மண வாழ்வில் குரு பகவான்

ஜாதக அமைப்புக்களை ஆராய்ந்து முடிவு செய்தவுடன், திருமண வாழ்க்கைக்கு மிக முக்கியமான இரண்டு கிரகங்களை பற்றி பரிசீலனை செய்ய வேண்டும். ஒருவர் தேவகுரு. மற்றொருவர் அசுர குரு. தேவகுரு வியாழன், அசுர குரு சுக்கிரன். இந்த தேவகுருவான வியாழன் திருமணத்தில் முக்கிய பங்கு வகிக்கிறார். சாதாரணமாகப் பெற்றோர்கள் சந்தித்தவுடன் கேட்கும் முதல் கேள்வி, என்ன குருபலம் இருக்கிறதா என்பதுதான். இத்தகைய சிறப்பு மிக்க குரு பகவான் தன புத்திரகாரகன் என்று அழைக்கப்படுகிறார்.

குருவால் எல்லா அஷ்ட ஐஸ்வர்யங்களையும் அடைய முடியும். எல்லாச் செல்வங்களையும் பெற முடியும். குறிப்பாக குழந்தை பாக்கியத்தை அருள்பவர் குரு.குரு பார்வை பல தோஷங்களை நிவர்த்தி செய்யும். பல யோகங்களை  ஏற்படுத்தி தரும். குருவானவர் சமூகத்தில் பெரிய ஸ்தானத்தை ஏற்படுத்தி தருபவர். பக்தி, புனித சிந்தனை, பெருந்தன்மை, பரந்த ஞானம், ஒழுக்கம் போன்றவற்றை அருள்பவரும் குருவே.

பெண்கள் ஜாதகத்தில் குருவிற்கு மேலும் ஒரு சிறப்பு உள்ளது. குரு பாத்ரு  காரகன். அதாவது கணவனைக் குறிக்கும் கிரகம் என்று அழைக்கப்படுகிறார். குருவானவர் நல்ல ஆதிபத்தியம் பெற்று யோக ஸ்தானங்களில் அமர்ந்து தமது பார்வை பலத்தால் தீர்க்க சுமங்கலி பாக்கியத்தை அருள்கிறார். ஆண், பெண் இருவரின் ஜாதகத்தில் குரு ஒருவர் பலமாக இருந்தால் போதுமானது.

அவரது பார்வை பலத்தால் விலகி சுபிட்சமும், சுகவாழ்வும், ஐஸ்வர்யமும் ஏற்படும். திருமணம் பற்றிய பேச்சு ஆரம்பித்தவுடன் எல்லோராலும் பேசப்படுகிற, கேட்கப்படுகிற ஒரே கேள்வி குருபலம் வந்துவிட்டதா என்பதுதான்.அந்தளவிற்கு குருபலம் என்ற ஜோதிட சொல் பிரசித்தம். குருபலம் என்பது கோசார அமைப்பின்படி குரு கிரகம் ஒரு ராசியை விட்டு அடுத்த ராசிக்கு மாறுவது. இந்த அமைப்பில் 2, 5, 7, 9 போன்ற ஸ்தானங்களில் அவரவர் ராசிக்கு குரு வரும் போது குருபலம் இருப்பதாக சொல்லப்படுகிறது.

இதில் ஆணிற்கோ, பெண்ணிற்கோ யாராவது ஒருவருக்கு இருந்தாலும் பரவாயில்லை என்பதும் வழக்கத்தில் உள்ளது. குருபலம் இருப்பதால் மட்டுமே திருமணம் கைகூடி வராது. உதாரணமாக ஒருவருக்கு ஜென்மகுரு அதாவது ஜாதகர் பிறந்த ராசியிலேயே குரு வருகிறார் என்றால் அதற்கு ஜென்மகுரு என்று பெயர். இந்த குருவானவர் ராசியில் இருந்து நேர் ஏழாம் இடத்தைப் பார்க்கிறார்.அதே போல் அஷ்டம குரு என்றழைக்கப்படும் எட்டாம் இடத்தில் உள்ள குரு நேராக குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டைப் பார்க்கிறார்.குரு பார்வை மிகவும் பலம் பெற்றது.

பல தோஷங்களை நிவர்த்தி செய்யக்கூடியது. ஆகையால் குரு ஜென்மம், அஷ்டமம் போன்ற இடங்களில் வந்தாலும் சுப காரியங்கள் கை கூடி வருவது அனுபவ உண்மை. திருமணம் நடைபெறும் கால கட்டங்களை ஆராயும் பொழுது ஜாதக அமைப்பில் லக்னாதிபதி, இரண்டாம் அதிபதி, ஐந்தாம் அதிபதி, ஏழாம் அதிபதி, ஒன்பதாம் அதிபதி ஆகியோரின் திசாபுக்தி, அந்தரங்களில் திருமண யோகம் ஏற்படுகிறது.

Related Stories:

>