ஸ்ரீ ராமர் இல்லாத ராமர் ஆலயம்

மத்திய பிரதேசத்தில் ஓடுகின்ற நதிகளில் மிகச் சிறந்ததாகக் கருதப்படுவது ‘பெட்வா’ என்று சொல்லக் கூடிய நதியும் ஒன்று. இதில் ஓடுகின்ற நதிநீர் வானத்தைப்போல நீலநிறமாக இருக்கும். இந்த நீல வண்ண நதிக்கரையிலே, நதியின் மெல்லிய தென்றல் காற்றினிலே, அமைதியான சூழ்நிலையில் அமைந்திருப்பது ‘ஓர்ச்சா’ என்ற நகரமாகும். இந்த நகரத்திலே பளிங்குக் கற்களாலான பலவிதமான அரண்மனைகள் கண்களைக் கவரும்படியாக அமைந்திருக்கின்றன.

இதில் நம் கண்களைப் பறிக்கும் அரண்மனை ‘ராஜ் மஹால்’ என்ற அரண்மனையாகும். இந்த அரண்மனைக்குள்ளே ராமாயண, மகாபாரதக் காட்சிகளை விவரிக்கும் வண்ண வண்ண ஓவியங்கள் அற்புதமாக சித்தரிக்கப்பட்டுள்ளன. இதில் இந்த நாட்டு ராணிக்குத் தனியாகக் கட்டப்பட்ட அரண்மனை ‘ராய் பிரவின் மஹால்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த அரண்மனைக்குள்ளே ஓர் அழகிய ராமர் கோயிலும் இருக்கிறது. ‘ராஜா ராமன்’ என்று அழைக்கப்படும் இக்கோயிலுக்குள் உண்மையில் ராமர் இல்லை. ஆனால், மகாராணியின் ‘ராய் பிரவின் மஹால்’ என்றழைக்கப்படும் அந்த அரண்மனையில் தான். ‘சதுர்புஜ ராமராக’ சிறிய வடிவில் அமைந்துள்ளார்.

ஒரு காலத்தில் ‘மனுசத்தரூபா’ என்ற பெண்மணி மஹாவிஷ்ணுவிடம், தனக்குக் குழந்தை வடிவில் அவர் வரவேண்டுமென்று வரம் கேட்டாள். அதற்கு செவிசாய்த்த மஹாவிஷ்ணு ‘‘நான் கலியுகத்தில், ‘பட்வா’ நதிக்கரையில் அமைந்துள்ள ‘ஓர்ச்சா’ என்ற நகரத்தில் ‘ராமராஜாவாக’ அவதரிப்பேன் என்று கூறி வரம் அருளினார். அவருடைய அந்த வாக்கின்படி 1613ம் ஆண்டில் ‘ஓர்ச்சாவில்’ ராமராஜனாக அவதரித்தார்.

ஒரு சமயம் இந்த ஓர்ச்சா நகரத்தை ஆண்டுகொண்டிருந்த மதுகர்ஷாவும், அவருடைய மனைவி ‘கணேஷ் குவாரி’ விற்கும் அந்த ராமராஜ சிலை கிடைத்தது. ‘மதுகர்ஷா’ மன்னர்  கிருஷ்ணன் மீது அளவில்லாத பக்தி கொண்டவர். ஆனால், அவருடைய மனைவி ‘கணேஷ் குவாரியோ’ ராம பக்தி மிகுந்தவள். ஒருநாள் ராஜா மதுகர்ஷா தனது மனைவியான ‘கணேஷ் குவாரியிடம் பிருந்தாவனம் சென்று  கிருஷ்ணரை வழிபட்டு வர அழைத்தார். அதற்கு அவள் மறுத்துவிட, அதனால் கோபமடைந்த மன்னன் ‘‘உனக்கு ராம பக்தி அதிகமிருந்தால் அயோத்தியிலிருக்கும் ராமரை இங்கு அழைத்து வர முடியுமா? முடிந்தால் அழைத்து வா’’ என்று கூறினார்.

இதைச் சவாலாக ஏற்றுக்கொண்ட மகாராணி  நடந்தே அயோத்திக்குச் சென்றாள். அங்குள்ள ‘லக்ஷ்மண் கில்லா’ என்றழைக்கப்படும் லக்ஷ்மணனின் அரண்மனைக்குப்  பக்கத்தில், சரயு நதிகரையில் ஒரு குடில் அமைத்து தவமியற்றினாள். நீண்ட நாட்களுக்குப் பிறகும் ராமதரிசனம் கிடைக்கவில்லை. மனமொடிந்த ராணி சரயு நதியில் குதித்து உயிரை மாய்த்துக் கொள்ளச் சென்றாள். அப்போது அவளுக்கு ‘ராம தரிசனம்’ கிடைத்தது. ‘‘தாங்கள் ஓர்ச்சாவுக்கு வரவேண்டும்’’. என்று கேட்டுக் கொண்டாள். அப்போது மூன்று நிபந்தனைகளை விதித்து ராமர் வர ஒப்புக் கொண்டார்.

‘‘நீ ஓர்ச்சாவுக்கு நடந்தே செல்லவேண்டும்’’.‘‘பூச நட்சத்திர நாளில் உன் பயணத்தை ஆரம்பிக்க வேண்டும்.’’‘‘இதோ நான் தரும் இந்த ராமர் விக்ரகத்தை கீழே வைத்து விட்டால், எந்த இடத்தில் வைத்தாயோ அந்த இடத்திலிருந்து மீண்டும் எடுக்க முடியாது.’’இந்த மூன்று நிபந்தனைகளையும் ஏற்றுக் கொண்ட மகாராணி, உடனே, ராமர் சிலையுடன் ‘ஓர்ச்சாவுக்கு’ மன மகிழ்ச்சியோடு புறப்பட்டாள். புறப்படும் முன் தனது கணவரான ராஜாவை அழைத்து அவள் புறப்பட்டு வருவதாகத் தெரிவித்தாள்.’’ இதைக்கேட்ட மதுகர்ஷா மஹாராஜா அரண்மனைக்குள் இந்த ராமருக்கு ஆலயம் ஒன்றைக் கட்ட ஆரம்பித்தார்.

ராமர் சிலையுடன் மகாராணி வந்தபொழுது, ராமருக்குக் கட்டிக் கொண்டிருந்த ஆலயம் முடிவு பெறாமல் இருக்கவே, மகாராணி அந்த ராமர் விக்ரகத்தை தனது அரண்மனையில் வைத்துக் கொண்டு, பிறகு கோயில் கட்டி முடிக்கப்பட்ட பிறகு அதை அங்கு கொண்டு சென்று பிரதிஷ்டை செய்யலாமென்று முடிவு செய்து ராமர் விக்ரகத்தை தனது அரண்மனையில் வைத்துக் கொண்டாள். ஆலயம் கட்டி முடிக்ககப்பட்ட பிறகு ராமர் விக்ரகத்தை அரண்மனையிலிருந்து எடுக்க முயற்சித்தபோது; அந்த ராமர் சிலையை எடுக்க முடியவில்லை. ஏற்கனவே ராமர் அமைத்த நிபந்தனைப்படி அந்த சிலையை எடுக்க முடியாமல் போகவே, அந்த ராமர் விக்ரகத்தை மகாராணியின் அரண்மனையில் வைத்தே பூஜித்தனர்.

ராமர் வனவாசத்திற்கு செல்லும்போது, தனது சிலை ஒன்றை தாய் கௌசல்யாவிடம் கொடுத்துவிட்டுச் சென்றதாகவும், கௌசல்யா அந்தச் சிலையை நீண்டநாள் பூஜித்து, வந்ததாகவும் பிறகு ராமர் வனவாசம் முடிந்து திரும்பியதும் அந்தச் சிலையை கௌசல்யா சரயு நதியில் விட்டுவிட்டதாகவும், அந்தச் சிலைதான் ராமரால் ‘கணேஷ் குவாரி’ மகாராணிக்கு ராமர் வழங்கியதாகவும் ஒரு புராணக்கதையும் சொல்லப்படுகிறது.

இந்த ராமரை ‘ராமராஜா’ ஆலயத்திற்கு தரிசிக்க வரும் பக்தர்கள், அந்த ஆலயத்தில் வெற்றிடமாக உள்ள இடத்திலே ராமர் இருப்பதாக மனதில் தியானத்து வணங்கிவிட்டு, மகாராணியின் அரண்மனையில் இருக்கும்  ராமரையே தரிசித்து அருள் பெறுகின்றனர்.  ராமபிரானுக்கு நடைபெறும் அத்தனை பூஜைகள், ஆராதனைகள், திருவிழாக்கள் அனைத்தும் இந்த மகாராணி அரண்மனையிலே நடைபெறுகிறது.

இந்த ஆலயத்தில் நான்கு திசைகளிலும் நான்கு ஆஞ்சநேயர்கள் இருக்கின்றனர். ராம பிரானுக்கு ஆரத்தி முடிந்ததும் அந்த ஆரத்தியை’ ஆஞ்சநேயருக்கு முன்னால் வைத்து வழிபடுகின்றனர். அந்த ஆரத்தி ஜோதியை ஆஞ்சநேயர் அயோத்திக்கு எடுத்துச் செல்வதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.

இரண்டாவது அயோத்தி என்றழைக்கப்படும் இந்த ‘ஓர்ச்சா’ ராமர் கோயிலிருக்கும் இந்த ராமரை அந்த நாட்டு மன்னராக மக்கள் வழிபடுகிறார்கள். ஒவ்வொருநாளும் காலையில் காவல் துறையினர் இந்த ஆலயத்திற்கு வந்து ராமருக்கு மரியாதை செலுத்திய பின்புதான் பக்தர்கள் ராமரை தரிசிக்க வேண்டுமென்பது விதிமுறையாக இங்கு உள்ளது. இரவு வேளையில் ராமர் அயோத்தியில் உறங்கிவிட்டு, அதிகாலையில் இந்த அரண்மனைக்கு வந்துவிடுவார் என்பது ஐதீகம்.

மகர சங்கராந்தி, ராமநவமி வசந்த பஞ்சமி ஆகிய நாட்களில் விசேஷமாக பூஜைகள் நடைபெறும். அப்போது பக்தர்கள் வருவார்கள். இந்த ‘‘ராஜாராம் மந்திர்’’ மத்திய பிரதேசத்திலுள்ள ஜான்சியிலிருந்து 15 கி.மீ. தொலைவில்  அமைந்துள்ளது.

ராமசுப்பு

Related Stories:

>