விரும்பியதை அருள்வார் கரும்பாயிரம் பிள்ளையார்!!

கரும்பு ஒன்றிரண்டு அல்ல; ஆயிரம். கும்பகோணத்திலுள்ள ஒரு பிள்ளையாருக்கு கரும்பாயிரம் பிள்ளையார் என்றே பெயர். இனிப்புச் சுவை  எப்படியிருக்கும் என்றால் ஆயிரம் கரும்பின் சுவையாக இருக்கும் என்று அவருடைய அருட்சுவையை சொல்லும் அற்புதக் கோயில். ஒரே பரம்பொருள்  பலவாக, பல்வேறு ரூபங்களில் பக்தனுக்கு அருள்கிறது. ஈசன், விஷ்ணு, பிரம்மா, சக்தி, விநாயகர், முருகன் என்று பலவடிவங்களில் ஆக்கல், காத்தல்,  அழித்தல் என்று மாபெரும் சக்தி சுழற்சியாக நம்மை இயக்குகிறது. ஈசன் என்றாலே கயிலைதான் நினைவுக்கு வரும். மகாவிஷ்ணு என்றால் பாற்கடல்-பாம்பணை-வைகுண்டம்தான் கண்முன் நிற்கும். அம்பாள் என்றாலே அம்ருத ஸாகரத்தில் மணி தீபத்தில் வீற்றிருக்கும்  கோலம் நெஞ்சை நிறைக்கும். எல்லா தெய்வங்களுக்கும் ஒரு உலகம் உண்டு. அந்தந்த தெய்வத்தை வழிபடுபவர்கள், உபாசிப்பவர்கள் அங்குதான் செல்ல  விரும்புவார்கள். கயிலையை எப்போது காணுவேன் எனவும், வைகுண்ட தரிசனம் எப்பிறவியில் வாய்க்கும் எனவும், தேவிலோகத்தில் நுழைவேனா  என்றும் பக்தியில் அரற்றிப் பாடியிருக்கிறார்கள். அதுபோல கணபதி எனும் பிள்ளையார் வீற்றிருக்கும் உலகம்தான் ஆனந்த புவனத்தைச் சுற்றியுள்ள  இஷூ ஸாகரம். அதாவது கரும்புச் சாறு கடலாக பரவியிருக்கும் உலகத்தின் மத்தியில் வீற்றிருக்கிறார். ஆனாலும், தன்னை எளிதாக மாற்றிக் கொண்டு  அரச மரத்திற்கு கீழும், சிறு சந்திலும், பெரிய ஆலயத்தில் தலைவாயிலிலும் இன்ன இடம் என்று பார்க்காமல் அருள்வதில் பிள்ளையாருக்கு இணை  யாருமில்லை.

கும்பகோணத்திற்கு ஆதியில் வராஹபுரி என்று பெயர் இருந்தது. வராஹ அவதாரத்தின்போது பகவான் பிள்ளையாரை வேண்டிக் கொண்டே  பூமாதேவியை ஹிரண்யாட்சனிடமிருந்து மீட்டார். அதனால் இந்தப் பிள்ளையாருக்கு வராஹப் பிள்ளையார் என்றும் திருநாமம் உண்டென்று  சொல்வார்கள். பிள்ளையார் கையிலிருக்கும் மோதகமும் இனிப்பு. அவரை சூழ்ந்திருக்கும் கருப்பஞ்சாறுக் கடலும் இனிப்பு. எப்படி இனிப்பை தேடி  வண்டுக் கூட்டங்கள் மொய்க்குமோ, அதுபோல பக்தர்கள் எப்போதும் பிள்ளையாரை சிநேகத்துடனும், பக்தியுடன் அண்டி நிற்பார்கள். மிகப் பெரிய  பூஜைகள் வேண்டாம்; உடலை வருத்திச் செய்யும் எந்த தவமும் தேவையில்லை. இரண்டு கொத்து அறுகம்புல்லை எடுத்து பிள்ளையாரின் திருவடி

களில் போட்டாலே போதும். குளிர்ந்து அருளும் தயாபரன் அவர். பக்தர்கள் தங்கள் ஆசைக்கு ஆயிரம் திருப்பெயர்கள் இட்டு வணங்குவதும்  இவருக்குத்தான். அப்படித்தான் இவருக்கு கரும்பாயிரம் என்றும் பெயர் வைத்தார்கள்.

அது அவரே நிகழ்த்திய சிறு லீலையால் வந்த திருப்பெயர். கருப்பஞ்சாறுக்கு நடுவில் நிற்கும் இந்த ஆதி வராஹப் பிள்ளையா, பாலகனாக வேடம்  தரித்து வந்தார். தெருவில் ஓரமாக நின்றார். முகத்தில் கருணையும், குறும்பும் மிளிர்ந்தன. சற்று தொலைவில் கட்டுக் கட்டாக கரும்புகளை ஏற்றிய  வண்டியை ஓட்டியபடி ஒருவன் வந்தான். தம்முடைய தந்தத்தை ஒடித்து மகாபாரதத்தை எழுதிய ஞான முதல்வனான விநாயகர், இங்கு கரும்புகளை  ஒடித்து சாறு உறிஞ்ச, ஒரு பாலகனின் இயல்பாக ஆசை கொண்டார். பாலகன் வண்டியருகே நகர்ந்து ‘‘ஒரு கரும்பை கொடேன்’’ என்று  வண்டிக்காரனிடம் கேட்டார்.‘‘ம்ஹூம்.. முடியாது’’ என்று வண்டிக்காரன் மறுத்தான்.

பிரம்மச்சாரி பிள்ளையார் வண்டி ஓட்டத்தோடு தொடர்ந்து ஓடினார். கெஞ்சலும், கொஞ்சலுமாக மீண்டும் மீண்டும் கேட்டார். இதைக் கண்ட  தெருவில் போன சிலர்,  ‘‘ஏனப்பா.. அந்த குழந்தை கேட்குது இல்ல. ஒன்னேயொன்னு ஒடிச்சு கொடேன். பார்க்கறதுக்கே பிள்ளையாராட்டம்  எப்படியிருக்கு!’’ என்று தங்களை அறியாமல் உண்மையை சொன்னார்கள்.வண்டிக்காரன் பிடிவாதமாக இருந்தான். விஷமாக பேசத் தொடங்கினான்.  ‘‘இது கொஞ்சம் வேற மாதிரி கரும்பு. ஆமாம், இதை ஒடிச்சு உறிஞ்சினா கரிக்கும். ஆலையில கொண்டுபோய் வெல்லமா மாத்தினா இனிக்கும்’’ என்று  வாய்க்கு வந்தபடி உளறினான்.தொடர்ந்து கேட்டு அலுத்துப் போன சிறுவன் அருகிலுள்ள ஆலயத்திற்குள் சென்று மறைந்தார். அந்த சமயத்தில்  இன்னொரு ஆச்சரியமும் நிகழ்ந்தது. தித்திக்கும் சுவையுடன் இருந்த கரும்பெல்லாம் சாறற்ற சக்கையாக மாறின. இதைக் கண்ட வண்டியோட்டி  அதிர்ந்து, ‘விநாயகப் பெருமானே!’ என்று அலறினான். தன்னையறியாது கோயிலுக்குள் சென்றான்.

தவறுணர்ந்தான். தண்டனிட்டான். தன்யனானான். கோபம் விலக்கிய விநாயகர் மீண்டும் சக்கை கரும்பை இனிப்பாக மாற்றினார். ஆயிரம்  கரும்புகளுக்குள்ளும் இனிப்புச் சுவை ஊறியது. மக்கள் கண்களில் நீர் வழிய நின்றனர். இப்படி பல விகட விளையாட்டுகளை விளையாடியே, மிகச்  சாதாரணமாக ஞானானுபவத்தையும் அளித்து விடுவார் பிள்ளையார். இப்படி விளையாடியே தத்துவப் பொருளையும் விளக்கி, சாதாரண வாழ்வைக்  கூட சிகரங்களில் அமர்த்திவிடும் சமர்த்தன்.   சற்றே பழமையான இந்த கரும்பாயிரம் பிள்ளையார் ஆலயத்தில் ஆகம விதிகளின் படி, வேதம் முழங்கிட  நாள் தவறாது வழிபாடுகள் நடக்கின்றன.  கும்பகோணத்திற்கு வந்து செல்லும் பக்தர்களும் இக்கோயிலின் பெருமையையும், அருள் வளமையையும்  கேள்வியுற்று தரிசித்துச் செல்வது வழக்கம். எதைத் தொடங்கினாலும், விநாயகரை வணங்கித் தொடர்ந்தால் காரியம் நிறைவேறுவது சகஜமானது.   திருக்குடந்தை நகரத்தின் மூத்த பிள்ளையான கரும்பாயிரம் பிள்ளையார் உலகோர் அனைவருக்கும் நல்வாழ்வு அளித்திட ஆர்வத்துடன்  காத்திருக்கிறார். பக்தர்களின் வாழ்வை அடிக்கரும்பு இனிப்பாக மாற்றிட திருவுளம் கொண்டுள்ளார்.  இந்த ஆலயம் கும்பகோணம் கும்பேஸ்வரர்  கோயிலுக்கு அருகில் உள்ளது.

- எஸ்.கிருஷ்ணஜா

Related Stories: