×

ஊழ்வினை போக்கி நல்வாழ்வினைத் தந்தருளும் வசந்த மாதம்!

“நவ கிரக நாயகன்” எனப் பூஜிக்கப்படும் சூரியன், அளவற்ற வீர்யத்தையும், பலத்தையும் பெறும் மேஷராசியில் பிரவேசிக்கும் நன்னாளே “தமிழ்ப் புத்தாண்டு” பிறக்கும் புண்ணிய தினமாக, தமிழக மக்களாகிய நாம் காலம், காலமாகக் கொண்டாடி மகிழ்கிறோம். தற்போது பிறந்துள்ள தமிழ்ப் புத்தாண்டு, “பிலவ” வருடமாகும்!

நமது சூரிய மண்டலத்தில், சதா வலம் வந்துகொண்டிருக்கும் கிரகங்களனைத்தும்,  சூரியனிடமிருந்துதான் தங்களது ஆகர்ஷண (Gravitational Power)மற்றும் மருத்துவ (Medical) சக்திகளையும், வீரியத்தையும் பெறுவதாக வராகமிகிரரின் “பிருஹத் ஸம்ஹிதை”யும், மருத்துவ வல்லுநரான சரகரின் “சரக் சம்ஹிதை”யும், மூளைப் பகுதி அறுவை சிகிச்சையில் நிபுணரான மகரிஷி சுஸ்ருதரின் “சுஸ்ருத சம்ஹிதை”யும் விவரிக்கின்றன.  சூரியனுக்கும், இதயம், ரத்தம் நரம்பு சம்பந்தமான நோய்களுக்கும், உள்ள தொடர்பின் சூட்சுமங்களை “அஷ்டாங்க ஹிருதயம்” என்னும் பிரசித்திப் பெற்ற ஆயுர்வேத நூல் கூறுகிறது. தற்கால மருத்துவ ஆராய்ச்சியாளர்களும் இதை உறுதிசெய்துள்ளனர்.

வெண்குஷ்டம் போன்ற சர்ம நோய்களை குணப்படுத்தும் சூரிய கிரணங்களின் மருத்துவ சக்தியை “அதர்வண வேதம்” விளக்கியுள்ளது. வசந்த காலம்! சூரியன் மேஷ ராசியில் வலம் வரும் சித்திரை மாத காலத்தை “வசந்த ருது” என வர்ணிக்கின்றன நமது பண்டைய நூல்கள். சித்திரை மாதத்தில், சூரியன் தான் பெறும் விசேஷ சக்தியை, தனது கதிர்களின் மூலம் உலகிற்கு அளிப்பதால், விருட்சங்கள் வளர்ந்து, வனங்கள் பொலிவுற்று, விளங்குகின்றன. மலர்கள் கொத்து கொத்தாகப் பூக்கின்றன; மலர்கின்றன. தென்றல் வீசி, மக்கள் மனத்தில் உற்சாகத்தை ஏற்படுத்துகின்றது, என மகாகவி காளிதாசன், தனது அழியாத காவியமான “மேக சந்தேஸ”த்தில் வர்ணித்துள்ளார்.

சித்திரை மாதத்தின் தெய்வீகம்! சித்திரை மாதத்தின் தெய்வீக சக்தி அளவற்றது. “ஆத்ம, சரீரகாரகன்” சூரியன் என ஜோதிடக் கலை பகலவனைப் புகழ்கிறது. அதாவது, மனிதர்களுக்கு மன பலத்தையும், உடல் நலனையும் அளிப்பவர் எனப் போற்றுகிறது.  காலக் கணிப்பு கலையான ஜோதிடம், மற்றும் மருத்துவக் கலையான ஆயுர்வேதம் ஆகிய இரண்டுமே, சித்திரை மாதத்தின் பெருமையை எடுத்துக் கூறுகின்றன! “ராம ராஜ்யம்” என்ற அழியாப் புகழை பாரதப் புண்ணிய பூமிக்கு அளித்த ஸ்ரீராமபிரான், அயோத்தியில் அவதரித்த பெருமை இந்த சித்திரை மாதத்திற்குத்தான்! அவதார புருஷர்களான ஸ்ரீஆதி சங்கரரும், ஸ்ரீமத் ராமானுஜரும் அவதரித்த புகழும் சித்திரை மாதத்தையே சாரும்!!

இவ்விதம், சித்திரை மாதத்தின் ஜோதிட. மருத்துவ, தெய்வீகப் பெருமைகளை கூறிக்கொண்டே போகலாம்! இனி, சித்திரை மாதத்தின் ராசிபலன்களை சற்று ஆராய்வோம்! மேஷராசியில் முன்னரே அமர்ந்துள்ள, சுக்கிரன், புதன், சந்திரனுடன் இணைகிறார், சூரிய பகவான். சித்திரை முதல் தேதியன்று. மேஷராசிக்கு, அதிபதியான செவ்வாய், சூரியனுக்கு நட்புக் கிரகமாகும். இத்தகைய கிரக நிலைகளை, மிகத்  துல்லியமாகக் கணித்து, இங்கு தந்துள்ள ராசி பலன்களும், எளிய பரிகாரங்களும் கூறப்பட்டுள்ளன. இதனால், “தினகரன்” வாசக அன்பர்கள் பயனடைந்து, மகிழ்ச்சியுற்றால், அதுவே நாங்கள் பெறும் மன நிறைவாகும்.

Tags :
× RELATED சுநந்தாபீடம் – சுநந்தா