×

நீரே உலகின் நடுவர்!

நான் மனம் வெதும்பி அழுது புலம்பினேன். தேம்பியவாறு மன்றாடத் தொடங்கினேன். ஆண்டவரே நீர் நீதியுள்ளவர். உம் செயல்களெல்லாம் தேறியவை. உம் வழிகள் அனைத்திலும் இரக்கமும் உண்மையும் விளங்குகின்றன. நீரே உலகின் நடுவர். இப்பொழுது ஆண்டவரே என்னை நினைவுருறும். என்னைக் கனிவுடன் கண்ணோக்கும். என் பாவங்களுக்காகவும், குற்றங்களுக்காகவும் என்னைத் தண்டியாதீர். எம்மூதாதையர் உமக்கு எதிராகப் பாவம் செய்தார்கள். உம் கட்டளைகளை மீறினார்கள். எனவே  நாங்கள் சூறையாடப்பட்டோம்; நாடு கடத்தப்பட்டோம்; சாவுக்கு ஆளானோம். வேற்று மக்களிடையே எங்களைச் சிதறடித்தீர். அவர்களுடைய பழிச்சொல்லுக்கும், நகைப்புக்கும், இகழ்ச்சிக்கும் எங்களை ஆளாக்கினீர்.என் பாவங்களுக்கு நீர் அளித்த தீர்ப்புகள் பலவும் உண்மைக்கு ஏற்றவை.

நாங்கள் உம் கட்டளைகளின்படி ஒழுகவில்லை உம்திருமுன் உண்மையைப் பின்பற்றி வாழவில்லை. இப்பொழுது உம் விருப்பப்படி என்னை நடத்தும். என் உயிர் பிரிந்துவிடக் கட்டளையிடும். இவ்வாறு நான் மண்ணிலிருந்து மறைந்து மீண்டும் மண்ணாவேனாக. நான் வாழ்வதைவிட சாவதே மேல். ஏனெனில் சற்றும் பொருந்தாத பழிச்சொற்களை நான் கேட்க நேர்ந்தது. ஆகவே கடுந்துயரில் மூழ்கியுள்ளேன். ஆண்டவரே, இத்துயரத்தினின்று நான் விடுதலை பெற ஆணையிடும். முடிவற்ற இடத்திற்கு என்னைப் போகவிடும். உமது முகத்தை என்னிடமிருந்து திருப்பிக்கொள்ளாதேயும். ஆண்டவரே,வாழ்வில் மிகுந்த துன்பங்களைக் காண்பதிலும் இத்தகைய இகழ்ச்சிகளைக் கேட்பதிலும் நான் சாவதே மேல். - (தோபித்து 3:1-6) இனியும் நான் ஏன் வாழ வேண்டும்? ஆண்டவரே! நான் சாவது உமக்கு விருப்பமில்லையெனில் எனக்கு எதிராகச் சொல்லப்படும் பழிச்சொல்லையாவது இப்போது அகற்றிவிடும்.

திரண்டு உருண்டு வளர்ந்திருந்தது அந்த தேக்குமரம்; வைரம் பாய்ந்த மரம்; வானளாவ உயர்ந்து நின்றது. ஆனாலும் அதற்குப் பெரிய கவலை இருந்தது. அதன் அருகில் இருந்த முள்செடி, ‘‘ஏன் அண்ணே கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறாய்? என்னைப்போல வற்றி உயர்ந்து போயா இருக்கிறாய்? பெருத்து ஓங்கிப் பெரிய பணக்காரன்போல் இருக்கிறாய்; அப்படி இருந்தும் கவலைப்படுவது ஏன்? என்றது. தேக்குமரம் வருத்தம் தோய்ந்த குரலில், தம்பி! நீ தெரியாமல் சொல்கிறாய். சிறிய முள்செடியான உன்னை யாரும் தீண்ட மாட்டார்கள். என்னைப் பயன்படுத்துவதற்காக எந்த நேரத்திலும் கோடரியால் வெட்டிக்கொண்டு செல்லலாம் என்று கூறியதைக் கேட்ட முள்செடி கண்ணீர் விட்டது. ‘‘கையிருப்பே கவலைக்குக் காரணம்’’ என்று கூறியது முள்செடி.பணக்காரனுக்குக் கவலை இல்லை என்று நினைக்கலாம். அது தவறு. பல பணக்காரர்களுக்கு உறக்கம் வருவதே இல்லை. சேர்த்து வைத்திருக்கும் செல்வத்திற்கு தீங்கு நேரிடுமோ என்று கவலைகொள்ளலாம். கையில் பொருள் இல்லாதவனுக்கு எந்தக் கவலையும் கிடையாது. செல்வந்தர் ஆடம்பர வாழ்க்கையால் அளவில்லாத மகிழ்ச்சியுடையவராகத் தோன்றுவார். ஆனால், அவர் நெஞ்சத்தில் எப்போதும் கலக்கம் குடிகொண்டிருக்கும்.

- ‘‘மணவைப்பிரியன்’’
ஜெயதாஸ் பெர்னாண்டோ

Tags : arbiter ,world ,
× RELATED உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில்...