×

சாதனையாளராக்கும் சப்தவிடங்க வாய்மூர்நாதர்

திருவாய்மூர்

எங்கும் நிறை பரபிரம்மமான பரமேஸ்வரன் எண்ணற்ற விளையாடல்கள் புரிந்துள்ளார் இந்த மண்ணுலகில். அப்படி பெருமான் விளையாடல் (லீலை) புரிந்த தலமாகப் போற்றப்படுகிறது. லீலாஹாஸ்யபுரம் எனப்படும் திருவாய்மூர். வாய்மையூர் என்பதே வாய்மூர் ஆனது என்பர். ‘‘சீரார் திருவாரூர் தென்னாகை நள்ளாறு காரார் மறைக்காடு காறாயில்  பேரான ஒத்த திருவாய்மூர் உகந்த திருக்கோளிலிகத்த விடங்கத்தலம்.’’சப்தவிடங்க ஸ்தலங்களுள் ஐந்தாவது தலமாகப் போற்றப்படும் இத்தலத்தில், ஈசன் நீல விடங்கராக, ரத்தின சிம்மாசனத்தில் அன்னை நீலோத்பலாம்பாளுடன் தியாகராஜராக எழுந்து திருவருள் புரிகின்றார்! இவர் இங்கு ஆடும் திருநடனம் தாமரைப்பூ காற்றில் அசைந்தாடுவது போன்ற மெல்லிய கமல நடனமாகும். யமனும், சனிபகவானும் சகோதரர்கள். சூரியனுக்கும், சாயாதேவிக்கும் பிறந்தவர்கள்.

ஒரு கட்டத்தில் இருவருக்கும் பகை உண்டாக... கிரக பதவி கிடைக்கக் கூடாதெனச் சனிக்கு  சாபமிடுகின்றார் யமன். சோர்ந்துபோன சனிபகவான், தாய் சாயாதேவியின் ஆலோசனைப்படி காலபைராஷ்டமி தினமான கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமியில் திருவாய்மூர் வந்து அஷ்ட பைரவரை வழிபாடு செய்கின்றார். அதன்பின் ஈசனது அருளால் கிரகப் பதவி கிட்டியது சனீஸ்வரருக்கு. காசிக்கு இணையாக, ஆனந்த பைரவர், அகோர பைரவர், உத்தண்ட பைரவர், பால பைரவர், பாதாள பைரவர், ஈஸ்வர பைரவர், கால பைரவர், ஈசான பைரவர் என அஷ்ட பைரவர்கள் வீற்றருளும் தலமாகவும், காசிக்கு நிகரான குரு ஸ்தலமாகவும் திகழ்கிறது இந்த திருவாய்மூர். இத்தலப் பெருமானை ஒன்பது கிரகாதிபதிகளும் பிரம்மனும் வழிபட்டு, பேறு பெற்றுள்ளனர். அம்பாளை தேவேந்திரனும், தியாகேசரை வால்மீகி முனிவரும் வழிபட்டுள்ளனர்!

ஐந்து தலை நாகம் ஒன்றும் இங்கே வழிபட்டுள்ளது. பராந்தகச் சோழன் சதய நட்சத்திரத்தில் திருவாய்மூர் நாதருக்கு அபிஷேகம் நடத்திய பின்னரே மகுடம் சூட்டிக் கொண்டான். திருவாரூரைத் தலைநகரமாகக் கொண்டு நல்லாட்சி நடத்தி வந்தான் முசுகுந்தச் சக்கரவர்த்தி. மிகுந்த ஆற்றல் கொண்ட இம்மன்னன் முற்பிறவியில் குரங்காக இருந்தான். வில்வ மரத்தின் வில்வ இலைகளைத் தனக்கே தெரியாமல் சிவலிங்கத்தின் மீது போட்டதன் விளைவாக மறுபிறப்பில் மனிதனாகப்பிறக்கும் வரம் பெற்றான். ஒருசமயம் வலன் என்னும் அசுரன் தேவர்களைக் கடுமையாகத் துன்புறுத்தினான். அவனது கொடுமை தாளாமல் இந்திரன், ஈசனை சரணடைந்தான். சிவன், பூவுலகில் உள்ள முசுகுந்தரை அணுகி அறிவுறுத்தினார். வியப்படைந்த இந்திரன் பெருமான் சொல் தட்டாமல் முசுகுந்தரை நாடி, அவரது உதவி பெற்று, அசுரனை வென்று, அமரலோகம் காத்தான்.

தனக்கு உதவிய முசுகுந்தருக்கு பரிசு தர விரும்பி, வேண்டியதை கேட்டான் தேவேந்திரன். அதற்கு முசுகுந்தர், ‘‘நீ விரும்பி வழிபடும் மரகத லிங்கம் மற்றும் சோமாஸ்கந்த வடிவான நீலோத்பலாம்பாள் உடனுறை தியாகேசரைத் தருக’’ என்கின்றார். செய்வதறியாது திகைத்த இந்திரன், திருமாலின் நெஞ்சிலிருந்து எழுந்தருளியவரே இவர். இம்மூர்த்தியை எனக்கு திருமாலே அளித்தார். ஆதலால், அவரின் விருப்பம் பெற்றே இந்த தியாகராஜரைத் தங்களுக்குத் தர இயலும் எனக்கூறி, தியாகராஜரைப்  போன்றே மேலும் ஆறு திருவுருவங்களை வடிவமைத்து முசுகுந்தனிடம் காட்டினான். ஈசனது அருளால் உண்மையான வடிவினை முசுகுந்தர் காட்டிட... வியந்த இந்திரன் ஏழு தியாகேசர்களையும் முசுகுந்தரிடம் தந்து, தென்னாட்டில் இவ்வேழு மூர்த்திகளையும் ஏழு சிவத்தலங்களில் பிரதிஷ்டை செய்து, பூஜிக்க வேண்டினான். அவ்வேழு தலங்களே சப்தவிடங்கத் தலங்கள் ஆயின.

வேதாரண்யம் என்னும் திருமறைக்காட்டில் மறைக்காட்டு நாதர் திருக்கோயிலின் அடைபட்டத் திருக்கதவுகளைத் தனது தீந்தமிழால் பாடித்திறக்க வைத்தார் திருநாவுக்கரசர். மீண்டும் அக்கதவுகள் மூடித் திறக்கும் படியாக அருந்தமிழ் பாடல் பாடினார் ஆளுடையப்பிள்ளையான திருஞானசம்பந்தர். நாவுக்கரசர் பத்துப் பாடல்கள் பாடிய பின்னரே கதவுகள் திறந்தன. ஆனால், சம்பந்தர் பாடிய முதல் பாடலுக்கே கதவுகள் அடைபட்டன. இதை எண்ணி நெஞ்சுருகி நின்றார் அப்பர் பெருமான். தனது பாடலில் இனிமை குறைந்ததோ என எண்ணியவாரே திருமடத்தில் படுத்திருந்தார். கண்மூடி கவலையுற்றிருந்த அப்பரது கனவில் தோன்றிய கங்காதரர் ‘வா என்னோடு’ என்று கூறி நகர, கண் விழித்த ஆளுடைய அரசர் மகேசரைப் பின்தொடர்ந்தார். திருவாய்மூர் திருக்கோயிலுள் சென்று மறைந்தார் பெருமான்.

ஈசன் அழைத்ததன் காரணம் அறியாமல், ‘எங்கேயென்னை இருந்திடந்தேடி’ என்னும் பதிகம் பாடிப் போற்றினார். அச்சமயம் திருமறைக்காட்டில் திருநாவுக்கரசரைக் காணாமல், அவரைப் பின்தொடர்ந்து திருவாய்மூர் வந்தடைகின்றார் ஞானப் பிள்ளையார். ‘தளிரிள வளரென’ எனத் தொடங்கும் திருப்பதிகம் பாடிட... பரமன் மகிழ்ந்து, உமையுடன் கூடித் திருநடனமாடி, ரிஷபத்தின் மீதெழுந்து திருக்காட்சி தந்து, இருவரையும் இணையில்லாத இன்பத்தில் திளைக்கச் செய்தார். திருவதிகை முதல் வேதாரண்யம் வரையிலானத் தலங்களுள் சிவபெருமான் முதன்முதலில் அப்பர் பெருமானுக்கு காட்சி தந்தது இந்தத் திருவாய்மூரில்தான் என்பது குறிப்பிடத்தக்கது. சோழ நாட்டின் காவிரித்தென்கரையின் 124வது தேவாரத் தலமாகத் திகழும் இப்பதி மீது அப்பர் இரண்டு பதிகங்களையும், சம்பந்தர் ஒரு பதிகத்தையும் பாடியுள்ளனர்!

அதோடு அப்பர் பெருமான் பிறதலப் பதிகங்களிலும் க்ஷேத்திரக் கோவையிலும் திருவாய்மூரை நினைத்துப் போற்றியுள்ளார்! சம்பந்தர் தனது பாடலில்... எந்த துன்பத்தில் ஒருவன் இருந்தாலும் ‘திருவாய்மூர்  நாதா’ என்று நினைத்தால், உடனே அங்கு வந்து அருள் செய்வார்  என வாக்குரைக்கின்றார். அப்பரோ... ‘‘திருவாய்மூர் பெருமானைப் பரிந்தேத்தும் அன்பருக்குத் தக்கப் பரிசளிப்பார்’’ என அருள் மொழிகின்றார். பட்டினத்தாரும், வள்ளல் ராமலிங்க அடிகளாரும் கூட இத்தலத்தைப் பாடிப்புகழ்ந்துள்ளனர். வள்ளலார் தனது பாடலில் ‘‘காய்மூர்க்கரேனும் கருதில் கதிகொடுக்கும் வாய்மூர்க்கமைந்த மறைக்கொழுந்தே’’ என்று போற்றுகின்றார். ‘‘எப்படிப்பட்ட மூர்க்கரானாலும் மனதில் வாய்மூர்பிரானைக் கருதினாலே நற்கதி கிட்டும்’’ என இத்தல மகிமையினை மேன்மை கூட்டுகின்றார்.

பேருந்துச் சாலையை ஒட்டி தோரண வாயிலுடன் வரவேற்கிறது ஆலயம். எதிரில் அழகு மிளிர, பரந்து விரிந்து காணப்படுகிறது தல தீர்த்தமான பாப விமோசன பிரசண்ட தீர்த்தம். முதலில் பலிபீடம், துவஜ ஸ்தம்பம் மற்றும் நந்தி மண்டபம். வலப்புறம் நிர்வாக அலுவலகம். பின், ஐந்து கலசங்கள், மூன்று மாடங்களுடன் கூடிய எழில் மிகுந்த ராஜகோபுரம் உள்ளம் குளிர்விக்கின்றது. உள்ளே... தென்புறம் அக்னி திசையில் மடப்பள்ளி! வடபுறம் நான்கு உருவச் சிலைகள் மற்றும் நான்கு சுக்குமாத்தடிகளுடனான (தண்டம்) அஷ்ட பைரவர்கள். உடன் சிவலிங்கங்களின் தரிசனம். நேராக மூடுதள அமைப்புடனான மூன்று சந்நதிகள். முதலில் மகாமண்டபம். பின், அந்தராளத்துடனான ஈசனது பிரதான கருவறை. கருவறையுள் கருணையே வடிவிலான இறைவன் திருவாய்மூர்நாதர் சுயம்புவாக சிறிய வடிவில் சற்றே இடப்பக்கம் சாய்ந்தவாறு அருட்காட்சி அளிக்கின்றார். பெரிய வரங்களை வழங்கிட காத்திருக்கின்றார் தன் பக்தன் வருகைக்காக!

வடப்பக்கம் வேதாரண்யேஸ்வரர் தனிச் சந்நதி கொண்டு பேரருள் புரிகின்றார். தென்புறம் நீலோற்பலாம்பாள் உடனுறை தியாகராஜஸ்வாமி தனிச் சந்நதி கொண்டு நல்லருள் புரிகின்றார்! பேழையில் மரகதலிங்கம் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. தினமும் இருவேளைகள் இந்த லிங்கமூர்த்திக்கு பால், சந்தனம், பன்னீர் போன்றவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு, ஆராதனைகள் நடத்தப்படுகின்றன. மகாமண்டபத்தில் தென்திசையைப் பார்த்தவாறு நடராஜப் பெருமான் புதுமையான, உன்னத கோணத்தில் அட்டாணிக்கால் இட்டு சாந்தமே வடிவாய் அருள்மாரிப் பொழிகின்றார். அருகே நீண்ட வரிசையில் ஒன்பது கிரக தெய்வங்களும் எங்கும் காணக்கிடைக்கா வண்ணம் நின்றபடி தரிசனமளிக்கின்றனர். ஆலய வலம் வருகையில் நந்திமீது அமர்ந்த தக்ஷிணாமூர்த்தியை தரிசிக்கின்றோம்.

வடகோஷ்டத்தில் வீற்றிருக்கும் துர்க்கை இங்கு வித்தியாசமான கோலத்தில் ஓலைச்சுவடி ஏந்தி, சிம்ம வாகனத்தின் மீது நின்ற வண்ணம் சாந்த ஸ்வரூபியாக அருள்புரிகின்றாள். பிரதான கணபதியின் சந்நதி தென்மேற்கிலும், மேற்கில் கந்தன் சந்நதியும், வடமேற்கில் கஜலட்சுமியின் சந்நதியும் அமைந்துள்ளன. ஸ்வாமி சந்நதிக்கு இடப்புறம் அம்பாள் சந்நதி அமையப்பெற்றுள்ளது! மூலஸ்தானத்தில் அழகே வடிவாய் அருட்காட்சியளிக்கின்றாள் க்ஷீரோபவசனி. தமிழில் பாலினும் நன்மொழியாள் என்று அழைக்கப்படுகின்றாள். தலவிருட்சமாக பலாமரம் திகழ்கிறது. தல தீர்த்தமாக சூரிய தீர்த்தமும் உள்ளது. இந்த ஆலயத்திற்கு தெற்கில் ஓடும் அரிச்சந்திரா நதியும் இத்தல தீர்த்தமாகத் திகழ்கின்றது.

பல்லவ, சோழ மன்னர்களால் பராமரிக்கப்பட்ட இவ்வாலயத்தில் சோழர்கால கல்வெட்டுகள் அதிக அளவில் காணப்படுகின்றன. மாதா மாதம் தேய்பிறை அஷ்டமியில் இங்கு பைரவர் மகா யாகம் நடைபெறுகின்றது. அதில் சுமார் 2000 பேர்களுக்கு அன்னதானம் அளிக்கப் படுகின்றது. சூரியப் பரிகாரத் தலமாகவும் விளங்கும் இங்கு பார்வைக் கோளாறு உள்ளவர்கள் வழிபட உரிய பலனுண்டு. சப்த விடங்கத் தலங்களிலும் தியாகராஜருக்கு நெய் விளக்கிட்டு, காய்ந்த திராட்சையும், கற்கண்டும் நைவேத்தியம் செய்ய, பூர்வ ஜென்ம பாபங்கள் நீங்கி முக்தி கிட்டும். ஆலயத் தொடர்புக்கு: சிவா குருக்கள்  9487992974. நாகப்பட்டினம்  திருத்துறைப்பூண்டி நெடுஞ்சாலையில் உள்ள சீரா வட்டத்திற்கு 2 கி.மீ. அண்மையில் அமைந்துள்ளது. திருக்குவளையிலிருந்து ஆட்டோ மூலமாகவும் திருவாய்மூர்  வரலாம்!

பழங்காமூர் மோ.கணேஷ்

Tags :
× RELATED மேன்மையான வாழ்வருளும் மடப்புரம் காளி