திருப்பங்கள் தருவார் திரிவிக்ரமப் பெருமாள்

திருக்கோவிலூர்

அந்த ஊருக்கு திருக்கோவலூர் என்று பெயர். பக்தியைப் பரப்பும் கோயில்களைக் கொண்ட இத்தலத்தில், பிறருக்காக விட்டுக் கொடுத்தால், இறைவனைக் காணலாம், அவனருளைப் பெறலாம் என்ற உண்மையை மூன்று ஆழ்வார்கள் உணர்த்தியிருக்கிறார்கள். திரிவிக்ரம சுவாமியை தரிசிப்பதற்காக வந்தார் பொய்கையாழ்வார். இரவு கவிந்துவிட்டது. கோயில் நடை சாத்தியிருப்பார்களே என்று தயக்கமாக யோசித்தார். முயன்று பார்க்கலாமா, பெருமாளை தரிசனம் செய்துவிட முடியுமா என்று சந்தேகப்பட்டுக் கொண்டே கோயிலை நோக்கி அவர் நகர்ந்தபோது, திடீரென்று பெருமழை பிடித்துக்கொண்டது. ஓடிப்போய் கோயிலுக்குள் ஒதுங்கலாமா என்று யோசித்தார்.

ஆனால், மழை அவரை அதிகமாக பயமுறுத்தவே, சற்றுத் தொலைவில் இருந்த மிருகண்டு முனிவரின் குடிலைக் கண்டார். விரைந்து சென்று உள்ளே தங்குவதற்கு முனிவரிடம் அனுமதி கேட்டார். அவரோ, ஓரிடத்தைக் காண்பித்து, ‘ஒருவர் படுத்து உறங்கலாம்,’ என்று அந்த இடைக்கழியின் அளவைச் சொல்லி அனுமதித்தார். இருளும் மழை மேகங்களால், மேலும் கறுக்கவே, அங்கேயே படுத்துறங்கி, மறுநாள் விக்கிரம சுவாமியை தரிசனம் செய்துகொள்ளலாம் என்று தீர்மானித்தார்.

படுத்துக்கொள்ளலாம் என்று நினைத்தாரே தவிர, கால்களை மடக்கி, உடலைக் குறுக்கிப்படுக்கத்தான் அங்கே இடம் இருந்தது. சிறிது நேரம்கூட சென்றிருக்காது, அந்தக் குடிலுக்குள் இன்னொருவர் வந்து நுழைந்தார். அவரும், பெருமாளை தரிசிக்க வந்தவர், மழை காரணமாக கோயிலுக்குள் நுழைய முடியாமல் ஒதுங்கத்தான் வந்திருந்தார். அவரைப் பார்த்தும், அந்த இருளில் அடையாளம் தெரியவில்லை பொய்கையாழ்வாருக்கு. ஆனாலும், ‘‘வாருங்கள், சுவாமி, நாம் இருவரும் அமர்ந்து கொள்ள இங்கே இடம் இருக்கிறது,’’ என்று சொல்லி, படுத்திருந்த அவர் எழுந்து குந்தி அமர்ந்து கொண்டார். வந்தவர் பூதத்தாழ்வார். பொய்கையாழ்வாருக்கு நன்றி சொல்லி அவர் கொடுத்த இடத்தில் இவரும் அமர்ந்து கொண்டார்.

இருவரும் பெருமாளைப் பற்றிப் பேச ஆரம்பித்தபோது, மூன்றாவதாக ஒரு நபர் உள்ளே நுழைந்தார். ஆனால் அங்கே ஏற்கெனவே இருவர் அமர்ந்திருப்பதை மெல்லிய வெளிச்சத்தில் கண்ட அவர், அவர்களைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கருதி, வெளியே நின்றார். ஆனால், மழை வலுக்கவே, இவர் பெரிதும் நனைய வேண்டியிருந்தது.

இதைக் கண்ட உள்ளிருந்த இருவரும், ‘‘உள்ளே வாருங்கள், வெளியே மழையில் வீணாக நனையாதீர்கள். எங்கள் இருவருக்கும் இங்கே அமர்ந்துகொள்ள இடம் கொடுத்திருக்கும் அந்தப் பெருமாள், உங்களுக்கும் இடமளித்திருக்கிறான். இருவரும் உட்கார்ந்திருக்கும் இந்த இடத்தில் நாம் மூவருமாக நின்று கொள்வோம், வாருங்கள்’’ என்று அவரை அழைத்தார்.

மூன்றாவதாக வந்தவர் பேயாழ்வார். இவரும் திருக்கோவிலூருக்கு திரிவிக்கிரமரை தரிசிக்க வந்தவர்தான். நடை சாத்தியிருந்ததும், மழை பிடித்துக்கொண்டதும், இவரும் இந்த மண்டபத்திற்குள் புகலிடம் கோர வைத்திருந்தன.  

மூவரும் இருந்த இடத்தில் நின்று கொண்டார்கள். ஒருவர் படுக்கப் போதுமான இடம், இருவர் அமரப் போதுமாக இருந்தது; மூவர் நின்றுகொள்ளப் போதுமானதாக இருந்தது!ஆனால் நான்காவதாக ஒருவர் உள்ளே நுழைந்தபோது அம்மூவருமே சற்று திகைத்தனர். அவருக்கு இடம் கொடுக்க மனம் இருக்கிறது; ஆனால் இடமில்லையே...

அவர்கள் யோசித்துக் கொண்டிருக்கும்போதே, ஒரு பேரொளி தோன்றியது. அங்கே திரிவிக்கிரம சுவாமி அவர்களுக்கு தரிசனம் கொடுத்தார். நாலாவதாக வந்தவர் அவர்தான்! மறுநாள்தான் தரிசனம் காண முடியும் என்று நினைத்திருந்த பெருமாள் இப்போது அவர்கள் கேளாமலேயே அவர்கள் முன் நின்றிருந்தார்!

உடனே பொய்கையாழ்வார் பாடினார்:

வையம் தகளியாக வார்கடலே நெய்யாக

வெய்யக் கதிரோன் விளக்காக செய்ய

சுடராழி யானடிக்கே சூட்டினேன் சொல்மாலை

இடராழி நீங்குகவே என்று

 - இந்த உலகத்தைத்  திரியாகக் கொண்டு, கடல்நீரை நெய்யாகக் கொண்டு, கதிரவனை விளக்காகக் கொண்டு இந்த திருவிக்கிரம ஸ்வாமிக்கு நான் சொல் மாலையால் ஆன ஒரு பாடலை சூட்டுகிறேன், இடர்கள் எல்லாம் நீங்கட்டும் என்று. இப்படி ஆரம்பித்து தொடர்ந்து 100 பாடல்களை திருமாலைப் போற்றி இயற்றினார் பொய்கையாழ்வார். நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் இந்த நூறு பாடல்களும் முதல் திருவந்தாதியாக இடம் பெற்றன.

இதைக் கேட்ட பூதத்தாழ்வார்,

அன்பே தகளியாக, ஆர்வமே நெய்யாக

இன்புருகு சிந்தை இடுதிரியாக நன்புருகி

ஞானச் சுடர்விளக்கு ஏற்றினேன் நாரணற்கு

ஞானத் தமிழ் புரிந்த நான்

- என்று பாடினார்.

அதாவது இவரைப் பொறுத்தவரை அன்புதான் அகல். ஆர்வம்தான் நெய், பரந்தாமன் நினைவால் இன்பம் துய்க்கும் சிந்தையே திரி. இம்மூன்றாலும் அவர் ஞானச் சுடர் விளக்கு ஏற்றி திரிவிக்கிரம சுவாமியை தரிசிக்கிறார். இவரும் இந்தப் பாடலைத் தொடர்ந்து 100 பாடல்களால் திருமாலுக்கு போற்றி மாலை சாற்றினார். இந்தத் தொகுதி நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் இரண்டாவது திருவந்தாதியாகத் திகழ்கிறது.

பேயாழ்வாரோ, இந்த இரு விளக்கொளிகளில் தான் திருமாலை தரிசித்துவிட்ட சந்தோஷத்தை வெளிப்படுத்தினார்:

திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்

அருக்கன் அணிநிறமும் கண்டேன்

செருக்கி வரும் பொன்னாழி கண்டேன்

புரிசங்கம் கைக்கண்டேன் என்னாழி

வண்ணன்பால் இன்று

- ‘அழகிய பொன்மேனியின் திருக்கோலம் கண்டேன். அவனது உடல் வண்ணம் கண்டேன். கரங்களிலே சங்கும், சக்கரமும் கண்டேன். எனை ஆட்கொள்ளும் அழகிய வண்ணனைக் கண்டேன்’ என்று உருகிப் பாடினார். தன் பங்கிற்கு இவரும் 100 பாடல்களை இயற்றி, திருமாலுக்கு சமர்ப்பித்தார். இந்தத் தொகுதி, நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் மூன்றாவது அந்தாதியாக இடம் பெற்றது.

அதாவது, இறைவனை எங்கெல்லாம், எப்போதெல்லாம் காணலாம்? எங்கெல்லாம் மனம் பரந்து விரிந்திருக்கிறதோ, மற்றவருக்கும் இடமளிக்க அந்த மனம் முன் வருகிறதோ, அங்கெல்லாம், அப்போதெல்லாம் இறைவனைக் காணலாம். மேலே தரிசித்த மூன்று ஆழ்வார்

களும் அப்படி தம்மிடத்தை இன்னொருவருக்குப் பகிர்ந்தளிக்க தாமே முன்வந்தபோது, அங்கே இறைவனும் வந்து அவர்களோடு இணைந்து நின்று

கொண்டான்!

நாலாயிரம் பாசுரங்கள் அடங்கிய திவ்ய பிரபந்தத்துக்குப் பிள்ளையார் சுழி போடப்பட்டது திருக்கோவலூர் திருத்தலத்தில்தான். திரிவிக்ரமன் அவர்களுடைய பெருந்தன்மையைப் பாராட்டும் வகையில் தரிசனம் தந்த அற்புதத் தலம் இது. அந்தத் தோற்றத்தைக் கண்டு ஆழ்வார்கள் மேற்சொன்ன முறைப்படி ஆளுக்கு நூறு நூறு பாடல்கள் இயற்றியதுதான், அவர்களுக்குப் பின் வந்த ஆழ்வார்கள் வெவ்வேறு கோயில்களில் கொலுவிருக்கும் பெருமாளைப் போற்றிப் புகழ்ந்து மொத்தம் நாலாயிரம் என்ற எண்ணிக்கைக்குக் கொண்டுவந்து, அருந்தொண்டாற்ற, மூலகாரணமாக அமைந்தது. வைணவத்தின் புகழ் சிறக்க முதலடி எடுத்து வைத்த அந்தப் பெருமகனாருக்கு நன்றி சொல்லி, திருக்கோவலூர் கோயிலை வலம் வரலாம்.

அருங்காட்சி அளித்ததோடு, அந்த மூவரோடு நாலாமவராக ஒண்டிக் கொண்டாரே, இந்தப் பெருமாள் தன் மூலக் கருவறையில் எத்தனைப் பேருக்கு இடம் கொடுத்திருக்கிறார், தெரியுமா? பிரம்மா, லக்ஷ்மி, பிரகலாதன், மகாபலி, இவர் மகன் நமுச்சி மகாராஜா, சுக்கிராச்சார்யார், மிருகண்டு மகரிஷி, அவர் மனைவி, பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், கருடன்,  மற்றும் பக்தர்கள் என்று மொத்தம் 15 பேருக்கு!

திரிவிக்ரமனை முழுமையாக தரிசிக்கும் முன் சம்பிரதாயமாக கோயில் நுழைவா சலிலிருந்து வரலாம். நமக்கு முதலில் தரிசனம் அளிக்கிறாள் துர்க்கை! பெருமாள் கோயிலில்இந்த தரிசனம் வியப் பூட்டுகிறது என்றாலும், அதன் பின்னணி நயமானது. இந்த துர்க்கை வேறு யாருமல்ல, யோகமாயாதான். அதாவது, தேவகி-வசுதேவருக்குப் பிறந்த, கிருஷ்ணனுக்கு முந்தைய, குழந்தை.

பெண் குழந்தை. எட்டாவது குழந்தைக்காகக் காத்திருந்த கம்ஸன், இந்த ஏழாவது குழந்தையை, பிற ஆறு குழந்தைகளைப் போல தூக்கி எறிந்து கொல்ல முற்பட்டபோது அவனது கையிலிருந்து நழுவி, மேல் நோக்கிப் பறந்து, கிருஷ்ணனின் அவதார மகிமையையும், அவனால் கம்ஸன் வதைபடப் போவதையும் கட்டியம் கூறிய மகா மாயா இவள். திருக்கோவலூர் திருத்தலம், பஞ்ச கிருஷ்ணாரண்ய க்ஷேத்திரங்களில் ஒன்று (பிற நான்கு: திருக்கண்ணங்குடி, திருகவித்தலம், திருக்கண்ணபுரம், திருக்கண்ணமங்கை) என்பதால், தன் ‘தம்பி’ கிருஷ்ணனின் தலமான இந்தத் திருக்கோவலூருக்கு வந்தாள், யோகமாயாவான துர்க்கை.

மிருகண்டு முனிவருக்கு தன் திரிவிக்ரம திருக்கோலத்தைக் காட்சியாக்கு முன்பு கிருஷ்ணனாக பகவான் எழுந்தருளியிருந்த சந்நதி, கோயிலின் முன்புறத்தில் அமைந்துள்ளது. இதுதான் ஆதி சந்நதி. இங்கே கிருஷ்ணர் சாளக்கிராம திருமேனியராகப் பொலிகிறார். கோபாலன் என்ற திருப்பெயரால் கோபாலன் ஊர் என்றழைக்கப்பட்டு, நாளாவட்டத்தில் கோவாலன் ஊர் என்றாகி இப்போது கோவிலூர் எனத் திரிந்து விட்டது. கிருஷ்ணனின் பராக்கிரமத்தை கம்ஸனுக்கு உரைத்ததோடு, இங்கே இந்தத் தலத்தில் கிருஷ்ணனுக்குக் காவலாகவே இன்றும் இந்த துர்க்கை வீற்றிருக்கிறாள் என்றே சொல்லலாம்.

திருமங்கையாழ்வார், இந்த துர்க்கையை, ‘விந்தம் மேவிய கற்புடை மடக்கன்னி காவல்பூண்ட கடி பொழில்’ என்று போற்றுகிறார். சுமார் 300 வருடங்

களாகத்தான் இந்த துர்க்கை, இந்தக் கோயிலில் வழிபடப்பட்டு வருகிறாள். அதற்கு முன் தனியே ஊருக்கே காவல் தெய்வமாகத் திகழ்ந்தவள் இவள். இரவில் கோயிலைப் பூட்டிய பிறகு, சாவிகளை இவளிடம் சமர்ப்பிப்பதும், மறுநாள் காலை இந்த அன்னையின் அனுமதியுடன் அவற்றை எடுத்துக் கோயிலைத் திறப்பதுமான நடைமுறை இங்கே பின்பற்றப்பட்டு வருகிறது.  

அன்னையை தரிசித்து விட்டு பிராகாரத்தை வலம் வந்தால் வாமனர், கையில் குடையுடன், நம்மை வரவேற்கிறார். ‘உருவு கண்டு எள்ளாமை வேண்டும்’ என்று தன் கண்களாலேயே எச்சரிக்கிறார், போதிக்கிறார். அடுத்து திரிவிக்ரமனை தரிசிக்கும்போது பிரமிப்பால் விழிகள் விரிகின்றன. என்ன நெடிதுயர்ந்த உருவம்! இடது திருவடி நிலத்தில் ஊன்றியிருக்க, வலது காலை உயர்த்தி வானை அளக்கும் கம்பீரம் காண, வியர்த்துப் போகிறது. வித்தியாசமாக வலது கையில் சங்கு. தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு ஞானம் உபதேசிக்கும் பாங்கு! ‘இன்னும் ஒரு அடி பாக்கி, எங்கே இடம்?’ என்று மகாபலியைக் கேட்கும் தோரணையில் வலது பின்கை சுட்டு விரல் நீண்டிருக்கிறது.

இந்த திரிவிக்ரம அவதாரம் மூன்று உலகங்களும் உய்வதற்காகவும் ஏற்பட்டது. தன் வலது காலை விண்ணோக்கி உயர்த்தி சத்யலோகத்தை எட்ட, அங்கே காத்திருந்த பிரம்மன் அந்தப் பாதத்தைத் தன் கமண்டல நீரால் அபிஷேகித்து ஆனந்தம் அடைந்தான். (இந்த பாதத்திலிருந்து விழுந்த அந்த நீர்த்துளிகளே கங்கை, கிருஷ்ணபத்ரா, சிலம்பாறு ஆகிய ஆறுகளாக பூவுலகில் இன்றும் ஓடிக்கொண்டிருக்கின்றன).

திரிவிக்ரம அவதாரம் எடுக்க, தான் நிலையான ஆதாரமாக அமைந்ததற்காகப் பெருமை கொண்ட பூமி தேவி, அந்த இடது பாதத்தை அர்ச்சித்து மகிழ்ந்தாள். மூன்றாவது அடியாக மாவலியின் தலைமீது கால் வைத்து அவனை பாதாள உலகத்திற்குள் அமிழ்த்தி, அந்த லோகத்தவருக்கும் தன் இந்தப் புது அவதாரத்தைக் காட்டியருளினார் பரந்தாமன். இந்த வகையில், சத்யலோகம், பூலோகம், பாதாளலோகம் என்று மூன்று உலகங்களுக்கும் தன் பிரமாண்ட பேரெழிலைக் காட்டி உய்வித்தார்.           

தாயார் பூங்கோவல் நாச்சியார், தனி சந்நதியில் தாய்மை பொலிய சேவை சாதிக்கிறார். புஷ்பவல்லித் தாயார் என்று உற்சவர் அன்னைக்குப் பெயர். தாயாரை தரிசிக்கப் போகும்போது தூணில் சிறிய வடிவில் காட்சி தருகிறார் அனுமன். குட்டி அனுமார் என்று செல்லமாக அழைக்கப்படுகிறார். (கோபுர நுழைவாயில் அருகிலிலும் ஆஞ்சநேயர் சந்நதி ஒன்று உள்ளது). தாயாருக்கு கருவறை, அந்தராளம், அர்த்த மண்டபம், மகா மண்டபம், சோபன மண்டபம், திருக்கல்யாண மண்டபம் என்று மிக விரிவான சந்நதி அமைந்திருக்கிறது.

தாயாருக்கு வலது பக்கம் சக்கரத்தாழ்வார் சந்நதி. 16 திருக்கரங்கள் கொண்டு எல்லா திசைகளிலும் வியாபித்து நிற்கிறார். இந்த மூலவர், மூன்று புறமும் அக்னி ஜ்வாலையுடன், யோக யந்திரங்களின் நடுவே நின்ற எழில் கோலம் காட்டுகிறார். பின்புறம் யோக நரசிம்மர். இந்த சந்நதியில் சனிக்கிழமைகளில் பக்தர் கூட்டம் சொல்லி மாளாது. மனவளர்ச்சி குன்றியவர்கள், தீராத நோயுள்ளவர்கள், குடும்ப கஷ்டம் மிகுந்தவர்கள் இந்த சக்கரத்தாழ்வாரை வழிபட்டு நற்பலன் பெறுகிறார்கள். இவர் சந்நதியில் நெய்விளக்கு ஏற்றி, சுதர்ஸன சதகம் வாசித்தால் எண்ணமெல்லாம் ஈடேறுகிறது.

கோயிலின் வடமேற்கு மூலையில் ராமர் சந்நதி. இவரை ‘காட்டு ராமர்’ என்றழைக்கிறார்கள். சீதை, லட்சுமணன், ஆஞ்சநேயருடன் காட்சி தரும் இவருடைய சந்நதியை வலம் வரும் வசதி இருக்கிறது. உற்சவர் ராமரும் தகதகவென ஜொலிக்கிறார். இவருக்கு முன்னால் வரதராஜரும் நெடிதுயர்ந்த உருவத்துடன் தனி சந்நதி கொண்டு அருள் பாலிக்கிறார்.

அடுத்தடுத்து, பிள்ளைலோகாச்சார்யார், லக்ஷ்மி நாராயணர், வீர ஆஞ்சநேயர், லக்ஷ்மிவராகர், லக்ஷ்மி நரசிம்மர், ஆண்டாள், ராமானுஜர், சேனை முதலிகள், மணவாளமாமுனிகள் என்று தரிசிக்க தரிசிக்க பல அருட் சந்நதிகள்..... திருக்கோவலூர் திருத்தலம், ஸ்ரீமத் ராமானுஜ பாரம்பரியம் கொண்டது. இது எல்லா வைணவத் திருக்கோயில்களிலும் உண்டான சம்பிரதாயம்தானே என்கிறீர்களா, இங்கே அதற்கும் ஒரு படி மேலே.

ஆமாம், குலம், இனம் பாராது அனைத்து மக்களுக்கும் இங்கே தீட்சை வழங்கப்படுகிறது. தினமும் காலையில், நாராயணன் மீது பற்றும், பக்தியும் கொண்ட யாருக்கும் இந்த மடத்து நிர்வாகியான 25வது பட்டம், ஸ்ரீமத் எம்பெருமானார் ஜீயர் சுவாமிகள் அவ்வாறு தீட்சை அளிக்கிறார். தமக்கு 24 பட்டங்களுக்கு முந்தைய ஜீயர் பெருமகனார் துவக்கி வைத்த சமபந்தி போஜன திருச்சேவையை இவரும், தன் திருமாளிகையில் வருடா வருடம் மேற்கொண்டு வருகிறார்.ஓங்கி உலகளந்த உத்தமனின் இந்தத் திருக்கோயிலில் வானளாவிய பரந்த சேவை மனப்பான்மை எந்தக் குற்றமும், குறையுமின்றி செறிந்து வளர்வது நெஞ்சை விம்மச் செய்கிறது.

தியான ஸ்லோகம்

திருக்காவலூருக்குச் சென்று திரிவிக்ரமனை தரிசிக்கும்வரை கீழ்காணும்

தியான ஸ்லோகத்தைச் சொல்லிக்கொண்டிருக்கலாம்:

ஏகேநஸ்வபதா ஸமஸ்த வஸுதாம் மாத்வாத்வதீயேநகம்

மாதும் சத்ரிதிவே ஸமுத்ருத்பத: புஷ்பாலயாவல்லப:

பண்ணா தீர்த்த தடே த்ரிவிக்ரமஹரி: லக்ஷ்ம்யாலயாக்யே புரே

பூர்வாசா வதநோ ம்ருகண்டுவரத: ஸ்ரீதாக்யவைமாநிக:

- ஸ்ரீ விஷ்ணு ஸ்தல தர்சனம்

பொதுப்பொருள்: லக்ஷ்மியாலயம் என்னும் திருக்கோவலூர் திவ்ய தேசத்தில் வானுயர நின்று அருள்பாலிக்கும் எம்பெருமானே, நமஸ்காரம். ஒரு திருவடியால் நிலம் அனைத்தையும் அளந்து, அடுத்த திருவடியால் வானை அளந்து, மூன்று உலகிற்கும் செல்லும் திரிவிக்ரமப் பெருமாளே, நமஸ்காரம். பூங்கோவில் நாச்சியாருடன் ஸ்ரீகர விமான நிழலில் தென் பெண்ணயாற்றங்கரையில் கிழக்கு நோக்கிய நின்ற திருக்கோலத்தில், மிருகண்டு முனிவர்க்கும், மகாபலிக்கும் காட்சி தந்து அருள் பாலிக்கும் பரம்பொருளே நமஸ்காரம்.

பிரபுசங்கர்

Related Stories:

>