×

பெருமாளும் பெருமாளும் (23.2.2021 குலசேகரர் அவதார நட்சத்திரம்)

ஆழ்வார்கள் பன்னிருவரில் குலசேகர ஆழ்வார் மாசிமாதம் புனர்பூச நட்சத்திரத்தில், இன்றைய கேரள நாடு திருவஞ்சிக்களம் என்னும் ஊரில் அவதரித்தவர். ஆழ்வார்களில் இரண்டு ஆழ்வார்கள் அரச வம்சத்தில் பிறந்தவர்கள். ஒருவர் குலசேகர ஆழ்வார். மற்றொருவர் திருமங்கை ஆழ்வார்.
இதில் குலசேகர ஆழ்வாரின்  ராமாயண ஈடுபாட்டை இங்கு அனுபவிப்போம்.

ஆழ்வார்கள் ஒவ்வொருவரும் திருமால் இடத்திலே ஈடுபட்டவர்கள். திருமாலின் ஒவ்வொரு நிலையிலே ஆழங்கால் பட்டவர்கள். முதல் ஆழ்வார்கள் மூவரும் திருமாலின் பரத்துவ நிலை, அதாவது வைகுந்தத்தில் உறையும் நிலையிலே ஈடுபட்டவர்கள். திருமழிசை ஆழ்வார் எங்கும் மறைந்து உறையும் திருமாலின் அந்தர்யாமித்துவ  நிலையிலே ஈடுபட்டவர். நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள் மூவரும் கண்ணன் இடத்திலே ஈடுபட்டவர்கள்.

திருமங்கை ஆழ்வார் திருக்கோயில்களில் பின் ஆனார் வணங்கும் ஜோதியாகக்  காட்சிதரும் அர்ச்சை நிலையில்  ஈடுபட்டவர். திருப்பாணாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார் இருவரும்  வைணவர்களின் தலைமை கோயில்  திருவரங்கத்தில் ஈடுபட்டவர்கள். மதுரகவியாழ்வார் இறைவனை தன் மனதிலே இருத்தும் ஆசாரியனாகிய நம்மாழ்வாரிடத்திலே ஈடுபட்டவர்.

குலசேகர ஆழ்வார் ராமாயணத்தில் ராமர் குணங்களில் கற்பார் ராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ என  ஈடுபட்டவர். அவர் பாடிய பாசுரங்களின் தொகுப்பை நாதமுனிகள் பெருமாள் திருமொழி என்று தலைப்பிட்டு முதல் ஆயிரத்தில் சேர்த்தார். குலசேகர ஆழ்வாருக்கு ஏன் ராமாயணத்திலும் ராமனிடத்திலும் அவ்வளவு ஈடுபாடு என்ற கேள்வி எழலாம் இது இயல்பாக அமைந்த தன்மை என்பதை ராமனையும் ஆழ்வாரின் வாழ்வியல் செய்திகளையும்  ஒப்பிட்டுப் பார்த்து  ரசிக்க முடியும்.

ராமருடைய அவதார நட்சத்திரம் புனர்பூசம். குலசேகர ஆழ்வார் நட்சத்திரம் புனர்பூசம். புனர் பூச நட்சத்திரத்திற்கு முப்புரியூட்டிய நட்சத்திரம்  என்பார்கள்.இதற்கு பொருள், எந்த நட்சத்திரத்தில் எம்பெருமானும் அவதரித்து, ஆழ்வார்களும் அவதரித்து,  ஆசாரியர்களும் அவதரித்தார்களோ, அத்தகைய பெருமை பெற்ற நட்சத்திரங்களை முப்புரி ஊட்டிய நட்சத்திரம் என்று வைணவ உலகம் கொண்டாடும். அப்படிப்பட்ட நட்சத்திரங்களில் ஒன்று புனர்பூசம் நட்சத்திரம்.

இந்த நட்சத்திரத்தில் தான் ராமபிரான்  அவதரித்தார்.ராமனை கொண்டாடிய குலசேகர ஆழ்வார் அவதரித்தார்.  எம்பார் என்கிற ஆசாரியர் அவதரித்தார். முதலியாண்டான் என்கிற ஆசாரியர் அவதரித்தார். இப்படிப்பட்ட பெருமை மிகுந்தது புனர்பூசம் நட்சத்திரம்.
இருவருமே அரசகுடும்பத்தில் அவதரித்தவர்கள்.

தசரதனுக்கு வெகுகாலம் குழந்தை பேறு இன்றி தவமிருந்து, பெற்ற பிள்ளையாக ராமன் அவதரித்தது போலவே குலசேகர ஆழ்வாரின் தந்தைக்கும் பலகாலம் பிள்ளைப் பேறு இன்றி செல்லப்பிள்ளையாக குலசேகரர் அவதரித்தார். வைணவ மரபில் ராமனை பெருமாள் என்று அழைப்பது மரபு. காரணம் அவருடைய குலதெய்வமாக திருவரங்கநாதன் விளங்கினார்.

பெருமாளான  ராமன்  வணங்கிய பெருமாள் என்பதால் திருவரங்கநாதனை பெரிய  பெருமாள் என்று அழைப்பார்கள்.
வைணவ மரபில் குலசேகர ஆழ்வாரை குலசேகரப் பெருமாள் என்று அழைப்பதும், அவர் பாடிய பாசுரங்களின் தொகுப்பு பெருமாள்
திருமொழி என்றும் அழைப்பார்கள்.

(குலசேகர) பெருமாளை  அறியாதார், (ஸ்ரீமன் நாராயண) பெருமாளை அறியாதார் என்று ஒரு பழமொழியே உண்டு. அதாவது பெருமாளாகிய  எம்பெருமானை அறிய வேண்டும் என்று சொன்னால் குலசேகர ஆழ்வாரின் பெருமாள் திருமொழி கற்று அறிய வேண்டும்.
ராமனும் குலசேகர ஆழ்வாரும் அடியார்களிடத்திலே மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள். அவர்களுக்கு ஒரு சிறு துன்பம் வந்தாலும் பொறுக்க மாட்டார்கள்.

இதற்கு உதாரணமாக ராமாயணத்தில் சில நிகழ்வுகளைக்  காணலாம்.ராமனின் அடியார்கள் என்று எடுத்துக் கொண்டால் இலக்குவன், பரதன், சத்ருக்கனன், குகன், சுக்ரீவன், அங்கதன், அனுமன், வீடணன்  ஆகியோர்களைச்  சொல்லலாம். இவர்கள் எல்லாம் பரம பாகவதர்கள். ராமன் மீது ஆராக் காதல் கொண்டவர்கள்.

ராமன் தன் மீது அம்பு பட்டால் கூட பொறுத்துக் கொள்வான். ஆனால் தன்னுடைய அடியவர்களான அங்கதன், சுக்ரீவன் , வீடணன்   அனுமன்  மீது  அம்பு  பட்டால் பொறுத்துக் கொள்ள மாட்டான். இதை யுத்தகாண்டத்தில் பல பாடல்களில் காணலாம்.இதை அப்படியே குலசேகர ஆழ்வாரின் வாழ்விலும் காணலாம். ராமனைப் போலவே வீரமும் ஈரமும் படைத்த வீரன் குலசேகரர்.

ஒருமுறை அவர் அரண்மனையில் இருந்த சில அடியார்கள் மீது மந்திரிகள் திருட்டுப்  பட்டம் கட்டிய பொழுது அவர்கள் அத்தவறை செய்திருக்க மாட்டார்கள் என்று நான் உறுதியாகக் கூறுகிறேன். பரம பாகவதர்கள் மீது திருட்டு பட்டம் கட்டுவது  ஏற்றுக்கொள்ள முடியாதது என்று சொன்னதோடு மட்டுமல்ல, ஒரு குடத்தில் விஷமுள்ள நகங்களை விட்டு, நான் நம்புகின்ற பாகவதர்கள் குற்றம் செய்திருந்தால், இந்த குடத்தில் உள்ள விஷப்பாம்பு என்னை தீண்டும் என்று விஷப்பாம்பு உள்ள குடத்திலே கைவிட்டு அவர்களைக் காத்தவர்.

இதை ஆரம் கெட பரன்  அன்பர்  கொள்ளார் என்று அவர்களுக்கே வாரம் கொடு குடப்  பாம்பில் கை இட்டவன், மாற்றலரை
வீரம் கெடுத்த செங்கோல் கொல்லிக் காவலன் வில்லவர்கோன், சேரன் குலசேகரன் முடி வேந்தர் சிகாமணியே என்று மணக்கால் நம்பி என்கிற ஆசாரியர் அருளிச் செய்கிறார்.  வில்லவர்கோன்  என்கிற சொல்லாட்சி குலசேகர ஆழ்வாருக்கும் ராமருக்கும் பொருந்தும்.  

ராமபிரானை சக்கரவர்த்தி என்கிற சொல்லாட்சியால் அழைப்பார்கள். குலசேகர ஆழ்வாரை இப்பாசுரத்தில் முடிவேந்தர் சிகாமணியே என்று மணக்கால் நம்பி  அழைக்கின்றார். எதிரிகளின் வீரத்தைக் கெடுத்தவர்கள் என்பதும் ராமருக்கும் குலசேகர ஆழ்வாருக்கும்  பொருந்தும். ராமன் காட்டுக்குச் சென்ற பொழுது தனியாகச் செல்லவில்லை. கூடவே இன் துணைவியாகிய சீதையோடு, தூய தொண்டனான  இலக்குவனும், அயோத்தி நகரை விட்டு அகன்றான். அவன் வனத்துக்கு ஏன் சென்றான் என்கிற காரணத்தை கூறுகின்ற கம்பர் நீ போய் தாழிரும் சடைகள் தாங்கி  
தாங்கரும் தவ மேற் கொண்டு பூழி வெங் கானம் நண்ணிப் புண்ணியத் துறைகள் ஆடி வா என்றார்.

தாங்கரும்  தவ மேற்கொண்டு ,ஒரு யாத்திரைக்குப்  போவதைப் போல வனத்துக்கு போ என்று கூறுகின்றார். குலசேகர ஆழ்வாரும் இதே நிலையிலே தன்னுடைய மனைவி மக்களோடும் , பாகவதர்களோடும், புண்ணிய யாத்திரையான   ரங்க யாத்திரையை மேற்கொண்டார்.
குஷ்யதே யஸ்ய நகரே ரங்க யாத்ரா தினே தினே தமஹம் சிரஸா வந்தே ராஜாநாம் குலசேகரம்  ராமபிரான் வணங்கிய பெருமாள் இஷ்வாகு குல தினமாகிய அரங்கநாதப்  பெருமாள். அந்த ரங்கநாத பெருமாளைப்  பார்த்தே தீர வேண்டும் என்று துடித்தவர் குலசேகரர்.தென்னரங்கம் பாட வல்ல சீர் பெருமாளான அவர் முதல் பாசுரமே இந்தத் துடிப்பை உணர்த்துகிறது.

இருளிரியச்சுடர்மணிகளிமைக்கும்நெற்றி
இனத்துத்தியணிபணமாயிரங்களார்ந்த
அரவரசப்பெருஞ்சோதியனந்தனென்னும்
அணிவிளங்குமுயர்வெள்ளையணையைமேவி
திருவரங்கப்பெருநகருள்தெண்ணீர்ப்பொன்னி
திரைக்கையாலடிவருடப்பள்ளிகொள்ளும்
கருமணியைக்கோமளத்தைக்
கண்டுகொண்டுஎன்
கண்ணிணைகளென்றுகொலோகளிக்கும்நாளே?

அதனால் ஸ்ரீரங்கநாதனை வழிபடு கடவுளாக கொண்டவர்கள்  ராமனும் குலசேகர ஆழ்வாரும்.  ராமாயணத்தில் இருவருக்குமே ஈடுபாடு. ராமாயணம் ராமனின் கதைதானே என்று நீங்கள் கருதலாம். ஆனால் வைணவப்  பெரியவர்கள் அதை சீதையின் கதையாகவே சொல்லுகின்றார்கள். சீதாயாம் சரிதம் மஹது  என்று சொல்லுகின்றார்கள்.இதனை ஒட்டியே சிறை இருந்தவள் ஏற்றத்தை கூறுகிறது ராமாயணம் என்று வைணவ வழிக்குரவர் நிர்ணயித்தனர்.

ராமாயணத்தை ராமன் முன்னிலையிலேயே அவர் குமாரர்கள்  லவகுர்கள்   அரங்கேற்றினார்கள். ராமன் தன்னுடைய சரித்திரத்தை தானே கேட்டார் என்பதை தன் பெருந் தொல்  கதை கேட்டு  மிதிலை செல்வி உலகுய்ய  திருவயிறு வாய்த்த மக்கள் செம்பவள திரள்வாய்த்  தன் சரிதை கேட்டான் என்று ஆழ்வார்கள் ராமன்  ராமாயணத்தை கேட்டதைக்  கொண்டாடுகிறார்கள்.

ராமன் ராமாயணத்தை கேட்டது போலவே குலசேகர ஆழ்வார் எப்பொழுதுமே தன்னுடைய அவையிலே ராமாயணப்  பிரவசனம் செய்பவர்களை அழைத்துவந்து ராமாயணம் கேட்பதில் ஈடுபட்டிருந்தார் என்று அவர் சரித்திரத்திலே வரும் . தேவர்களுக்கு துணையாக ராமன் தன்னுடைய படைகளைத் திரட்டியதுபோல, ராமனுக்குத் துணையாக குலசேகராழ்வார் படையைத்  திரட்டியவர். இப்படிப் பல கோணங்களில் ஆராய்கின்ற பொழுது இராமருக்கும் குலசேகர ஆழ்வாருக்கும்  உள்ள வியக்கத்தக்க ஒற்றுமைகள் புலனாகும்.

பேராசிரியர் எஸ். கோகுலாச்சாரி

Tags :
× RELATED கடன் தொல்லை நீக்கி, செல்வம் அருளும் திருச்சேறை சாரபரமேஸ்வரர்