×

ஒரு கல் ஆயுள் மறு கல் ஆசை

‘கையளவு உள்ளம் வைத்துக் கடல் போல் ஆசை வைத்து...' என்று பாடினார் கவியரசர். அலை அலையாய் பொங்கும் ஆசைகளும் எதிர்பார்ப்புகளுமே பலருடைய வாழ்வை அலைக்கழித்து விடுகின்றன. அண்மையில் படித்த ஒரு  செய்தி...  ஊரில் சொந்தமாய் ஒரு வீடுகட்டவேண்டும் என்று வளைகுடா நாடு ஒன்றில் வேலை பார்த்து வந்த ஒருவர், ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் வேலை செய்திருக்கிறார். சொந்த வீடு எனும் லட்சியம் தவிர வேறு  எல்லாவற்றையும் மறந்தார். உழைப்பு... உழைப்பு... ஓவர் டைம் வேலை வேறு.ஒரு வழியாக வீடு கட்டும் பணிகள் முடிந்து புதுமனைப் புகுவிழா நடக்க இருந்த நேரத்தில் அந்தச் செய்தி இடிபோல் வந்து இறங்கியது. உடல்நிலை பாதிக்கப்பட்டு அவர் வெளிநாட்டிலேயே இறந்து விட்டார். பாடுபட்டுக் கட்டிய வீட்டில் அவருடைய இறந்த உடல் பாடையில் கொண்டுவந்து வைக்கப்பட்டது.

மனிதனின் வாழ்க்கை நிலையற்றது மட்டுமல்ல, மிகக் குறுகியதும்கூட. இந்த உண்மையை மிக எளிமையான ஓர் எடுத்துக்காட்டு மூலம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் விளக்கினார்கள்.ஒருமுறை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இரண்டு சிறு கற்களை எடுத்தார்கள்.ஒரு கல்லை அருகில் எறிந்தார்.மற்றொரு கல்லை சற்று தொலைவில் எறிந்தார்.பிறகு தோழர்களை நோக்கி, “இந்த இரண்டு கற்களுக்குமுள்ள எடுத்துக்காட்டு என்ன என்று அறிவீர்களா?” என்று வினவினார்.
“இறைவனும் இறைத்தூதரும்தாம் அறிவார்கள்” என்று கூறினர்,
தோழர்கள்.
நபிகளார் கூறினார்:“அங்கு தொலைவில் இருக்கும் கல் மனிதனின் ஆசைகளையும் எதிர்பார்ப்புகளையும் குறிக்கும்.

இங்கு அருகிலுள்ள கல் அவனுடைய ஆயுளைக் குறிக்கும்.(ஆசைகளையும் எதிர்பார்ப்புகளையும் அடைவதற்கு முன்பே ஆயுள் முடிந்து விடுகிறது)” என்று கூறினார்கள். (ஆதாரம்: திர்மிதி எண் 2789)
என்ன அழகான உவமை!அளவுக்கு மீறிய உலக மோகங்களில் மூழ்கி, இதயம் கல்லாய்ப் போனவர்கள் இந்த உன்னதமான  நபிமொழியில் சொல்லப்பட்டுள்ள உவமையை ஆராய்ந்தால் இறுகிப்போன இதயக் கல்லும் உருகக் கூடும்.
- சிராஜுல்ஹஸன்

Tags :
× RELATED நாகதோஷம் போக்கும் திருத்தலம் :...