சிறுவனின் வாக்கு!

அரசர் ஒருவர் நல்ல முறையில் ஆட்சி செய்து வந்தார். அவருடைய பிள்ளை ஏறத்தாழ ஆறுவயது சிறுவனாக இருந்தாலும், கல்வி - கேள்விகளில் தலைசிறந்தவனாக விளங்கினான்.  அவன்  கற்றதைவிட, கேட்டு அறிந்ததே அதிகம். நன்முறையில் ஆட்சி செய்து வந்த  அரசரை அனைவரும் புகழ்ந்தார்கள்.

உறவு வாழ்ந்தால், பிடிக்காத  உறவுகள் என்றும் உண்டு; எங்கும் உண்டு. அரசரை அனைவரும் புகழ்வது கண்டு, அரசரின் தம்பி முஞ்சன் பொருமினான்; ‘‘பாவி! இவனை எப்படி யாவது  ஒழித்து விட வேண்டும்  என்று, மந்திரி முதலான ஆட்சியில் உள்ள முக்கியஸ்தர்கள் அனைவரையும் நம் வசப்படுத்தி, என்னவெல்லாமோ செய்து விட்டோம்; எதுவும் பலனளிக்க வில்லை. அண்ணனைக் கொன்று விட்டால் போதும்; அவன் பிள்ளையான சிறுவனை ஒதுக்கிவிட்டு, நாம் சிம்மாசனத்தில் உட்கார்ந்து விடலாம்” என எண்ணினான், முஞ்சன்.

அவன் நினைத்த நேரமோ, என்னவோ தெரியவில்லை. அரசர் படுத்த படுக்கையாகி, ‘‘எந்த நேரத்திலும் மன்னர் இறக்கலாம்” என்று மருத்துவர்கள் சொல்லி விட்டார்கள். மன்னருக்கும் தன் முடிவு தெரிந்து விட்டது.  அதனால் அரசர் உடனே முஞ்சனை அழைத்து, ‘‘தம்பி! எந்த நேரமும் எனக்கு முடிவு நேரலாம். நான் இறந்து விட்டால், என் மகனை நல்லவிதமாக வளர்த்து ஆட்சியை அவனிடம் ஒப்படை!” என்று சொல்லி இறந்து விட்டார்.

முஞ்சன் மகிழ்ந்தான்; இருந்தாலும் அதை வெளிக் காட்டிக்கொள்ளாமல், அண்ணனுக்குச் செய்ய வேண்டியவைகளைச் செய்து முடித்து, ஆட்சிப் பொறுப்பில் தானே அமர்ந்தான். அவனைப் பொறுத்தவரை, இளவரசனைப் பொருட்படுத்தவே இல்லை அவன்; இருந்தாலும் மக்களை  ஏமாற்றுவதற்காக, சிம்மாசனத்தில் தன் அருகிலேயே இளவரசனை உட்கார  வைத்துக் கொண்டான் முஞ்சன்.

ஒருநாள்... அரசவைக்குச் சோதிடர் ஒருவர் வந்தார்.  வந்தவர்  சிம்மாசனத்தில் முஞ்சனோடு இருந்த சிறுவனைப் பார்த்து, ‘‘இந்தச் சிறுவன் பெரும்புகழுடன் அரசாளுவான்” என்று விவரித்துச்  சொல்லிவிட்டுப் போய்விட்டார்.முஞ்சனுக்குத் தூக்கிவாரிப் போட்டது; மனதைப் போலவே,முகமும் இருண்டது அவனுக்கு;உடனே கொலையாளிகளை அழைத்து, ‘‘இந்தச் சிறுவனால் பிரச்னை வரும் போல இருக்கிறது. இவன் வளர்ந்து அரசைக் கேட்டால்? சோதிடன் வேறு சொல்லிவிட்டுப் போய் விட்டான். இவனைக்கூட்டிப் போய்க் கொன்று விடுங்கள்!” என்று சொல்லி அனுப்பினான்.

கொலையாளிகள் சிறுவனை அழைத்துக் கொண்டு காடு நோக்கிச் சென்றார்கள்.  போகும் வழியில் அவர்கள் பேசிய பேச்சிலிருந்து,’ சித்தப்பா முஞ்சன் உத்தரவுப்படி, தன்னைக் கொல்லத்தான்  கூட்டிப்  போகிறார்கள்’ என்பதை உணர்ந்தான் சிறுவன். கல்வி - கேள்விகளில் தலைசிறந்தவனல்லவா அவன்? கொலையாளிகளிடம் இனிமையாகப் பேச ஆரம்பித்தான்; ‘‘சித்தப்பாவிடம் போய்ச் சொல்லுங்கள்! கிருத யுகத்திலிருந்து இன்றுவரை; சக்கரவர்த்தி மாந்தாதா முதல், தர்மர்வரை ஏராளமானோர் ஆண்டுவிட்டுப் போய் விட்டார்கள். பெரும் மன்னர்களான அவர்கள்கூட, உலகை விட்டுப் போகும்போது, தாங்கள் ஆண்ட பூமியைத் தூக்கிக்கொண்டு போக வில்லை; இங்கேயே விட்டுவிட்டுப் போய் விட்டார்கள்.

சித்தப்பாவையாவது, அவர் இறக்கும்போது மறவாமல் அவராளும் ராஜ்யத்தைக் கையோடு கொண்டுபோகச் சொல்லுங்கள்! ‘‘என்று கூறி,அதை ஓர் ஓலையில் கவிதையாகவும் எழுதிக் கொலையாளிகள் கையில் கொடுத்தான்.சிறுவனின் பொருள்பொதிந்த இனிமையான பேச்சும் களையான முகமும் கொலையாளிகளை இரங்கச் செய்தன. அதன்பிறகும் கொல்வார்களா? சிறுவனை ஓரிடத்தில் மறைத்துவைத்து விட்டு, முஞ்சனிடம் போய், ‘‘மன்னா! அவனைக் கொன்று விட்டோம். இந்த ஓலையை உங்களிடம் தரச் சொன்னான் அவன்” என்று ஓலையைக் கொடுத்தார்கள்.

அதை வாங்கிப் படித்த முஞ்சன், அதில் உள்ள உண்மையை உணர்ந்தான்; ‘‘ஐயோ! இந்தச் சிறுவனுக்குள்ள விவேகம் எனக்கில்லாமல் போய் விட்டதே!” என்று கதறத் தொடங்கினான். பிறகென்ன? கொலையாளிகள் உண்மையைச் சொல்லி, சிறுவனை முஞ்சன் முன்னால் நிறுத்தினார்கள். திருந்திய முஞ்சன் துறவியானான்;  சிறுவனை நல்ல விதமாக வளர்த்து, அரசையும் அவனிடமே ஒப்படைத்தான்.

அந்தச் சிறுவன்தான் ‘போஜன்’. நல்ல முறையில் ஆட்சி செலுத்தி, காளிதாசர் முதலான மாபெரும் கவிஞர்களை ஆதரித்து,ஏராளமான காவியங்கள் உருவாகக் காரணமாக இருந்தவர், இந்தப் போஜனே! தீயவர்களையும் திருத்தக் கூடியவர்கள் அறிவாளியான சிறுவர்கள் என்பதை விளக்கும் நிகழ்விது.

- V.S. சுந்தரி

Related Stories: