நீரும் நெருப்புமாகி ஆடும் பிரான்

செம்பொருட்சோதித் தீயாக விளங்குபவன் சிவபெருமான். அவன் ஓயாது உலகம் இயங்கும் பொருட்டு ஆனந்த மாநடம் ஆடிக்கொண்டே இருக்கின்றான். அவன் அருளாக வெளிப்பட்ட பராசத்தியின் வடிவமாகத் திகழ்வது தண்ணீராகும். சிவபெருமான் நீரோடு இணைவது சிவசக்தி சங்கமமாகும். இதுவே உலக உயிர்களிடத்தில் பரஸ்பர இன்பத்தை வளர்ப்பதாகும். இதை உணர்த்தவே விழாவின் இறுதி நாளில் நடராசப் பெருமான் தீர்த்தவாரி விழாவுக்கு முதலில் எழுந்தருளி அன்பர்களுக்கு அருள்பாலிக்கின்றார். பின்னரே அத்தலத்திற்குரிய மூர்த்தி தீர்த்தம் அளிக்கும் தீர்த்தவாரி நடைபெறுகிறது.

திருவெம்பாவையில் இறைவன் அருள்மயமான தீர்த்தமாக விளங்குவதால் ‘‘தீர்த்தன்’’ என்று அருளிச்செய்த மாணிக்கவாசகர் தொடர்ந்து அவனே பெரும் தீயாக விளங்குகிறான் என்பதால் ‘‘நல்தில்லை சிற்றம்பலத்தே தீயாடும் கூத்தன்’’ என்றும் அருளிச்செய்துள்ளார். மேலும் அவனும் அவளும் சேர்ந்து உலகத்தைப் படைத்தும் காத்தும் மறைத்தும் விளையாடுகின்ற அருள் விளையாட்டையும் குறிக்கின்றார்.

திருவாவடுதுறையில் அனைத்தெழுந்த பிரான் எனப்படும் சிவமூர்த்தி விழாவின் இறுதிநாளில் எழுந்தருளி தீர்த்தம் அளிக்கின்றார். இவ்வேளையில் தீர்த்தம் சிவசக்திமயமாக விளங்குவதை உணர்த்தவே பெருமாள் அம்பிகையைத் தழுவிக் கொண்டுள்ளார் என்று கூறுகின்றனர்.

Related Stories: