×

ஏற்றமிகு திருவோணவிரதம்


10-2-2021

வைணவ நெறியில் திருவோண நட்சத்திரத்துக்குத் தனி ஏற்றம் உண்டு. திருமால் வாமன மூர்த்தியாக ஆவணி மாதம் திருவோண நட்சத்திரத்தில் தோன்றினார். அந்நாளையே ஓணம் பண்டிகையாகக் கேரளத்தில் கொண்டாடுகிறார்கள்.திருமலையில் ஸ்ரீநிவாசனாகத் திருமால் அவதரித்த நாள் புரட்டாசி மாதத் திருவோண நன்னாள் ஆகும். அதே பெருமாள் திருவிண்ணகர் என்னும் ஒப்பிலியப்பன் கோயிலில் மார்க்கண்டேய முனிவரிடம் பூமி தேவியைப் பெண் கேட்டு வந்த நாள் பங்குனித் திருவோணம் ஆகும். அந்த பூமிதேவியை ஒப்பிலியப்பன் மணந்துகொண்ட நாள் ஐப்பசித் திருவோணம் ஆகும்.ஆழ்வார்களுள் முதல் ஆழ்வாரான பொய்கையாழ்வாரும், வைணவ குருவான பிள்ளை உலகாசிரியரும் ஐப்பசி மாதம் திருவோண நட்சத்திரத்தில் அவதரித்தார்கள்.திருமலையப்பனுடைய மணியின் அவதாரமான வேதாந்த தேசிகன் புரட்டாசி மாதம் திருவோண நட்சத்திரத்தில் காஞ்சிபுரத்தில் அவதரித்தார்.

இப்படி வைணவத்தில் திருவோண நட்சத்திரம் மிகுந்த முக்கியத்துவம் பெறுவதால், ஒவ்வொரு மாதமும் வரும் திருவோண நட்சத்திர நன்னாளில் விரதம் இருந்து திருமாலை வழிபடுவது மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது.திருவோணத்துக்கு முந்தைய நாள் இரவு உணவு உட்கொள்ளாமல் இருந்து இவ்விரதத்தைத் தொடங்குவார்கள். திருவோண நாளன்று விடியற்காலையில் எழுந்து நீராடி, தமது குடும்ப வழக்கத்துக்கேற்ப செய்யும் அநுஷ்டானங்களைச் செய்துவிட்டு வீட்டுப் பூஜையறையில் உள்ள பெருமாளுக்குப் பூஜைகள் செய்ய வேண்டும். திருமலையப்பன் விஷயமாக நம்மாழ்வார் பாடிய ஒழிவில் காலமெல்லாம் மற்றும் உலகம் உண்ட பெருவாயா ஆகிய திருவாய்மொழிப் பதிகங்களைப் பாராயணம் செய்வது மிகவும் விசேஷமாகும்.அதன்பின் அருகிலுள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று பெருமாளுக்குத் துளசிமாலை சாற்றி வழிபடுவது விசேஷமாகும். திருவோணத்தன்று காலை துளசி தீர்த்தம் மட்டும் உட்கொண்டு மற்ற உணவுகளைத் தவிர்ப்பது வழக்கம். மதியத்தில் பெருமாளுக்கு நிவேதனம் பண்ணப்பட்ட உணவை உப்பில்லாமல் உட்கொள்ளலாம். இரவில் உணவு உட்கொள்ளாது விரதம் இருந்து, மறுநாள் காலை உணவு உண்டு விரதத்தை நிறைவு செய்வது வழக்கம்.

இவ்வாறு திருவோண விரதம் அநுஷ்டிப்பவர்களுக்கு வாழ்வில் உள்ள தடங்கல்கள் அனைத்தும் விலகும். நல்ல செல்வச்செழிப்பு உண்டாகும். வீட்டில் மங்களங்கள் அனைத்தும் நிறையும். சுபகாரியங்கள் விரைவில் நடக்கும்.கும்பகோணத்துக்கு அருகிலுள்ள ஒப்பிலியப்பன் கோவிலில் ஒவ்வொரு மாதமும் திருவோண நட்சத்திரத்தன்று சிரவண தீபம் ஏற்றப்படுவது வழக்கம். திருவோண நட்சத்திரத்தில் அந்தத் திருத்தலத்தில் ஜோதி வடிவாய்த் திருமால் தோன்றியதன் நினைவாக, இந்தத் திருவோண தீபம் ஏற்றப்படுகிறது.பரம்பரையாக தீபத்தைக் கையில் ஏந்திக்கொண்டு கோவிலை வலம்வரும் தொண்டை அடியார்கள் செய்துவருகிறார்கள். அந்தப் பரம்பரையில் இப்போது ஸ்ரீ.உ.வே. தீபம் ரவி சுவாமிகள் திருவோணத்தன்று அகண்ட தீபம் ஏந்திக் கொண்டு கோவிலை வலம் வந்து, கருடன் சந்நிதிக்கு எதிரே எரியும் தீபத்தோடு அவர் நடனமாடுவது கண்கொள்ளாக் காட்சி ஆகும்.அந்தத் தீபம் ஒப்பிலியப்பனின் ஓர் ஆவேச அவதாரமாகவே கருதப்படுகிறது. நம்மாழ்வாரும் ஒப்பிலியப்பனைப் பாடும்போது, பரஞ்சுடர் உடம்பாய் என்று சுடரொளி வடிவாகக் கண்டு பாடியுள்ளார்.இந்த சிரவண தீபத்தைத் தரிசிப்பவர்களின் பாபங்கள் அனைத்தும் தீயினில் தூசாகும். அவர்கள் மனதில் பிரார்த்தித்து வரும் அனைத்து நல்ல விருப்பங்களும் ஒப்பிலியப்பனின் அருளால் நிறைவேறும்.

திருக்குடந்தை
டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்

Tags : Rise and Fall ,
× RELATED திருவொற்றியூர் தியாகராஜர்