்கவில்லை. காரணம்? நல்ல கனவு கண்டால், அதன்பின் தூங்கக்கூடாது; அப்போதுதான் அது பலிக்கும். தீய கனவு கண்டால், அதன்பின் தூங்கிவிட வேண்டும்; அப்போது அது  பலிக்காது. அதன் காரணமாகவே நல்ல கனவு கண்ட இந்திராணி, அதன்பின் தூங்கவில்லை. பொழுது விடியும்வரை விழித்திருந்த இந்திராணி, பொழுது விடிந்ததும் நீராடி, சிவபூஜை முடித்து சூரியனைத்  துதித்தாள். அதன்பின் பசுவின் கழுத்தில் கையைப்போட்டு அணைத்து, அதன் மென்மையான சுகத்தை அனுபவித்தபடி, ‘‘மகளே! காமதேனுவே! நீயும் என்னைப்போல் மலடாக இருக்காதே! உன் இனத்தாரை விட்டுப்  பிரியாமல், அவர்களுடன் சேர்ந்து மேய்!’’

‘‘எச்சரிக்கையாக இரு! காட்டில் கொடிய விலங்குகள் இருக்கும். சோளக்கதிர், ஆமணக்கு, காய்ந்துபோன புல், கள்ளி, நாய்க்கடுகு, இளங் கடுகு ஆகியவற்றை மேயாதே! பொழுது சாய்வதற்குள் திரும்பிவிடு!’’ என்று சொல்லி அனுப்பினாள் இந்திராணி. போன பசு நன்றாக மேய்ந்தது; அதற்குத் தாகம் எடுத்தது; அருகில் தெரிந்த குளத்தை  நோக்கி நடந்தது. அப்போது சிவபெருமான் சூரியனை அழைத்து, ‘‘கதிரவனே! இந்திராணியின் பசு தாகத்தால் தவிக்கிறது.நீ அதற்கு வழிகாட்டி, குளத்திற்கு அழைத்து வா! அது தண்ணீர் குடிக்கும்போது,  அதன் பார்வையில் படும்படியாகத் தாமரைமலரை அதன் முன் போடு!’’ என்றார்.

சூரியனும் அப்படியே செய்ய, எதிரில் தெரிந்த அழகான தாமரை மலரைக் கண்டு, அதை ஆர்வத்துடன் தின்றது பசு. அதன்பின் பசு கருவுற்றது. அதுவரை அமைதியாக இருந்த பசுவின் நிலை, அப்படியே  மாறியது; வாயில் நுரை தள்ள, பொறி கலங்கி, வாலை உயர்த்திக் கண்களை மிரளமிரள வைத்தபடி, மெள்...ள நடந்து இந்திராணியின் எல்லையில் வந்து மயங்கி விழுந்தது. அதை அறிந்த இந்திராணி  துடித்துப்போனாள்; கதறியபடியே ஓடி வந்தாள்; பசுவின் கழுத்தைக் கட்டிக்கொண்டு, மென்மையாகத் தடவிக் கொடுத்தாள்.

‘‘என் தீவினை உன்னையும் பாதித்துவிட்டதா? ஐயோ! விஷம் தீண்டியதா?’’ என்றெல்லாம் சொல்லிப் புலம்பினாள் இந்திராணி; கழுநீரைக் கலந்து ஊட்டினாள். அதைக் குடித்த பசு மயக்கம் தெளிந்து  எழுந்தது.மாடு மேய்ப்பவர்கள் வந்து பார்த்தார்கள்; ‘‘ஒன்றுமில்லையம்மா! பசு கருவுற்று இருக்கிறது. அதிவிரைவில் கன்று போடும்’’ என்றார்கள். அதைக் கேட்டதும் இந்திராணியின் உள்ளம் மகிழ்ந்தது;  பணிப் பெண்களின் உதவியுடன் பசுவை நன்றாகப் பராமரித்தாள்.

பசு வாயைப் பிளந்து மேல்மூச்சு கீழ்மூச்சாக விட்டது. ‘‘என்ன ஆகுமோ?’’ என்று பயந்த இந்திராணி, ‘‘என் பசுவைப் பிழைக்க வைப்பவர்களுக்கு, என்ன பரிசு வேண்டுமானாலும் அளிப்பேன்’’ என்று  அறிவித்தாள்.அப்போது பரமசிவன் உத்தரவால், அம்பிகை ஒரு குறத்தியாக உருமாறி அங்கு வந்தார்; தலையில் கொக்கு இறகு, கைகளில் தங்கக் கூடை - பிரம்பு ஆகியவற்றுடன் வந்த குறத்தியைக்  கண்டு, மனமகிழ்வோடு வரவேற்றாள் இந்திராணி; குறத்தியிடம் பசுவைக் காப்பாற்றும்படி வேண்டினாள்.

அதைக் கேட்ட குறத்தி, அப்படியே பசுவை ஒரு பார்வை பார்த்தாள்; ‘‘அம்மா! கவலைப் படாதே நீ! பாலகன் ஒருவன் பரமன் அருளால் தோன்றப் போகிறான். உலகில் உள்ள அனை வரின் கணக்கையும்  எழுதும் நாயகன் ஒருவன், இந்தப் பசுவின் வயிற்றில் இருந்து உதிக்கப் போகிறான்.‘‘சித்திரை மாதம் வரும் முழுநிலவு (பௌர்ணமி) நன்னாளன்று; நிலவு (திங்கள்)கிழமைதனில் வருவான் பார்ப்பாயே நீ!  நெற்றியிலே திருநீறு, கைகளிலே எழுத்தாணி; அவன் பெயரே சித்திரகுப்தன் அம்மா! காண்பாயே நீ!”என்றுகுறி சொல்லும் ராகத்தில் பாடினாள்.

ஏராளமான பொன்னையும் வைரங்களையும் குறத்திக்குக் கொட்டிக் கொடுத்தாள், இந்திராணி. குறத்தியாக வந்த அம்பிகை மறுத்தார்; ‘‘இதெல்லாம் யாருக்கம்மா வேண்டும்? உன் அன்பு இருந்தால் போதும்  எனக்கு’’ என்று சொல்லி விட்டுப் போய்விட்டார், அம்பிகை.உண்மைதானே? தெய்வம் நம்மிடம் எதிர் பார்ப்பதெல்லாம் தங்கத்தையும் வைரத்தையுமா? தூய்மையான அன்பைத்தானே எதிர் பார்க்கிறது? அதைத்தான் சொன்னார் குறத்தியாக வந்த அம்பிகை.

குழந்தை பிறக்கப்போகிறது என்பது தெரிந்ததும் தேவர்கள் அனைவரும் அங்கு கூடி விட்டார்கள்; வேத கோஷமும் பெண்களின் குலவை ஒலியும் எழுந்தன. ஈசன் அருளால், மின்னல் ஔியே ஒரு  வடிவத்தோடு வந்ததைப்போல, பசுவின் வயிற்றில் இருந்து குழந்தை ஒன்று பிறந்தது. மங்கல வாத்தியங்கள் முழங்க, அம்பாளே சங்கின் மூலம் அக்குழந்தைக்கு அமுதம் ஊட்டினார்; குழந்தைக்குச்  ‘சித்திரகுப்தன்’ எனப் பெயரிட்டார். பசுவும் தான் பெற்ற குழந்தைக்குத் தன் பாலை ஊட்டியது. ‘‘தேவேந்திரனுக்கு ஒரு குழந்தையைப் பெற்றுத் தந்ததும், பூந்தேரை அனுப்பிக் கயிலாயத்திற்கு அழைத்துக் கொள்கிறேன்’’ என்று சிவபெருமான் சொல்லி இருந்தார் அல்லவா? அதன்படிக் காமதேனு கயிலாயத்திற்குத் திரும்ப வேண்டுமே! அதற்கான நிகழ்வு ஒன்று நடந்தது.

ஒருநாள்... சித்திரகுப்தனுக்குப் பாலூட்டி விட்டுப் பசு திரும்பியபோது, அதன் குளம்பு சித்திரகுப்தனின் நெஞ்சில் பட்டது. அதைப் பார்த்தவுடன் இந்திராணி பதைபதைத்தாள்; உடனே, குழந்தையை அள்ளி,  நெஞ்சோடு நெஞ்சாக அணைத்துக் கொண்டாள்; ஒருகுச்சியை  எடுத்துப் பசுவை அடித்தாள்.

 பசு அழுதவாறே சிவபெருமானிடம் முறையிட்டது. சிவபெருமான் உடனே ஒரு பூந்தேரை அனுப்பி, பசுவைத் தன்னிடம் அழைத்துக் கொண்டார். அவரிடம், ‘‘சுவாமி! நீங்கள் சொன்னபடி, நான் எல்லாவற்றையும் செய்தும், இந்திராணி அடித்துவிட்டாள் என்னை’’ என்று நடந்ததை விவரித்தது காமதேனு.அதற்கு ஆறுதல் சொன்ன சிவபெருமான், ‘‘கவலைப்படாதே! உன் மகனையும் இங்கு அழைத்து வருவோம்’’ என்றார். அதனால் கவலை நீங்கியது காமதேனு.

இவற்றையெல்லாம் அறியாத இந்திராணி, சித்திரகுப்தனைக் கவனிப்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தாள்.ஒருநாள்... திடீரென்று சித்திரகுப்தன் அழுதான். ‘‘குழந்தைக்குப் பசி தாங்கவில்லை. பசுமாட்டை அழைத்து வாருங்கள்!’’ எனப் பணிப் பெண்களுக்கு உத்தரவிட்டாள் இந்திராணி. பணிப் பெண்களும்  தேடினார்கள். எங்கு தேடியும் பசு கிடைக்கவில்லை. அதுதான் கயிலாயத்திற்குச்சென்று விட்டதே! பணிப் பெண்கள் இந்திராணியிடம் போய், ‘‘அம்மா! அந்தப்பசுவை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. எல்லா இடங்களிலும் தேடிப்பார்த்து விட்டோம்’’ என்றார்கள்.

‘‘மாயமாக வந்த மாயப் பசு, மாயமாகவே போய்விட்டதே!’’ என்ற இந்திராணி, வேறொரு பசுவின் பாலைக்கொண்டு சித்திரகுப்தனின் பசியைப் போக்கினாள்.இந்திராணியின் அன்பும் தேவலோகப் பெண்களின்  பராமரிப்பும் சித்திரகுப்தனை வளர்த்தன. அவனுக்குக் கல்வி கற்பிக்க ஏற்பாடு செய்தார்கள். பார்ப்பவர்களின் உள்ளங்களைக் கவரும்படியாகத் தேவலோகம் அலங்காரம் செய்யப்பட்டது.

திறமைமிகுந்த ஆசிரியர் ஒருவர் வந்தார்; ‘‘ சித்திரகுப்தா! நன்றாகக் கவனி! நான் சொல்வதை அப்படியே திருப்பிச் சொல்! ஹரி ஓம் நமஹ’’ என்றார் ஆசிரியர்.அவர் எதிரில் நின்றிருந்த சித்திரகுப்தன்  கைகளைக் குவித்து, ‘‘குருநாதா! இப்போது நீங்கள் சொன்னதற்கு உண்டான பொருளைச் சொல்லுங்கள்!’’ என வேண்டினான்.

ஆசிரியர் திகைத்தார். சித்திரகுப்தன் தொடர்ந்தான்; ‘‘சுவாமி! உங்களுக்கு அடியேன் வேதம் சொல்கிறேன்’’ என்றவாறே, தன் கைகளில் இருந்த கணக்கு நூலை எடுத்துச் சொல்ல ஆரம்பித்தான். அதில்  வேதங்களும் அனை வரின் பாவ-புண்ணியக் கணக்குகளும் வந்தன. ஆசிரியரின் பாவ-புண்ணியக் கணக்குகளும் வந்தன; ‘‘குருநாதா! இருக்க இடமில்லாமல் இருந்த நீங்கள், அகதி ஒருவரின் இடத்தை  அபகரித்துக் கொண்டீர்கள்...’’ என்று ஆரம்பித்து, ஆசிரியரின் அனைத்து விவரங்களையும் சொன்னான். பாடம் நடத்த வேண்டிய ஆசிரியர்
பணிவோடு எழுந்து, கைகளைக் கூப்பி, சித்திரகுப்தனைப் பாராட்டினார்.

‘‘ஆகா! ஆகா! என் குழந்தை எவ்வளவு சமர்த்து!’’ என்று வாய்விட்டுச் சொல்லி, சித்திரகுப்தனைக் கட்டித் தழுவி முத்தமிட்டாள் இந்திராணி. ஒருநாள்... இந்திரன் - இந்திராணி இருவரையும் நிற்க வைத்து,  அவர்களின் கால்களில் மலர்களைத் தூவினான் சித்திரகுப்தன்; தன்னைப்பற்றிய உண்மைகளை எல்லாம் சொன்னான்; ‘‘நான் கயிலாயம் செல்லப் போகிறேன். நீங்கள் அனுமதி கொடுக்க வேண்டும்.  இங்குமங்குமாக இருப்பேன் நான்’’ என வேண்டினான்.

இந்திரத் தம்பதிகளுக்குச் சித்திரகுப்தனைப் பிரிய மனம் வரவில்லை; இருந்தாலும் உண்மையை உணர்ந்ததால், சித்திரகுப்தனுக்கு ஆசி கூறி வழியனுப்பிவைத்தார்கள். சித்திரகுப்தன் கயிலையை அடைந்து,  நடந்தவற்றையெல்லாம் சிவபெருமானிடம் விவரித்தான். சிவபெருமான் உடனே காமதேனுவை அழைத்து, ‘‘உன் குழந்தை வந்துவிட்டான். இதோ பார்!’’ என்றார். அதன்பின் சிவபெருமான் சித்திரகுப்தனை,  யமனது சபையில் இருந்தபடிப் பாவ புண்ணியக் கணக்குகளை எழுதும்படி அனுப்பிவைத்தார். அன்றுமுதல் சித்திரகுப்தன் யமன் சபையில் இருந்தவாறு, அனைவரின் பாவ புண்ணியக் கணக்குகளையும்  எழுதிவருகிறார். சித்திரகுப்தன் கதையைப் பார்த்த நாம், சித்திரகுப்தன் என்ற சொல்லின் பொருளைப் பார்க்கலாம்.

சித்திரம் என்ற சொல்லுக்கு, அற்பம் - பேரழகு - உண்மைபோலப் பொய் சொல்வது என அர்த்தங்கள் உண்டு.குப்தம் என்ற சொல்லுக்கு, ரகசியமான - மறைக்கப்பட்ட - காக்கப்பட்ட என்ற அர்த்தங்களோடு,  இணைக்கப்பட்ட என்ற பொருளும் உண்டு. இதன்படிப் பார்த்தால்,சித்திரகுப்தன் என்ற சொல்லுக்குப் பொருள் விளங்கும். அற்பங்களில் ஆசைகொண்டு, உண்மைபோலப் பொய் பேசி, ரகசியமாக யாருக்கும்  தெரியாமல் தவறுகளைச் செய்கிறோம். மறைக்கப்பட்ட அவற்றை நம்முடன் இணைக்கப்பட்ட கணக்கை எழுதுபவர்தான், சித்திரகுப்தன்.இதை உணர்ந்தால் .இன்பமே எந்நாளும்! துன்பமில்லை!

(தொடரும்)

பி.என். பரசுராமன்

Tags : Chithragupta ,
× RELATED தீராத நோய்களிலிருந்து விடுபட யோகினி ஏகாதசி