அண்டமெல்லாம் உய்ய அறம் செய்யும்

அபிராமி அந்தாதி சக்தி தத்துவம்-75

நாயகி நான்முகி நாராயணி கை நளின பஞ்ச

சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதி நச்சு

வாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கி என்று

ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே

 - பாடல் - 50.

  இப்பாடல் முழுவதும் உபாசனை நோக்கில் பார்க்கப்பட வேண்டியது. பாடலை படிப்பதற்கு முன் இக்கருத்தை மனதில் கொள்வது நலம்.

‘‘நாயகி’’ முதல் துவங்கி உடையாள் வரை பதினெட்டு உமையம்மையின் பெயர்களே வரிசைப்படுத்தப்பட்டிருக்கிறது. அந்த தேவதைகளை சரணடைவதே நமக்குப் பாதுகாப்பு என்கிறார், அபிராமி பட்டர். இதில் கொடுக்கப்பட்ட பெயர்கள் வடமொழி மற்றும் தென்மொழி

யிலும் உள்ளன. ஆகமங்களை பொறுத்தவரை ஒவ்வொரு தேவதையும் ஏதோவொரு பயன்பாட்டை கருதியே வணங்கப்படுகின்றன.

 அந்தப் பயன்பாடு என்ன? அதை நாம் அடையும் வழி என்ன? என்பதை இப்பாடல் தெளிவான வார்த்தைகளால் தெரியப்படுத்தவில்லை. ஆனால், சுருக்கெழுத்தைப்போல், அடையாளச் சொற்களைப்போல் கலைச்சொற்களைப்போல் கருவிமொழியைப்போல் இந்தப் பெயர்களை நாம் கூர்ந்தாய்வு செய்ய வேண்டும். இந்தப் பதினெட்டு தேவதைகளும் பத்து திசை தேவதைகளாய் அமர்ந்து உபாசகனை புறம் நின்று காப்பதாகவும் எட்டு தேவதைகள் அகம் இருந்து உபாசகனை செம்மைப்படுத்துவதாகவும் உள்ளன. இதை திக் தேவதைகள், அங்க தேவதைகள் என்று பத்ததி நூல்கள் குறிப்பிடுகின்றன.

‘‘அணங்கே அணங்குகள் நின்பரி வாரங்கள்  ஆகையினால்’’ - 81

‘‘வதனாம் புயமும் கராம்புயமும்’’- 58

என்பதனால் மேலும் விளங்கிக்கொள்ளலாம். இவற்றிற்குரிய தியானம் அத்தேவதையை பற்றிய கருத்து இவற்றையே இப்பாடலின் பொருளாக விரிவாகக் கொடுக்க முயன்றுள்ளோம். நாயகி, நாராயணி, சாம்பவி, சங்கரி, மாலினி, வாராகி, சூலினி, மாதங்கி இவையெல்லாம் முழுவதும் வடசொற்களால் அமைந்தவை. உடையாள், சாதி, நச்சு, வாயகி  போன்றவை முழுவதுமாய் தென்மொழிச் சொற்கள். கை நளின பஞ்சசாயகி என்பது வடமொழியும் தென்மொழியும் கலந்த மணிப்பிரவாளச் சொல். கை என்பது தமிழ், நளின பஞ்சசாயகி என்பது வடமொழி.

 இவை இரண்டையும் சேர்த்தால்தான் பொருள் காண முடியும்.  ‘‘ஆதி’’ என்பது வடமொழியிலும், தென் மொழியிலும் ஒரே பொருளில் குறிப்பிடப்படும் சொல். இந்தச் சொற்களை, ‘‘விதை’’ போன்று அபிராமிபட்டர் பயன்படுத்துகிறார். இதிலிருந்து அதன் வழிபாட்டு முறை மூலமந்திரம் காயத்ரி என்று பெரிதாய் விரியும். ஒவ்வொரு தேவதையைப் பற்றிய கருத்துக்களை அறிவிக்கிறது, பத்ததி நூல்கள். அதில் ஒரு துளியை மட்டுமே நாம் காண்கிறோம். உதாரணத்திற்கு ‘‘சாமனை’’ என்ற பெயரில் சிந்தித்தால் ‘‘ஷியாமளா தந்திரம்’’ என்று ஒரு நூலே உள்ளது. இதுபோல் பிறவும் என உணர்க. இதை சுருக்கியே விளக்கமளிக்கப்படுகிறது.

இனி திசை காவல் தேவதைகளை ஒவ்வொன்றாய் காண்போம்.‘‘நாயகி’’ இந்த உமையம்மை கிழக்கு திசை காவல் தேவதையாக திகழ்கின்றாள். ‘‘நாயகி’’ என்பதற்கு அறத்தின் வழி மணந்த மனையாள் என்பது பொருள்.

‘‘அண்டமெல்லாம் உய்ய அறம்

செய்யும்’’- 57.

சிவாலயங்களை பொறுத்தவரை இந்த சொல்லிற்கு மனோன்மணி என்ற பெயரையுடைய உமையம்மையையே குறிக்கும்.அனைத்து ஆலயங்களிலும் உடனாய என்னும் வார்த்தையால் இணைத்து குறிப்பிடப்படும் உமையம்மையே மனோன்மணி (உதாரணமாய்) அபிராமி உடனாய அமிர்த கடேஸ்வரர், ப்ரம்ம வித்யா சமேத ஸ்வேதாரண்யேஸ்வரர், விசாலாட்சி விஸ்வநாதர் என்பதாக நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்த உமையம்மையின் உருவை வழிபடுவதால் மக்கள் மனதில் தீய எண்ணங்கள் தோன்றாது. நல்ல எண்ணங்களை வளர்த்து மனம், வாக்கு, காயத்தால் அறத்தை செய்யக்கூடிய வல்லமையையும், சிவன் மீது அன்பை, ஆன்மாவை குறித்த அறிவை, குல வளர்ச்சியையும் பெறலாம் என்கிறது ஆகமம்.

மனோன் மணி தியானம்

சித்யாதி குடிலா ப்ராந்தம் மந்திர சிம்மா சனஸ்த்திதாம்

இந்திர நீல மணி ப்ரக்யாம் துவாத் த்ரீம் ஸத் லக்ஷ்ஷனான்

விதாம் பத்மாசன ஸ்திதாம் தேவீம்

ஏக வக்த்ர சரோருஹாம் மனோன்மணீம்

சதுர்கஸ்தாம் ததானாம் தக்‌ஷ ஹஸ்தயோ

அபயஞ் சாக்ஷ மாலாஞ்ச வாம ஹஸ்த துவ்யேததா

கமலஞ்ச வரம் யத்வா சோருஹஸ்தஞ்ச குண்டி காம் தததீம்

வாம பா கேஷூ த்யாயேத் தேவீம் மனோன்மணி.

 - என்கிறது சிவாகமம்.

‘‘நான்முகி’’ இந்த உமையம்மை தென்கிழக்கு திசை காவல் தேவதையாக திகழ்கிறாள். நான்முகி என்பது நான்கு முகத்தையுடைய பிராம்மி என்ற தேவதையை குறித்தது. இந்தத் தேவதையை சைவர்கள் காலை, மாலை, மதியம், நடுநிசி என்ற நான்கு பொழுதில் சந்தியாவந்தனம் செய்வார்கள். இது நித்ய கர்மவிதியில் உள்ள சூரியனை வணங்குவதாகிற செயலைக் குறிக்கும்.

நட்சத்திரங்கள் தெரியும்போதே அதிகாலை நேரத்தில் சூரியனுள் எழுந்தருளியுள்ளவளாய் உமையம்மை வணங்கப்படுகின்றாள். காலையில் படைப்பாற்றல் மிக்க பிரம்மனுக்கு படைத்தல் தொழிலில் உதவுகின்றாள். இந்த உமையம்மை பிரம்மாவின் சக்தியாதலால் பிராம்மி என்பர். இவ்வுருவில் உமையம்மையை வணங்கினால் வணங்குவோர்க்கு குழந்தைப் பேறு மற்றும் ஞானமும் கிட்டு–்ம்.

நான்முகி த்யானம்

ரக்த பூஷாம் பராம் ரக்தாம்  ஜடா

யக்  ஞோப வீதினம் ஹம்ச பத்மாசனாம்

பாலாம் சதுர் வக்த்ரான் சதுர்புஜாம்

ஸ்ருகஷ மாலினீந் தக்சே வாமே

தண்ட கமண்டலும் ப்ராம்மீம்

அஷ்ட திரிஷீம் த்யாயேத்

ப்ராதஸ் தார கிதேம்பரே

காலையில் சிவந்த ஆபரணங்களும் சிவந்த பட்டுப்புடவையையும் உடையவளாய் சிவந்த நிறமுள்ளவளாய், சடையும் பூணூலும்  உள்ளவளாய் சரஸ்வதி அம்மன் ரூபமாய் அந்த பார்வதியம்மன் அன்ன வாகனத்தின் மேல் பத்மாசனமாயிருந்து கொண்டு சிறு பெண்ணாய் நான்கு முகமும், நான்கு கைகளும் உள்ளவளாய், ஸ்ருக்கு (புஷ்ப மாலை) ஜப மாலிகை வலது கையிலேயும் தண்ட கமண்டலங்கள் இடது கையிலேயும் உள்ளவளாய் பிராம்மி என்ற பெயருடையவளாய், எட்டு கண்களுள்ளவளாய் தியானிக்க, இது நட்சத்திரங்கள் கூடியிருக்கும் பிராதக் காலத்திலேயே (விடியற்காலை நாலரை மணி முதல் ஆறு மணி வரை) செய்யத்தக்கது.

‘‘நாராயணி’’ இந்த உமையம்மை. தென் திசை காவல் தேவதையாக திகழ்கின்றாள்.இந்த வடிவத்தை வணங்குவதென்பது உடலோடு கூடியிருக்கின்ற ஆன்மா வாழும்போது தேவையான அனைத்து நலன்களையும், அருளவல்லது. இலக்குமி தாயார் வீட்டில் செல்வம் கொழிக்கவும், கணவன் - மனைவி, தாயார், தகப்பனார் உடன் பிறந்தவர்கள் உறவினர் அனைவரும் குடும்பச் சண்டைகள் நீங்கி கருத்து வேறுபாடில்லாமல் வாழ வழி செய்கின்றது.

இந்தத் தியானத்தை காலை, மாலை இருவேளையும் நாலரை முதல் ஆறு மணி வரை உள்ள சமயத்தில், வாயிலில் சாணம் தெளித்து கோலமிட்டு வீட்டு வாயிலில், ‘‘பிறை’’ என்ற அமைப்பில் விளக்கு ஏற்றி இந்த ஸ்லோகத்தை சொல்லுகிற வழக்கம் இன்றும் கிராமப்புறங்களில் திகழ்கின்றது.

நாராயணி த்யானம்

வந்தே பத்மகராம் பிரசன்ன  வதனாம்

சௌபாக்யதாம் பாக்யதாம்

ஹஸ்தாப்யாம் அபயப்பிரதாம் மணிகனைர்

நானாவினதர் பூஷிதாம்.

பக்தா பீஷ்ட பலப்ரதாம் ஹரிஹர பிரும்மாதி பி : ஸேவிதாம்.

பார்ஸ்வே பங்கஜ சங்க பத்ம நிதிபிர் யுக்தாம்ஸதா சக்திபி:

ஸர்வ மங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்தஸாதிகே

சரண்யே திரியம்பகே தேவி நாராயணி நமோஸ்துதே

‘‘கை நளின பஞ்சசாயகி’’  

இந்த உமையம்மை தென் மேற்கு திசை காவலாக திகழ்கின்றாள். இந்த தியானமானது அகத்தில் ஐந்து மலர் அம்புகளை கொண்டவளாக. உமையம்மை தியானிக்கப்படுகின்றாள். ஸஹஸ்ரநாமம் பாராயணம் செய்பவரும் முதலில் இதைச் சொல்லி துவங்குகிறார்கள். ஜபத்தின் நோக்கில் ஐம்புலன்களையும் அடக்குவதற்கு இந்தத் தியானம் பெரிதும் பயன்படுகின்றது. அப்படி அடக்குதல் என்பது உபாசனை வழியில் நின்றவனுக்கு உமையம்மை பிரத்யட்சமாய் காட்சியளிப்பாள் என்கிறது. இந்தத் தியானம் புறத்தில் கோயில் உருவமாக வைத்து வழிபடும்போது புலன் இன்பங்களை தருவதாக அமைகிறது.

இதையே ஸஹஸ்ரநாமம் ‘‘பஞ்ச தன்மாத் ரசாயகா’’ என்ற நாமாவளியால் குறிப்பிடுகிறது. மேலும், இதே தியானம் திருமணமாகாத ஆண், பெண் இருபாலாருக்கும் அவர்கள் விரும்பிய வண்ணம் மண வாழ்வை அமைத்து தரும். அதற்கு மாம்பூ, அல்லி, தாமரை, மல்லிகை, அசோகம் இந்த மலர்களை கொண்டு கோயிலில் உள்ள மனோன்மணி, அல்லது ஆடிப்பூரத்து அம்மன் இவர்களுக்கு அர்ச்சிக்கச் சொல்கிறது ஆகமம்.

கணவன் மனைவி இருவரும் சேர்ந்து இதே மலரை சோமாஸ்கந்தருக்கு சாற்றி வழிபாடு செய்தால் புத்திரப்பேறு வரும் என்கிறது, பூஜா கல்பம்.

‘‘சாம்பவி’’ இந்த உமையம்மை மேற்கு திசை காவல் தேவதையாக திகழ்கின்றாள்.

உருவமில்லாமல் அருவமாக எழுந்தருளி அதன் ஒளி வடிவாய் உமையம்மையை தியானிப்பது, தியானிப்பவருக்கு ஞானத்தை கொடுக்கும். பொருள் உணர்ந்தபோது ஞானத்தை கொடுக்கும். இது திருவாரூர் கமலாலயத்தில் அட்சரபீடம் சந்நதியில் இன்றும் காணலாம். ஐம்பத்தியோரு எழுத்துருவும் அதன் ஒளியை உணர்த்துவதற்கு வட்டமான திருவாட்சி போன்ற அமைப்பும், அதில், உமையம்மை அமர்ந்திருக்கிறாள் என்பதை அமரும் பீடத்தைக் கொண்டு உணரலாம். இதை நிராகார தியானம் என்பர். இது சாம்பவி தியானம் மூன்றில் ஒன்று. மற்ற இரண்டும் அங்க தேவதையில் காணலாம்.

சாம்பவி த்யானம்

விஸ்வவீயா பீனம்  ஆதி தேவம் அமலம்  சத்யம்  பரம் நிஷ்கலம்

நித்யம் யுக்த சகஸ்ர பத்ர கமலே வியாப்தா க்ஷரைர் மண்டிதம்

நித்யானந்தம் அனந்த பூர்ண பரிதம் ஷப்த துஷானரர்யுதம்

ஸப்த ப்ரமம் மயம் பராத் பரமஹம் பக்தியா பரம் பாவையேத்

‘‘சங்கரி’’ - இந்த உமையம்மை வடமேற்கு திசையின் காவல் தேவதையாக திகழ்கின்றாள். இந்தச் சக்தியானவள் செயலாற்றலை வழங்கவல்லவள். பூ உலகில் செயலன்றி எதுவும் பலனளிக்காது வானோரும் தன் ஆற்றல் குன்றியபோது பூவுலகம் வந்து தான் இழந்த ஆற்றலை மீண்டும் பெறுகின்றார்கள். உபாசகன் தான் உபாசனை செய்வதற்கான மன ஆற்றல், பூசைக்குத் தேவையான பொருட்கள் அனைத்தையும் அருளி அதனால் ஏற்படும் பயனையும் முழுவதுமாய் நமக்கு பெற்று உதவுவது உமையம்மையும் சிவனும் இணைந்த வடிவம். இந்த உருவை பொருள் புரிந்து தியானித்தால் பயன் பெறலாம். இரண்டையும் இனி சிந்திப்போம்.

சங்கரி த்யானம்

வியாமாம் த்ரிநேத்ரம் திவிபுஜம் த்ரிபங்கிம்

பினோரு சாரு ஸ்திதீ குஞ்சிதாங் க்ரீம்

ஸவ்யா  ப  ஸவ்யேத்  பல லம்பஸ்த்தம்

மௌலீம் பஜே சங்கர வாம ஸம்ஸ்தாம்

கரும் பச்சை நிறமுடையவளாய் முக்கின்னியாய் இரு கைகளிலும் மூன்று வளைகளையும், பருத்த ஸ்தனங்களையும், தாமரை போன்ற பாதத்தை கொண்டவளாயும், வலது கரத்தில் அல்லி, மலரை தரித்தவளாயும், வீசுகின்ற இடது கரத்தை உடையவளாய், கிரீடம் தரித்தவளாய் சங்ரகரின் இடது புறத்தில் அமர்ந்தவளாய் தியானிக்கிறேன்.

‘‘சாமளை’’ - இந்த உமையம்மை வடக்கு திசையின் காவல் தேவதையாக திகழ்கின்றாள். சாமளை என்ற தேவதை உமையம்மைக்கு உடன் நின்று அம்மை சொற்படியே செயலாக்கப்படுத்துபவள். உபாசகனின் எண்ணங்களை எண்ணியபடியே நிறைவேற்றி வைப்பவள். காளியை (சாமளை) வணங்கினால் காலத்தினால் வரும் தடங்கல், நவக்கிரக தோஷம் நீங்கும். காலத்தினால் வரும் நற்பயனை மட்டும் மிகுதியாக்கி அளிக்கும் பண்பு கொண்டவள், இந்தத் தியானத்தை செய்து தடை தீங்கி நன்மை பெறுவோம்.

சாமளை த்யானம்

கிங்கிணீ மாலயாயுக்தாம் பஜேத்காளீம்     வரப்ரதாம்

 ச்யாமபாம் ரக்த வஸ்த்ராம் ஜ் வலன சிகயுதாம்

அஷ்ட ஹஸ்தம் த்ரிணேத்ராம்.

சூலம் வேதாள கட்கம் டமருக ஸஹிதம்

வாம ஹஸ்தே கபாலம்

அன்பே கண் டேந்து கேடாம்

அபய வரயுதாம்

சாப ஹஸ்தாம்ஸீ தம்ஷட்ராம்

ச்யாமளாம் பீமரூபாம் புவன பயகரீம்

பத்ர காளீம் நமாமி.

முனைவர் பா.இராஜசேகர சிவாச்சாரியார்

Related Stories: