×

மங்களம் தருவாள் ஸர்வமங்களா!

‘ஸர்வமங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்த சாதிகே
சரண்யே த்ரயம்பகே தேவி நாராயணி நமோஸ்துதே…’

எத்தனை அம்மன் ஆலயங்கள் இருந்தாலும், மதுரை மீனாட்சி, காஞ்சி காமாட்சி, காசி விசாலாட்சி இருக்கும் ஆலயங்கள்தான் மூலஸ்தானம். அதே போல் சென்னை நங்கநல்லூர் தில்லை கங்கா நகரில்  அமைந்துள்ள ஸர்வமங்களா ஸ்ரீராஜராஜேஸ்வரி ஆசிரமம்தான் இன்றும் அவளின் மூலஸ்தானமாக திகழ்ந்து வருகிறது. இந்த ஆலயம் சக்தி வாய்ந்த பல யந்திரங்கள் ஸ்தாபனம் செய்யப்பட்ட ஒரு  ஸ்ரீவித்யா மந்த்ராலயமாகும்.

கோயில் நகரம் என்று சொல்லக்கூடிய சென்னை நங்கநல்லூரில் தில்லை கங்காநகரில் முதன் முதலில் அமைக்கப்பட்ட ஆலயம் இதுவே. ‘‘இந்த சக்தி பீடம் மந்த்ர சாஸ்திர அடிப்படையில் அதுவும்  சாக்த தந்த்ர நியமனப்படி கட்டப்பட்டுள்ள மந்திர வடிவம்’’ என்கிறார் அந்த ஆலயத்தின் ஸ்தாபகர் ஸ்ரீராஜகோபால சுவாமிகள். இந்த ேகாயிலின் சிறப்பம்சங்கள் மற்றும் வழிபாட்டு முறைகளை நாம்  பார்ப்போம்.

பூஜை முறை

ஆலயம், ஸ்ரீவித்யா முறைப்படி மஹாஷோடசீ மந்த்ர பூர்வமாகக் கட்டப்பட்டுள்ளது. ஆகம ப்ரதிஷ்டை இல்லை என்பதால், சிவாச்சாரியார்கள் (குருக்கள்) இங்கு பூஜை செய்ய முடியாது. ஸ்ரீவித்யா மந்திர  தீட்சை பெற்று சுவாமிகளால் பூர்ணாபிஷேகம் செய்யப்பட்டவர்கள்தான் அம்பாளுக்கு இங்கு பூஜை செய்ய முடியும். ஸ்ரீராஜராஜேஸ்வரிக்கு சொல்லப்பட்ட முறையில் (ஸ்ரீவித்யா முறைப்படி) பூஜை செய்ய  வேண்டுமானால் குரு பரம்பரையில் உள்ளவர்கள்தான் பூஜை செய்ய வேண்டும். அதன்படி ஆலய ஸ்தாபகர் ஸ்ரீராஜகோபால சுவாமிகள் பல சிஷ்யர்களுக்கு பூர்ண தீட்சை  கொடுத்து தயார்  செய்திருக்கிறார்.

ஆலயத்தின் சிறப்பம்சங்கள்

திருமூலர் இங்கு சில காலம் தங்கி இந்த இடத்தை(நங்கநல்லூர்) தன் திருமந்திரத்தில் சக்தி பேதம் திரிபுரை சக்கர விளக்கத்தில் ‘‘ஏடங்கை நங்கை இறை எங்கள் முக்கண்ணி’’ என்று  குறிப்பிட்டிருக்கிறார். நங்கை என்றால் 16 வயது பெண். ராஜராஜேஸ்வரிக்கு 16 வயதுதான். இந்த அம்பாளை தரிசனம் செய்ய நாம் 16 படி ஏறி பூர்வ பக்ஷமாகவும் இறங்கும்போது அமர பக்ஷமாகவும்  தரிசனம் செய்ய வேண்டும். இந்த 16 படிகளில் ஒவ்வொரு படிகளிலும் திதி தேவிகள் யந்திரத்துடன் ஆட்சி செய்து வருகிறார்கள். திதி தேவிகள் யந்திரத்துடன் உள்ள ஒரே இடம் இந்த ஆலயம் மற்றும்  ஒவ்வொரு திதி தேவிகளுக்கு அகஸ்திய முனிவர் எழுதிய சோடச மாலை பாடல் யந்திரத்தின் அருகில் பதிக்கப்பட்டுள்ளது. திதி தேவிகளை வணங்கி இரவு நேரத்தில் பூஜை செய்வதன் மூலம்  குடும்பங்களில் ஏற்பட்டுள்ள தோஷங்கள் நீங்கும்.

குங்குமம் போடும் விசேஷம்

குடும்பத்தில் தோஷம் இருந்தால், அதை நீக்க குங்குமம் போடுவது இந்த ஆலயத்தின் சிறப்பம்சம். ஆலயம் செல்லும் முன் படிகள் ஏறும் போது மந்த்ர சுத்தி செய்யப்பட்ட குங்குமத்தை வாங்கி உங்கள்  குடும்ப தோஷம் நீங்க திதி தேவிக்காக வைக்கப்பட்டுள்ள பெட்டியில் உங்களின் வேண்டுதல்களை எண்ணி திதி தேவியினை வணங்கி உங்கள் பெயர், கோத்திரம், நட்சத்திரம் போன்றவற்றைச் சொல்லி  அந்தப் பெட்டியில் குங்குமத்தை போட வேண்டும். அவ்வாறு செய்வதால் குடும்ப தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.

அம்பாளைச் சுற்றி அப்பிரதிஷணம் ஏன்?

ஆலயத்தில் அம்பாள் சந்நதியைச் சுற்றி  வலம் வருவதில்லை, இடமாகச் சுற்றி வரவேண்டும். காரணம்... அம்பாளுக்கு ஸ்ரீவித்யாபகரமாக சந்நதி ஏற்படுத்த வேண்டுமானால் பூப்ரஸ்தாரம்,  கைலாசப்ரஸ்தாரம், மேருப்ரஸ்தாரம் என்று மூன்று கட்டட முறையில் ஒன்றை எடுத்துக்கொண்டு அதன்படி விதிமுறைகளை மீறாமல் கட்டட வேலையை முடித்து அம்பாள் பிரதிஷ்டையும்,  கும்பாபிஷேகமும் செய்ய வேண்டும்.

உதாரணமாக காஞ்சியில் காமாட்சி அம்மன் சந்நதி பூப்ரஸ்தார விதிப்படி  ஸ்ரீசக்ர ஆவரணங்களின் ஒன்பதையும் சமதளத்தில் ப்ரதிஷ்டை செய்து கட்டப்பட்டுள்ளது. ஆனால் நங்கநல்லூரில் அம்பாள்  உத்தரவுப்படி மேருப்ரஸ்தார விதிப்படி ஒவ்வொரு ஆவரணத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாகத் தூக்கி மலைபோல் பிரதிஷ்டை செய்து கட்டப்பட்டுள்ளது. மலை மேல் ஒன்பதாவது ஆவரணத்தில் பிநது  என்னும் இடத்தில் அம்பாளை அமரச்செய்து அவளுக்குக் கீழே படிப்படியாக மற்ற ஆவரண தேவதைகள் ப்ரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

அம்பாள், ராஜராஜேஸ்வரியை முழு நிலவுக்கு ஒப்பிடலாம். அந்த நிலவின் கலைகளான ப்ரதமை முதல் பஞ்சதசீ வரை நாம் காணும் 15 கலைகளுக்கு
நிகராக மஹா பாராக்ரமம் பொருந்திய திதி நித்யா தேவியர் 15 பேர் அமர்ந்திருக்க மேருவின் உச்சியில் அம்பாள் வீற்றிருக்கிறாள்.அம்பாள் காட்டிய மேருப்ரஸ்தாராபடி திதி நித்யா தேவிகள்  இரண்டு  விதமாக மேரு மலையில் கொலுவிருக்கின்றனர்.

அம்பாளுக்கு கீழே எட்டாவது ஆவரண முக்கோணத்தைச் சுற்றி இடவரிசையை(அப்பிரதிஷணமாக) முக்கோணத்தின் ஒவ்வொரு பக்கத்துக்கும் ஐந்தைந்து பேராக அமர்ந்திருக்கின்றாள். இது  ஒருவிதம்.இதே திதி நித்யா தேவியர் அம்பாளுக்கு முன்னால் கீழேயிருந்து மேலாக 15 படிகளிலும், படிக்கு ஒருவராக அமர்ந்து அருளாட்சி புரிகின்றனர். படியேறினால் வளர்பிறை. இறங்கினால்  தேய்பிறை. அதேபோல் அம்பாளை இடமாகச் சுற்றினால் வளர்பிறை, வலமாகச் சுற்றினால் தேய்பிறை.

போகம் வேண்டும் என்றால் அம்பாளை இடமாகச் சுற்றலாம், யோகம் வேண்டுமென்றால் வலமாகச் சுற்றலாம். இரண்டும் வேண்டும் என்றால், தேவியை இடவலமாகச் சுற்றலாம்.இங்கு ஆலயத்திற்கு  செல்வதற்கு முன் நாம் செருப்புகளை அகற்றினால் மட்டும் போதாது, ஆண்கள் சட்டையையும், தலைப்பாகையையும் கழற்ற வேண்டும். இரு பாலர்கள் எண்ணத்தை சுத்தமாக வைத்துக்கொண்டு உள்ளே  சென்றால் தெய்வச் சிலைகளிலிருந்தும் சக்தி யந்திரங்களிலிருந்தும் வெளிப்படும் ஆன்மிகக் கதீர்வீச்சால்  நம் மனசுக்கு ஒரு வித பாசிடிவ் வைப்ரேஷன் ஏற்படும். மனசும் ேலசாகும். ஒரு வித தெளிவு  ஏற்படும் என்பதில் ஐயமில்லை!

பூர்வ பக்ஷம்

(ஏறும்பொழுது-வளர்பிறை)
திதியின் பெயர் - திதி தேவியின் பெயர்    
* அமாவாசை - த்வார தேவதா தேவி    
* பிரதமை - காமமேஸ்வரி தேவி    
* த்விதியை - பகமாலினி தேவி    
* திருதியை - நித்யக்கலின்னா தேவி    
* சதுர்த்தி - பேருண்டா தேவி    
* பஞ்சமி - வன்ஹிவாசினி தேவி    
* சஷ்டி - மஹாவஜ்ரேஸ்வரி தேவி    
* சப்தமி - சிவதூதி தேவி    
* அஷ்டமி - த்வரிதா தேவி    
* நவமி - குலசுந்தரி தேவி    
* தசமி - நித்யா தேவி    
* ஏகாதசி - நீலபதாகா தேவி    
* துவாதசி - விஜயா தேவி     
* திரயோதசி - ஸர்வமங்களா தேவி     
* சதுர்த்தசி - ஜ்வாலா மாலினி தேவி     
* பௌர்ணமி - சித்ரா தேவி    

அமர பக்ஷம்
(இறங்கும்பொழுது-தேய்பிறை)
திதியின் பெயர் - திதி தேவியின் பெயர்
* பிரதமை - சித்ரா தேவி    
* த்விதியை - ஜ்வாலா மாலினி தேவி    
* திருதியை - ஸர்வ மங்களா தேவி    
* சதுர்த்தி - விஜயா தேவி    
* பஞ்சமி - நீலபதாகா தேவி    
* சஷ்டி - நித்யா தேவி    
* சப்தமி - குலசுந்தரி தேவி    
* அஷ்டமி - த்வரிதா தேவி    
* நவமி - சிவதூதி    
* தசமி - மஹாவஜ்ரேஸ்வரி தேவி    
* ஏகாதசி - வஹ்ளிவாஸினி    
* துவாதசி - பேருண்டா தேவி    
* த்ரயோதசி - நித்யக்கலின்னா தேவி    
* சதுர்த்தசி - பகமாலினி தேவி    
* அமாவாசை - காமேஸ்வரி தேவி

குடந்தை நடேசன்

Tags :
× RELATED சுந்தர வேடம்