×

தீண்டுவீராயின் திருநீலகண்டம்

திருநீலகண்டர் குருபூஜை - 5-2-2021

திருநீலகண்டர் தன் வீட்டு வாசலில் அமர்ந்து ஒரு மூங்கில் கழியால் சக்கரத்தைச் சுழற்றிக் கொண்டிருந்தார். அவர் கைகள் பட்டு களிமண்,பானையாய் உருமாறிக் கொண்டிருந்தது. மனசு மட்டும் சதா சிவநாமம் சொல்லிக் கொண்டே இருந்தது. அவர் அருகே இருந்த சிறிய மூங்கில் கழிக்குத் தெரியாது பிரபஞ்சம் உள்ளவரை தாம் பேசப்பட போகிறோம்; அப்படி ஒரு அதிசயம் நிகழப்போகிறது என்று! சிதம்பரம் நகரில் திருநீலகண்டர் வெகு பிரசித்தம். தொழில் பானை செய்வது என்றாலும், அசாதாரண சிவபக்தர். அமுதம் கடைந்தபோது  உலகைக் காக்க தாயுள்ளத்தோடு நஞ்சுண்ட ஈசனின் பெருமையையும், நாதனை நஞ்சு பாதித்துவிடக் கூடாதே என தவித்துத் தடுத்த பார்வதியின் அன்பையும் சிலாகித்துப் பேசுவார். அதனாலேயே அடிக்கடி, ‘திருநீலகண்டம்... திருநீல
கண்டம்...’ என்பார்.

‘‘திருநீலகண்டம்’’ என கம்பீரமாய்  அழைத்தது  ஒரு  குரல். நிமிர்ந்து  பார்த்தார் திருநீல
கண்டர். ஒரு சிவயோகி கையில் திருவோட்டோடு நின்றிருந்தார்.
திருநீலகண்டர், சிவயோ கியை நிலம்பட விழுந்து வணங்கினார். சிவயோகி, ஒரு திருவோட்டைக் கொடுத்து, ‘‘இதை பத்திரமாக வைத்திரு. பிறகு வந்து வாங்கிக்கொள்கிறேன். இது சாதாரண திருவோடல்ல. ஆயிரம் பொன் கொடுத்தாலும் இதற்கு ஈடு ஆகாது’’ என்றார்.

‘‘உத்தரவு ஐயா’’ என்றார் திருநீலகண்டர். காலம் ஓடியது. திடீரென ஒருநாள் சிவயோகி திரும்ப வந்தார். ‘‘நான் கொடுத்த திருவோட்டைக் கொண்டு வா’’ என்றார். உள்ளே சென்று வைத்த இடத்தில் பார்த்தார் திருநீலகண்டர். திருவோடு இல்லை.

‘‘காணவில்லை ஐயா! வேறொரு திருவோடு தருகிறேன்’’ என்று கைபிசைந்து நின்றார். அதெல்லாம் முடியாது. அதன் மகிமையை நான் உனக்கு முன்னரே சொன்னேனே! நீ ஏமாற்றுகிறாய். உன் மகனைக் கூப்பிடு! திருவோடு காணவில்லை என அவன் மீது சத்தியம் செய்’’
என்றார் சிவயோகி.

‘‘எனக்கு வாரிசு இல்லை, சுவாமி’’ பதில் சொன்னார் திருநீலகண்டர்.காரணம் கேட்டார், யோகி! மௌனமாய் நின்றார் நீலகண்டர்.

‘‘சரி, உன் மனைவியின் விரல் பிடித்து திருக்கோயில் குளத்தில் மூழ்கி எழுந்து சத்தியம் செய்’’ என்றார் சிவயோகி. அந்த மூங்கில் கழியோடு வெளியே வந்தார் திருநீலகண்டர்.
‘‘இது எதற்கு?’’
‘‘மனைவியை அவள் அனுமதி இல்லாமல் தொடமாட்டேன் என்று சத்தியம் செய்திருக்கிறேன். அதனால்தான் இது!’’ நம்ப மறுத்த சிவயோகி, பிரச்னையை தில்லை மூவாயிரம் அந்தணர் சபைக்கு கொண்டு சென்றார். அவர்களும் விசாரித்தனர். இனியும் மறைக்க முடியாதென முடிவு செய்த திருநீலகண்டர், ‘‘இது நாற்பது வருடப்பிணக்கு. புத்தி கெட்டு ஒரு நாள் தாசி வீட்டுக்குச் சென்றேன். அதனால் கோபமான என் மனைவி, ‘நீலகண்டத்தின் மேல் ஆணையிட்டு சொல்கிறேன் எம்மைத் தீண்ட வேண்டா’ என்று கூறினாள். அன்று முதல் என் மனைவியோ, வேறு எந்த ஒரு பெண்ணையோ நான் தீண்டுவதில்லை என சத்தியம் செய்திருக்கிறேன் அதனால்தான் இந்த மூங்கில் கழி’’ என்றவர், மூங்கிலின் ஒரு முனையை அவரும் மற்றொரு முனையை மனைவியும் பற்றிட குளத்தில் மூழ்கி எழுந்தனர். முதியவர்

களாய் மூழ்கியவர்கள் நாற்பது ஆண்டுகளுக்கு முந்தைய இளமையோடு எழுந்தனர்! சிவயோகி மறைந்து சிவனே உமையோடு தோன்றி, புலனடக்கத்திற்கும் பக்திக்கும் உதாரணமாய் திகழ்ந்த நீலகண்ட நாயனாரையும் அவரது மனைவியையும் வாழ்த்தினர். தில்லைவாழ் அந்தணர்கள் ஈசனையும் நீலகண்ட நாயனாரையும் வணங்கினர். அந்த மூங்கில் இதோ இன்றும் பேசப்படுகிறது!

- எஸ்.ஆர்.செந்தில்குமார்

Tags :
× RELATED காமதகனமூர்த்தி