×

வித்தியாசமாய் சிவலிங்கங்கள்!

1. சிரசாசனம் செய்யும் கோலத்தில் சிவலிங்கம்
ஆந்திர மாநிலத்திலுள்ள, பீமாவரத்தில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் யனமதுரு சக்தீஸ்வரர் கோயில் உள்ளது. இந்தக் கோவிலில், மூலவராக விளங்கும் சிவலிங்க பிரான், சிரசாசனம் செய்யும் கோலத்தில் இருப்பது அபாரமான ஒன்றாகும். ஈசனுக்கு அருகிலேயே பார்வதி தேவியார் கையில் குமரனை சீராட்டும்  கோலத்தில் காட்சி தருகிறார்.

இதைப் போன்ற அற்புத சிவ ரூபத்தை வேறு எங்கும் பார்க்க முடியாது.ஒருமுறை, சம்பாசுரன் என்ற அசுரனோடு யமதர்ம ராஜன் பல முறை போர் செய்தான். ஆனால், ஒரு முறை கூட அசுரனை,  யமனால் வெல்ல முடியவில்லை.தோல்வியில் வெட்கித் தலை குனிந்த யமன், செய்வதறியாது ஈசனை எண்ணி தவமிருக்க ஆரம்பித்தான்.

அவன் தவமிருக்கும் சமயத்தில் கயிலையில் ஈசன், சிரசாசனம் செய்து கொண்டிருந்தார். ஆகவே, யமனது பிரார்த்தனைக்கு அவர் செவி சாய்க்கவில்லை. ஈசனின் திருக்காட்சி கிடைக்காததால், தவத்தை  விடாமல் யமனும் அதி தீவிரமாக செய்தான். யமனது பக்தியை கண்டாள் தாய் பார்வதி. அவன் மீது கருணை அவளுக்கு பெருகிற்று.

கயிலையில் குமரனை கொஞ்சிக் கொண்டிருந்த அம்பிகை, யமனை மனதால் நினைத்த நொடியில் அவன் சகல சக்தியையும் பெற்றான். அசுரனையும் வென்றான். பிறகு, யமனின் வேண்டுகோளின்படி,  அம்மையும் அப்பனும் இங்கே அவனுக்கு அருளிய கோலத்தில் காட்சி தருவதாக தல புராணம் சொல்கிறது.

2. இரவில் பெண் வேடம் தரிக்கும் கோபேஷ்வர் மகாதேவர்கிருஷ்ணன் கோபிகைகளுடன் செய்யும் ராச நடனத்தை சிவபெருமான் காண விரும்பினார். ஆகவே, அவர் பிருந்தாவனத்தில் ராசநடனம்  நடக்கும் ராச மண்டலத்திற்கு அருகில் வந்தார். அவரைக் கண்ட ராதா தேவியின் தோழிகளான லலிதாவும், விஷாகாவும் ஈசனையே தடுத்தார்களாம். கண்ணன் அரவணைப்பில் இருப்பதால், அவர்களுக்கு  ஈசனையே தடுக்கும் வல்லமை வந்து விட்டது போலும். காரணத்தை வினவினார் ஈசன். கண்ணன் ஒருவனே, பரம புருஷன். அவனுக்கு சேவை செய்யும் ஜீவாத்மாவாகிய நாம், அந்தப் பரம புருஷனுக்கு  உரிய சிநேகிதிகள். ஆகவே ‘ஓர் ஆண்மகனான உங்களுக்கு இந்த இடத்தில் அனுமதி இல்லை’ என்று பதிலுரைத்தார்கள் லலிதாவும், விஷாகாவும்.

அதைக் கேட்ட ஈசன் மெல்ல குறுநகை பூத்தபடியே, ‘ஆணாக பிறந்தது என் குற்றமில்லையே! எனது உடலின் நிலை, எனது உள்ளத்தில் இருக்கும் பக்தியை எப்படி காட்ட முடியும்?’ என்று கோபிகைகளை  கேட்டாராம்.ஈசனின் பதிலால் கோபிகைகள் ஸ்தம்பித்துதான் போனார்கள். இருந்தாலும் சுதாரித்துக் கொண்ட அவர்கள், ‘சரி, நீங்கள் கண்ணனிடம் பிரேமை கொண்டிருப்பது உண்மையானால், இதோ இந்த  ‘ராதா குண்டத்தில்’ முழ்கி எழுங்கள் பார்க்கலாம்’ என்று ஈசனுக்கே, கோபிகைகள் கட்டளையிட்டார்கள்.

ஈசன் மறுப்பேதும் சொல்லாமல் ராதைக்காக, கண்ணன் உருவாக்கிய ராதா குண்டத்தில் முழுகி எழுந்தார்.அவர் ராதா குண்டத்தில் முழுகி எழுந்த அடுத்த நொடி, அவரும் ஒரு கோபிகையாக மாறி  இருந்தார். கோபிகையாக மாறிய ஈசன் ராச மண்டலத்திற்குள் (ராசம் நடக்கும் இடம்) நுழைந்தார்.
கண்ணன் நொடியில் கோபிகையாக வந்திருக்கும் ஈசனை இனம் கண்டு கொண்டார்.

கோபிகையாக மாறிய ஈசனுக்கு ‘கோபேஷ்வர் மகாதேவ்’ என்று பெயர் சூட்டினார். இந்த நிகழ்ச்சியின் நினைவாக பிருந்தாவனத்தில் இருக்கும், கோபேஷ்வர் மகாதேவருக்கு மாலை வேளைகளில் இன்றும்  கோபிகையாக (பெண்ணாக) அலங்காரம் செய்கிறார்கள். மதுராவிலுள்ள பிருந்தாவனத்திலேயே கோபேஷ்வர் ஆலயம் அமைந்துள்ளது.

ஒரு நாளைக்கு ஐந்து முறை நிறம் மாறும், திருநல்லூர் பஞ்சவர்ணேஷ்வரர்அப்பராலும் சம்பந்தராலும் பாடப்பட்ட அற்புதத் தலம், திரு நல்லூர். அகத்தியருக்கு ஈசன் கல்யாணக் கோலத்தில் காட்சி தந்த  பல தலங்களில், திருநல்லூர் முக்கியமான தலமாகும். கும்பகோணத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. அப்பருக்கு ஸ்ரீபாத தரிசனம் தந்தவர் திருநல்லூர் வாழ் ஈசன்.

ஆகவே, திருமால் கோயில்களைப்போல இங்கும் சடாரி வழங்கப்படுகிறது. இந்தக் கோயிலில் இருக்கும் சோமாஸ்கந்த மூர்த்திக்கு, திருவிழா நேரங்களில் வியர்த்து வழிவது அடுத்த அபூர்வம்.  இத்தனைக்கும் அவர் புறப்பாடு ஆகும்போது, வெண் சாமரம் வீசுவார்கள். ஆனாலும் கூட பெருமானின் முகத்தில் வியர்வை துளிகள் வழியும். இப்படி பல அதிசயங்களை தன்னகத்தே அடக்கிய  திருநல்லூர் சிவன் கோவிலில் மற்றொரு அதிசயமும் உள்ளது.

மூலவர் பஞ்சவர்ணேஸ்வரர் நாளொன்றுக்கு ஐந்து முறை தனது நிறத்தை மாற்றிக் கொள்கிறார். தாமிர நிறம், இளம் சிவப்பு நிறம், பொன்னிறம், இன்ன நிறம் என்று கூற முடியாத நிறம், நவரத்தின  பச்சை என்று ஒவ்வொரு நாளும் ஐந்து முறை தனது நிறத்தை மாற்றிக் கொள்கிறார். ‘நிறங்கள் ஓர் ஐந்து உடையாய் விண்ணோர்கள் ஏத்த’ மாணிக்கவாசகம், இந்த ஈசனைக் கண்டால் நினைவுக்கு  வருகிறது. அது மட்டுமில்லை, குந்தி தேவியின் சாபத்தை போக்க அருளியவர் இந்த ஈசன் என்ற செய்தியும் நம்மை மலைக்க வைக்கிறது.

ஐந்து பீடங்களில் காட்சி தரும் கச்சாலீஸ்வரர்காஞ்சிபுரம் கச்சபேஷ்வரர் மீது அபார பக்தி கொண்டவர் தளவாய் செட்டியார். இவர் ஆங்கிலேயர்கள் காலத்தில் அவர்களது கிழக்கிந்திய கம்பெனியில்  முக்கிய பணியில் இருந்தார். இவருக்கு தினமும் காஞ்சிபுரம் சென்று கச்சபேஷ்வரரை தரிசித்து வரும் வழக்கம் இருந்தது. அவ்வாறு ஒருமுறை சென்றபோது பாலாற்றில் வெள்ளம் பெருகியதால்  அவரால் திரும்ப முடியவில்லை. கம்பெனியில் தலைக்கு மேல் வேலை இருந்தது. அதைச் செய்யாமல் விட்டால் ஆங்கிலேயர்கள் என்ன செய்வார்கள் என்று தெரியவில்லை. பயத்தில் நடுங்கியபடியே  ஈசனை சரண் புகுந்தார், தளவாய் செட்டியார். அவரது பக்திக்கு மனம் கனிந்த ஈசன், அவருக்காக, அவரது வடிவில் சென்னைக்கு வந்து அவருடைய வேலையை செய்து முடித்தார்.

பாலாற்றில் வெள்ளம் வற்றியதும் சென்னைக்கு திரும்பிய செட்டியார் விஷயம் அறிந்து ஸ்தம்பித்து போனார்.தன்னைக் காத்த ஈசனுக்கு நன்றி சொல்லும் விதமாக, தான் வாழும் சென்னை பட்டணத்தில்  கச்சபேஸ்வரருக்கு ஒரு கோவில் கட்டினார். சென்னை காளிகாம்பாள் கோயிலுக்கு மிக அருகில் இருக்கும் இந்த கோயிலில் பல சிறப்பம்சங்கள் உண்டு.

இங்கு கச்சபேஸ்வரர், ஆமை, நாகம், சிம்மம், யுகம், பத்மம் ஆகிய ஐந்து பீடத்தில் ஒரே சமயத்தில் அமர்ந்து காட்சி தருவது வேறு எங்கும் காண முடியாத அபூர்வம். அம்பிகை, அழகாம்பிகை  திருமகளோடும், கலைமகளோடும் காட்சி தருகிறாள். முப்பெரும் தேவியரை ஒரே சமயத்தில் கண்ட ஆனந்தத்தை அநாயாசமாக தருகிறாள்.

கோடி லிங்க தரிசன பலன் தரும் கொட்டையூர் கோடீஸ்வரர்பத்ரகி என்ற முனி புங்கவருக்காக கோடி விநாயகரோடும், கோடி முருகனோடும், கோடி சண்டிகேஷ்வரரோடும், ஈசன், தானும் கோடி  ரூபத்தோடு காட்சி தந்தார். கோடி வடிவம் எடுத்து முனிவருக்கு காட்சி தந்த ஈசன், கோடி லிங்கத்தின் வடிவில் மறைந்து போனார். இன்றும் மூலவரின் திருமேனியில், பலாகாயில் இருப்பது போல  முட்கள் இருக்கிறது. உண்மையில், இவை அனைத்தும் சிறு லிங்கங்களாம். அது மட்டுமில்லை.

இந்த தலத்து இறைவி, பத்ர யோகிக்கு பந்தாடும் கோலத்தில் காட்சி தந்தாளாம். அவருக்கு காட்சி தந்த அதே கோலத்தில் நமக்கும் அம்பிகை காட்சி தருகிறாள். ஆகவே அவளை பந்தாடும் நாயகி என்று  பக்தர்கள் அன்போடு அழைக்கிறார்கள். வாஸ்தவத்தில் அம்பிகை விளையாடும் பந்தாக விளங்குவது, பக்தர்களான நமது பாவங்கள்தான். நமது பாவங்களை காலால் பந்தாடி அற்றுப்போக வைக்கும் அந்த  தயாபரியை, ஊரே கொண்டாடுகிறது.

இந்த இறைவனையும் இறைவியையும் தரிசித்தால், கோடிக்கணக்கான திருத்தலங்களுக்கு சென்று அங்கு இருக்கும் மூர்த்திகளை தரிசித்த பலன் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி, இங்கு செய்யப்படும் சிறு  புண்ணியமும், கோடி மடங்காகி விடும் என்று தல புராணம் சொல்கிறது. அதே போன்று இங்கு செய்யும் பாவங்களும் கோடி மடங்காக அதிகரித்து விடுமாம். அதனால்தான் ‘கொட்டையூரில் செய்த பாவம்  கட்டையோடே’ என்ற உலகப் பழமொழியும் வழங்கப்பட்டு வருகிறது. இத்தலம் கும்பகோணத்திற்கு அருகேயே உள்ளது.

ஜி.மகேஷ்

Tags :
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?