×

பாபாவின் அருள் நிறைந்த சிறந்த இடங்கள்

சீரடிபகவான் சாய்பாபா சூட்சும ரூபத்தில் இருந்து அருளாசி செய்யும் தெய்வீகத்தலம். இங்குள்ள ஒவ்வோர் இடமும் தரிசித்து வணங்க வேண்டிய இடங்களே. இங்குள்ள ஒவ்வோர் அடி மண்ணும் பாபாவின் திருவடி ஸ்பரிசத்தால் மகிமை பெற்றுத் திகழ்கிறது. இந்த இடங்களைச் சுற்றியே சாயிநாதரின் லீலைகள் நடைபெற்றன. சீரடியில் பாபாவின் சமாதி மந்திர், அவர் வசித்த துவாரகாமாயி, சாவடி, குருஸ்தான், லெண்டித் தோட்டம், மகல்சாபதி இல்லம் என்று பல இடங்களை பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். இந்த இடங்களின் மகத்துவம் என்ன, இந்த இடங்களுக்கும் பாபாவுக்கும் உள்ள தொடர்பு என்ன என்பது பற்றி இங்கே காணலாம்.

சமாதி மந்திர், துவாரகமாயி, சாவடி, குருஸ்தான், லெண்டித் தோட்டம், மகல்சபாதி இல்லம் எனப் பல இடங்கள் பக்கதர்களால் தினம்தோறும் தரிசிக்கப்பட்டு வருகிறது. துவாரகாமாயியை அடுத்து சுமார் 50 அடி தூரத்தில் சாவடி உள்ளது. சாவடி என்றால் மக்கள் கூடிப் பேசும் பொது இடம். அந்நாளில் யாத்திரீகர்கள் தங்கிச் செல்லவும் இந்தச் சாவடி பயன்பட்டது. இரண்டு அறைகள், ஒரு வராண்டா கொண்ட சிறு அமைப்பை கொண்டது சாவடி. மிகவும் சிறிய இடமான சாவடி எப்படி புனிதத்துவம் பெற்றது என்றால், சாயிநாதரின் அருளால்தான் என்றே சொல்லலாம்.

சாய்பாபா தங்கியிருந்த மசூதி பாழடைந்து மழைக்காலத்தில் தங்கவே முடியாத நிலையில் இருந்தது. அப்போது அவரது பக்தர்கள் மசூதியை விட்டு வெளியே வந்து சாவடியில் வந்துதான் தங்கச் சொல்வார்கள். ஆனால் ஆரம்பத்தில் பாபா அங்கு வர சம்மதிக்கவில்லை. பின்னர் சாவடி சென்று அங்கும் தங்க ஆரம்பித்தார். இதனால்தான் சாவடி துவாரகமாயி மசூதிக்கு இணையான புகழை அடைந்தது. இன்று பளிங்கு மாளிகையாக இருக்கும் இந்த சாவடி அந்த நாளில் பாபாவின் திருவடி பட்டு பலரது நோய்நொடிகளை தீர்த்த புனித மண்ணைக் கொண்டிருந்தது. இங்கு இன்றும் சாய்பாபா பயன்படுத்திய நாற்காலி, சக்கர நாற்காலி, பலகை, பல்லக்கு, விசிறி போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.

சாய்பகவானின் உடல் வைக்கப்பட்டிருந்த பலகையும், இங்குதான் வைக்கப்பட்டிருந்தது. பின்னரே அருங்காட்சியகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.சாவடியில் சாய்பாபா படுத்து இருந்த அறைக்குள் மட்டும் பெண்கள் செல்வதில்லை. பாபா உறங்கிய அறையில்தான் பூஜைகளும், வழிபாடும் செய்யப்படுகிறது. சுமார் 20 ஆண்டுகள் இரவு வேளையில் சாயிநாதர் துவாரகாமாயியில் இருந்து சாவடிக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இப்போதும் வியாழக்கிழமைகளில் பாபாவின் திருவுருவம் துவாரகாமாயியில் இருந்து சாவடிக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகின்றது. பாபாவின் அருள் நிறைந்த இடங்களுள் சாவடி முக்கியமானது.

Tags :
× RELATED சுந்தர வேடம்