×

ஞானியின் கணக்கு

திருவாரூர் தட்சிணாமூர்த்தி சுவாமிகள் ஞானத்திலும் தவத்திலும் நிரம்பப் பெற்றவர்; அடக்கத்தில்... ஈடு இணை சொல்ல முடியாது. ஒரு சமயம் தட்சிணாமூர்த்தி சுவாமிகள் தல யாத்திரை செய்தபடி, ஊர் ஊராக வந்து கொண்டிருந்தார். ஓர் ஊரை அவர் நெருங்கியபோது, அவ்வூர் ஆலயத்தில் கணக்கராகப் பணியாற்றிக் கொண்டிருந்த சுவாமிகளின் உறவினர் ஒருவர் சுவாமிகளைப் பார்த்தார். அவருக்கு சுவாமிகளின் ஞான தவ அடக்கமெல்லாம் தெரியாது. அவர் சுவாமிகளை நெருங்கி, ‘‘தம்பி! நல்லவேள. ஒன்னப்பாத்தேன். ஒடம்பு சரியில்ல.

மருத்துவர் மருந்து குடுத்திருக்காரு; சாப்டணும்; ஒரு பத்து நாளக்கி, இந்தக்கோயில்ல இருந்து வரவு - செலவு கணக்க எழுதி வெக்கிறியா? பத்துநாள்தான்; வந்துருவேன்’’என்றார். தட்சிணாமூர்த்தி சுவாமிகளும் ஒப்புக்கொண்டார். அங்கிருந்த அவர் கணக்கு எழுதிய விதம் அற்புதமானது. அவரவர் வந்து அன்றைய கணக்குகளைச் சொல்லும் முன்னமே, எல்லாவிதமான கணக்குகளையும் எழுதி முடித்து விட்டு, ஒரு பக்கமாகத் தியானத்தில் அமர்ந்து விடுவார், சுவாமிகள்.

பணியாளர்கள் முதலானோர் வந்து, ‘‘கணக்கை எழுதிக் கொள்ளுங்கள்!’’ என்று சொல்லும்போது, ‘‘ஏற்கனவே எழுதியாயிற்று. சரி பார்த்துக் கொள்ளுங்கள்!’’ என்பார் சுவாமிகள். அவர் எழுதியதை எடுத்துப் பார்த்தால், எல்லாம் சரியாகவே இருக்கும். அனைவரும் ஆச்சரியத்துடன் விலகுவார்கள்.

ஒருநாள்... வழக்கப்படி வந்து சுவாமிகள் எழுதியிருந்த கணக்கைப் பார்த்தார்கள். அன்றைய கணக்கில் நான்கு படி பாலும் ஒரு படி தேனும் (அந்தக்கால அளவை) எழுதப்படாமல் இருந்தது.

அதைக்கண்ட மணியக்காரர் , ‘‘நான்கு படி பாலும் ஒரு படி தேனும் கணக்கில் இல்லையே; ஏன்?’’ எனக் கேட்டார்.சுவாமிகள் அமைதியாகச் சொன்னார்; ‘‘அவை இரண்டும் இன்று கோயிலுக்குச் செலவிடப்பட வில்லை. இறைவனுக்குச் செலவிடப்படாத அவற்றை நான் எப்படிக் கணக்கில் எழுதுவது? அந்தப் பாலையும் தேனையும் வீட்டிற்குப் போகும்போது, யாருக்கும் தெரியாமல் எடுத்துப் போகலாம் என்று தனியாக எடுத்து வைத்திருக்கிறார்கள். போய்ப் பாருங்கள்!’’ என்று சொல்லி, அவை மறைத்து வைக்கப்பட்டிருந்த இடத்தையும் சொன்னார்.

மணியக்காரர் ஓடிப்போய்ப் பார்த்தார். சுவாமிகள் குறிப்பிட்ட இடத்தில், நான்குபடி பாலும் ஒரு படி தேனும் மறைவாக வைக்கப்பட்டிருந்தன. அனைவரும் அதிர்ந்தார்கள். அப்புறம் என்ன? ‘‘இந்த ஆள் இங்கு இருந்தால், நாம் செய்யும் அட்டூழியங்கள் எல்லாம் வெளியே வந்து விடும். என்ன செய்வது?’’ அனைவருமே குழம்பினார்கள்.

அந்த நேரத்தில் சுவாமிகள் அந்தப் பக்கம் வர, அனைவருமாக அவரை ஒருமாதிரியாகப் பார்த்தபடி அங்கிருந்து விலகினார்கள். பார்த்தார் சுவாமிகள்; ‘‘தவறு செய்யும்போது இவர்களிடம் இருக்கும் ஒற்றுமை, விடாமுயற்சி, தீவிரம் ஆகியவை நல்லது செய்யும்போது இல்லையே; நல்லவர்களிடம் இல்லையே!’’ என மனம் வருந்தி அவ்வூரை விட்டு அகன்றார்.

 - வி.ஆர். சுந்தரி

Tags :
× RELATED மேன்மையான வாழ்வருளும் மடப்புரம் காளி