ரிஷபம்

திருவையாறு

குளிர்வான, இதமான, சுகமான சுக்கிரன் ரிஷப ராசியை ஆட்சி செய்கிறது. காளையும், பசுவும் எப்படி மங்களத்தின் அடையாளம்போல, இந்த ராசியில் பிறந்தவர்கள் கால் வைத்த இடத்தில் மங்களம் பெருகும். ஒட்டு மொத்த ராசிகளையும் காலபுருஷன் எனும் உருவமாகக் கொள்வோமாயின், அதில் அந்த புருஷனின் கபாலப் பகுதியே மேஷம். முகம் எனும் முகப்புப் பகுதியையே ரிஷப ராசியாகக் கொண்டிருக்கிறான். சகல கலைகளுக்கும், அழகியல் தத்துவத்திற்கும் அதிபதியான சுக்கிரன் உங்கள் ராசியாதிபதியாகவும் வருவதால் வேறு எவரும் தராத அளவு முகத்திற்கு அத்தனை முக்கியத்துவம் தருவீர்கள்.

படிப்பினை என்ற விஷயத்தை, அதாவது இப்படித்தான் வாழ்வில் இருக்க வேண்டுமென்று உதாரண புருஷராக விளங்குவீர்கள். சுக்கிராச்சார்யார் உங்களின் ராசியாதிபதிக்கு குருவாக இருப்பதால் திருடனுக்கும் அறிவுரை கூறுவீர்கள். பண்டிதர்களுக்கும் கற்றுக் கொடுப்பீர்கள். ‘‘மாடோடு எதிரிடேல்’’ என்பதுபோல, ரிஷப ராசியில் பிறந்தவர்களை எதிர்த்து நின்று போராடுவது மிகவும் கடினம். மாடு முன்னே நகர்ந்தாலும் முட்டும், பின்னால் பதுங்கினாலும் உதைக்கும். எதிரிக்கு சரியான சவாலான இருப்பீர்கள். உங்களின் ராசிக்கு இரண்டாம் இடமான வாக்கு ஸ்தானாதிபதியாக புதன் வருகிறார். எதையும் முதலில் சூசகமாக சொல்வீர்கள். நிறைய சைகை வார்த்தைகளால்தான் அதிகம் பேசுவீர்கள்.

மாம்பழம் வாங்கிக்கொண்டுவா என்பதைக் கூட சைகையிலேயே தெரிவித்து விடுவீர்கள். அதேபோல, இலக்கணத்தில் வரும் வஞ்சப் புகழ்ச்சி அணியை பள்ளிப் பருவத்திலேயே கரைத்துக் குடித்திருப்பீர்கள். ஆடல், பாடல், இசை, அழகு இதற்கெல்லாம் உரிய ரசனைக் கிரகமான சுக்கிரனின் ராசியில் பிறந்ததால் காரணமில்லாமல் அடுத்தவரை கவர்ந்திழுப்பீர்கள். வைரத்தின் சிறு கீற்று ஆகர்ஷிப்பது போல எல்லோரையும் ஈர்த்துக் கொண்டிருப்பீர்கள். உங்களை சுற்றி நிகழும் சம்பவங்களை புறந்தள்ள மாட்டீர்கள். அதிலிருந்து ஏதாவது கற்றுக்கொண்டேயிருப்பீர்கள்.

உங்கள் ராசியிலிருந்து மூன்றாம் இடத்திற்கு சந்திரன் அதிபதியாகிறார். இதற்கு முயற்சி ஸ்தானம் என்று பெயர். அதில் மனோகாரனான, மனதை தீர்மானிப்பவனான சந்திரன் அதிபதியாவதால் மனதிற்குள் முயற்சிகள் உருவானபடி இருக்கும். முயற்சி திருவினையாக்கும், முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் போன்ற பழமொழிகளை நிரூபித்துக் காட்டுவீர்கள். சகோதரன் மீது அதிக அக்கறை காட்டுவீர்கள். எல்லோரும் தாய்மீது பாசம் வைப்பார்கள். நீங்கள் பக்தி செலுத்துவீர்கள். அதுவும் உங்கள் ராசிக்கு நான்காமிடம் சூரியனாக இருப்பதால் தாய் ஸ்தானத்தை குறிப்பதால் ஊருக்கே ஒளி தரும் சூரியன்போல சொந்த, பந்தம் உற்றார் உறவினர் என்று எல்லோரையும் அனுசரிப்பார்கள்.

பூர்வ புண்ணிய ஸ்தானமாக புதன் வருவதால் சூட்சும புத்தி அதிகமாக இருக்கும். அடுத்தவர்களை கணக்கு பண்ணுவதில் கில்லாடிகளாக இருப்பார்கள்.

தந்தையிடம் எவ்வளவு பாசமாக இருந்தாலும், இனந்தெரியாத ஒரு பகை உணர்வும் பாசப்போராட்டத்திற்கும் இடையே ஊசலாடுவீர்கள். காரணம், தனித்துவத்தை செயற்படுத்த நீங்கள் நினைப்பீர்கள், ஆனால், உங்கள் தந்தையோ அவரின் நிழலில் இருக்க வேண்டுமென்று நினைப்பார். உங்கள் ராசிநாதனான சுக்கிரனே எதிரி ஸ்தானமாக இருப்பதால், உங்களுக்கு எதிரி வெளியாட்களோ, பக்கத்திலுள்ளவர்களோ இருக்க மாட்டார்கள். நீங்களே உங்களுக்கு எதிரி. ஏனெனில், உங்கள் பேச்சு, செயல்பாடுகள் போன்ற எல்லாவற்றிற்கும் ஒரு இருக்கும்.

உங்களுக்கு நீங்களே எதிரி என்பது இன்னொரு கோணத்திலும் பொருந்தும். அதாவது, உங்களால் உருவாக்கப்பட்டவர்கள் உங்களுக்கு எதிரியாவார்கள்.

உங்களின் இல்வாழ்க்கைத் துணையாக வருபவர்கள் உங்களைவிட வேகமாக இருப்பார்கள். அதனால், உங்களுடைய ராஜதந்திர வேலைகளை புரிந்து கொள்வதற்கு அவர்களுக்கு பொறுமையிருக்காது. ஆனால், நிர்வாகத்திறமையில் ஈடு இணையற்று இருப்பார்கள்.  உங்கள் ராசியிலிருந்து ஒன்பதாம் இடமென்பது

தந்தையாரை குறிக்கும். சுக்கிரனுக்கு ஒன்பதாம் இடமான அதாவது பாக்கிய ஸ்தானத்திற்கு அதிபதியாக சனி வருவதால் உங்களுடைய வாழ்வின் முக்கிய நிகழ்வில் தந்தையார் பங்கெடுத்துக் கொள்ள முடியாத நிலை இருக்கும். ஆனால், ஒன்று உங்கள் பெற்றோர் காசு, பணத்தைவிட புண்ணியத்தை உங்களுக்காக சேர்ப்பார்கள்.

ரிஷபம் என்பது நந்திகேஸ்வரரையும் குறிப்பதால் பொதுவாகவே உங்களுக்கு பிரதோஷ காலத்தில் இரு கொம்புகளுக்கிடையே ஈசனை தரிசிப்பது நல்லது. அதுபோல நந்திகேஸ்வரனுக்கு ஏற்றம் கொடுத்த தலமும், நந்தியம் பெருமானுக்கு திருமணம் செய்து வைத்த திருவையாறு ஐயாறப்பரையும், அறம்வளர்த்த நாயகியையும் தரிசனம் செய்யுங்கள். எப்போது உங்களுக்கு என்ன மனவருத்தம் ஏற்பட்டாலும் பசுவிற்கு ஒரு கொத்து அகத்திக்கீரை போன்று ஏதேனும் கொடுங்கள். நீங்கள் குடியிருக்கும் ஊருக்கு அருகே பசுபதீஸ்வரர் எனும் பெயரில் கோயில் இருந்தால் அடிக்கடி சென்று தரிசியுங்கள்.

Related Stories: