என் ஜாதகம் யோகமா? தோஷமா?

ஜாதக விதிகள், அமைப்புகள் ஆண், பெண் இரண்டு பேருக்கும் பொதுவானது. பெற்றோர்கள் நிச்சயித்த திருமணமாக இருந்தாலும், காதல் திருமணமாக இருந்தாலும், எல்லாமே கிரகங்களின் விளையாட்டுத்தான். யோகம் அவயோகம் இரண்டையும் தருவது கிரக அமைப்புக்கள்தான். திருமணத்திற்கு பொருத்தம் பார்க்கும்போது நீங்களே முந்திக்கொண்டு எத்தனை பொருத்தம் இருக்கிறது என்பதைக் கேட்கக் கூடாது.

ஜாதகம் நன்றாக இருக்கிறதா? யோகம் உள்ளதா? சுபயோக தசைகள் வருகிறதா? சொத்து, சுகம், சௌபாக்கிய யோகம் உள்ளதா? என்றுதான் ஜோதிடரிடம் கேட்க வேண்டும். ஏன் என்றால் ஜாதகத்தில் உள்ள யோக அமைப்புதான் எல்லா அம்சங்களையும் நட்சத்திரப் பொருத்தம் என்பது ஓர் உப பொருத்தம்.லக்னம், ஏழாம் இடம், இரண்டாம் இடம், நான்காம் இடம், எட்டாம் இடம். இந்த இடங்கள் இதன் அதிபதிகள் பலமாக இருப்பது அவசியம்.

ஏழாம் அதிபதி ராசிக்கட்டத்தில் நல்ல பலத்தில் இருப்பது அவசியம். ராசிக்கட்டத்தில் இல்லாவிட்டாலும் நவாம்ச கட்டத்தில் பலமாக இருப்பது நல்லது. சுக்கிரன் நீசம் அடையாமல் இருப்பது நல்லது. ராசிக்கட்டத்தில் நீசம் அடைந்து நவாம்சத்தில் ஆட்சி, உச்சம் பெறுவது யோகமாகும். ஏழாம் வீட்டில் கூட்டுக்கிரக சேர்க்கை இருப்பது தோஷமாகும். ஏழாம் அதிபதி, இரண்டாம் அதிபதியுடன் நீச்ச கிரகம் சேராமல் இருப்பது நல்லது.

லக்னாதிபதி, இரண்டாம் அதிபதி, ஏழாம் அதிபதி, ஐந்தாம் அதிபதி, ஒன்பதாம் அதிபதி ஆகியோர் தசா, புக்திகளில் திருமணம் கூடிவரும்.ராகு, கேது யோகாதிபதிகளுடன் சேர்ந்து இருந்து அவர்கள் தசை நடந்தால் பெரிய இடத்து சம்பந்தம், எதிர்பாராத தனலாப யோகம் அமையும்.சுக்கிரன், சந்திரன், புதன் சம்பந்தப்பட்டால் திருமணத்திற்குப் பிறகு நல்ல ராஜயோக வாழ்க்கை அமையும்.

ஒரு பெண்ணின் ஜாதகத்தில் லக்னம், நான்கு, ஏழு, பத்து, இந்த நான்கு கேந்திரத்தில் கிரகங்கள் இருந்தால் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

சுக்கிரன், செவ்வாய் சேர்க்கை நிறை குறைகள் உள்ளது. எந்த லக்னம் என்பதை பார்த்து சேர்க்கை வேண்டும். ஆண், பெண் இருவருக்கும் சுக்கிரன், செவ்வாய் சேர்ந்து இருந்தால் காமப்பொருத்தம், யோனிப்பொருத்தம் என்று எடுத்துக்கொள்ளலாம்.

சுக்கிரன், ராகு, கேதுவுடன் சேர்ந்திருப்பது நல்லதல்ல. மணவாழ்க்கையில் திருப்திகரமான நிலை இருக்காது. கோர்ட், பிரச்னை, வழக்கு, பஞ்சாயத்து என்று நிம்மதியற்ற தன்மை இருக்கும். ஏழாம் வீட்டில் நீச கிரகம் இருந்தால் திருமணம் தாமதமாகும். எந்த கிரகம் நீசமாக இருக்கிறது என்பதைப் பொறுத்து பலன்கள் இருக்கும். காதல் திருமணத்திற்கு வாய்ப்புள்ளது. இரண்டாம் தாரமாகச் செல்லும் அமைப்பு உண்டு.

ஒரு பெண்ணின் ஜாதகத்தில் குரு, சுக்கிரன், சந்திரன், லக்னாதிபதி இந்த நான்கு கிரகங்கள் நல்ல பலத்துடன் ஆட்சி, உச்சம், கேந்திர கோணங்களில் இருந்தால் அந்த ஜாதகத்தில் சில தோஷங்கள் இருந்தாலும் அதையெல்லாம் பெரிது படுத்தாமல் அந்தப்பெண்ணை மருமகளாகத் தேர்ந்தெடுக்கலாம். காரணம் லக்னாதிபதி பலமாக இருந்தால் நல்ல குணம், மதிப்பு, கௌரவம் உண்டு. பிறர் மனதை புண்படுத்தும் குணம் இருக்காது. இடம், பொருள், ஏவல் அறிந்து பேசும் தன்மை இருக்கும். மனதளவில் முதிர்ச்சி அடைந்து இருப்பார்கள்.

சந்திரன் மனோகாரகன், சந்திரன் நல்ல யோகத்தில் இருந்தால் விட்டுக்கொடுக்கும் மனம் இருக்கும். தெளிவான சித்தம் இருப்பதால் தெளிந்த நீரோடை போல் எண்ணங்கள் அமையும். அன்பாக, ஆதரவாக, பாசமாக நாலு வார்த்தைகள் பேசுவார்கள். குருவும், சுக்கிரனும் தேவ குரு, அசுர குரு. இந்த இரண்டு கிரகங்களுமே நல்ல வாழ்க்கையைத் தருவார்கள். குரு பெருந்தன்மை பட்டம், பதவி, கௌரவத்தை தருவார். சத்புத்திர பாக்கியத்தை அருள்வார். சுக்கிரன் சுபமங்களங்களைத் தருவார். வசதி வாய்ப்பு, வீடு, நிலம், பங்களா, கார், பொன், பொருள் தருவார். காம சுகம் எனும் அயன, சயன யோக பாக்கியத்தை வழங்குபவர்.

ஒரு ஜாதகத்தில் தசா காலம் என்பது மிகவும் முக்கியமானது. திருமண விஷயமாகப் பார்க்கும்போது, 6, 8, 12-ம் அதிபதிகளின் தசை நடக்கிறதா என்று பார்ப்பது மிகவும் முக்கியம். அந்த தசா அமைப்பு எப்படி இருக்கிறது என்று பார்த்து ஜாதகத்தை தேர்வு செய்வது அவசியம். பெரும்பாலானவர்களின் திருமண வாழ்க்கையில் பிரச்னைகளை ஏற்படுத்துவதே இதைப்போன்ற கிரக தசா புக்திகள்தான். ராசி, ராசிக்கட்டம், நட்சத்திரம் இதை மட்டும் வைத்து ஜாதகத்தை பார்க்கக் கூடாது. ராசிக்

கட்டத்தில் நல்ல அமைப்பில் இல்லாவிட்டாலும் நவாம்ச கட்டத்தில் நல்ல அமைப்பில் இருந்தால் யோகம் உண்டு.

உதாரணமாக ராசியில் சுக்கிரன் நீசமாக இருந்தால், அவர் நவாம்சத்தில் உச்சம், ஆட்சி, பெற்றால் அதுதான் சிறப்பு. சந்திரன் மூலம்தான் பல யோகங்கள் உண்டாகிறது. உதாரணமாக சந்திரன், குரு சம்பந்தம், ஒருவருக்கொருவர் கேந்திரத்தில் இருப்பது போன்ற அமைப்பாகும். ஆகையால் சந்திரனுக்கு 4, 5, 7, 9, 10 ஆகிய ஸ்தானங்களில் குரு, சுக்கிரன், புதன், செவ்வாய் போன்ற கிரகங்கள் இருப்பது சௌபாக்கிய யோகமாகும்.

சந்திரனுடன் ராகு, கேது சேர்ந்து இருப்பது கிரகண தோஷ அமைப்பாகும். இப்படிப்பட்ட அமைப்பு உள்ளவர்கள் மனதளவில் பலமற்று இருப்பார்கள். ஆகையால் ஜாதகத்தில் மற்ற கிரக அமைப்புக்களை வைத்து முடிவு செய்ய வேண்டும். ஏழில் சனி, ராகு, கேது இருப்பது இல்வாழ்க்கையில் சங்கடங்களை உண்டாக்கும். இருதார யோகத்திற்கு இடமுண்டு. இருவருக்கும் எதிலும் எதிர்மறையான கருத்துக்கள் இருக்கும்.

பத்தாம் வீட்டில் நான்கு கிரகங்கள் சேர்ந்து இருந்தால் மணவாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்காது. காலில் சக்கரம் என்று சொல்வார்கள். எப்பொழுதும் அலைச்சல், பயணம் என்று இருக்கும். எதிலும் பற்றற்று காணப்படுவார்கள். ஏதோ பெயருக்கு வாழ்க்கை என்று எதிலும் பட்டும் படாமல் நடந்துகொள்வார்கள். சஷ்டாஷ்டகம், அஷ்டமம், சஷ்டமம், அதாவது ஆறாம் வீடு, எட்டாம் வீடு இந்த இரண்டு ஸ்தானங்களை கவனமாகப் பார்ப்பது அவசியம். ஏன் என்றால் நோய், கடன், எதிரி, ஆயுள், மாங்கல்யம், ஆரோக்கியம், தனம் பொன், பொருள், பொருளாதாரம் போன்றவற்றைத் தெரிந்துகொள்ளும் இடம்.

நிறை குறைகள் சேர்ந்ததுதான் வாழ்க்கை. வாழ்க்கைச் சக்கரம் தசா புக்திகளின் துணையுடன் மாறி மாறி பலன் தந்துகொண்டிருக்கும். குறையின் குற்றம், மிகுமின் குற்றம். எது ஒன்று குறைந்தாலும் சரியான முறையில் யோகமாக அமையாது. ஆனால் வாழ்வாதாரம் என்று வரும்போது 2, 5, 7, 9 ஆகிய ஸ்தானங்கள் பலம் பெற்ற ஜாதகங்கள் சீரும் சிறப்புமான வாழ்க்கை வாழ்வதை அனுபவப்பூர்வமாக பார்க்க முடிகிறது. ஜாதக அமைப்பில் சில யோகங்கள் இருந்தால் நம் இல்லற வாழ்க்கையில் பொருளாதார வசதி வாய்ப்புகளுக்கு நாளும், கோளும் பாக்கியத்தை தரும்.

Related Stories: