நல்ல ஜாதகத்தோடு மணவரமருளும் இரு தலங்கள்

ஜோதிட முரசு மிதுனம் செல்வம்

திருமணம் என்பது ஒவ்வொருவருடைய வாழ்விலும் இன்றியமையாதது. நம் முன்னோர்கள் திருமணத்தை ஆயிரம் காலத்துப் பயிர் என்று குறிப்பிட்டார்கள். ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் அவர்கள் பிறப்பின் அவசியம் திருமணத்தில்தான் இருக்கிறது.

திருமணம் அதற்கேற்ற காலத்தில், பருவத்தில் நடந்து அதன் பிறகு அவர்களுக்கு குழந்தைகள் பிறந்து அதை சீராட்டி, பாராட்டி வளர்த்து கல்வி, செல்வம் மற்றும் உலக ஞானங்களை கொடுத்து அவர்களுக்கு திருமண நாள் குறிப்பது வரை வாழையடி வாழையாக, ஆல் போல் தழைத்து குடும்ப விருட்சமாக நிற்கிறது.

இத்தகைய திருமணம் சிலருக்கு சரியான வயதில் எந்த விதமான முயற்சிகள் இன்றி தானாகவே கூடி வருகிறது.சிலருக்கு சிறிது முயற்சியின் பேரில் நடக்கின்றது. பலருக்கு பிரம்மப் பிரயத்தனம் செய்து, அங்கு, இங்கு அலைந்து வருவோர் போவோர் இடம் சொல்லி நூற்றுக்கணக்கான ஜாதகங்களை பார்த்து அதன் பிறகுதான் திருமணம் கூடி வருகிறது.

ஒருசிலருக்கு திருமணம் நிச்சயதார்த்தம் வரை சென்று தடை ஏற்படுகிறது. இன்னும் சிலருக்கு திருமணம் என்ற பந்தம் கைகூடி வராமல் பிரம்மச்சாரிகளாகவும், முதிர்கன்னிகளாகவும் காலத்தைக் கடத்துகிறார்கள். திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதுதான்; எல்லாம் பிராப்தம் போல் நடக்கும்; எல்லாம் முன் ஜென்ம பூர்வ புண்ணிய பலன்; எத்தனை பெண் பார்த்தாலும் அமைவதுதான் அமையும் என்பதெல்லாம் நமக்கு வரன்கள் தேடித்தேடி, அலுத்துப்போய் வழக்கத்தில் பேசப்படும் சொற்கள்.

எல்லாம் பிராப்தம் போல் நடக்கும் என்பதற்காக நாம் கையை கட்டிக்கொண்டு உட்கார்ந்தால் நடந்துவிடாது. நமக்கு ஏற்பட்ட அலைச்சல் அதன் வேதனை இந்த மாதிரி தத்துவ வார்த்தைகளை பேசச் செய்கிறது. இதில் பல விஷயங்களை சேர்த்து அல்லது திரித்து ஜோதிடர்கள் ஆளுக்கொன்றாய் சொல்லி குழப்பி விடுகிறார்கள். ஜாதகம், பொருத்தம் எல்லாம் பார்த்து செய்யும் திருமணங்கள் எல்லாம் நல்லபடியாக இருக்கிறதா? அவர்கள் வாழ்க்கையில் சிக்கலே இல்லையா?அத்தம்பதிகளிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு சண்டை, சச்சரவு மற்றும் மணமுறிவு ஏற்படுவதில்லையா?என்று கேட்போர் இருக்கிறார்கள்.

ஜாதகப் பொருத்தம் செய்யும் திருமணங்கள் சிலவற்றில் பிரச்னைகளும் கருத்து வேறுபாடும் ஏற்படுவது உண்மைதான்.ஆனால் அது சாஸ்திரத்தின் மீது தவறல்ல. நாம்தான் நடைமுறை வாழ்க்கையில் தவறு செய்து கொண்டிருக்கிறோம். எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த கிரகம் இந்த ராசிக் கட்டத்தில் இருந்தால் பலன்கள் இப்படித்தான் இருக்கும் என்று துல்லியமாக எழுதி வைத்து விட்டு போய் இருக்கிறார்கள். நமக்கு நடைமுறை வாழ்க்கையிலும் சரியாக வருகிறது. அந்தக் காலத்திலே கணவன், மனைவி இடையே பரஸ்பரம் விட்டுக் கொடுக்கும் தன்மையும், சகிப்புத் தன்மையும் இருந்தது.

எதையும் சாஸ்திரம், சம்பிரதாயம் என்று அணுகினார்கள். ஆகையால் முற்காலங்களில் 95 சதவிகிதம் எல்லாம் சரியாக நடந்தது. இக்காலம் கலிகாலம்.மேலும் கம்ப்யூட்டர் யுகம். எதற்கெடுத்தாலும் ஏன் என்று கேள்வி கேட்கும் இளைஞர் சமுதாயம். ஆணுக்கு பெண் சரிநிகர் என்று ஒரு கோஷம் ஒலிக்கின்றது. பெண்களும் பல துறைகளில் முதலிடம் வகிக்கின்றார்கள் என்பதால் சாஸ்திர சம்பிரதாயங்களை நமக்கு ஏற்றவாறு வளைத்து எது சுலபமாக தெரிகிறதோ அதை மட்டும் கடைப்பிடித்து மற்றவற்றை விட்டு விட்டோம்.

எல்லாத் துறைகளிலும் போலிகள், பணத்திற்காக எதையும் செய்யும் நபர்கள் இருப்பதைப் போல ஜோதிடத் துறையிலும் இருக்கிறார்கள். மலிவான விளம்பரம் செய்து, மணமகன், மணமகள் இதில் யாரிடமாவது சலுகை பெற்றுக் கொண்டு, இருப்பதை இல்லை யென்றும் அவர்களுக்கு தகுந்தாற் போல் ஜாதகங்களை

மாற்றியமைத்தும் சாஸ்திரத்திற்கு விரோதமாக செய்துவருகிறார்கள். ஆகையால்தான் பல திருமணங்கள் தோல்வியைத் தழுவுகின்றன. ஆகையால் இனி வரும் காலங்களில் ஜாதகப் பொருத்தம் மூலம் திருமணம் செய்துகொள்வது மிகவும் அவசியமாகும். ஏனென்றால் ஜாதகம், யோக பாவம், நட்சத்திரம் சரியாக பொருந்தி வந்தால் பிரச்சினைகள் வந்தாலும், பெரிய அளவில் போகாமல் அவர்களுக்குள்ளே ஒரு தீர்வு ஏற்படும்.

வீட்டில் திருமணம் என்கிற பேச்சை எடுத்தவுடன் நல்ல ஜாதகமாக அமைய வேண்டுமே என்கிற கவலையும் நிச்சயம் வரும். எனவே,  மிகச் சிறந்தபடி நல்ல ஜாதகம் அமையவும், பிறகு அதைத் தொடர்ந்து நன்முறையில் திருமணம் நடைபெறவும் திருமணத்திற்கு முன்னரே மயிலாடுதுறை, குத்தாலத்திற்கு அருகேயுள்ள திருமணஞ்சேரியில் அருளும் கல்யாணசுந்தரேஸ்வரரை தரிசித்து வாருங்கள்.

அதேபோல குத்தாலத்திற்கு அருகேயுள்ள திருவேள்விக்குடியில் அருளும் மணவாளேஸ்வரரையும், பரிமளசுகந்த நாயகி அம்பாளையும் தரிசித்து வாருங்கள். இங்குதான் திருமணத்திற்கான வேள்வி நிகழ்த்தப்பட்டது. மக்கள் ஞாபகமாக திருவேள்விக்குடியையும் தரிசித்து வாருங்கள். திருமணத்தில் வேள்வி என்பது அத்தனை முக்கியமானது. ஈசனும் உமையும்  திருமண வேள்வியின் முன்பு அமர்ந்த தலம் இது. எனவே, திருமண வரம் வேண்டுவோர் மறக்காது திருவேள்விக்குடிக்கும் சென்று வாருங்கள்.

Related Stories: