×

தெய்வானையை மணந்த திருப்பரங்குன்றத்து குமரன்

காவடி எடுத்துவரும் முருகனடியார்கள் ஆடிப்பாடிக் கொண்டு பழநி மலைக்குச் செல்கிறார்கள். அடியார்கள் உள்ளத்தில் ‘சரவணபவ’ என்னும் திருநாமம் ஒலித்துக்கொண்டிருக்கிறது. பழநி மலையில்  முருகன் அருளைப் பெற பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. பங்குனி உத்திர நன்னாளன்று பழநி முருகன் திருத்தேர் விழா நடைபெறும் அழகைத்தான் ‘பங்குனித் தேர் ஓடும் மலை’ என்று  பாடுகிறார்கள்.

பங்குனி உத்திரத்துக்கு அப்படி என்ன சிறப்பு? ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களின் வடிவமான சூரர்களை அழித்து தேவர்களைக் காக்க வேண்டிய சிவபெருமானின் நெற்றிக்  கண்ணிலிருந்து முருகப் பெருமான் உதித்தார். சிங்கமுகன், தாருகன் ஆகிய அசுரர்களை வதைத்து சூரபத்மனை இரண்டாகப் பிளந்து மயிலாகவும், சேவலாகவும் மாற்றி சூரபத்மனின் ஆணவத்தை  அழித்தார். இவ்வாறு அசுரர்களை வென்ற முருகனுக்கு இந்திரன் தன் மகள் தெய்வானையை வெகுமதியாகத் திருமணம் செய்து கொடுத்தார். திருப்பரங்குன்றத்தில் தெய்வானை திருமணம் நடந்ததாகப்  புராணங்கள் கூறும். அந்தத் திருமண நன்னாளே பங்குனி உத்திரமாகும். அந்தநாள் இந்த வருடம் 28.3.2021 வருகிறது.

பழநியில் பத்து நாட்கள் கொண்டாடப்படும் இவ்விழாவில் காலை, மாலை இரண்டு வேளையும் முத்துக்குமாரசாமி வள்ளி - தெய்வானை சமேதராகப் பல்வேறு வாகனங்களில் மலை வீதியில் வலம் வந்து  அருள்பாலிப்பார். பங்குனி உத்திரத்தன்று தேரோட்டம் நடைபெறும்.பழநிக்கு பால்காவடி, பன்னீர்க் காவடி, புஷ்பக் காவடி, சந்தனக் காவடி, இளநீர்க் காவடி, உட்பட பலவிதமான காவடிகள் வந்து சேரும்.

கொங்கு நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பெருந் திரளான பக்தர்கள் கொடுமுடி என்ற தலத்தில் காவிரியாற்றிலிருந்து தீர்த்தம் எடுத்து வந்து பழநியாண்டவருக்கு அபிஷேகம் செய்வார்கள். அத்துடன்  கரகாட்டம், காவடியாட்டம், சக்கையாட்டம், குறவன்- குறத்தி முதலான நாட்டுப்புற ஆடல் வகைகள், நடைபெறும். நாட்டுப்புற மக்கள் மிகுதியாகக் கலந்து கொள்ளும் இந்த உத்திர விழாவை ‘நாட்டுப்புறத்  திருவிழா’ என்றும் குறிப்பிடுவார்கள்.

மலையே இல்லாத தஞ்சை மாவட்டத்தில் மணல் குன்றினால் அமைந்த கட்டுமலையில் உள்ள சுவாமிமலைத் திருக்கோயிலில் பங்குனி உத்திர நன்னாளில் வள்ளித் திருமணம் நடைபெறுவது  குறிப்பிடத்தக்கது. சுவாமி மலைக்கு அருகில் அரிசிலாற்றங்கரையில் (அரசலாறு) அமைந்துள்ள திருத்தலம் திருவலஞ்சுழி! ‘மன்னு காவிரி சூழ் வலஞ்சுமிழ’ என்று காவிரி நதி வலமாகச் சுழித்துச்  சென்றதை திருஞானசம்பந்தர் திருவலஞ்சுழி என்று தேவாரத்தில் குறிப்பிடுகிறார்.

தற்போது காவிரியின் கிளைநதியான அரிசிலாறு கோயிலுக்கு வடபுறமாகச் செல்கிறது. இத்தலத்தில் கடல்நுரையால் ஆகிய வெள்ளை விநாயகர் சந்நதி அமைந்துள்ளது.இத்திருக்கோயிலில் பங்குனி  உத்திரத்துக்கு முதல் நாள் வள்ளிக் குறத்தி தினைப்புனத்தில், கையில் கவண் கொண்டு ஆயலோட்டும் (குருவிகளை விரட்டும்) அழகுக் காட்சியைக் காணலாம். இதற்காக அந்த இடத்தில் ஒரு மாதம்  முன்பே தினையை விதைப்பார்கள். செடி நன்கு வளர்ந்து தினை காய்த்திருக்கும். அதன் நடுவில் வள்ளி கையில் கவண் கொண்டு தினைப்புனம் காக்க, எதிர்ப்புறம் வேடன் வடிவமாக வேலன் காட்சி  அளிப்பான். இதை வேடரூபக் காட்சி என்பர்.

விடியற்காலையில் முருகன் வேடனாகவும், வள்ளியும் தனித்தனிப் பல்லக்கில் அரிசிலாற்று மணலில் உள்ள மேடைக்குச் செல்வார்கள். அரிசிலாற்று மணலில் வள்ளியை ( நிஜமாகவே) யானை விரட்ட,  வள்ளி வேடனை மணக்க மறுக்க… இரண்டு மூன்று சுற்றுக்குப் பிறகு வள்ளி, முருகனைத் திருமணம் செய்து கொள்ள இசைவு தெரிவிப்பாள். இதன்பிறகு முருகனும் வள்ளியும் சுவாமிமலைக்  கோயிலுக்கு எழுந்தருளும் வேளையில், பொழுது நன்றாகவே புலர்ந்துவிடும். அன்று அதாவது பங்குனி உத்திர நன்னாளில் மாலையில் வள்ளித் திருமணம் சுவாமிமலைக் கோயிலில் சிறப்பாக  நடைபெறும்.

இதைப் போலவே திருச்செந்தூர் பங்குனி உத்திரவிழாவில் வள்ளி கல்யாணம் நடைபெறுகிறது. முருகப் பெருமான் குடிகொண்டுள்ள திருத்தலங்களில் பங்குனி உத்திரம் பிரம்மோற்சவமாகவும், கல்யாண  உற்சவமாகவும் கொண்டாடப்படுகிறது. பங்குனி உத்திரமும் பௌர்ணமியும் சேரும் நன்னாளில் சந்திரன் கன்யா ராசியில் இருப்பார். அவருக்கு ஏழாம் இடத்தில் மீன ராசியில் சூரியன் இருப்பார்.தவத்தில்  இருந்த சிவபெருமானை மன்மதன் மலர்க்கணை எய்து தவத்தைக் கெடுக்க.. சிவபிரான் காமனை நெற்றிக் கண்ணால் எரித்தார்.

காமனை எரித்தது பங்குனி உத்திரநாளில்தான். கணவனை இழந்த ரதிதேவி சிவபெருமானிடம் மாங்கல்யப் பிச்சை கேட்க, பரமனும் மன்மதன் அருவமாக இருந்து தம் தொழிலைச் செய்யுமாறு  அருளினார். காமனை எரித்த சிவபிரான் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய கந்தன், சூரசம்ஹாரம் செய்தான். எனவே, காமன் மறைந்ததற்கும் கந்தன் பிறந்ததற்கும் காரணமான நாள் பங்குனி  உத்திரமாகும். பங்குனி உத்திரத்துக்கு இன்னும் பல சிறப்புகளும் உண்டு. என்னவென்று அவற்றையும் இங்கு பார்ப்போம்.

கேரளாவில் பந்தளராஜன் குமாரனாக ஐயப்பன் அவதரித்ததும் பங்குனி உத்திரமே. பங்குனி உத்திரத்தன்று சபரிமலையில் ஐயப்பனுக்கு ருத்ரம் சொல்லி அபிஷேகம் செய்கிறார்கள். பஞ்சபாண்டவர்களில்  வில்லாளியான அர்ஜூனன் பிறந்தது பங்குனி உத்திரமே! மனிதன் வாழவேண்டிய முறையை வாழ்ந்து காட்டிய ராமபிரான், சீதாதேவியை மணந்ததும் பங்குனி உத்திர நன்னாளே. இதே நாளில் காஞ்சிபுரம்  ஏகாம்பரநாதர் திருக்கல்யாணமும், மதுரை அழகர் கோயில் திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. திருவிளையாடல் புராணத்தில் மதுரை மீனாட்சி சொக்கநாதர் கல்யாணம் பங்குனி உத்திர நாளில் தான்  நடைபெற்றது.

நாற்பத்தெட்டு ஆண்டுகள் பங்குனி உத்திர விரதம் இருப்பவர்களுக்கு அடுத்த பிறவி தெய்வத்தன்மையுடன் அமையும் என்பது பெரியோர்கள் கண்ட அனுபவ உண்மை. திருமகள் பங்குனி உத்திர  விரதத்தைக் கடைப்பிடித்து விஷ்ணுவின் திருமார்பில் வீற்றிருக்கும் பேறு பெற்றதாகப் புரணம் கூறுகிறது. இந்த விரதத்தை அனுஷ்டித்தே  இந்திரன் இந்திராணியையும், பிரம்மன்சரஸ்வதியையும், மணம்  செய்ததாகக் கூறுவார்கள். எனவே, இதைக் ‘கல்யாண விரதம்’ என்றழைப்பார். பங்குனி உத்திரத்தில் பிரார்த்தனையின் பேரில் தண்ணீர் பந்தல் அமைத்துப் பக்தர்களுக்கு நீர், மோர் பானகம் வழங்கி மகிழ்கிறார்கள்.

எஸ். ஆர்.எஸ். ரெங்கராஜன்

Tags : Thiruparankundram ,Deivana ,
× RELATED திருப்பரங்குன்றம் அருகே ஆபத்தான...