×

பங்குனியில் குலதெய்வ வழிபாடு


சைவர்களும் வைணவர்களும் சில குலதெய்வங்களை சிவனாகவும் விஷ்ணுவாகவும் மாற்றி விட்டாலும் பெரும்பாலான குலதெய்வங்கள் தன்னிலை மாறாமல் இருக்கின்றன. அவற்றின் மகிமை உணர்ந்து வருடம் தோறும் குலதெய்வ வழிபாடு செய்வது மக்களிடையே பெருகி வருகிறது.மதுரை வீரன், கருப்புசாமி, பெரியசாமி, செல்லாயி, மருதாயி, பேச்சியம்மன் என நம்முனேனோர்களின் பெயர்கள் அனைத்தும் குலதெய்வத்தினை சார்ந்தே இடப்பட்டிருக்கின்றன. நம்முன்னோர்களின் வாழ்க்கையோடு பின்னி பிணைந்த குலதெய்வ வழிபாட்டு முறைகளையும், கதைகளையும் பற்றி கிராமங்களில் வாழ்ந்தவர்களுக்குத் தான் தெரியும்.

அந்த வகையில் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் வட்டத்தில் மணி முத்தாறு, வெள்ளாறு ஆகிய இரு ஆறுகளுக்கு இடையில் அமைந்துள்ள அழகிய சிற்றூர் மருங்கூர். அங்குவாழும் வன்னிய இன மக்களில் காளிங்கராயர் என்ற பட்டப் பெயருடைய பங்காளிகள், தங்கள் குலதெய்வமாக ‘ஆகாச வீரனை’ வழிபட்டு வருகின்றனர். இவ்வழிபாட்டு முறை முற்றிலும் மாறுபட்டதாகவும் பண்பாட்டு தொன்மை உடையதாகவும் விளங்குகிறது.சிறுதெய்வம் என நிறுவன சமயத்தினரால் குறிப்பிடப்படும் வழிபாட்டு இடங்களில் வேல், சிலை, மரம், கதவு, புற்று என ஏதேனும் ஒரு அடையாளம் காணப்படும். ஆனால், ஆகாச வீரனுக்கு எவ்விதமான அடையாளமும் பூமியில் இல்லை. ஆகாசம் எனப்படும் வானத்தில் அவர்களின் தெய்வமாக வீரன் இருப்பதாக நம்புகின்றனர். பங்காளிக் குழுவில் உள்ள ஒரு குடும்பத்தினர் வேண்டிக் கொண்டு ஆகாச வீரனுக்குப் பூஜை செய்வது வழக்கம். ஆடு, கோழி, பன்றி ஆகிய உயிர்களை வீரனுக்கு வேண்டி விட்டு அவற்றைப் பலியிடுவர். இவ்வாறு உயிர் பலி கொடுத்து நடத்தப்படும் பூஜை பிலி பூஜை எனக் குறிப்பிடுகின்றனர்.

உயிர் பலியின்றி பொங்கல் மட்டும் பொங்கிச் செய்யப்படும் பூஜை பா பூஜை எனப்படும். பூஜைக்கு இன்றும் கைக்குத்தல் அரிசியே பயன்படுத்தப்படுகிறது. மண்பானை, சட்டி, அகப்பை ஆகியவற்றை மட்டுமே சமைக்கப் பயன்படுத்துகின்றனர். மஞ்சள், மிளகு ஆகியவற்றைத் தவிர உப்பு, புளி, மிளகாய் என எதையும் பயன்படுத்துவதில்லை. நெல்லைக் குற்றுவது, சமைப்பது மஞ்சள் அரைப்பது என அனைத்துப் பணிகளையும் ஆண்களே செய்ய வேண்டும். பூஜைக்குப் பொருட்களைக் கொண்டு செல்லும் போதும், மஞ்சள் அரைத்து எடுத்துச் செல்லும் போதும் எதிரில் யாரும் வராமல் இருக்கும்படி அறிவிப்பு செய்து அதன் பிறகே எடுத்துச் செல்வர். சமைத்த உணவு வகைகளை படைப்பதற்கு வாழை இலையைப் பயன்படுத்துவது இல்லை. பூவரசு மர இலையை ஒன்றுடன் ஒன்று இணைந்து சீவாங்குச்சியால் வைத்துத் தையல் இலையாக்கிப் பயன்படுத்துகின்றனர். இன்றும் இம்முறையே பின்பற்றப்பட்டு வருகின்றது.

பூஜைக்குக் காட்டு மல்லிப் பூவைத்தான் பயன்படுத்துகின்றனர். படைக்கும் போது படையல் செய்பவர் வாயைத் துணியால் கட்டிக் கொண்டு தான் படைக்க வேண்டும். மேலும் பூஜைக்கு சூடம், சாம்பிராணி தவிர வேறு பொருட்கள் எதையும் பயன்படுத்துவதில்லை. படையல் இட்ட ஒவ்வொரு இலைக்கும் முன்பாக கற்பூரத்தைக் கொளுத்தி எரியச் செய்வர். பூஜையில் கலந்து கொள்ளும் ஆண், பெண், சிறுவர், சிறுமியர் அனைவரும் சுத்தமான வெள்ளை உடையில் தான் வரவேண்டும். கறுப்பு நிற நாடாவோ, அரைஞான் கயிறோ, கறுப்பு நிற ரிப்பனோ அணியக் கூடாது. குல தெய்வமான ஆகாச வீரனுக்குக் கறுப்பு நிறம் ஆகாது என்பதால் அக்குடும்பத்தினர் எப்போதும் கறுப்பு நிற துணிகள், அரை நான் கயிறு போன்றவற்றை அணிவதில்லை.

பூஜை முடிந்ததும் ஆகாசத்திற்கு தீப தூபம் காட்டி, நைவேத்தியம் செய்த முதல் உணவை ஆகாயத்தை நோக்கி வீசுவது மரபு. அதை ஆகாச வீரன் பெற்றுக் கொண்டு ஆசீர்வதிப்பார் என்று நம்புகின்றனர்.
பங்குனி மாதத்தில், இந்த பூஜையில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும் நீத்தார் நினைவுச் சடங்கு போலவே இருக்கும். பூஜை அன்று பெண்கள் தலையில் பூச்சூடுவதில்லை. அன்று தங்கள் வீட்டுக்கு வரும் விருந்தினரை ‘வாங்க’ என்று முகமன் கூறி வர வேற்பதில்லை. உப்பின்றி சமைப்பது பூஜை பொருட்களை கூடையில் வைத்து எடுத்துச் செல்வது, அப்போது யாரும் எதிரில் வராமல் இருப்பது, பெண்கள் வெள்ளை உடை அணிவது ஆகிய அனைத்தும் இறப்புச் சடங்கோடு தொடர்புடையவை. நம்முனோர்கள் பண்டைய நாளில் போர்க் களத்தில் வீரப் போர் புரிந்து இறந்த மாவீரனையே தெய்வமாக்கி வழிபட்டு வந்ததாகவே கருத முடிகிறது. இன்றும் இந்தக் குலதெய்வ வழிபாடு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.குலதெய்வங்கள் என்பவை வெறும் கதைகளால் தோற்றுவிக்கப்பட்டதோ, ஆகாசத்திலிருந்து குதித்தவையோ அல்ல. அவை நம் முன்னோர்கள் தங்களைக் காப்பாற்றியவர்களையோ, தங்கள் காலத்தில் வாழ்ந்த சிறந்து மனிதர்களையோ நம் பெரியவர்கள் நமக்கு நினைவூட்டவே குலதெய்வங்களாக வழிபட்டு வந்திருக்கின்றார்கள். எனவே குலதெய்வத்தை ஒருவர் முறையாக வழிபட்டாலே உலக இன்பங்களைப் பெற்றுக் கொண்டே இறை நிள அடையும் வாய்ப்பைப் பெறலாம். !

-டி.எம். இரத்தின வேல், ஈரோடு – 6384401.

Tags : Panguni ,
× RELATED கொடைக்கானலில் 22 ஆண்டுக்குப் பிறகு...