வேலனும் வெறியாடலும்

மிகப் பழங்காலத்தில் குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த மக்கள் முருகனை முக்காலமும் உரைக்கும் தெய்வமாகப் போற்றினர். முருகன் அருளால் எதிர்காலத்தின் பலனைக் கணித்து உரைக்கும் பூசாரி வேலன் எனப்பட்டான். அவன் முருகனைப் போலவே வேடம் பூண்டிருந்ததுடன், தனக்குரிய அடையாளமாக நீண்ட வேலையும் கையில் ஏந்தி இருந்தான். இதையொட்டி அவன் வேலன் எனப்பட்டான். இவனைப் படிமத்தான் எனவும் அழைத்தனர்.

மக்கள் அவ்வப்போது குறைகளைத் தீர்க்க வேண்டி வேலனை அழைத்து வெறியாட்டு நிகழ்த்துவர். அப்போது அவன் முருகனைப் போலவே சாதிக்காய் ‘தக்கோலக்காய்' காட்டு மல்லிகை, வெண்தாழிகை முதலியவற்றை இணைத்துக் கட்டிய கண்ணியையும் மாலையையும் அணிந்தான். சிவந்த ஆடை உடுத்திக் கச்சையை இழுத்துக் கட்டிக் காலில் கழலணிந்து வெட்சி மாலைகளைச் சூடி, காதுகளில் அசோகந்தளிர்களைச் சொருகிக் கொண்டு தன்னை அலங்கரித்துக் கொள்வான்.பிறகு சிறுபறைகளும் குழல்களும் முழங்க, மகளிரோடு ேசர்ந்து ஆடிப்பாடி முருகனைப் புகழ்ந்து பாடுவான்.

அன்பர்கள் சேர்ந்து முருகனுக்குச் சிறுகடுகு, வெண் நெல், தினை, செம்மலர்கள் தூவி வழிபாடு செய்தனர். அப்போது அந்த வேலன் மீது

முருகப் பெருமான் இறங்கி எதிர்காலத்தில் நடக்கப் போவதை உரைத்தான். இவ்வாறு நிகழ்த்தப்படும் பூசையை வெறியாட்டு அயர்தல் என்பர்.

இதன் மூலம் மக்கள் தங்களின் நோய்களைத் தீர்த்துக் கொண்டதுடன் எதிர் காலத்தையும் அறிந்தனர் என்று இலக்கியங்கள் கூறுகின்றன. இதனைப் படிமக்கூத்து என்றும் அழைத்தனர்.கேரளாவில் இப்போது இவ்வகை வெறியாடல் நிகழ்த்தப்பட்டு, எதிர்காலத்தை அறிகின்றனர். இதனை வெளிச்சப்பாடு என்று அழைக்கின்றனர்.

அருண்

Related Stories: