பஞ்சத்தைப் போக்கும் பஞ்சநதீஸ்வரர்

திருமணமேடு

கொள்ளிடம் நதிக்கும் அய்யன் வாய்க்காலுக்கும் இடையே உள்ளது திருமணமேடு. இந்த ஊரின் நடுவே சற்றே மலைபோன்ற உயரமான இடத்தில் அமைந்துள்ளது அருள்மிகு பஞ்சநதீஸ்ரர் ஆலயம். ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்த ஆலயத்தில் முதல் குலோத்துங்க சோழன், விக்கிரம சோழன், இரண்டாம் ராஜராஜர், மூன்றாம் ராஜேந்திரர், மாறவர்மர், குலசேகரர் கால கல்வெட்டுகள் உள்ளன. இந்த மன்னர்களால் வழிபடப்பட்டு வந்த ஆலயம் இது. இங்கு அருட்பாலிக்கும் இறைவன் பெயர் பஞ்சநதீஸ்வரர்.

இறைவி பெயர் தர்மசம்வர்த்தினி. ராஜராஜ நாராயணநல்லூர், திருகளிச்சுவரம் என்று அழைக்கப்படும் திருமணல்மேடு என்ற இந்த தலம் மருவி தற்போது திருமணமேடு என்றே அழைக்கப்படுகிறது. முகப்பைத் தாண்டி உள்ளே நுழைந்ததும் நந்தியும் பீடமும் இருக்க அடுத்துள்ள அர்த்த மண்டபத்தைக் கடந்துள்ள கருவறையில் இறைவன் பஞ்சநதீஸ்வரர் லிங்கத்திருமேனியில் கீழ்த்திசைநோக்கி அருள்பாலிக்கிறார். கருவறையின் முகப்பின் இருபுறமும் பிள்ளையார் திருமேனிகள் உள்ளன. முகப்பைக் கடந்ததும் உள்ள பிராகாரத்தின் வலதுபுறம் அன்னை தர்மசம்வர்த்தினியின் சந்நதி உள்ளது. அன்னை இங்கு நான்கு கரங்களுடன் விளங்குகின்றாள்.  

முன் இரு கைகள் காக்கும் குறிப்பிலும் அருட் குறிப்பிலும் அமைய மேல் கரங்கள் தாமரை மலர்களை தாங்கி காட்சி அளிக்கின்றன. திருமணத்தடைகளை நீக்கி கடன் தொல்லைகளிலிருந்து தன்னை வழிபடுபவர்களை காக்கம் ஆற்றல் கொண்ட இறைவன் பஞ்சநதீஸ்வரரையும் இறைவி தர்மசம்வர்த்தினியையும் தரிசித்து பயன் பெறுவோம். திருச்சி லால்குடி நெடுஞ்சாலையில் வாளாடி என்ற தலத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது திருமணமேடு என்ற இந்த தலம்.

Related Stories: