குடந்தையில் மாசி மகம்

மாசி மகத்தின் மகத்துவம்:

தண்ணீருக்கு அதிபதியாக இருக்கும் வருண தேவன், திருமாலிடம் வந்து ஒரு பிரார்த்தனையை முன் வைத்தார். “இறைவா! மக்கள் எல்லோரும் தங்களது பாபங்களைக் கழித்துக் கொள்ள எனது வடிவமாய் இருக்கும் புண்ணிய நீர்நிலைகளில் வந்து நீராடுகிறார்கள். அந்தப் பாபங்கள் அவர்களை விட்டு நீங்கினாலும், எனது வடிவமான நீர்நிலைகளில் இப்போது அந்தப் பாபங்கள் அப்படியே தங்கி விட்டன. அதனால் தண்ணீரின் அதிபதியான நானும் தோஷம் உடையவனாக ஆகி விட்டேன். எனது தோஷங்களைப் போக்கி என்னை நீ தூய்மையாக்கி அருள வேண்டும்!” என்று திருமாலிடம் வேண்டினார் வருணன்.

அதற்குத் திருமால், “வரும் மாசி மாதம் பௌர்ணமியன்று மக நட்சத்திரத்தோடு கூடிய நன்னாளில் நான் நீர்நிலைகளிலேயே மிகப் பெரிதாக இருக்கும் கடலில் வந்து நீராடுவேன். நான் நீராடியவாறே, தண்ணீரில் உள்ள அனைத்துப் பாபங்களும் தோஷங்களும் நீங்கி, நீ தூய்மையானவனாக ஆகி விடுவாய்!” என்று வருணனுக்கு வரம் அளித்தார். அதன்படி மாசி மகத்தன்று திருமால் கடலில் நீராட்டம் கண்டரள, பரம பவித்திரமான இறைவனின் திருவடி சம்பந்தத்தால் அத்தனை நீர்நிலைகளும் தூய்மை அடைந்தன.

இப்படித் தூய்மை பெற்ற வருணனைப் பார்த்து திருமால், “இன்று உன்னில் வந்து நான் நீராடியது போலவே ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் மக நட்சத்திரத்தோடு கூடிய பௌர்ணமி நாளில் உன் வடிவான நீர்நிலைகளில் நீராடி அவற்றைத் தூய்மைப் படுத்துவேன்!” என்று வரம் கொடுத்தார். இந்த அடிப்படையிலேயே மாசி மக நன்னாளுக்குக் ‘கடல் ஆடும் நாள்’ என்று திருப்பெயர் ஏற்பட்டது. அந்நாளில் எல்லாத் திருக்கோயில்களில் உள்ள தெய்வங்களும் அருகிலுள்ள கடலிலோ, புண்ணிய நதிகளிலோ, பொய்கைகளிலோ தெய்வீக நீராட்டம் கண்டருள்வது வழக்கம்.

மாசி மகத்தின் தத்துவம்:

பிரம்ம சூத்திரத்தில் இறைவனுக்கு இருபெரும் அடையாளங்கள் கூறப்பட்டுள்ளது. அதை உபயலிங்கம் (இருபெரும் அடையாளங்கள்) என்பார்கள். (உபய=இரண்டு, லிங்கம்=அடையாளம்) அவை,

1. அகில ஹேய ப்ரத்யனீகத்வம் - தோஷங்களால் தீண்டப் படாமல் இருத்தல்,

2. கல்யாணைக தானத்வம் - மங்கள குணங்களுக்கு இருப்பிடமாக இருத்தல்.

இவ்விரண்டும் இறைவனுக்குரிய இன்றியமையாத குணங்கள் என்று பிரம்ம சூத்திரத்தின் மூன்றாம் அத்தியாயம் கூறுகிறது. இந்தத் தத்துவத்தை நம் கண்முன்னே நிறுத்தும் நிகழ்வு தான் மாசி மகத்தில் இறைவன் கண்டருளும் நீராட்டம்.

மாசி மக நீராட்டத்தில், நதிகளில் நீராடி அவற்றில் உள்ள பாபங்களை இறைவன் போக்குகிறார். ஆனால் அந்த நதிகளில் உள்ள பாபங்கள் இறைவனிடம் ஒட்டுவதே இல்லை. தோஷமுள்ள ஒரு பொருள் நம்முடன் தொடர்பு கொண்டால், அப்பொருளில் உள்ள தோஷங்கள் நம்மிடம் வந்து ஒட்டிக்கொள்கிறது அல்லவா? ஆனால் தோஷமுள்ள ஒரு பொருள் இறைவனோடு தொடர்பு கொள்ளுகையில், இறைவனிடம் அந்த தோஷங்கள் ஒட்டுவதில்லை. மாறாக, அந்தப் பொருள் இறைவனைப் போலவே தூய்மையானதாக ஆகிவிடுகிறது. அவ்வாறு இங்கே மாசி மக நீராட்டத்தில் நதிகளில் உள்ள பாபங்கள் இறைவனைத் தீண்டுவதில்லை அல்லவா? எனவே இறைவன் ‘அகில ஹேய ப்ரத்யனீகன்’ (தோஷங்களால் தீண்டப்படாமல் இருப்பவன்) என்று இந்த மாசி மக நீராட்டத்தின் வாயிலாக அறிய முடிகிறது.

அதே சமயம், அந்த நதிகளுக்கு இறைவன் தூய்மையைக் கொடுக்கிறார் அல்லவா? நாம் நதிகளில் நீராடுகையில், நம் பாபங்கள் அந்த நதிகளில் சேர்கின்றன. ஆனால் அதே நதிகளில் இறைவன் நீராடும் போது, அந்த நதியைப் பிடித்த பாபங்கள் நீங்குகின்றன. நாம் புண்ணிய நதிகளில் நீராடுவதால் நாம் தூய்மை அடைகிறோம். அதே புண்ணிய நதிகளில் இறைவன் நீராடும் போது, அந்தப் புண்ணிய நதிகள் தூய்மை அடைகின்றன. இதைக் கொண்டு இறைவன் ‘கல்யாணைக தானன்’ (மங்கள குணங்களுக்கெல்லாம் இருப்பிடம்) என்றும் அறிய முடிகிறது.இவ்வாறு பிரம்ம சூத்திரங்கள் கூறும் இறைவனின் இருபெரும் அடையாளங்களை நம் கண்முன் காட்டுவதே மாசி மக நீராட்டம் ஆகும்.

மாசி மகத்தின் சிறப்புகள்:

மாசி மகத்தன்றுதான்,

1. வராகப் பெருமாள் பூமிதேவியைப் பிரளயக் கடலில் இருந்து மீட்டெடுத்தார்.

2. வருணனின் பிரம்மகத்தி தோஷத்தைப் பரமசிவன் போக்கினார்.

3. தட்சனின் மகள் சதி தேவி தோன்றினாள்.

4. முருகன் சிவனுக்குப் பிரணவத்தின் பொருளை உபதேசித்தார்.

மகாமகக் குளத்தின் வரலாறு:

கும்பகோணத்தின் அக்னி மூலையில் உள்ள மகாமகக் குளம் பற்றிய ஒரு வரலாறு சைவ புராணங்களில் காணக் கிடைக்கிறது. புனித நதிகளான கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, நர்மதை, சிந்து, காவிரி, சரயூ, தாமிரபரணி ஆகிய ஒன்பது நதிகளும் சிவபெருமானிடம் சென்று, “மக்கள் எல்லோரும் எங்களிடம் வந்து நீராடித் தங்களது பாபங்களை எங்களிடம் கழித்து விட்டுச் செல்கிறார்கள். அப்பாபங்களை நாங்கள் எங்கே சென்று கழிப்பது?” என்று வினவின.

அப்போது சிவபெருமான், “கும்பகோணத்தின் அக்னி மூலையில் உள்ள மகாமகக் குளத்தில் குரு சிம்ம ராசியில் இருக்கும் போது வரும் மக நட்சத்திரத்தோடு கூடிய பௌர்ணமி நாளில் நீங்கள் நீராடினால் உங்களது பாபங்கள் அனைத்தும் நீங்கும்!” என்று வரம் அளித்தார்.

மக நட்சத்திரத்தோடு கூடிய பௌர்ணமி ஒவ்வொரு வருடமும் மாசி மாதத்தில் வரும். ஆனால் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் குரு சிம்ம ராசிக்கு வரும். எனவே தான் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை, அதாவது சிம்ம ராசியில் குரு இருக்கும் போது வரக்கூடிய மாசி மகம் ‘மகாமகம்’ என்று கொண்டாடப் படுகிறது. 2016-ல் குரு சிம்ம ராசியில் இருந்த போது மகாமகம் கொண்டாடப் பட்ட நிலையில், அடுத்து 2028-ம் ஆண்டு மகாமகம் கும்பகோணத்தில் கொண்டாடப்பட உள்ளது.

அந்நாளில் மகாமகக் குளத்தில் ஒன்பது புனித நதிகள் வந்து நீராடுவதால், அந்தக் குளத்தில் நீராடுபவர்களின் பாபங்கள் நீங்குவதோடு மட்டுமின்றி, ஒரே நேரத்தில் ஒன்பது புனித நதிகளில் நீராடிய பலனும் கிடைக்கிறது என்று சைவ புராணங்கள் கூறுகின்றன. அதுமட்டுமின்றி, ஒவ்வொரு ஆண்டுமே மாசி மகத்தன்று குடந்தையில் பல்வேறு சிவாலயங்களில் உள்ள சிவபெருமான்கள், ரிஷப வாகனத்தில் மகாமகக் குளக்கரைக்கு வந்து நீராட்டம் காண்பது வழக்கம்.

காவிரியும் பொற்றாமரைக் குளமும்:

பிரளயக் கடலில் இருந்து பூமி தேவியை மீட்டுக் கொண்டு வராகப் பெருமாள் முதன்முதலில் வெளிவந்த இடம் கும்பகோணம் என்று குடந்தையின் தலவரலாறு கூறுகிறது. அதன் அடையாளமாகவே கும்பகோணம் வராகக் குளக்கரையில் ஆதி வராகப் பெருமாளாக அம்புஜவல்லித் தாயாரோடு திருமால் காட்சி தருகிறார். அந்த வராகப் பெருமாள் அவதரித்த நாள் மாசி மகம் என்பதால், ஒவ்வொரு ஆண்டும் மாசி மகத்தை ஒட்டி வராகப் பெருமாளுக்குப் பத்து நாள் பிரம்மோற்சவம் நடைபெறும்.

மேலும், திருமால் கையிலுள்ள சுதர்சனச் சக்கரத்தைக் காவிரிக் கரையில் இருந்து வழிபட்ட சூரியனுக்கு, அந்த சுதர்சனர் சக்கரபாணிப் பெருமாளாகத் தரிசனம் தந்து அருளிய நாளும் மாசி மகம் ஆகும். எனவே வருடந்தோறும் மாசி மகத்தன்று சக்கரபாணிப் பெருமாளுக்குக் காவிரியில் தீர்த்தவாரி நடைபெறும்.

குடந்தையின் பிரதான தெய்வமான ஸ்ரீசார்ங்கபாணிப் பெருமாள் மாசி மகத்தன்று பொற்றாமரைக் குளத்தில் தெப்பத் திருவிழா கண்டருள்வார். பாற்கடலையே குளமாகவும், ஆதிசேஷனையே தெப்பமாகவும் உருவகப்படுத்தி, பாற்கடலில் ஆதிசேஷன் மேல் திருமால் எழுந்தருளி இருப்பதை இந்தத் தெப்ப உற்சவமாக நம் கண்முன்னே படம்படித்துக் காட்டுகிறார்கள்.

குருவின் பெருமை:

குடந்தை கடைவீதியில் எழுந்தருளி இருக்கும் நடாதூர் அம்மாள் உடனுறை ராஜகோபால சுவாமிக்கு மாசி மகத்தன்று திருக்கோயிலிலேயே தீர்த்தவாரி நடைபெறும். மகாமகத்தன்று (பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை) காவிரியில் தீர்த்தவாரி நடைபெறும்.

அந்தத் தீர்த்தவாரியின் போது, ராஜகோபால சுவாமி தனியாகச் செல்லாமல், தன்னோடு எழுந்தருளி இருக்கும் வைணவ குருமாரான ஸ்ரீநடாதூர் அம்மாளோடு சேர்ந்து சென்று தீர்த்தவாரி கண்டருள்வது வழக்கம். ஏனெனில், நீராட்டம் என்பது ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் இடையே நடைபெறும் ஒருவித பரிமாற்றம் ஆகும். இறைவனின் குணங்களாகிய குளத்தில் ஒரு ஜீவாத்மா நீராடுவது தான் உண்மையான நீராட்டம். அது குருவின் துணையால் தான் சாத்தியமாகும் என்பதை நமக்கு உணர்த்தவே, ‘வாத்ஸ்ய வரத குரு’ என்று பெயர் பெற்ற நடாதூர் அம்மாளோடு இணைந்து தீர்த்தவாரிக்குச் செல்கிறார் கடைவீதி ராஜகோபாலன்.

மகாமகத் தீர்த்தவாரி:

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மகாமகத் திருவிழாவின் போது,

1. ஒன்பது நதிகள் சிவனை வழிபட்ட காசி விஸ்வநாதர் கோயில்

2. அமுதக் குடத்தின் மூக்கு தங்கிய

இடமான கும்பேஸ்வரர் கோயில்

3. அமுதக் குடத்திலிருந்து வில்வம் விழுந்த இடமான நாகேஸ்வரர் கோயில்

4. அமுதக் குடத்தின் உறி விழுந்த இடமான சோமேஸ்வரர் கோயில்

5. குடத்தைச் சுற்றி இருந்த பூணூல் விழுந்த இடமான கௌதமேஸ்வரர் கோயில்

6. தேங்காய் விழுந்த இடமான அபிமுகேஸ்வரர் கோயில்

7. வேடுவன் வடிவில் வந்த சிவன் பாணம் எய்த இடமான பாணபுரீஸ்வரர் கோயில்

8. புஷ்பங்கள் விழுந்த இடமான கம்பட்ட விஸ்வநாதர் கோயில்

9. மற்ற உதிரி பாகங்கள் விழுந்த இடமான ஏகாம்பரேஸ்வரர் கோயில்

10. அமுதத் துளிகள் விழுந்த இடமான கோடீஸ்வரர் கோயில்

11. சந்தனம் விழுந்த இடமான காளஹஸ்தீஸ்வரர் கோயில்

12. அமுதக் கலசத்தின் நடுப் பாகம் விழுந்த இடமான அமிர்தகலச நாதர் கோவில்

ஆகிய பன்னிரண்டு சிவன் கோயில்களில் உள்ள சிவபெருமான்கள் மகாமகக் குளத்திலும்,

1. ஆராவமுதாழ்வான் என்று போற்றப்படும் ஸ்ரீசார்ங்கபாணிப் பெருமாள்

2. சுதர்சனச் சக்கரத்தின் வடிவமான ஸ்ரீசக்கரபாணிப் பெருமாள்

3. ஸ்ரீராமஸ்வாமி திருக்கோயிலில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீராமபிரான்

4. நடாதூர் அம்மாள் உடனுறை ஸ்ரீவித்யா ராஜகோபாலன்

5. ஆதிவராகப் பெருமாள் ஆகிய ஐந்து விஷ்ணு ஆலயங்களில் உள்ள எம்பெருமான்கள் காவிரியிலும் தீர்த்தவாரி கண்டருள்வார்கள்.

எனவே, சைவர்கள் மகாமகக் குளத்திலும், வைணவர்கள் காவிரியிலும் மகாமக நன்னாளில் நீராடுவது மிக விசேஷமாக இரு நெறிகளிலும் கொண்டாப்பட்டு வருகிறது.

குடந்தையின் பெருமை:

“அன்ய க்ஷேத்ரே க்ருதம் பாபம் புண்ய க்ஷேத்ரே வினச்யதி

புண்யய க்ஷேத்ரே க்ருதம் பாபம் வாராணஸ்யாம் வினச்யதி

வாராணஸ்யாம் க்ருதம் பாபம் கும்பகோணே வினச்யதி

கும்பகோணே க்ருதம் பாபம் கும்பகோணே வினச்யதி”

இந்தப் புராண ஸ்லோகத்தின் பொருள் - சாதாரண ஊர்களில் பாபம் செய்தால், அதைப் புண்ணியத் தலங்களுக்குச் சென்று போக்கிக் கொள்ளலாம். புண்ணியத் தலங்களில் பாபம் செய்தால், காசிக்குச் சென்று அதைப் போக்கிக் கொள்ளலாம். காசியிலேயே பாபம் செய்தால், அதைக் கும்பகோணத்தில் போக்கிக் கொள்ளலாம். கும்பகோணத்தில் பாபம் செய்தால், இன்னொரு தலத்தை நாடிப் போகத் தேவையில்லை. கும்பகோணத்தில் செய்த பாபங்களைக் கும்பகோணத்திலேயே போக்கிக் கொள்ளலாம். கும்பகோணத்தை மிஞ்சிய புண்ணியத் தலம் ஏதும் இல்லை.நீராடப் போதுவீர்! போதுமின்!    

குடந்தை வெங்கடேஷ்

Related Stories:

>