கற்றாயோ காக்கைக் குணம்!

குறளின் குரல்-140

நம் மரபில் காக்கைக்கு முக்கிய இடம் உண்டு. காக்கை பன்னெடும் காலமாய் நம் ஆன்மிக வானில் பறந்து கொண்டே இருக்கிறது.`தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான்’ என ஒவ்வொருவரும் தம் பொருளாதாரத்தை ஐந்தாகப் பங்கிட்டு, இறந்தவர்க்கான கடமை, தெய்வ வழிபாடு, விருந்தினரை உபசரித்தல், உறவினர்க்கு உதவுதல், தன்னைப் பாதுகாத்துக் கொள்ளல் எனச் செலவு செய்ய வேண்டும்’

என்கிறது திருக்குறள்.

`தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தான் என்றாங்கு

ஐம்புலத்தா றோம்பல் தலை’

(குறள் எண் 43)

 வள்ளுவம் தென்புலத்தார் எனக் குறிப்பிடுவது காலஞ்சென்ற உறவினர்களையே. நீத்தார் கடன் செய்ய வேண்டும் என வள்ளுவம் வலியுறுத்துகிறது. நீத்தாரைப் பித்ருக்கள் என்கிறோம். அந்தப் பித்ருக்களின் வடிவமாக நாம் காகங்களைத்தான் காண்கிறோம்.அமாவாசை, திவசம், திதி போன்ற நேரங்களில் பித்ருக்களுக்குப் படையல் நிகழ்த்துகிறோம். அதாவது காக்கைக்கு உணவளிக்கிறோம். காக்கை வடிவில் நம் முன்னோர் அந்த உணவை ஏற்கிறார்கள் என்பது நம் நம்பிக்கை.காக்கையைப் பற்றித் திருக்குறள் இரண்டு குறட்பாக்களில் பேசுகிறது.

`பகல் வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்

வேந்தர்க்கு வேண்டும் பொழுது!’

(குறள் எண் 481)

காக்கையை விடக் கோட்டான் வலிமையானதுதான். ஆனால், கோட்டானுக்கு ஒரு சங்கடம் உண்டு. அதற்குப் பகலில் கண் தெரியாது. அந்தக் கோட்டானை காக்கை பகல் நேரத்தில் வென்றுவிடும்.வேந்தர்கள், அவர்களை விட வலிமையானவர்களைக்கூட வெல்ல முடியும். பகைவர்களின் பலவீனமான தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டும். பின் அந்த நேரத்தில் போர் தொடுக்க வேண்டும் என்கிறார், வள்ளுவர்.

சுற்றத்தார் சூழ வாழ்வதென்பது ஓர் ஆனந்தமான வாழ்க்கை.

அப்படிச் சுற்றத்தார் சூழ்ந்திருக்கும் பேறு யாருக்கு வாய்க்கும்? தாம் பெற்ற செல்வத்தைச் சுற்றத்தாரோடு பகிர்ந்து கொள்பவர் யாரோ அவரையே சுற்றத்தார் சூழ்ந்திருப்பர்.காக்கை எப்போதும் தனியே உண்பதில்லை. குரல் கொடுத்து தன் இனத்துப் பிற காக்கைகளை அழைத்து அவற்றோடுதான் உணவுண்ணும். காக்கைபோன்ற இயல்புடையவர்க்கே சுற்றத்தாரின் அன்பு கிட்டும்.

`காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்

அன்ன நீரார்க்கே உள.’

(குறள் எண் 527)

சனீஸ்வரக் கடவுளின் வாகனம் காக்கைதான். வாகனம் மட்டுமல்ல, சனீஸ்வர பகவானின் ஆடையும் கறுப்புத்தான். ஏழரை நாட்டுச் சனியின் பாதிப்பால் அவதிப்படுபவர்கள் நவகிரகங்களில் ஒன்றான சனீஸ்வரனுக்கு கறுப்பு வஸ்திரம் சார்த்தி வழிபட்டால் பாதிப்பு நீங்கும் என்பது ஒரு நம்பிக்கை.  

திருக்குறளில் பறந்த காக்கை, ராமாயணத்திலும் பறக்கிறது. ராமன் சீதை மடியில் படுத்துக் கண்ணயர்ந்திருக்கிறான். அப்போது ஒரு காகம் சீதையைத் துன்புறுத்துகிறது. கண்விழித்த ராமன் அருகேயிருந்த ஒரு புல்லை எடுத்து அதையே அஸ்திரமாக்கி காகத்தின்மேல் ஏவுகிறான்.

தன்னைத் துரத்தும் புல்லிலி ருந்து தப்பிக்கவேண்டிக் காகம் ஈரேழு பதினான்கு உலகங்களுக்கும் சென்று யார்யாரையோ வேண்டுகிறது. எல்லோரும் கைவிரிக்கவே மறுபடியும் வந்து சீதையையே தஞ்சமடைந்து அவள் காலில் விழுகிறது.சீதை அதன் தலையை மெல்லத் திருப்பி ராமபிரானை நோக்கி வைக்கிறாள். காகத்தை மன்னித்துவிடுமாறு வேண்டுகிறாள். ராமன் மனம் கனிந்து தான் எய்த அஸ்திரத்தின் இலக்காக அதன் ஒரு கண்ணை மட்டும் வாங்கி அதைத் தப்ப விடுகிறான். `வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்' என்ற பழமொழிக்குக் காரணமான சம்பவம் இதுதான்.

 

சுந்தர காண்டத்தில் சீதாப் பிராட்டி அனுமனிடம் இச்செய்தியை அடையாளச் செய்தியாகக் கூறுவதாய்க் கம்பர் அமைக்கிறார்.

`நாகம் ஒன்றிய நல்வரையின் தலைமேல்நாள்

ஆகம் வந்து எனை அள்உகிர் வாளின் அளைந்த

காகம் ஒன்றை முனிந்து அயல்கல்எழு

புல்லால்

வேகவெம்படை விட்டது மெல்ல விரிப்பாய்! ’

 - என்பது கம்பர் பாடல்....

சங்க இலக்கியத்தில், நெய்தல் நிலத்துக்குரிய பறவையாகக் கடற் காகம் சொல்லப்பட்டுள்ளது. ஐங்குறுநூறில் `சிறுவெண் காக்கைப் பத்து’ எனப் பத்துப் பாடல்கள் உள்ளன. `பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை’ என அந்தப் பத்துப் பாடல்களும் தொடங்குகின்றன.சிறுவெண் காக்கை வாழும் பகுதியைச் சேர்ந்தவன் தலைவன். தலைவியும் தோழியும் தலைவனைப் பழித்தும் போற்றியும் சொல்லும் செய்திகள் இந்தப் பாடல்களில் இடம் பெற்றுள்ளன.

சங்க காலத்தில் `காக்கை பாடினியார்’ என்றே ஒரு பெண்பாற் புலவர் இருந்திருக்கிறார். இவரது பாடலில் வரும் காக்கை பற்றிய செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்து, இவரைக் காக்கை பாடினியார் என்றே அழைத்தனர்.

`திண்தேர் நள்ளி கானத்து அண்டர்

பல்ஆ பயந்த நெய்யின் தொண்டி

முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ்சோறு

எழுகலத்து ஏந்தினும் சிறிது என் தோழி

பெருந்தோள் நெகிழ்ந்த செல்லற்கு

விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே’..

(குறுந்தொகைபாடல் எண் 210 )

தலைவனின் வருகை தாமதப்பட்டது. அவனை எதிர்நோக்கி வாடியிருந்தாள் தலைவி. அப்போது காக்கை கரைந்தது. தலைவன் வந்துவிடுவான், காக்கை நிமித்தம் காட்டுகிறது எனச் சொல்லித் தலைவியை ஆறுதல் படுத்தினாள் தோழி.இப்படித் தலைவி ஆறுதல் அடைய உதவி செய்ததற்காகக் காக்கைக்கு எவ்வளவு உணவு கொடுத்தாலும் தகும் என்கிறாள் தோழி. காக்கை கரைந்தால் விருந்தினர் வருவார்கள் என்ற நம்பிக்கை சங்க காலம் தொட்டே இருந்து வருகிறது என்பதைப் புலப்படுத்தும் அழகிய பாடல் இது.  

இன்றுகூட காகம் கத்தினால் `இன்று எந்த விருந்தாளி வரப் போகிறார் என்று தெரியவில்லையே? கூடுதலாக ஒரு கைப்பிடி அரிசியைக் குக்கரில் வைத்துவிடுவதுதான் நல்லது’ என்று பெண்மணிகள் கூறுவதுண்டு.

*காளமேகப் புலவர் காக்கைக்கும் கூகைக்கும் ஆகாது என்ற கருத்தை மையமாக்கி `க’ என்ற எழுத்தின் வர்க்கத்திலேயே ஒரு முழுப் பாடலை எழுதியிருக்கிறார். சமத்காரமான அந்தப் பாடல் இதோ:

`காக்கைக் காகா கூகை, கூகைக் காகா காக்கை

கோக்குக்கு காக்கைக்கு கொக்கொக்க - கைக்கைக்குக்

காக்கைக்கு கைக்கைக் காகா’

`காக்கைக்குக் கூகை இரவில் வெல்லுதற்கு ஆகாது. கூகைக்குக் காக்கை

பகலில் வெல்லுதற்கு ஆகாது. எனவே, பகைநாட்டை வெல்ல விரும்பும் அரசன் தக்க நேரத்திற்காகக் கொக்கைப் போல் காத்திருக்க வேண்டும்’ என்பது பாடலின் பொருள். `பகல் வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது!’  என்ற திருக்குறளின் விளக்கமே இப்பாடல் என்று சொல்லத் தேவையில்லை.

காகங்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய குணங்கள் என்னென்ன என்பதை ஒரு பழைய வெண்பா பட்டியலிடுகிறது.

`காலை எழுந்திருத்தல் காணாமலே புணர்தல்

மாலை குளித்து மனை புகுதல் - சால

உற்றாரோ டுண்ணல் உறவாடல் இவ்வாறும்

கற்றாயோ காக்கைக் குணம்.’

மகாகவி பாரதியாரின் தனிப்பாடல்

களில் `காலைப்பொழுது’ என்றொரு கவிதை உண்டு. தமது முப்பெரும் பாடல்களில் ஒன்றான குயில் பாட்டில், குயிலைப் பற்றியும் குரங்கைப் பற்றியும் மாட்டைப் பற்றியுமெல்லாம் பாடிய பாரதியார், `காலைப் பொழுது’ பாடலில் காகங்களைப் பற்றிப் பாடுகிறார். `காலைப் பொழுதினிலே கண்விழித்து’ எனத் தொடங்கும் அந்தப் பாடலில் காகத்தைப் பற்றி வரும் பல வரிகளில் சில வரிகள் இங்கே:`தென்னை மரக்கிளைமேல் சிந்தனையோ டோர்காகம் வன்னமுற வீற்றிருந்து வானை முத்த மிட்டதுவே.

தென்னைப் பசுங்கீற்றைக் கொத்திச் சிறுகாக்கை மின்னுகின்ற தென்கடலை நோக்கி விழித்ததுவே வன்னச் சுடர் மிகுந்த வானகத்தே தென்திசையில் கன்னங் கருங்காக்கைக் கூட்டம் வரக் கண்டதங்கே.’ ...

திரைப்பாடல் வரிகளிலும் காகங்கள் பறக்கின்றன. பராசக்தி படத்தில் ஆர். சுதர்சனம் இசையமைப்பில் உடுமலை நாராயணகவி எழுதிய காக்காய் பற்றிய பாடல் ஒன்று உண்டு. சிதம்பரம் ஜெயராமன் பாடி சிவாஜி கணேசனின் அற்புத நடிப்பால் புகழ்பெற்ற பாடல் அது.

`கா..கா..கா...கா..கா..கா..

ஆகாரம் உண்ண எல்லோரும் ஒன்றாக

அன்போடு ஓடிவாங்க அந்த

அனுபவப் பொருள் விளங்க...காக்கை

அண்ணாவே நீங்க அழகான வாயால்

பண்ணாகப் பாடுறீங்க...காக்காவென

ஒண்ணாகக் கூடுறீங்க..’

அன்புக் கரங்கள் திரைப்படத்தில் கே.வி. மகாதேவன் இசையமைப்பில் டி.எம்.எஸ். குரலில் ஒலிக்கும் கண்ணதாசன் பாடலொன்று, `காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும் அன்ன நீரார்க்கே உள’ என்ற குறள் கருத்தை உள்வாங்கி  எழுதப்பட்டிருக்கிறது.

`ஒண்ணாயிருக்கக் கத்துக்கணும் - இந்த

உண்மையைச் சொன்ன ஒத்துக்கணும்

காக்காக் கூட்டத்தைப் பாருங்க! - அதுக்குக்

கத்துக் கொடுத்தது யாருங்க?’

 காக்கையைக் காட்டிக் குழந்தைகளுக்குச் சோறூட்டும் நாம், பறவைகள் மேலும் விலங்குகள் மேலும் அன்பு செலுத்த வேண்டும் என்பதைக் குழந்தைப் பருவத்திலேயே பாடல்கள் மூலம் கற்பிக்கிறோம்.

 

`காக்கா கண்ணுக்கு மை கொண்டுவா!

குருவி கொண்டைக்குப் பூ கொண்டுவா!

பசுவே கிண்ணத்தில் பால்கொண்டுவா!

பச்சைக் கிளியே பழம் கொண்டுவா!’

 என்பது மிகப் புகழ்பெற்ற சிறுவர் பாடல்.

*பாட்டி வடைசுட்ட கதையும் காகம் வடையைத் திருடி, பின் நரியிடம் ஏமாந்த நிகழ்வும் எல்லோரும் அறிந்தவை. இப்போது இன்றைய சூழலுக்கேற்ப ஒரு புதுக்கதை புனையப்பட்டுள்ளது!

காகம் பாட்டிக்கு வடையைப் பொட்டலம் கட்ட உதவுகிறது. திருட்டுச் சொத்து நிலைக்காது என்பதைக் காகம் தன் முந்தைய அனுபவத்தால் புரிந்துகொண்டு விட்டது! பாட்டி ஒரு வடையைக் கூலியாகத் தர, அதைத் தன் அலகில் ஏந்தித் தன் கூட்டுக்குச் சென்றது காகம்.

கீழே வந்த நரி, `நீ நன்றாகப் பாடுவாயே, ஒரு பாட்டுப் பாடு!’ என்றது. ஏற்கெனவே புகழ்ச்சிக்கு மயங்கியதால் ஏமார்ந்த அனுபவம் இருந்ததால் காகம், அலகைத் திறக்காமலேயே காலால் தன் கூட்டிலிருந்த டேப் ரிகார்டரை அழுத்தியது! அதிலிருந்து எழுந்த `கா கா!’ என்ற சப்தத்தைக் கேட்ட நரி குழம்பியது. ஒலி வருகிறது, ஆனால், வடை கீழே விழவில்லையே?

 ஏமார்ந்த நரி திராட்சைப் பழத் தோட்டத்திற்குச் சென்றது. எம்பி எம்பிப் பார்த்தும் பழம் எட்டவில்லை. எனவே, இது காரில் அலங்காரமாக மாட்டப்படும் பிளாஸ்டிக் திராட்சைப் பழம் என எண்ணி சமாதானம் அடைந்தது!

வடை தின்ற காகத்திற்கு நல்ல தாகம். அது பானையில் கீழே சிறிதளவே தண்ணீர் இருப்பதைப் பார்த்தது. அருகில் இருந்த கல்லையெல்லாம் பானைக்குள் தூக்கிப் போட்டது. கல் தீர்ந்து போயிற்றே தவிர, பானைத் தண்ணீர் மேலே வரவில்லை. யோசித்த காகம், சர்பத் கடைக்குப் பறந்து சென்று ஒரு ஸ்ட்ராவை எடுத்துவந்து அந்த ஸ்ட்ரா மூலம் பானைத் தண்ணீரைக் குடித்தது என முடிகிறது புதிய கதை! பொங்கலை அடுத்த நாள் கனு. காக்கைக்கு அன்னம் வைத்தல் என்பதை ஒரு பண்டிகையாகவே கொண்டாடுகிறோம் நாம். சகோதரர்க்கு நன்மைகள் பெருக வேண்டி சகோதரிகள் மேற்கொள்ளும் சடங்கு அது.

 கூடு கட்டத் தெரியாத குயில்கள் காகத்தின் கூட்டில்தான் முட்டையிடும் என்றும் அப்பாவிக் காகம் அதை அடைகாத்துக் குஞ்சு பொரிக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இறக்கை முளைத்துக் குக்கூ எனக் கூவிக்கொண்டு குயில் பறந்துபோகும்போதுதான் காகத்திற்கு அது ஏமார்ந்ததே

தெரியுமாம்.காகம் மட்டும் இல்லாவிட்டால் இந்தியாவின் நிலை என்ன ஆகும்? நம் மக்கள் பெரிய அளவில் சுகாதாரத்தைப் பேணுபவர்கள் அல்ல. ஆனாலும் இந்தியா இன்று ஓரளவேனும் தப்பிப் பிழைத்திருக்கிறது என்றால் அது காகங்களால் தான்.

செத்த எலி முதல் எத்தனையோ சுகாதாரக் கேடானவற்றைக் கொத்தித் தின்று இந்தியாவைச் சுத்தம் செய்துவிடுகிறது காகம். அதனால்தானே அதை ஆகாயத் தோட்டி என்கிறோம்?மரங்கள் வளரக் காகம் பெரிய அளவில் பறந்து பறந்து உதவுகிறது. காகம் சாப்பிட்ட பழங்களின் விதைகள் அதன் எச்சத்தில் கலந்து விழும். பல இடங்களில் அது பறப்பதால் எச்சமும் பல இடங்களில் விழுவதால் பற்பல இடங்களில் மரங்கள் முளைக்கும். எனவே நாம் விரும்பும் பசுமைப் புரட்சி தோன்றுவதற்குக் கறுப்புக் காகம் செய்யும் உதவி முக்கியமானது.  

முகஸ்துதி செய்வதைக் காக்காய் பிடித்தல் என்கிறோம். காக்காய் பிடிப்பதற்கும் முகஸ்துதிக்கும் என்ன சம்பந்தம்? ஒரு சம்பந்தமும் இல்லை என்கிறார் கி.வா.ஜகந்நாதன். `கால்கை பிடித்தல்’ என்பதே `காக்கை பிடித்தல்’ என மருவியிருக்க வேண்டும் என்கிறார்.

நாம் காக்காய் பிடித்து முன்னேற வேண்டாம். உழைத்தே முன்னேறுவோம். காகங்களைப் போல் ஒன்றாயிருக்கக் கற்றுக் கொள்வோம். காகங்களைப் போலவே நமக்குக் கிடைத்ததை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுத்து நாமும் வாழ்வோம். மற்றவரையும் வாழவைப்போம். காகங்களின் மூலம் வள்ளுவர் அறிவுறுத்தும் கருத்துகளைப் பின்பற்றுவோம்.

திருப்பூர் கிருஷ்ணன்

Related Stories: