அருட்பெரும்ஜோதி, தனிப்பெருங்கருணை...

கருணையோடு மனதை புருவ மத்தியில் வைத்து இறைவனோடு பேசவேண்டும். அன்பு ஊற்றாக பெருக்கெடுத்தால் கண்டிப்பாக அவனை கண்டு மகிழலாம். இதுவே அகவழிபாடு. அருட்பெரும் ஜோதியாக  தரிசிப்பது கோடி சூரிய பிரகாசமுடையது. ஆரம்பமும் முடிவும் புருவ மத்திதான். வேறு இடத்தில் அவனைத் தேடாதீர்கள். புற வழிபாட்டில் அவனைக்காணமுடியாது. அகவழிபாட்டில்தான் இறைவனை ஜோதி சுடராக காணமுடியும். ‘‘எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே எல்லாம் வல்லான்தனையே ஏத்து’’

-இதுவே அகவழிபாடு.

-இதைத்தான் வலியுறுத்தினார் வள்ளல் ராமலிங்க அடிகள்.

தனது சன்மார்க்க வழியின் சாராம்சத்தை  பேருபதேசம் என்ற உரையின் வாயிலாக 1873ல்  தெரிவித்தார் வள்ளலார். அந்த ஆண்டின் ஐப்பசி 7ந்தேதி புதன்கிழமை காலை  வடலூரை அடுத்த மேட்டுக்குப்பம் சித்தி வளாக மாளிகையின் முன்னே முதல் முறையாக கொடி கட்டிய பின் நிகழ்த்திய உரைதான் பேருபதேசம்.வாழ்வியல் தத்துவத்தை, கடவுளை, ஏன் தன்னையே, நமக்கு உணர்த்திய இந்த பேருபதேசத்தைக்  கேட்போம், வாருங்கள்.

“இங்குள்ள நீங்கள் அனைவரும் இதுவரை இருந்தது போல்  இனியும் வீணாக காலம் கழிக்க வேண்டாம். இன்று முதல் நல்ல சிந்தனையில் இருந்துகொண்டிருங்கள். அச்சிந்தனை என்னவென்றால் நாம் நம்முடைய நிலை எப்படிப்பட்டது, நம்மைக் காக்கிற தெய்வத்தின் நிலை எப்படிப்பட்டது என்பனவாகும். உங்கள் அறிவிற்கும் ஒழுக்கத்திற்கும் உண்மையாக இருங்கள்.  இவ்வாறு செய்தால்  நமது ஆன்ம அறிவை விளக்கமின்றி  மூடிக்கொண்டிருக்கிற  பல திரைகளில் அழுத்தமாய் இருக்கிற மூலத்திரையாகிய  பச்சைத்திரை என்னும்  அறியாமைத் திரை விலகிவிடும். அது நீங்கினால் மற்ற திரைகள் அதிக விரைவில் நீங்கிப்போய்விடும்.

இத்திரைகள் நீங்க வேண்டுமென தெய்வத்தை எண்ணியும் வேண்டியும் நமது குறையை  ஊன்றி சிந்தித்தும் ஆண்டவர் நமக்கு உண்மை தெரிவிக்க வேண்டும் என இடைவிடாத முயற்சியுடன் இருந்தால், தெரிய வேண்டியதை தெரிந்து கொள்ளலாம். ஆண்டவர் விரைவில் நமக்கு உண்மைகளை தெரிவிக்கப்போகிறார்.  முன்னாளில் அடர்ந்த காடுகளுக்குள் சென்று நூறாயிரம் ஆண்டுகள் தவம்செய்து பல சக்திகளை அடைந்தார்கள், யோகிகள். அதன் மூலம் அறியாமையை விலக்கிக் கொண்டார்கள். இப்போதோ இறைவனை உள நெகிழ்வோடு நினைப்பதிலும் அருட்பாக்களை  உருக்கமாகப் பாடுவதிலும் யோகிகள் பெற்ற  சக்திகளை விட கோடி பங்கு கூடுதலாக பெற்று மேலான அறிவு விளக்கமும் பெற முடியும். ஏனெனில் இது சுத்த சன்மார்க்க காலம்.

இந்த  நூற்றாண்டில்  நிகழ்ந்து  கொண்டிருக்கும் பேரழிவுகள், கூச்சல்குழப்பங்கள், வன்முறை ஆகியவை  மக்களுக்கு பக்குவத்தை அளிக்கவும், அறியாமையை விலக்கவும் உண்டாயின. ஆதலால் நாம் அனைவரும்  இன்று முதலே நல்ல முயற்சியுடனே இருந்தால் சுத்த சன்மார்க்க காலத்தின் பயனை அடையலாம். இதுவரை நாம் பார்த்தும் கேட்டும் கவனத்தில் வைத்துக்கொண்டிருந்த வேதம், ஆகமம், புராணம், இதிகாசம்  முதலிய கலைகள் எவற்றிலும் கவனத்தைச் செலுத்த  வேண்டாம்.  அவற்றிலெல்லாம் தெய்வம் இன்னமாதிரி என்றும் தெய்வத்தின் உண்மை இன்னவென்றும் கொஞ்சமேனும் வெளிப்படையாக சொல்லாமல் மண்ணைப் போட்டு மறைத்துவிட்டார்கள். மேற்சொன்ன கலைகளில் ஓரளவு கர்மசித்திகளை கற்பனையாகச் சொல்லியிருக்கிறார்கள். இத்தகைய அற்ப சித்திகளை அடைய லட்சியம் வைத்தால் முக்கிய லட்சியமாகிய இறையாமை கிட்டாது.

எனவே, அருட்பெரும்ஜோதி ஆண்டவரிடத்தே லட்சியம் வைக்க வேண்டும். மேலும் சைவம், வைணவம்  முதலிய சமயங்களிலும் வேதாந்தம் முதலிய சித்தாந்தங்களிலும் லட்சியம் வைக்க வேண்டும். இவற்றின் மூலம் ஒப்பற்ற பெருவாழ்வில் இயற்கை உண்மை என்னும் ஆன்மானுபவத்தை பெற்றுக் கொள்ள முடியாது. இவற்றுக்கெல்லாம் சான்றாக நானே இருக்கிறேன். நான் முதலில் சைவ சமயத்தில் வைத்துக்கொண்டிருந்த லட்சியம் எவ்வளவு என்று சொல்லமுடியாது. அப்போது எனக்கு கொஞ்சம் அற்ப அறிவாக இருந்தது. இப்போது ஆண்டவர் என்னை ஏறாத நிலைக்கு மேலேற்றி இருக்கிறார். எல்லாவற்றையும் விட்டுவிட்டதால் வந்த லாபம் இது. நீங்களும் விட்டுவிட்டால் என்னைப்போல் பெரிய லாபத்தை அடைவீர்கள். தயவு என்னும் கருணைதான்  எனை ஏறா நிலைமிசையேற்றிவிட்டது. அந்த தயவுக்கு ஒருமை வரவேண்டும்.  

 இப்போது  எனது  அறிவு  அண்டங்களுக்கு அப்பாலும் கடந்திருக்கிறது. அது அந்த ஒருமையினாலேதான் வந்தது. நீங்களும்  என்னைப்போல்  ஒருமையுடனிருங்கள். இப்போது நீங்கள் இதுவரைக்கும் ஒழுக்கத்திற்கு வராமல் எவ்வளவு தாழ்ந்த பழக்கத்தில்  இருந்தாலும் பரவாயில்லை. இனிமேல் நீங்கள் நல்லொழுக்கத்திற்கு வருவதுடன் மற்றவர்களையும் எவ்வித தந்திரமேனும் செய்து நல்வழிக்கு அழைத்து வரவேண்டும். முன்புபோல் இப்போது அதிக முயற்சிகள் செய்யவேண்டியதில்லை. எளிதில் மரணமில்லா பெருவாழ்வு பெறமுடியும். நானும் ஆண்டவரிடத்தில் இவ்வுலகத்திலுள்ள எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டி வருகிறேன். தெய்வத்தை தெரிந்து கொள்ளாது இந்த உலக மக்கள் என்னைத் தெய்வமெனச் சுற்றுகிறார்கள். அய்யே, நம் சகோதரர்கள்  தெய்வத்தை தெரிந்து கொள்ளாததால் என்னைச் சுற்றுகிறார்கள் என உள்ளும், புறமும் பரிதாபப்பட்டுக்கொண்டே இருந்தேன். இருக்கின்றேன். இருப்பேன்.

ஒரு பழத்தை தின்றால்தான் ருசி தெரியும். ருசி தெரியாத பழத்தின் மீது ஆசை வராது. அதுபோல தெய்வத்தை  உள்ளபடி அனுபவித்தால்தான் தெய்வத்திடம் ஆசை வரும். இதற்காக நல்ல சிந்தனையில்இருங்கள். அந்த சிந்தனை எப்படிப்பட்டது என்றால் வானில் சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் எப்படிப்பட்டவை? இத்தேகத்தின் தன்மை என்ன? கண் புருவம், அக்குள், இவற்றில் மட்டும் ஏன் முடி வளருகிறது? கால் கைகளில் உள்ள விரல்களில் நகம் முளைப்பது ஏன் என உங்களுக்குள் விசாரணை செய்து கொண்டிருங்கள். மக்கள் இது குறித்து கேலியாகக் பேசி ஏளனம் செய்வார்கள். அப்படி செய்வது இயற்கை. ஏனெனில் அவர்களுக்கு உண்மை தெரியாது. நீங்கள் அவற்றை பொருட்படுத்த வேண்டாம். ஆணுக்கு கடுக்கனும், பெண்ணுக்கு மூக்குத்தியும்  தேவை எனில் அதற்குரிய ஓட்டைகளை செய்து, நம்மை இறைவன் அனுப்பியிருக்கமாட்டாரா என்று  சிந்தித்தீர்களானால், அவற்றை அணிய மனம் வராது. இப்படியே ஆன்ம விசாரணை செய்து கொண்டிருந்தால் பொன் பொருள் மேல் நாம் வைத்திருக்கும் ஆசைகள் குறையும். நிராசை உண்டாகும். நிராசை உண்டானால் ஒருமை வரும். ஒருமையுடன் இருந்தால் தயவு வரும். தயவுடன் இருந்தால் மரணமில்லா பெருவாழ்வு கிடைக்கும்.

 இதுவரை தெய்வத்தின் உண்மையை தெரியவிடாது அசுத்த மாயாகாரிகளாகிய சித்தர்கள் மறைந்து விட்டார்கள். இனி சுத்த சன்மார்க்கம் உலகெலாம் பரந்து விரியும். தயவுடையார் எல்லோரும் சுத்த சன்மார்க்க சங்கத்தவராவர்.

இதற்கு சான்றாக சன்மார்க்க கொடி வடலூர் மேட்டுக்குப்பம் சித்தி வளாகத் திருமாளிகையில் இன்று பட்டொளி வீசிப் பறக்கவிடப்பட்டுள்ளது. இக்கொடி உண்மையில்  யாதெனில் நமது நாபி முதல் புருவ மத்திவரையில் ஒரு நாடி இருக்கிறது.  இந்த நாடி நுனியில் புருவ மத்தியின் உட்புறத்தில் ஓர் சவ்வு தொங்குகிறது. அதன் அடிப்புறம் வெள்ளை வர்ணம். மேற்புறம் மஞ்சள் வர்ணம். அச்சவ்வின் கீழ் ஓர் நரம்பு ஏறவும் இறங்கவும் உள்ளது. இந்த அடையாளக் குறிப்பாகவே இக்கொடி கட்டப்பட்டுள்ளது. அருட்பெரும்ஜோதியின் உண்மை, தலை நடுவுள் தனிப் பெருங்கருணையோடு தீபச்சுடர் போல பிரகாசிக்கிறது. அதுவே ஞானக் கண்ணாடி வழி மஞ்சளும் வெள்ளையுமாய் புருவ மத்தியில் திரையில் காண்கிறான் சன்மார்க்கி. இக்கொடி கட்டப்பட்டுவிட்டதால் இனி எல்லோரும் உண்மையை உள்ளபடி அறிந்து கொள்வார்கள். நல்ல சிந்தனையுடனும் நல்லொழுக்கத்துடனும் இருந்துகொண்டு உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டவர் எல்லா நன்மைகளையும் அருள்வார். இது சத்தியம்... சத்தியம்...சத்தியம்... இது ஆண்டவர் கட்டளை.

அருட்பெரும்ஜோதி! அருட்பெரும்ஜோதி!

தனிப்பெருங்கருணை! அருட்பெரும்ஜோதி!”

Related Stories: