கடகம்

திருமீயச்சூர்

முத்துச் சிதறலாக ஒளிரும் வானவெளியில் நண்டு போல நட்சத்திர கூட்டமைப்பை உடைய தொகுதியை கடகம் என்கிறோம். ‘நண்டு கொழுத்தால் வளையில் தங்காது’ என்பது  போல நாப்பது ரூபாயை கையில் வைத்துக்கொண்டு நாலாயிரத்தை விலை பேசுவீர்கள். நாலு நிமிஷத்தில் பேசுபவரின் நாடி பிடித்துப் பார்ப்பதில் சூரர்கள் நீங்கள். ‘நண்டானுக்கு இடம் கொடேல்’ என்றொரு ஜோதிட மொழி உண்டு. ஏனெனில், எதில் நுழைந்தாலும் தன் அதிகாரத்தையும், ஆளுமையையும் நிலை நிறுத்துவீர்கள். உங்களின் ராசிநாதனான சந்திரனை ஜோதிடம் ‘மனோகாரகன்’ என்று அழைக்கிறது. ஒருவரின் மனதை சந்திரன்தான் தீர்மானிக்கிறது என்று கூறுகிறது. அதனால் வெகு சீக்கிரம் அடுத்தவர்களின் மனதில் இடம் பிடிப்பீர்கள்.

கடக ராசிக்கு இரண்டாம் இடமான வாக்கு ஸ்தானத்திற்கு உரியவனாக சூரியன் வருகிறார். அதனால்தான் என்னவோ சுளீரென்ற கோபத்தால் சுருக்கென்று ஊசி தைத்தாற்போல பேசுவீர்கள். வார்த்தைகளை தீப்பந்தைப்போல அள்ளி வீசுவீர்கள். பிடித்து விட்டால் பாந்தமாக பேசுவீர்கள்.

மூன்றாமிடம் முயற்சி ஸ்தானத்திற்கு அதிபதியாக கன்னி புதன் வருவதால், கஜினி முகமதுபோல தொடர் படையெடுப்பு நடத்தினாலும், எடுத்த வேலையை முடிக்காது விடமாட்டீர்கள். இளைய சகோதரர் மீது பாசம் வைத்திருப்பதாலேயே எந்தப் படையும் உங்களை கண்டு அஞ்சும். நான்காம் இடத்திற்கு துலா சுக்கிரன் அதிபதியாக வருகிறது. சுக்கிரன் கட்டிடக்காரகனாக இருக்கிறான். அதனால் அதிநவீனமாக வீடு கட்ட வேண்டுமென்ற வேட்கை இருக்கும். வசிக்கும் வீட்டையே உங்களில் பலர் சந்திரன்போல பளிச்சென்று வைத்திருப்பார்கள்.

பூர்வ புண்ய ஸ்தானத்திற்கு அதாவது குழந்தையை கூறும் இடமாக விருச்சிக செவ்வாய் வருகிறது. பையன் எவ்வளவு நன்றாகப் படித்தாலும் பாராட்டி கெடுத்து விடக் கூடாது என்று நினைப்பீர்கள். ஆறாம் இடத்திற்கு அதிபதியாக குரு வருகிறார். ‘‘எவ்வளவு வந்தாலும் கையில தங்க மாட்டேங்குது. சரியான ஓட்டை கையா இருக்குப்பா’’ என்று நொந்து கொள்வீர்கள். ஆறாமிடம் என்பது எதிரிகளை உருவாக்கக் கூடிய இடமென்பதாலும், அதற்கு குருவே அதிபதியாகவும் வருகிறார். அதனால், எவர் உங்கள் கொள்கைகளை ஆதரிக்கிறார்களோ அவரே எதிர்ப்பாளராகவும் மாறுவார். மிகையாகப் புகழ்ந்தால் அங்கு ஏதோ புகைகிறது என்று ஒதுங்குங்கள்.

உங்களின் வாழ்க்கைத் துணைவரைப் பற்றி சொல்லும் ஏழாம் இடத்திற்கு அதிபதியாக சனி வருகிறார். திருமண வாழ்க்கை த்ரில்லாக இருக்கும். காரசாரமான விவாதங்கள் பறக்கும். ஏழுக்குரிய சனி மந்தன். ஆனால், சந்திரனின் ஆதிக்கத்திலுள்ள நீங்களோ வாயுவின் வேகமிக்கவர்கள். அதனாலேயே வாழ்க்கைத் துணைவர் உங்களின் விவேக வேகத்தை புரிந்து கொள்ள  மாட்டார். உங்களின் சொந்த ஜாதகத்தில் சுக்கிரன் கெட்டுப்போயிருந்தால் திருமண வாழ்வில் தடுமாற்றங்கள் அதிகரிக்கும். பொருத்தம் பார்க்கும்போது வருங்கால தசாபுக்திகளை கணக்கிட்டு அதற்கேற்ப நல்ல தசாபுக்தியுள்ள துணையை தேர்ந்தெடுப்பது அவசியம்.

பத்தாம் இடத்திற்குரிய ஜீவன ஸ்தானத்திற்கு அதிபதியாக மேஷ செவ்வாய் வருகிறது. உங்களுக்கு பிரபல யோகாதிபதியாகவும் செவ்வாய் இருக்கிறது. பெரிய பதவியிலும், வியாபாரத்தில் சாதிக்கவும் விரும்புவீர்கள். காவல் துறை, ராணுவம், மெரைன் இன்ஜினியரிங், மாதிரி நகரங்கள் உருவாக்குவதில் ஆர்வமோடு அலைவீர்கள்.  சந்திரனின் முழு ஆதிக்கத்தில் கடக ராசி வருவதால் குங்குமம் மணக்கும் கோயில்கள் என்றாலே நீங்கள் குதூகலமாவீர்கள். அப்படிப் பட்ட ஆலயத்தில் ஒன்றுதான் திருமீயச்சூர் லலிதா பரமேஸ்வரி ஆலயம். பொதுவாகவே சந்திரனின் ஆளுமையில் உள்ளவர்களுக்கு அம்பாள் வழிபாடு எப்போதுமே நல்லது. சக்தி வழிபாட்டினுடைய இதயத் துடிப்பு போன்றது லலிதா ஸஹஸ்ரநாமம்.

இங்கு அர்ச்சனை என்றால் அர்ச்சிப்பதே லலிதா ஸஹஸ்ரநாமத்தால்தான். இங்கு லலிதாம்பிகை ராஜதர்பார் போன்று அரியணையில் வீற்றிருக்கிறாள். அகத்தியர் லலிதா நவரத்ன மாலை எனும் அற்புத நூலை இங்குதான் இயற்றினார். கால்களில் கொலுசுகளோடு கொஞ்சும் லலிதாம்பிகையை தரிசியுங்கள் போதும். சந்திரனின் அமிர்த தாரைபோல அவளின் அருட்தாரையில் சில கணங்கள் நின்றாலே போதும். உங்கள் வாழ்வு முழு நிலவாக மலரும்.இத்தலம் கும்பகோணம் - காரைக்கால் மற்றும் மயிலாடுதுறை-திருவாரூர் சாலையிலுள்ள பேரளம் எனும் ஊரிலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது.

Related Stories: