×

தீராவழக்கை தீர்த்தருளும் தாமோதரன்

திருக்கண்ணங்குடி

வசிஷ்டர் வெண்ணெயினால் கிருஷ்ணனை செய்தார். தன் மனம் கரைய பக்தி புரிந்தார். கிருஷ்ணன் கரைந்தான். இளகிய வசிஷ்டரின் மனதையும், கலையாத அந்த வெண்ணெய் விக்கிரத்தையும் தமக்குள் சேர்த்துக் கொள்ள ஆவலுற்றான். கிருஷ்ணன் குழந்தை கோபாலனாக வடிவம் கொண்டான். குடுகுடுவென்று ஓடிவந்தான். வசிஷ்டர் பூஜிக்கும் வெண்ணெயை கையில் ஏந்தினான். கடைவாயிற் விட்டு விழுங்கினான்.

வசிட்டர் அடேய்....அடேய்... என்று குழந்தையை தொடர்ந்தார். குழந்தை கிருஷ்ணாரண்யம் எனப்படும் திருக்கண்ணங்குடி எனும் அடர்ந்த காட்டுக்குள் ஓடியது. மகிழ வனத்தின் வாசம் வசிஷ்டரை ஈர்த்தது. கானகத்திற்குள் கிருஷ்ண தியானத்திலிருக்கும் ரிஷிகள் கண்ணன் ஓடிவருவதை அறிந்தனர். கண்கள் திறந்து தொலைதூரம் வரும் கோபாலனை நோக்கி ஓடினர். பக்தியால் பொங்கி வழியும் அவர்கள் உள்ளம் கண்ட கண்ணன் உருகினான். ஓரிடத்தில் நின்றான். அவர்கள் மீது கருணை கட்டுக்கடங்காது அணையை உடைத்துக்கொண்டு பாய்ந்தது. அவர்கள் அன்பெனும் வெள்ளத்திற்குள் மூழ்கினர்.

ரிஷிகள் கண்ணீரால் கரைந்தனர். ‘‘என்னை வசிஷ்டர் துரத்தி வருகிறார். வேண்டிய வரத்தை சீக்கிரம் கேளுங்கள்’’ என்றான் குழந்தைக் கண்ணன். ‘‘உன்னிடம் வேறென்ன கேட்பது கண்ணா. இப்படி உன்னைக் காணத்தானே இப்படி நீண்ட காலம் இங்கு தவமியற்றுகிறோம். அதனால், இவ்விடத்திலேயே நிரந்தரமாக எப்போதும் காட்சியருள வேண்டுமென்று’’ வேண்டிக் கொண்டனர்.

அவர்கள் சொல்லி முடிப்பதற்குள் தடேரென்று கிருஷ்ணனின் பாதாரவிந்தத்தில் சரிந்தார் வசிஷ்டர். மகரிஷி தொழுததாலேயே அவ்விடம் சட்டென்று தேஜோமயமாக ஜொலித்தது. ராஜகோபுரங்களும், விமானங்களும் தானாகத் தோன்றின. பிரம்மனும், தேவர்களும் வந்து குவிந்தனர். ரிஷிகள் கூடிக் குளிர்ந்தனர். பிரம்மா பிரம்மோத்ஸவம் நடத்தி எம்பெருமானை வழிபட்டார்.

இப்படி கண்ணன் கட்டுண்டு குடியமர்ந்ததால் கண்ணங்குடியாயிற்று. அழகிய தமிழில் திருக்கண்ணங்குடி என்று ஆழ்வார்கள் அன்பாக அழைத்தனர்.
கிருஷ்ணனின் அளவிலாப் பேரரருள் காடாக செழித்துக் கிடந்தது. இடைவெளியற்ற இறையின் சாந்நித்யம் அங்கு சுழன்றடித்தது. எங்கேயோ திருவரங்கனின் திருப்பணிக்காக யாரிடமும் கேட்காமல் என்ன வேண்டுமோ அதை தானே கவர்ந்து கொண்டிருந்த திருமங்கையாழ்வாரை இத்தலம் சுழற்றி இழுத்தது. பேறாராகப் பெருகும் அருள் வெள்ளத்தில் சிக்குண்டவர் ஆற்றின் இழுவையிலேயே மிதந்து சென்று கொண்டிருந்தார்.

கிருஷ்ணன் எனும் பொருளுக்கேற்றவாறு இருள் உலகைச் சூழ்ந்தது. அவரும் நாகை புத்தவிகாரத்தில் பொற்சிலையை எவரும் அறியாவண்ணம் கவர்ந்தார்.  
பொற்சிலையை இடுப்பில் வைத்துக்கொண்டு கிருஷ்ண கானகத்தை நோக்கி வந்தார். ஊரை நெருங்கினார். வெகுதூரம் வந்ததால் கால்கள் மறத்துப்போயின. உடல் தளர்ந்தது. அந்த காரிருளில் ஒரு புளிய மரத்தினடியில் அமர்ந்தார். எதிரே பதமான மண்ணை நிரவி வைத்திருந்தனர்.

பொற்சிலையை அதில் புதைத்தார். என்னைவிட பெருங்கள்வன் எவரேனும் கவர்ந்துபோவரோ என்று ஐயம் கொண்டார். சரி, என்று தனக்குமேல் குடையாய் இருந்த புளிய மரத்தோடு பேச ஆரம்பித்தார்.‘‘இதோபார் புளியமரமே, நான் அரங்கனுக்காக ஆலயம் அமைக்க பொருள் சேர்க்கிறேன். இங்கு சற்று அயரவே வந்தேன். இந்த பொன்சிலையை இரவு முழுதும் நீ தூங்காமல் பாதுகாக்க வேண்டும் என்ன’’ என்றார்.

தளிர்கள் சிலுசிலுவென அவர் மீது கொட்டின. கண்கொட்டாமல் விழித்திருப்பதாகச் சொன்னன. அவர் நிம்மதியாகத் தூங்கினார். விடிகாலை வேளையிலே புளியந்தளிர்கள் மழைபோல அவர்மீது பொழிந்தன. இதென்ன ஏதேனும் சூறாவளி என்று கண்விழித்துப் பார்த்தபோது வயலில் உழவன் ஒருவன் நிலத்தில் உழுது கொண்டிருந்தான். புளிய மரத்தைப் பார்த்து உறங்காப்புளியே உமக்கு என் நன்றிகள் என்றார்.

உழவனை உழவிடாது தடுத்தார். என் நிலத்தில் நீ உழுவதா’’ என்றார். கேட்டவன் அதிர்ந்தான். ‘‘நீர் யாரய்யா திடீரென்று இப்படிக் கேட்கிறீர். ஊருக்கே புதியவர் போன்று இருக்கிறீர்’’ என்று பதிலுக்குக் கேட்டான். ‘‘ஆஹா.. நீ புதியவனா நான் புதியவனா. என் தந்தை தாமோதரர் எனக்கு எழுதித் தந்துள்ளார்’’ என்றார். எதுவும் புரியாது விழித்த உழவன் ஊர் பஞ்சாயத்திற்கு இந்த வழக்கை கொண்டுபோனான். ஊரும் உழவன் பக்கம் நின்றது. திருமங்கையாழ்வார் சில தினங்கள் பொறுங்கள் அரங்கத்திலிருந்து ஆதாரத்தோடு வருகிறேன் என்றார்.

விசித்திரமான இவ்வழக்கிற்கு முடிவு காண இயலாமல் ஊரார் பஞ்சாயத்தை தள்ளி வைத்தனர். இப்படியொரு வினோத மனிதராக இருக்கிறாரே என்று
யோசனையே செய்யாமல் ஊரார் நின்றனர். அதுகுறித்து மங்கைமன்னன் வியப்பெய்தினார்.  நேராக திருக்கண்ணங்குடி கோயில் நோக்கி ஓடினார். நீருண்ட மேகம்போல நிற்கும் அவன் பேரழகில் தன்னை மறந்தார். அவருள் ஊற்றுப் பெருக்காக பாசுரங்கள் பொங்கின. ‘‘வங்கமா முந்நீர் வரி நிறப் பெரிய’’ என்று கண்ணங்குடி அழகனை பாடலால் ஆராதித்தார். கோயிலைச் சுற்றிலும் அவனது திவ்ய நாமத்தைச் சொன்னவாறே ஆனந்தக் கூத்தாடினார்.

அசதி இன்னும் மேலிட மகிழமரத்தடியில் அமர்ந்தார். அவர் மனம் மகிழ்ச்சியில் திளைத்தது. ஆனால், வயிற்றுப் பசியால் உடல் சோர்ந்தது. கண்ணும் அயர்ந்தது. கண்ணன் தோள் தொட்டு எழுப்பினான். உறக்கத்திலேயே உண்டார். விழித்தெழுந்தவர் யார் வந்தது என்று சுற்றிலும் பார்வையை படரவிட்டார். வந்தது தாமோதரனே என்று தெளிந்தார். அந்த மகிழமரத்தைப் பார்த்து நீ இன்று போலவே என்றும் காயாமகிழாக இருக்க வேண்டும் என்று ஆனந்தித்தார்.

தொண்டை வறட்சி அதிகரிக்க ஊரிலுள்ள ஓர் வீட்டின் முன்பு நின்று குடிக்க தண்ணீர் கேட்டார். ‘‘நீங்கள் கேட்டபடி நீரைக் கொடுத்தால் செம்பும் குடமும் எனது என்பீர். கொடுக்கமாட்டேன் போங்கள்’’ என்றாள். திருமங்கையாழ்வார் மிகவும் மனம் நொந்தார். அந்தப் பெண்ணைப் பார்த்து நான் என்ன  திருப்பணிக்கு செல்கிறேன் என்று தெரியாது, நீங்களும் வழக்கை முடிக்காது அனுப்புகிறீர்கள். தாகத்தால் தவிக்கும் எனக்கு நீரும் தரவில்லை. இனி இவ்வூரில் எந்த வழக்கும் தீராது.  எந்த கிணற்றிலும் இனி நீர் ஊறாது என்றார். நிரம்பியிருந்த கிணறுகள் வற்றின.

ஊரார் அதிர்ந்தனர். திருமங்கையாழ்வாரின் பாதம் பற்றிக் கதறினார்கள். தாங்கள் யாரென்று தெரியாது பேசிவிட்டோம். இந்த வழக்கை தாங்களே தீர்க்க வேண்டும் என்று வாய்பொத்திக் கேட்டனர். ‘‘இத்தலத்து லோகநாதனையும், உற்சவராக எழுந்தருளியிருக்கும் தாமோதரநாராயணப் பெருமாளையும் கேளுங்கள். தீரா வழக்கெல்லாம் தீரும்’’ என்றார்.  ‘‘நீலமேக வண்ணனாக இவனிருக்க வேறு நீர் எதற்கு இங்கு. இவனை சேவித்தால் போதுமே ஞானமெனும் தாகத்திற்கே நீர் கொடுத்து தணிப்பான்’’ என்று சொல்லாமல் சொன்னார்.   
   
இந்த லீலாவைபவம் அனைத்தையும் திருமங்கையாழ்வாரை முன்னிட்டுக்கொண்டு திருக்கண்ணங்குடி எம்பெருமானே செய்வித்தான். இன்றும் திருக்கண்ணங்குடியில் கிணறே இல்லை. கோயிலின் சிரவண புஷ்கரணி மட்டுமே திருமஞ்சனத் தீர்த்தமாக உள்ளது. கீழ்வேளூரிலிருந்து குழாய் மார்க்கமாகத்தான் நீர் வருகிறது. அது போலவே எந்த நியாயமான வழக்கானாலும் இத்தல தாமோதரனை வேண்டிக்கொள்ள எளிதில் முடிந்து விடுகிறது என்கிறார்கள்.
திருமங்கையாழ்வாராலேயே உறங்காப்புளி, தோலா வழக்கு, ஊராக்கிணறு, காயாமகிழ் என்று பிரபலமானது.

எப்போதும் தென்றல் தாலாட்டும் அழகிய கிராமம். தென்னை மரங்கள் சூழ்ந்த அழகிய திருக்கோயில். நெடிதுயர்ந்த ராஜகோபுரம். உள்ளே நகர இடப்பக்கத்தில் ஆழ்வாராதிகள் சந்நதி அமைந்துள்ளன. அருகேயே தனிச் சந்நதியில் இத்தலத்தை சிகரத்தில் அமர்த்தி அழகு பார்த்த திருமங்கையாழ்வாரின் சந்நதி அமைந்துள்ளது. தெற்குச் சுற்றில் தாயார் சந்நதிக்கு எதிரில் பதினாறு கால்மண்டபம் உள்ளன. இந்த மண்டபத்தில் அனுமன் சந்நதியும் அமைந்துள்ளது.

இதற்கு எதிரிலுள்ள படிகளின் வழியே பெருமாள் சந்நதிக்குள் செல்லலாம். உள்ளே நகர பத்திஉலா மண்டபத்தின் மேல்பக்கம் நாச்சியார் அரவிந்த நாயகியார் சந்நதி, மகாமண்டபம், அதற்கு அடுத்து கருவறையை ஒட்டிய அர்த்த மண்டபம் என்று முறையாக நீண்டு அமைந்திருக்கின்றன. மூலவர் லோகநாதர் என்றும், தாயார் லோகநாயகி எனும் திருநாமங்களோடு நின்ற கோலத்தில் தேவி, பூதேவி சமேதராக காட்சியளிக்கிறார். கிழக்கு நோக்கிய திருமுகமண்டலம். உற்சவப்பெருமானுக்கு தாமோதர நாராயணன், அரவிந்தநாயகி எனும் திருப்பெயர்களோடு காட்சியளிக்கின்றனர்.

தாமோதரன் கோபாலனாக இடுப்பில் கைவைத்து நின்று காட்டும் அழகு ஆயுள் முழுதும் கண்டாலும் சலிக்காது. அதுபோல பிரமாண்ட புராணமும், கருட புராணமும், நாரத புராணமும் இத்தலத்தின் பெருமையை மாய்ந்து மாய்ந்து பேசுகின்றன. இத்தலத்தின் கல்லையும், மண்ணையும் கூட விட்டுவைக்காமல் அவற்றிலும் கிருஷ்ண சாந்நித்யம் நிரம்பியிருக்கின்றன என்று சிறப்பிக்கின்றன. இந்தக் கள்ளனிடம் உள்ளம் கொடுத்த திருமங்கையாழ்வார் தானும் கள்வனானார். பிரம்மா, ப்ருகு, வசிஷ்டர், மாடரர் என்று எத்தனை ரிஷிகள் தரிசித்த லோகநாதனின் முன்பு நிற்கிறோம் எனும் பிரமிப்பே தன்வயம் இழக்கச் செய்கிறது.

தீரா வழக்கை தீர்த்தருளும் தாமோதரன் அல்லல்படும் மானிடரை என்றும் ஆற்றுப்படுத்துவான். கருவறைக்கருகே நிற்கும்போது காலமெல்லாம் கரைந்து விடுதல் போன்றொரு உணர்வு ஏற்படுகிறது. எத்தனை கோபியர்களின் உள்ளத்தை கவர்ந்த கண்ணன் இங்கு நம் மனதையும் கொள்ளை கொள்கிறான். கோயிலுக்குள்ளேயே எல்லா உற்சவத் திருமேனிகளும் அழகாக வைத்திருக்கின்றனர். பிராகாரத்திலேயே புராணம் புகழும், திருமங்கையாழ்வார் சயனித்திருந்த மகிழமரம் அமைந்துள்ளது.

அதன் பசுமையில் குளிர்ந்து, கொடிமரத்தின் கீழ் வீழ்ந்து பரவும்போது கண்ணனின் குழலோசை இதயத்தை நிரப்புகிறது. இத்தலம் நாகப்பட்டினம்- திருவாரூர்
போக்குவரத்து சாலையில் ஆழியூர் பள்ளிவாசல் என்கிற இடத்திலிருந்து தெற்கே 2 கி.மீ. தொலைவில் உள்ளது. போக்குவரத்து வசதியற்ற இத்தலத்திற்கு தனி வாகனம் மூலம்தான் செல்ல முடியும்.

தொகுப்பு: கிருஷ்ணா

Tags : Damodaran ,
× RELATED சம்பளம் கேட்ட ஊழியருக்கு அடி: உரிமையாளர் உள்பட 2 பேர் கைது