×

எட்டெழுத்தைத் தட்டிப் பறித்த பங்குனி உத்திர இரவு

பங்குனி உத்திரத் திருவிழா மிகவும் பழமையும் பெருமையும் உடையது. பன்னூறு ஆண்டுகளாக தமிழகத்தில் கொண்டாடப்பட்டுவருகிறது.
எல்லா மாதங்களிலும் முழுநிலவு நாள் வரும். ஆனால், பங்குனியில்  முழுநிலவு நாள் உத்திரம் நட்சத்திரத்தில்தான் வரும்.
இதை உத்திரம் மதியம் கூடிய முயக்கம் என்பதால் இத்திருவிழாவை பங்குனி முயக்கம் என்று அகநானூறு குறிப்பிடுகிறது.
இந்த உத்திர நாளில் சகல ஆலயங்களிலும் தெய்வத்திருமணங்கள் நடக்கும்.அத் திருமணங்களின் காரணங்கள் வேறு வேறாக இருக்கும்.
அப்படிப்பட்ட ஒரு அற்புதக் காரண சம்பவத்தைத்தான் இங்கு காணப் போகிறோம்.

அந்தணர்களை இரு பிறப்பாளர்கள் என்று  கருதும் வழக்கம் உண்டு. “த்வீதியர்கள்” என்று அவர்களைச் சொல்வார்கள். உபநயனம் ஆவதற்கு முன் ஒருபிறப்பு. உபநயனம் ஆகி ,வேத பாராயணம் செய்யும் தகுதி பெறும்பொழுது ஒரு பிறப்பு.  ஆனால், மனிதகுலத்தில் பிறந்த ஒவ்வொருவருக்குமே இரு பிறப்பு உண்டு.அது என்ன இரு பிறப்பு? ஒரு தடவை தானே பிறக்கிறோம்.அப்புறம் எப்படி இரண்டு பிறவி வரும்? அதுவும் ஒரு பிறவிக்குள்ளேயே?  
ஒன்று கர்ம வசமாக, ஒரு தாயின் கருப்பையில் உற்பத்தியாகி, இந்த மண்ணுலகில் பிறக்கக்கூடிய பிறப்பு.

இரண்டாவது பிறப்பு,  இம் மண்ணுலகில் பிறந்து, இனி பிறப்பில்லா நிலையை அடைகின்ற ஞானத்தை அறிகின்ற பிறப்பு.
கர்ம வசமாகப் பிறக்கின்ற பிறப்பு, மறுபடியும் மறுபடியும் பிறவியைத் தரும்.அது பிழையில்லை.அப்படிப் பிறந்தாலும், பிரம்மத்தை அறியும் முயற்சியில் ஈடுபடும் ஒருவன், ஞான நிலையை  இப்பிறவியிலேயே அடைய முடியும் என்கிற தெளிவைத் தருகின்றது இரண்டாவது பிறப்பு.இந்த இரண்டாவது பிறப்பு மிக முக்கியமானது. வாழ்வின் நோக்கமே இதுதான்.  

ஆழ்வார்கள் ஞானத்தைப் பெற்றபின் அதற்கு முன்னிருந்த பிறவியை அல்லது வாழ்ந்த வாழ்க்கையை ஒரு பொருளாகவே கருதுவதில்லை.
“பரம்பொருளே, உன்னை நான் அறிந்து கொள்ளும் பொழுது பெருவாழ்வு என்னும் புதிய பிறவி எடுக்கிறேன்” என்பதுதான் ஞானிகள் நிலை..
 உடல்கள் பல எடுப்பது எல்லா உயிர்களுக்கும் பொதுவானது. புதிய உடல் எடுத்திருப்பதைக் குறித்து மனிதன் மகிழ்ந்திருக்க வேண்டியதில்லை.
ஞானம் உதயமாகும்பொழுது இறைவனது மகிமை உள்ளபடி தெரிகிறது. ஞானத்தில் பிறந்திருப்பவரே நல்வாழ்வு வாழ்கின்றனர். உள்ளும் புறமும் தெய்வ சாந்நித்தியத்தை உணர்பவரும் அவர்களே.

இதை ஆழ்வார்கள் பாசுரங்களில்  அறியலாம்.
நின்றது எந்தை ஊரகத்து இருந்தது எந்தை பாடகத்து,
அன்று வெஃகணைக் கிடந்து என் இலாத முன்னெலாம்
அன்று நான் பிறந்திலேன்; பிறந்தபின் மறந்திலேன்;
நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுளே.

- இது திருமழிசை ஆழ்வாரின் திருச்சந்த விருத்தப் பாசுரம்.
 ஒரு குழந்தை கருவறையில்  இருக்கின்ற பொழுது அதற்கு எல்லாமே இருட்டாக இருக்கும்.
அது வெளியிலே விழுந்த  பிறகுதான்  இந்த உலகத்தைப் பார்க்கும். வெளிச்சம் தெரியும். அதைப்போலவே ஞானத்தைப் பெறாத பொழுது, உலகத்திலே இருந்தாலும், இருட்டிலே இருப்பது போலத்தான். ஆனால், ஞானத்தைப் பெற்ற பிறகு, வெளிச்சத்தை கண்டதுபோல ஆன்மா மகிழ்ச்சி அடையும்.
இந்த ஆன்ம மகிழ்ச்சி பெறுவதற்கென்றே ஒரு உற்சவம் நடக்கிறது. அதுவும் பங்குனி உத்திர இரவில்.ஆழ்வார்கள் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் 35வது திவ்ய தேசம் திருவாலி - திருநகரி.

இது இரண்டும் ஐந்து கிலோ மீட்டர் இடைவெளியில் இருந்தாலும், ஒரே திவ்யதேசமாகவே கருதப்படும் ஆழ்வாருக்கு திருமந்திர உபதேசம் செய்து, ஞானம் கொடுத்து , மாற்றமும் தந்த அற்புத நிகழ்வு  இந்தத் தலத்தில்தான் நடைபெற்றது.குலசேகர ஆழ்வாரும் திருமங்கையாழ்வாரும் பாடியிருக்கும்  இத்தலம் மிக சிறப்பு வாய்ந்தது.ஆதி காலத்தில் பில்வாரண்யம், ஸ்ரீபூரி, ஆலிங்கனபுரி என்றெல்லாம் பெயர்.  மூலவருக்கு வேதராஜன், வயலாலி மணவாளன் என்று பெயர்.வீற்றிந்த கோலத்தில் காட்சி தருவார்.

உற்சவருக்கு கல்யாண ரங்கநாதப்  பெருமாள் என்று பெயர். தாயாருக்கு அமிர்தவல்லி என்ற திருநாமம். ஏன் திருமங்கையாழ்வாருக்கு திருமந்திர உபதேசம் செய்து ஞானம் கொடுத்து ஆழ்வாராக்கினார் என்பதற்கு   பின்னணியாக இத்தலத்தின் வரலாறு நாம் தெரிந்து கொள்ள வேண்டும். பிரம்மாவின் மகன் பிரஜாபதி. தனக்கு மோட்சம்  வேண்டும் என்று பெருமாளை நோக்கி கடும்தவம் செய்தான்.
ஆனால், என்ன காரணத்தினாலோ, அவனுக்குத் தரிசனம் தருவதற்குப்  பெருமாள் தாமதம் செய்தார்.

தன்னுடைய பக்தன் தவம் செய்தும், பெருமாள் அவருக்குத் தரிசனம் தராமல் இருக்கிறாரே என்று நினைத்த  மகாலட்சுமி பெருமாளிடம் கோபம் கொண்டார். ஒரு தாமரை மலருக்குள் தன்னை ஒளித்துக் கொண்டாள்.  மகாலட்சுமியைப் பிரிந்த பெருமாள், மகாலட்சுமியைத் தேடி பல தலங்களுக்கு அலைந்து கடைசியில் இந்தத் தலத்தில் வந்து தன்னுடைய தேவியான மகாலட்சுமியைக் கண்டார். தன்னுடைய பிரிவுத் துயர் தீர மகாலட்சுமியை ஆலிங்கனம் செய்துகொண்டார். பெருமாள் மகாலட்சுமியை ஆலிங்கனம் செய்த தலம் என்பதால் இத்தலத்திற்கு ஆலிங்கனபுரி என்று பெயர்.
திருநகரியில் இதே கதைதான். ஆகையினால், இந்த இரண்டும் சேர்ந்து திருவாலி திருநகரி என்று அழைக்கப்படுகிறது.

வேறு எங்கும் இல்லாத இன்னொரு பெருமையும் இத்தலத்திற்கு உண்டு.பெருமாளுக்கு எப்படி கொடிமரம், பலிபீடம் இருக்குமோ, அதைப் போலவே ஆழ்வாருக்கும் இத்தலத்தில் தனி கொடிமரமும் பலிபீடமும் உண்டு.இந்த ஆழ்வார் திருமேனியைப் பற்றிய ஒரு வரலாறு உண்டு.
திருமங்கையாழ்வார் தம்முடைய கடைசிக் காலத்தில் திருக்குறுங்குடியில் இருந்தார்.அப்போது  தம்மைப் போலவே தங்கத்தினால் ஒரு சிலையை வடிக்கச்  செய்து, அதன் எதிரில் தான் நின்று கொண்டு, ‘‘வா” என்று அழைத்தார். அந்த சிலையும் திருமங்கையாழ்வார் அருகில் நடந்து வந்தது. அதனை ஆழ்வார் கட்டித் தழுவினார். ஆழ்வாரின் சக்தி முழுக்க அந்த சிலையில் இறங்கியது. பிறகு ஆழ்வார் பரம பதம் அடைந்தார். அந்த உற்சவமூர்த்தி தான் இன்றைக்கும் நாம் திருநகரியில் தரிசிக்கிறோம்.

ஆழ்வார்க்கு பரகாலன், கலியன், நீலன், கலி த்வம்சன், கவிலோக திவாகரன், சதுஷ்கவி சிகாமணி, ஷட் பிரபந்தக் கவி, கலிவைரி, நாலுகவிப் பெருமாள், திருநாவீறுடைய பெருமான், மங்கையர்கோன், அருள்மாரி, மங்கைவேந்தன், ஆலிநாடன், அரட்டமுக்கி, அடையார் சீயம்,
கொங்குமலர்க் குழலியர் வேள், கொற்றவேந்தன், கொற்றவேல் மங்கை வேந்தன் என்னும் பல பெயர்கள் உண்டு.12 ஆழ்வார்களில் இவர்தான் அதிகமான பெருமாள் திருத்தலங்களை மங்களாசாசனம் செய்துள்ளவர்.

மொத்தம் 82 பெருமாள் கோயில்களை மங்களாசாசனம் செய்திருந்தாலும், தான் பிறந்த சொந்த ஊரான திருக்குறையலூரில் உள்ள பெருமாள் கோயிலை மங்களாசாசனம் செய்யவில்லை.திருநகரியில் ஆழ்வார் வடிவழகை ஒரு முறை தரிசிக்க வேண்டும்.தோள் சாய்ந்த வேலும், துடிப்பான கண்களும்,அகன்ற மார்பும்,எடுப்பான நாசியும்,பொலிவான முகமும் பார்க்கும் போது  பரவசம் தரும்.பக்தி மனதில் நவரசம் எழும்.

என்ன அழகு? என்ன அழகு.?இந்த அழகைப் படம் பிடிக்கும் இரண்டு அழகிய பாடல்கள் இதோ.. காதும் சொரிமுத்தும் கையும் கதிர்வேலும்,தாதுபுனை தாளிணையும் தனிச்சிலம்பும்.நீதுபுனை தென்னாலி நாடன் திருவழகைப்போல,என்னாணை ஒப்பாரில்லையே.
வேலணைத்த மார்பும், விளங்கு திருவெட்டெழுத்தை.மாலுரைக்கத் தாழ்த்த வலச்செவியும்தாளினிணைத் தண்டையும், தார்க்கலியன் கொண்ட நன்முகமும்.கண்டு களிக்குமென்கண்.அவர் திருவடியின் கீழே அவர் பல காலம் பூஜை செய்த சிந்தனைக்கு இனியான் என்ற  விக்கிரகமும் உண்டு. அதனை ராமானுஜர் திருக்குறுங்குடியில் இருந்து கொண்டுவந்து இத்தலத்தில் வைத்தார்.

வைணவ  மரபில் எல்லா ஆழ்வார்களும்,  இரண்டு ஆழ்வார்களுக்குள் அடங்குவார்கள். இவர்களை பராங்குச பரகாலர்கள் என்று அழைப்பார்கள்.
பராங்குசன் என்பது நம்மாழ்வாரைக்  குறிக்கும். பரகாலன் என்பது திருமங்கையாழ்வாரைக் குறிக்கும்.இந்த இரண்டு ஆழ்வார்களும் அவதரித்த தலம் திருநகரி என்ற ஒரே பெயரை உடைய தலம்.நம்மாழ்வார் அவதரித்தது தெற்கே தாமிரபரணி நதிக்கரையில் உள்ள ஆழ்வார்திருநகரி. திருமங்கையாழ்வார் அவதரித்தது திருவாலி திருநகரி.

பெருமாளுக்குப் பத்து நாள் உற்சவம் நடப்பது போலவே ஆழ்வாருக்கும் பத்து நாள் உற்சவம் நடக்கிறது என்பது வேறு எங்கும் இல்லாத ஒரு பெருமை.
இப்பொழுது அந்த தலபுராண கதைக்கு வருவோம். பிரஜாபதிக்கு மோட்சம் பெருமாள் கொடுக்கவில்லை. இது நடந்தது முதல் யுகமான கிருதயுகத்தில்.
அடுத்த திரேதாயுகத்தில் அந்த பிரஜாபதி உபரிசரவசு என்கிற மன்னனாகப்  பிறந்தான். ஞானத்தைத் தேடி இந்தத் தலத்திற்கு தன்னுடைய புஷ்பக விமானத்தில் வந்தான்.இத்தலத்தில் பறக்க முயன்றபொழுது அந்த விமானமானது மேற்கொண்டு பறக்காமல் நின்று விட்டது. எனவே இத்தலத்தில் ஏதோ ஒரு புண்ணியம் இருக்கிறது என்று நினைத்து இறங்கி பெருமாளை நோக்கி மறுபடியும் தவம் செய்தான்..

இந்த யுகத்திலும் அவனுக்கு வீடுபேறு  கிடைக்காததால், அடுத்த யுகமான துவாபர யுகத்தில் சங்கபாலன்    என்ற பெயரில், ஒரு மன்னனுக்கு மந்திரியாக இருந்தான் . அப்பொழுதும் தவம் செய்தான். பெருமாள் சொன்னார்.“உனக்கு அடுத்த பிறவி ஒன்று உண்டு. நீ கலியுகத்தில் இதே இடத்தில் பிறப்பாய். அப்பொழுது நாம் உமக்கு திருமந்திர உபதேசம் செய்து மோட்சம்  தருவோம். உம்மால் இந்த உலகம் நன்மை அடையும்” என்று சொன்னார் . அதைப் போலவே கலியுகத்தில் நீலன் என்கிற பெயரில் ஒரு படைத்தலைவனின் மகனாகப் பிறந்தார்.திருவெள்ளக் குளம் என்கிற தலத்தில் அவதரித்த  குமுதவல்லி நாச்சியாரைத் திருமணம் செய்ய விரும்பினார். ஆனால் குமுதவல்லி நாச்சியார்,  ‘‘ஓராண்டுக்கு தினமும் ஆயிரம் வைணவர்களுக்கு உணவு படைத்து வணங்கினால்,  உங்களுக்கு மனைவியாவேன்” என்கிற நிபந்தனை விதித்தார்.

நிபந்தனையை ஏற்றுக்கொண்ட நீலன், தன்னிடம் இருக்கின்ற பணத்தைக்  கொண்டு, வைணவர்களுக்கு உணவு படைக்கும் உத்தமமான தொண்டை நடத்திவந்தார். தினம் ஆயிரம் பேருக்கு உணவு படைக்கும் தொண்டைச் செய்ததால் கைப்பணம் கரைந்தது. சோழ மன்னனுக்குச்செலுத்தவேண்டிய திறைப்பணத்தையும் செலவிட்டார். அப்பொழுதும் இந்த நிபந்தனை நிறைவேறவில்லை. இனி பொருள் ஈட்ட வழி இல்லாத நிலையில், தனவந்தர்களிடம் பொருளைக் கவர்ந்து, நல்ல காரியத்திற்குப் பயன்படுத்த வேண்டும் என்கிற உறுதிகொண்டு, வழிப்பறி செய்ய ஆரம்பித்தார்.ஏற்கனவே இவருக்கு வீடுபேறு தரவில்லை என்று வருந்திய மகாலட்சுமித் தாயார், இந்த பிறவியிலாவது அவசியம் திருமந்திர உபதேசம் செய்து மோட்சம் தர வேண்டும் என்று சொல்ல, அதனை ஏற்றுக் கொண்ட பெருமாள், பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தில் திருவாலியில் திருமணத்தை முடித்துக் கொண்டு, தம்பதியாக தம்மை மாற்றிக்கொண்டு, திருநகரிக்குச் செல்லும் வழியில் வேதராஜபுரம் என்ற இடத்தில் தங்கினார்.

அடுத்த நாள் அடியார்களுக்கு உணவளிக்க பொருள் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த திருமங்கை ஆழ்வார், தம்முடைய பரிவாரத்தோடு, திருமணத் தம்பதியரின் நகைகளைக் கொள்ளையடிக்கத் திட்டமிட்டார்.உடனே தன்னுடைய ஆடல்மா என்கிற குதிரையில் புறப்பட்டார். திருநகரிக்குத் திரும்பிக்கொண்டிருந்த தெய்வத் தம்பதியரை, இரவு நேரத்தில் வழிமறித்தார்.தன்னுடைய வாளைக் காட்டி அவர்களைப் பயமுறுத்தி, நகைகளை எல்லாம் கொள்ளை அடித்தார்.

கடைசியில் எம்பெருமான் காலில் அணிந்திருந்த மெட்டியை அவரால் கழற்ற முடியவில்லை. அதை விட்டுவிட்டுச்  
செல்வதா என்று நினைத்த நீலன், தன்னுடைய வலிமையான பற்களால் அந்த மெட்டியைக் கடித்து இழுத்தார்.பாதத்தின் தொடுவுணர்ச்சி பரவசம் தந்தது.    எம்பெருமான் புன்னகை பூத்தார். அவருடைய வலது செவியில் திருமந்திரத்தை ஓதினார்.

இந்த எட்டு எழுத்து மந்திரம் காதிலே  விழுந்ததும், அதுவரை இருந்த உலகியல் சிந்தனைகள் எல்லாம்  மறைந்தன.  நீலன் என்பவர் மறைந்தார். இப்போது புதியதாக ஒருவர் பிறந்தார். ஆழ்வாராக  மாறினார்.   அவருடைய திரு நாவிலிருந்து பெரிய திருமொழி பாசுரத்தின் முதல் பாசுரம் வீறு கொண்டு எழுந்தது.திருமந்திரத்தின் சுருக்கம் பிரணவம்.

அதில் மூன்று எழுத்துக்கள் உண்டு. அ, உ, ம  என்கிற மூன்று எழுத்துக்களின் தொகுப்பு தான் இந்த உற்சவத்தில் நடைபெறுகிறது. அதில் “அ” என்கிற எழுத்து கல்யாண ரங்கநாதரைக் குறிக்கும். “உ” என்ற எழுத்து அந்த கல்யாண ரங்கநாதரின் பக்கத்தில் இருக்கக்கூடிய மகாலட்சுமியான தாயாரைக் குறிக்கும். ‘‘ம’’ என்ற எழுத்து ஜீவாத்மாவாகிய திருமங்கையாழ்வாரைக்  குறிக்கும்.

இந்த மூன்று அட்சரச் சேர்க்கைதான் பங்குனி உத்திர இரவிலே நடக்கிறது.அ, உ, ம  -இவை மூன்றும் இணைந்தது தான் “ஓம்” என்கிற ப்ரணவ சப்தம். அந்த சப்தத்தின் விரிவுதான் எட் டெழுத்து மந்திரம்.  அந்த எட்டெழுத்து மந்திரத்தின் விரிவுதான் இரண்டாவது மந்திரமாகிய த்வய மகா மந்திரம்.  அந்த மந்திரத்தின் விரிவானது சரம ஸ்லோகம்.  இவை மூன்றின் விரிவுதான் சகல உபநிடதங்கள் .  அந்த உபநிடதங்களின் விரிவுதான்  சகல வேதங்கள்.

 அதனால் தான் மணவாள மாமுனிகள், இந்த இடத்தில் நடந்த அந்த அதிசயத்தை சொல்லுகின்றபொழுது, தேவர்களின் ராஜாவான வேதராஜன், மந்திரங்களின் ராஜாவான திரு எட்டெழுத்து மந்திரத்தை, அரசர்களின் அரசனான திருமங்கை ஆழ்வாருக்கு, மரங்களுக்கு  அரசனான ஒரு அரசமரத்தடியில், உபதேசித்தார் என்பதால் இந்த தலத்திற்கு வேதராஜபுரம் என்று வியந்து பாடுகிறார்.ஈதோ திருவரசு!

ஈதோ மணங்கொல்லைஈதோ  எழிலாலி என்னுமூர் - ஈதோதான்வெட்டுங் கலியன் வெருட்டி நெடுமாலின்எட்டெழுத்தும் பெற்ற இடம்.இந்த நிகழ்ச்சிதான் திரு வேடுபறி உற்சவமாக, ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தில், இரவு 12 மணியளவில் இத்தலத்தில் நடைபெறுகிறது.
லட்சக்கணக்கான மக்கள் அந்த உற்சவத்தைக் காண்கின்றனர்.

சாதாரண மனித எண்ணங்களும், ஆசைகளும் கூடி, உலகியல் சுகபோகத்தில் இருந்த நீலன் என்கிற ஒரு மனிதன், எம்பெருமானால், திரு எட்டெழுத்து மந்திரம்  உபதேசிக்கப்  பெற்று, ஆழ்வாராக - சாதாரண பிறப்பிலிருந்து புதிய பிறப்பிற்கு மாறிய  காட்சிதான்- கிட்டத்தட்ட 1500 ஆண்டுகளாக, இந்த பங்குனி உத்திர நன்னாளில், திருவாலி திருநகரியில் நடைபெற்று வருகிறது.

இந்த உற்சவத்தைக் காணுகின்ற நமக்கும் அந்த ஞானம் பிறக்கும் என்பதால் அடியார்கள் எல்லாம் இந்த உற்சவத்தைக் காண்கிறார்கள். உற்சவத்தைக் கண்டுகளிக்க நமக்கு இயலாவிட்டாலும், இந்தக் கதையையும் இந்தக் கதையின் சாரத்தையும் தெரிந்து கொள்வதன் மூலம், நமக்கும் எம்பெருமானுடைய அருளும் ஆழ்வாரின் அருளும் கிடைக்கும்.

பாரதிநாதன்

Tags : Eclipse Mahani ,
× RELATED சித்ரா பெளர்ணமி சிறப்புகள்!