×

அழகன் முருகனின் அருட் கருணையை அள்ளி தரும் பங்குனி உத்திரம்

பங்குனி மாதம் முருகப் பெருமானுக்கு உரிய மாதம்.இம்மாதத்தில்  சிவத்தலங்களிலும், முருகப்பெருமான் தலங்களிலும், திருமால் தலங்களிலும்  திருக்கல்யாண உற்சவங்கள் மிக விமர்சையாக நடைபெறும்.சிவனுக்கும் திருமாலுக்கும் தொடர்புடைய தெய்வம் அல்லவா முருகப்பெருமான்! சிவனின் புதல்வனாகவும், மாலவனின் மருகனாகவும் இருக்கும் முருகப்பெருமானுக்கு, பங்குனி உத்தரத்தில் பால் காவடி எடுப்பதும், ,அபிஷேகங்கள் நடத்துவதும், திருக்கல்யாண உற்சவங்கள் நடத்திப் பார்ப்பதும்  மிக விசேஷம்.அசுரர்களை வென்ற முருகனுக்கு, இந்திரன், தன் மகள் தேவசேனாவை, பங்குனி மாத உத்திர நட்சத்திரத் திருநாளன்று திருமணம் செய்து கொடுத்தார்.இத்திருநாளே பங்குனி உத்திர திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.பழனியில் 10 நாட்கள் கொண்டாடப்படும் இத்திருவிழாவில், தினமும் காலை 8 மணிக்கு மேல், தந்த பல்லக்கில் சன்னதி வீதி, கிரி வீதிகளில் முத்துகுமாரசுவாமி, வள்ளி-தெய்வநாயகி அம்மனுடன் திருவுலாக் காட்சி நடைபெறும் . இரவு 8 மணிக்கு மேல், வெள்ளி காமதேனு, வெள்ளி ஆட்டு கிடா, தங்கமயில், வெள்ளி யானை, தங்க குதிரை, வெள்ளி பிடாரி மயில், புதுச்சேரி சப்பரம் போன்ற வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெறும்.

கோடை வெப்பம் தொடங்கியுள்ள பங்குனி மாதத்தில் முருகபக்தர்கள் ,கொடுமுடி சென்று, காவிரி ஆற்று நீரை தீர்த்த காவடியாக எடுத்து வந்து, அபிஷேகம் செய்வது, தொன்று தொட்டு நடைபெற்று வரும் ஒரு நிகழ்வாகும்..பங்குனி உத்திர திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம்,  இரவு 7 மணி முதல் 8.30 மணிக்குள் நடைபெறுகிறது.  தேரோட்டம்,  தங்கக்குதிரை வாகனத்தில் வீதிஉலா காட்சி,  மஞ்சள் நீராடல் நிகழ்ச்சி, திருஆவினன்குடி கோவிலில் அபிஷேக ஆராதனை, சாந்து மண்டகப்படி, நிகழ்ச்சி ஆகியவை நடக்கும்..விழுப்புரம் .மயிலத்தில் உள்ள ஆயிரம் ஆண்டு பழைமை வாய்ந்த ‘சுப்பிரமணிய சுவாமிகள்’ ஆலயம் உள்ளது. பங்குனி உத்திரம் ஆண்டுதோறும் 12 நாள்கள் சிறப்பாக நடைபெறும்.  முருகனுக்கு எதிராகப் பல தந்திரங்களைப் பயன்படுத்தி, தோல்வியுற்ற சூரபத்மன், தன் தவற்றினை உணர்ந்து முருகனை வேண்டுகிறான். தவம்புரிந்து மயில் வடிவம் பெறுகிறான். சூரபத்மன் மயில் வடிவமாக இருந்து தவம் புரிந்த இந்த மலைக்கு 'மயூராசலம்' எனப் பெயர். நாளடைவில் மயிலம் என மாறியுள்ளது.  மயிலம் முருகன் கோயில், பசுமையான மரங்கள் சூழ்ந்த மயில் தோகை விரித்தது போன்ற அழகான குன்று அமைப்பைக் கொண்டது.

மயில் போன்று காட்சியளிப்பதால் இக்குன்றுக்கு மயிலம் என்கிற பெயர்.முருகனுக்கு உரிய  செவ்வாய்க்கிழமை இங்கு நடைபெறும்  வேலாயுத பூஜையில், அர்ச்சனை செய்து, வழிபடும் பக்தர்களின் கடன் பிரச்னைகள் அகலும்.  திருமணத் தடைகள் நீங்கும் . மயிலம் அழகனை தரிசிப்பதற்கு.பக்தர்கள் அலைகடலென வருகிறார்கள் .திருச்செந்தூர் அழகனுக்கு, பங்குனி உத்திர நன்னாளில், வள்ளித் திருமணம் கோலாகலமாக நடைபெறும்.தகப்பன் ஸ்வாமியான சுவாமிநாதனுக்கு சுவாமிமலையில் வள்ளித் திருமணம் நடைபெறுவதைக் காணக்  கண் கோடி வேண்டும்.முருகனை எண்ணி, பங்குனி உத்திர நாளில் விரதமிருந்து, மாலையில் நடைபெறும் கல்யாண உற்சவத்தில் பங்கு கொண்டு, விரதத்தை முடிப்பவர்கள் உண்டு. இந்தப் பங்குனி உத்திர விரதமும், முருகன் வள்ளி தெய்வானை திருக்கல்யாண காட்சியும், நம் வாழ்வில் பல மங்கலங்களைத்தரும்.இனி, இந்த பங்குனி உத்திரத்தில் உள்ள சில தத்துவ நுட்பங்களை அறிந்தால், வியப்பு அதிகரிக்கும்.

1.
மாதங்களிலே 12வது மாதம் பங்குனி மாதம்.

நட்சத்திரங்களில் 12வது நட்சத்திரம் உத்தர நட்சத்திரம்.ராசிகளிலே 12வது ராசி மீன ராசி.  மீன ராசி பங்குனி மாதத்திற்கு உரிய ராசி.இந்தப் பன்னிரண்டு என்கிற எண்ணால்  குறிப்பிடப்படும் தெய்வம் முருகப்பெருமான். அவனைத்தான் பன்னிருகை வேலவன் என்றும், ஆறிரண்டு தடம் தோள் படைத்தவன் என்றும், பன்னிரு விழிகளை உடையவன் என்றும் சான்றோர்கள் குறிப்பிடுவர். அபயக்கரம், கோழிக்கொடி,வச்சிரம்,அங்குசம்,அம்புவேல்,அபய ஹஸ்தம்,வரதகரம்,தாமரை,மணி,மழு,தண்டாயுதம் ,வில் ஆகிய பன்னிரண்டு ஆயுதங்களோடும் காட்சி தருபவனும் முருகனே,


2.
.பங்குனி உத்திரம்,முருகன் திருக்கல்யாணம் ,இவற்றைத்  தத்துவரீதியாகச்  சிந்தித்துப்  பார்க்க பல ஆச்சர்யங்கள் விளங்கும்.முருகனை குரு என்று குறிப்பிடுவது மரபு.சிவனை சுவாமி என்று குறிப்பிட்டால் ,அந்த சிவபெருமானுக்கு குருவாக அமைந்து, பிரணவம் போதித்த முருகப் பெருமானை, சுவாமிநாதன் என்றல்லவா நாம் வழிபடுகின்றோம். பன்னிரண்டாம்  மாதத்திற்கு உரிய மீனராசிக்கு உரியவர் குரு .எனவே குரு என்கிற பீடம் முருகப்பெருமானுக்கு மிகச்சிறப்பாக பொருந்துகின்ற நிலை, பங்குனி மாதத்திற்கு வருவதால், இந்த மாதத்தை,  குரு மாதம் என்றும் சொல்வார்கள்.
குரு என்றாலும் முருகன் என்றாலும் ஒரே பொருளைக்  குறிக்கும். அதனால்  பங்குனி மாதம்  முருகனுக்கு உரிய மாதம் என்றும் நாம் எடுத்துக் கொள்ளலாம்.இதற்கு அருணகிரிநாதரின் திருவாக்கு.முருகப் பெருமானே குருவாக வரவேண்டும் என்றுதான் தன்னுடைய கந்தர் அனுபூதியில் குறிப்பிடுகின்றார்.

“உருவாய் அருவாய், உளதாய் இலதாய்
மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய், அருள்வாய் குகனே.”

3.
.இந்தப்  பாடலில் இன்னொரு நுட்பமும் கவனிக்கலாம். குருவாய் வருவாய் அருள்வாய் குகனே என்று அருணகிரிநாதர் அழைக்கிறார்.இந்த குகன் என்கிற சொல் அற்புதமான சொல். வேடுவர்கள் குகன் என்கிற பெயரை வைத்துக் கொள்வது வழக்கம்.அருணகிரிநாதர் இந்தப்  பாடலைப்  பாடுகின்ற பொழுது இரண்டு பொருள்கள் அவர் நெஞ்சிலே ஓடுகின்றன. ஒருவரைக்  கரை சேர்க்க வேண்டும் என்று சொன்னால் அவருக்கு குருவருள்  வேண்டும்.எனவே முருகப்பெருமான் குருவாக வரவேண்டும் என்று கேட்டார்.சரி; குருவுக்கும் ஒரு பெயர் வேண்டுமே!

என்ன பெயரை வைப்பது என்று பார்க்கிற பொழுது, இராமாயண காட்சி அவருக்கு நினைவுக்கு வருகிறது.ராமரும், சீதையும், லட்சுமணனும், கங்கை கரையில் ,ஒரு கரையில் இருந்து இன்னொரு கரைக்குப்  போக வேண்டும். அப்படிப் போவதற்கு ஒரு படகும் படகு செலுத்தக்கூடிய ஒருவரும் வேண்டும்.இராமனை சீதையோடும்,  இலக்குவனோடும், இக்கரையில் இருந்து அக்கரைக்கு கொண்டு சேர்த்த  வேடனுக்கு குகன் என்று பெயர். கூர் அணிந்த வேல்வலவன் குகனோடு சீரணிந்த தோழமை கொண்டதுவும் குறிப்பிடுகின்றார் பெரியாழ்வார்.இந்த குகன் நினைவுக்கு வருகிறார் அருணகிரிநாதருக்கு.சாட்ஷாத் இராமனை  ஒரு கரையிலிருந்து மறுகரைக்கு  அன்று குகன் சேர்த்தானே , அதைப்போலவே என்னுடைய குருநாதராகிய முருகப்பெருமான், குகன் என்கிற பெயரோடு, என்னையும் பிறவிக் கடலிலிருந்து அக்கரையில் கொண்டு சேர்க்க வர வேண்டும் என்று வேண்டுகின்றார்.

4.
பன்னிருகை முருகப்பெருமானுக்கு, பனிரெண்டாம் பங்குனி மாதத்தில், ப்ரம்மோட்சவம் நடைபெறுவதைப் பார்த்தோம்.  திருக்கல்யாணத்திற்கும், 12 என்கிற எண்ணுக்கும்,  முருகப்பெருமானுக்கும் உள்ள சில சூட்சும விஷயங்களை இனிப்  பார்ப்போம்.

5.
12 என்கிற எண்ணில், 1 என்ற எண்ணும்,  2 என்ற எண்ணும் இருக்கின்றன.. 1 என்கிற எண் முருகப்பெருமானையும், 2 என்கிற எண் வள்ளி தெய்வானை ஆகிய இரு துணைவியாரையும் குறிக்கும்.
இந்த இரண்டும் சேர்த்தால் வருகின்ற எண் 3 மூன்று என்பது குருவுக்குரிய எண்.வள்ளி, தெய்வானை, முருகன் இணைவு ஞானத்தின் உச்சியை குறிக்கும்.பங்குனி உத்திர திருமணம் இந்த நுட்பத்தைத்தான் குறிக்கிறது.

6.
27 நட்ஷத்திரங்களில் 3 ம் நட்ஷத்திரம் கார்த்திகை.(முருகன் ஜென்ம நட்ஷத்திரம்)12 ம் நட்ஷத்திரம் உத்திரம் (பங்குனி உத்திர விழா).21ம் நட்ஷத்திரம் உத்திராடம்.இவை மூன்றும் சூரியனுக்குரிய நட்ஷத்திரங்கள்.3, 12, 21 இவற்றின் அடிப்படை எண் 3.எனவே மூன்றின் அத்தனை உயர்வுகளும் முருகனுக்கு பொருந்தும்.

7.

இந்த மூன்று என்ற எண்ணுக்கும் முருகனுக்கும் உள்ள தொடர்பு.

1.மூன்று என்ற எண் மூன்று வினைகளை குறிக்கும்.(பழ வினை,நுகர்வினை,எதிர்வினை) குறிக்கும். அந்த வினைகளை தீர்க்கக் கூடிய முருகனையும் குறிக்கும்.

2.மூன்று என்பது முத்தமிழையும் குறிக்கும்.முத்தமிழுக்கும் உரிய முருகனையும் குறிக்கும்.

3.மூன்று என்பது மூன்று ஆசைகளை குறிக்கும்.அந்த ஆசைகளை அடியோடு தன்னுடைய கூர்மையான வேலால் கெல்லி  அழிக்கும்  முருகனையும் குறிக்கும்
4.மூன்று என்பது ராஜச தாமச சாத்திரம் ஆகிய மூன்று குணங்களைக் குறிக்கும்.இந்த மூன்று குணங்களை சமப்படுத்துகின்ற முருகனையும் குறிக்கும்.
5.மூன்று என்பது உலகு என்ற உலகத்தையும் உயிர் என்ற ஜீவாத்மாவையும் குறிக்கும்.இதை இரண்டும் தாங்கி காக்கும் முருகனையும் குறிக்கும்.
8.இன்னொரு விஷயம். பங்குனி உத்திரத்தில் வள்ளி தேவயானை திருமணம் நடைபெறுகிறது அல்லவா.

வள்ளி வேடர் குல குற மகள்.தெய்வ யானை தேவர் குல திருமகள்.முருகன் இருவரையும் ஏற்று கொள்ளும் சம பாவனை ஏற்றத்தை பங்குனி உத்திர நாளில் தெரிந்து கொள்ள வேண்டும்.முருகனிடத்தில் உண்மையான அன்பும், பக்தியும் இருந்தால், அவன் தேடி வந்து ஏற்று கொள்வான் வள்ளியை ஏற்றுக் கொண்டது போல.இப்படி ஏற்ற நாள் தான் பங்குனி உத்திரம்.

9.
ஜோதிட சாத்திரத்தில் பங்குனி காலச்சக்கரத்தில் பாதத்தைக் குறிக்கும்.பங்குனியாகிய (முருகனின்)பாதமே கதி என்பதைக் குறிக்கும்.எனவே, இந்த பங்குனி மாதத்தையும், உத்தர நட்சத்திர  முருகப் பெருமானையும், முருகப்பெருமானின் திருக்கல்யாண வைபவத்தை தவற விட்டுவிட வேண்டாம்.

10.
இந்த உத்தர நட்சத்திரம் பவுர்ணமியில் தான் வரும்.இந்த பௌர்ணமியைக்  குறிக்கும் சந்திரன் தாயையும் குறிக்கும்(மாத்ரு காரகன்). தந்தையாகிய சூரியன்(பிதுர் காரகன்) பிரகாசிக்கும் பங்குனியில், தாயாகிய சந்திரன் பிரகாசிக்கும் பௌர்ணமி உத்திரத்தில் ,தாயும் தந்தையும் இணைகின்ற திருக்கல்யாண உற்சவம் என்பது எத்தனை மகத்தான உற்சவம்?

அந்த உற்சவத்தைக் கண்குளிரச்  சேவிப்போம்.அழகன் முருகனின் அருட் கருணையை அள்ளி அள்ளிப் பருகுவோம். 

Tags : Panguni Uttar ,Murugan ,
× RELATED பங்குனி உத்திரத்தை ஒட்டி...