×

முயன்றால் முடியும்

ஜார்ஜ் ஸ்டீபன்சன் என்றதுமே நம் நினைவில் வருவது, அவர் ஒரு பெரிய விஞ்ஞானியாக, புகைவண்டியைக் கண்டுபிடித்ததுதான். ஆனால் இந்தக் கண்டுபிடிப்புகளுக்குப் பின்னால் அவரது கண்ணீரின் அனுபவங்கள் பல உண்டு. வறுமையின் அடித்தளத்தில் வாழ்ந்தபடியால் பள்ளியில் சேர்ந்து படிக்க முடியவில்லை. பகல் முழுவதும் அநேகரின் மாடுகளை மேய்த்துவிட்டு இரவுப் பள்ளியில் சேர்ந்து படித்தார். விஞ்ஞானப் பாடத்தை அதிகமாக நேசித்தார். விஞ்ஞானக் கருவிகளின் தொழில் நுட்பங்களை ஆராய்வதற்கு அதிக நாட்டம் கொண்டு கடவுளின் துணையுடன் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். செருப்பு தைத்து அதன் மூலம் கிடைத்த வருமானத்தால் தன் தேவைகளை சந்தித்துக் கொண்டார். வாலிப வயதில் ஒரு நிலக்கரி சுரங்கத்தில் கடினமாக உழைத்தார். அவர் பணிசெய்த சுரங்கத்தில் எதிர்பாராத விதமாக ஒரு இயந்திரம் பழுதடைந்து போனது. அநேகர் அதன் பழுதை நீக்க முயற்சித்தும், தோல்வி கண்டனர். சாதாரணமாக எண்ணப்பட்ட ஸ்டீபன்சன் பிறருடைய உதவியின்றி அந்த இயந்திரத்தைப் பழுது நீக்கி ஓடவிட்டார். இது யாவருக்கும் மிகுந்த வியப்பைத் தந்தது. அந்த முதலாளியும் இவரைப் பாராட்டி, ஒரு பெரியத் தொகையைப் பரிசாகக் கொடுத்தார். அந்தத் தொகையை மூலதனமாகக் கொண்டு, கடவுள் அருளிய ஞானத்துடன் ஜார்ஜ் ஸ்டீபன்சன் புகைவண்டி
எஞ்சினைக் கண்டுபிடித்தார்.

உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள், அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார் (நீதிமொழிகள் 3 :5) என்று திருமறை கூறுகிறது. ஆம் ! நமது முயற்சிகள் எதுவாயிருந்தாலும் நமது சொந்த ஞானத்தையோ, பெலத்தையோ மட்டும் நம்பாமல், கடவுள்மீது நம்பிக்கைக் கொண்டு செயல்படும்போது, கடவுள் அச்செயலில் நமக்கு வெற்றியைத் தருகிறார்.ஆண்டவர் இயேசு இவ்வுலகில் வாழ்ந்த நாட்களில் ஒருமுறை கடற்கரையருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அவ்வேளையில், இரவு முழுவதும் முயற்சி ெசய்தும் மீன்கள் கிடைக்காததால், மிகவும் சோர்ந்துபோயிருந்த பேதுரு என்பவரைக் கண்டார். இன்னும் சற்று ஆழத்திலே படகை தள்ளிக்கொண்டு போய் வலைகளைப் போடுங்கள் என்றார். அதற்குப் பேதுரு, ஐயரே, இரா முழுவதும் நாங்கள் பிரயாசப்பட்டும் ஒன்றும் அகப்படவில்லை; ஆகிலும் உம்முடைய வார்த்தையின்படியே வலையைப் போடுகிறேன் எனக்கூறி (லூக்கா 5:5) வலையை வீசினார். அதன்பின், வலையே கிழிந்து போகத்தக்கதாக மிகுதியான மீன்களைப் பிடித்தார் என்று திருமறையில்
காண்கிறோம்.

ஆண்டவர் இயேசு படகில் ஏறாதவரை பேதுருவின் முயற்சிகளுக்கு பலன் ஏதும் கிடைக்கவில்லை. நாமும், கடவுளின் உதவியை நாடாமல், நமது சொந்த பெலனை மட்டுமே நம்புவோமெனில் நமது வாழ்விலும் வெறுமை மட்டுமே மிஞ்சும். ஆம்! கடவுளின் துணையில்லாத வாழ்வு, கடலில் தவிக்கும் சுக்கான் இல்லாதக் கப்பல் போன்றதாகும். அதுபோல, கடவுளை நம்புகிறேன் என்று கூறிவிட்டு, எந்தவொரு முயற்சியிலும் ஈடுபடாத ஒருவருக்கு கடவுள் உதவி செய்யவும் முடியாது. ஆம் ! கடவுள் அருளும் உதவியும், நமது முயற்சியும் இணையும் போது அங்கே வெற்றி கிடைக்கிறது.ஆகவே, நமது முயற்சிகள் எதுவானாலும், அம்முயற்சிகளில் நாம் வெற்றி சிறக்க வேண்டுமெனில், நாம் கைக்கொள்ள வேண்டிய இரண்டு பாடங்கள் உண்டு. ஒன்று கடவுள்மீது நம்பிக்கை; மற்றொன்று கடின உழைப்பு.இரண்டையும் கைக்கொள்வோம்! இறைவன் நம்மோடிருப்பார்!! இனிதே நம்மை நடத்துவார். இனி எல்லாம் இனிதே முடியும்!
Rt. Rev.Dr.S.E.C. தேவசகாயம்
பேராயர், தூத்துக்குடி -
நாசரேத்  திருமண்டலம்.

Tags :
× RELATED சுந்தர வேடம்