×

பெண்கள் தலைமுடி காணிக்கை செலுத்தக்கூடாது என்ற ஐதீகம் உள்ளதா?


பூப்படைந்த பெண்கள் தலைமுடியை மழிப்பது மட்டுமல்ல, வெட்டுவதும் கூடாது என்பதை சாஸ்திரம் வலியுறுத்திச் சொல்கிறது. அவ்வாறு தலைமுடியை மழிப்பது என்பது கணவனை இழந்தபின்  கைம்பெண் நோன்பினை எடுக்கும் பெண்களுக்கு மட்டுமே உரித்தானது. கணவனை இழந்த பெண்கள் துறவு வாழ்க்கை வாழ விரும்பினால் மட்டுமே தலைமுடியை மழித்துக் கொள்ள வேண்டும்.  ஆனால், தற்காலத்தில் நாகரிகம் கருதி பெண்கள் தலைமுடியை வெட்டிக்கொள்வது என்பது சகஜமாகிவிட்டது. நாகரிகம் கருதி தலைமுடியை பெண்கள் வெட்டிக்கொள்வதும் பின்னலின்றி முடியை  வைத்திருப்பதும் முற்றிலும் சாஸ்திர விரோதமே.

அதே நேரத்தில் முடி காணிக்கை என்பது பக்தியின் வெளிப்பாடு ஆகும். பெண்கள் அழகிற்காக மட்டுமல்லாது தங்களது மங்களகரமான வாழ்விற்கு அடையாளமாக தலைமுடியையும் அதில்  சூடிக்கொள்ளும் பூவையும் கொண்டிருக்கிறார்கள். சுமங்கலி என்பதற்கு அடையாளமாகச் சொல்லப்படும் லட்சணங்களில் இதுவும் ஒன்று. இன்றைய நவீன உலகத்திலும் எல்லா பெண்களும் இந்த  சுமங்கலிக்கான அடையாளங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிப்பர். அத்தனை முக்கியத்துவம் வாய்ந்த தலைமுடியை தியாகம் செய்யத் துணிகிறார்கள் என்றால் அவர்களது பிரார்த்தனையின்  முக்கியத்துவத்தை உணர வேண்டும்.

இன்னும் சில பெண்கள் தாங்கள் அணிந்திருக்கும் திருமாங்கல்யத்தையே உண்டியலில் காணிக்கையாக செலுத்துவதாக பிரார்த்தனை செய்துகொள்வர். தங்களுடைய சுமங்கலித் தன்மைக்கு சோதனை  வரும்போது மட்டுமே பெரும்பாலான பெண்கள் இத்தகைய பிரார்த்தனையை இறைவன் முன் வைக்கிறார்கள். கணவரின் ஆயுளுக்கு பிரச்னை என்று வரும்போது அவரைக் காக்கும் பொருட்டு தனது  அழகினையும் துறக்க முன்வருகிறார்கள். சமுதாயத்தின் கேலி, கிண்டலை பொருட்படுத்தாது மிகப்பெரிய தியாகத்தினைச் செய்து தன் கணவனின் உயிரைக் காக்கிறார்கள். தியாகத்துடன் கூடிய  முழுமையான பக்தியின் வெளிப்பாடாக பெண்கள் கோயிலில் முடி காணிக்கை செலுத்துவதால் இதில் சாஸ்திர விரோதம் என்ற பேச்சிற்கு இடமில்லை.

Tags :
× RELATED சூரிய பகவானின் தேரைக் கொண்ட சூரிய கோயில்