மகரம்

திருக்கடல் மல்லை

மகரத்தார் நகரத்தை ஆள்வார் என்பது பழமொழி. அதுபோல உங்களில் பெரும்பாலோருக்கு நல்ல நிர்வாகத்திறன் இருக்கும். கை தூக்கினால் அடிப்பீர்கள். கை கூப்பினால் கட்டிக்கொள்வீர்கள். இதுதான் மகரத்தாரின் அடிப்படை பாலிஸி. மகரம் என்பது கடல் வீடு. கடலலை எப்படி அடுத்தடுத்து வந்து முட்டுமோ அதுபோல உங்களின் மனதிற்குள் புதிய எண்ணங்கள் தோன்றிக்கொண்டேயிருக்கும். வாழ்வின் அதலபாதாளத்திற்கு போனாலும் மறுபடியும் எழுந்துவிடுவீர்கள். சனி இரக்க சுபாவத்தை அதிகம் கொடுக்கும் கிரகம். அதனால் மனிதநேயத்தோடு செயல்பட விரும்புவீர்கள். அதனாலேயே, உங்களை பார்த்தவுடனேயே உங்களிடம் எல்லா குறைகளையும் சொல்ல வேண்டுமென்று விரும்புவார்கள்.

வீட்டிற்குத் தேவையான எல்லாவற்றையும் மொத்தமாக வாங்கிச் செல்வீர்கள். சில்லறையாக எதுவும் வாங்குவது பிடிக்காது. ஒரு கிலோ... ரெண்டு கிலோ... என்றெல்லாம் எதையுமே வாங்க மாட்டீர்கள். அறுசுவை சொட்ட சொட்ட இருந்தாலும் தனியாக உண்பது பிடிக்காது. பயணித்துக் கொண்டே உண்பது மிகவும் பிடிக்கும். இரண்டாம் இடமான தனாதிபதியாக கும்பச் சனி வருகிறது. இதனால் கட்டுக்கட்டாக பணத்தை வைத்துக் கொண்டிருப்பீர்கள். ஆனால், திடீரென்று செலவுக்கு காசு எங்கே என தேடுவீர்கள். ஏனெனில், ஏற்ற இறக்கங்கள் பணத்தைப் பொறுத்தவரைக்கும் இருக்கத்தான் செய்யும்.

நான்காம் இடத்திற்கு அதிபதியாக செவ்வாய் வருவதால் தாய்மேல் அதீதமான அன்பு இருக்கும். ஆனால், படிப்பு, உத்யோகம் என்று ஏதேனும் காரணத்தால் தாயை பிரிவீர்கள். உங்களின் பூர்வ புண்ய ஸ்தானத்திற்கு அதிபதியாக ரிஷப சுக்கிரன் வருகிறார். எல்லாமே பிள்ளைகளுக்காக என்று வாழ்வீர்கள். நம்பர் ஒன் கல்வி நிறுவனத்தில் படிக்க வைப்பீர்கள். பிள்ளைகளின் குறும்புகளை தடுக்காது ரசிப்பீர்கள். அதேபோல தாய்வழி உறவினர்கள் எப்போதும் உங்களுக்கு சாதகமாக இருப்பார்கள். அடுத்து ஆறாம் வீட்டுக்கு அதிபதியாகவும், ஒன்பதாம் வீட்டிற்கு அதிபதியாகவும் புதன் வருகிறார். ஆறாம் வீடு எதிரி ஸ்தானத்தை குறிக்கிறது. இதற்கு புதன் அதிபதியாக வருகிறார்.

அவமானங்களை தாங்கிக் கொண்டு பெரியாளாக வருவீர்கள். ஏழுக்குரியவராக வாழ்க்கைத் துணைவரைப் பற்றி சொல்லும் இடத்திற்கு அதிபதியாக சந்

திரன் வருகிறார். வாழ்க்கைத் துணைவர் கலை ரசனைகளோடு திகழ்வார். பத்தாம் இடமான வேலை மற்றும் கர்ம தர்ம ஸ்தானத்திற்கு அதிபதியாக சுக்கிரன் வருகிறார். மத்திம வயதுக்குப் பிறகு சொந்த தொழிலில் இறங்குவீர்கள். நிறையபேர் கன்ஸ்ட்ரக் ஷன் தொழிலில் ஈடுபட்டு லாபம் சம்பாதிப்பீர்கள். பணமும், புகழும் சேர்ந்து எங்கு அதிகம் புழங்குகிறதோ அங்குதான் வேலை பார்ப்பீர்கள்.

பன்னிரண்டாம் இடமான விரய ஸ்தானத்திற்கு அதிபதியாக குரு வருகிறார் பூரண சனிபகவானின் ஆதிக்கத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் உங்களுக்கு திருமால் மீது மாறாத பக்தியிருக்கும். சிவாம்சத்தின் சாரமாக சனிபகவான் விளங்கினாலும் பெருமாளை வழிபடுவதை மிகவும் விரும்புவீர்கள். அதுமட்டுமல்லாது கடல் என்பது சனிபகவானின் ஆதிக்கத்திற்குட்பட்டது. மகரத்தையே மகர ஆழி அதாவது மகரக்கடல் என அழைப்பார்கள். பாற்கடல் பரந்தாமனான மகாவிஷ்ணு சயனக்கோலத்தில் கிடந்து சகல பிரபஞ்சத்தையும் ஆள்கிறான். அவன் கிடப்பதே கடல்தான். எனவே சயனக் கோலத்தில் மகாவிஷ்ணு அரங்கனாக சேவை சாதிக்கும் கோயில்கள் அனைத்தும் உங்களுக்கு ஏற்றவையாகும்.

அதிலும் திருக்கடல் மல்லை என அழைக்கப்படும் மாமல்லபுரம் கோயில் இன்னும் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். கடலும், பெருமாள் பள்ளி கொண்ட கோலத்தில் அருளும் இந்த தலத்தை தரிசிக்கும்போது நிச்சயம் உங்களுக்குள் நல்ல மாற்றம் உண்டாகும். பொதுவாகவே சயனக் கோலத்தில் பாற்கடல் பெருமாளாக தரிசனம் தரும் ஆலயங்கள் உங்களுக்கு நன்மை பயக்கும். அதிலும் கடற்கரையோரம் அருளும் பெருமாளாக இருப்பின் இன்னும் அதிக நற்பலன்களை அள்ளித்தரும். உங்களின் அலைவரிசைக்கு சரியானதாக அந்த ஆலயம் அமைந்திருக்கும். இத்தலம் சென்னைக்கு அருகேயுள்ள மாமல்லபுரத்தில் ஸ்தலசயனப் பெருமாள் எனும் திருநாமத்தோடு திகழ்கின்றது.

Related Stories: