என் கட்டளைகளை கடைபிடியுங்கள்

நம் வாழ்வில் எந்த ஒரு வேலையைச் செய்தாலும் அதற்கான விதிமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும். இயேசுவின் சீடராக வாழ வேண்டுமென்றால் முதலில் தன்னலம் துறக்க வேண்டும். இரண்டாவதாக நாள்தோறும் சிலுவையைத் தூக்க வேண்டும். தன்னலம் என்பது தன்னை மட்டும் முன்னிறுத்துவது. மற்றவர்களை சுயநலத்திற்காகப் பயன்படுத்துவது, மற்றவர்களுக்கு என்ன நடந்தாலும் கவலைப்படாமல் தான் மட்டும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைப்பது இப்படிப்பட்ட மனநிலையை நாம் முதலில் தவிர்க்க வேண்டும். அதேநேரத்தில் நம் அன்றாட சிலுவைகளான கடமைகளைச் செய்ய அழைக்கப்படுகிறோம்.

‘‘மானிட மகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலை செய்யப்படவும், மூன்றாம் நாளில் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும்’’ என்று இயேசு சொன்னார். பின்பு அவர் அனைவரையும் நோக்கி ‘‘என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும், தன்னலம் துறந்து, தம் சிலுவையை நாள்தோறும் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும்; ஏனெனில், தன் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதைக் காத்துக் கொள்வார். ஒருவர் உலகம் முழுவதையும் தமதாக்கிக் கொண்டாலும் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன?

என்னைக்குறித்தும் என் வார்த்தைகளைக் குறித்தும் வெட்கப்படும் ஒவ்வொருவரைப் பற்றியும் மானிட மகன் தமக்கும் தந்தைக்கும் தூய வானதூதருக்கும் உரிய மாட்சியோடு வரும்போது வெட்கப்படுவார். இங்கு நிற்பவர்களுள் சிலர் இறையாட்சி வருவதைக் காண்பதற்கு முன் சாக மாட்டார்கள் என உண்மையாகவே  உங்களுக்குச் சொல்கிறேன்’’ என்றார். - (லூக்கா 9: 22-27)

தோற்றத்தில் எல்லோரும் மனிதர்களாகத் தெரிகிறோம். ஆனால், உள்ளே போட்டி, பொறாமை, சுயநலம் ஆகியவை கரையான் புற்றுபோல வளர்ந்துள்ளன. சமூகப் பார்வை இல்லாத சமூகப் பொறுப்பற்ற மனிதர்களாய் வாழ்ந்தால் மானிட மகனின் வாழ்வும் வரலாறும் நம்மில் தாமரை இலை தண்ணீர்போல நிற்கும். மனிதர் மிருக நிலையிலிருந்து மாறி ‘பிறர் அன்பு’ என்ற உயர்நிலைக்குத் தன்னை உயர்த்த வேண்டும். கரைவதற்காகவே காற்றைத்தேடும் கற்பூரம்போல, உருகுவதற்காகவே ஒளியைத்தேடும் மெழுகுவர்த்திபோல மனிதர் தன்னை மாற்ற வேண்டும். சிற்பம் செய்பவரெல்லாம் சிற்பி அல்ல. சிற்பமாக வாழ்பவரே சிற்பி. கெட்டுக்கிடக்கும் நமது சமூகத்தில் சமநீதி சங்கொலியாக நாம் மாறுவோமா?

‘‘தூயோராய் இருங்கள். ஏனெனில் உங்கள் கடவுளும் ஆண்டவருமாகிய நான் தூயவர். நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் தாய், தந்தைக்கு அஞ்சுங்கள். நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர். களவு செய்யாமலும் பொய் சொல்லாமலும், ஒருவரையொருவர் வஞ்சியாமலும், என் பெயரால் பொய் ஆணையிட்டு, உங்கள் கடவுளின் பெயருக்கு இழுக்கு ஏற்படுத்தாமலும் இருங்கள். அடுத்திருப்பவரை ஒடுக்கவோ, அவருக்குரியதை கொள்ளையிடவோ வேண்டாம். வேலையாளின் கூலி விடியும் வரை உன்னிடம் இருத்தல் ஆகாது. காது கேளாதோரை சபிக்காதே! பார்வையற்றோரை இடறச் செய்யாதே! தீர்ப்பிடுகையில் அநீதி இழைக்காதே. சிறியோர் பெரியோர் என முகம் பாராது உனக்கு அடுத்து வாழ்வோருக்கு நேர்மையுடன் நீதி வழங்கு! புறங்கூறித் திரியாதே! பழிக்குப்பழி என காழ்ப்புணர்ச்சி கொள்ளாதே! தராசும், படிக்கல்லும் அளவு சரியான படியும் உங்களிடம் இருக்கட்டும். நீங்கள் என் எல்லா நியமங்களையும், கட்டளைகளையும் கடைபிடித்து ஒழுகுங்கள்.’’ - (லேவியர் 19: 2, 3, 28, 36)

Related Stories: