மனநோய் தீர்க்கும் தலங்கள்

சங்கரன்கோயிலில் உள்ள கோமதியம்மன் முன் உள்ள ஸ்ரீசக்ரத்தில் அமர்ந்து தியானம் செய்தால் மன நோய் குறைபாடுகள் நீங்கும். சங்கரனும், நாராயணனும் ஓருருவில் சங்கரநாராயணனாய் அருளும் அற்புதத் தலம் இது.

திருச்சி - குணசீலத்தில் உள்ள பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் சந்நதி மன நோய்களைத் தீர்ப்பதில் நிகரற்றது. கையில் செங்கோல் ஏந்திய ஸ்ரீனிவாசனை இத்தலத்தில் தரிசிக்கலாம்.

திருமுருகன் பூண்டி: முருகநாதர் மன நோய்களைத் தீர்த்தருள்பவராக பக்தர்களால் கொண்டாடப்படுகிறார்.

கேரளாவில் உள்ள சோட்டாணிக்கரை பகவதியம்மன் மனநோய்களை ஓட ஓட விரட்டுபவள். முப்பெருந்தேவியரும் ஓருருவாய் இங்கு அருள்வதாக ஐதீகம்.

அரக்கோணம் அருகே உள்ள சோளிங்கபுரத்தில் அருளாட்சி புரியும் யோகநரசிம்மமூர்த்தியை நினைத்தாலே மனநோய்கள் தொலையும். வருடம் முழுதும் யோகத்தில் ஆழ்ந்த இந்த நரசிம்மர் கார்த்திகை மாதம் மட்டும் கண் திறப்பதாக ஐதீகம்.

திருப்போரூர் கந்தசாமியின் பிராகாரத்தில் உள்ள சிதம்பர சுவாமிகளால் நிறுவப்பட்ட சக்கரத்தை தரிசித்தால் மனநோய்கள் அகலும். கருவறையில் உள்ள முருகப்பெருமானுக்கு இணையாக இந்த சக்கரம் போற்றப்படுகிறது.

சென்னை - சோழிங்கநல்லூரில் அருளும் ப்ரத்யங்கிரா தேவியை தரிசித்து அர்ச்சனை செய்து பிரார்த்தனை செய்தால் மனம் சம்பந்தமான நோய்கள் தீரும். லலிதா ஸஹஸ்ரநாமத்தின் பலஸ்ருதியிலும் இந்த ப்ரத்யங்கிரா தேவியின் பிரபாவம் கூறப்பட்டுள்ளது.

திருமுல்லைவாயிலில் அருளும் பச்சையம்மனும் சப்த முனிகளும் மன நோய்களைத் தீர்ப்பவர்களாக பக்தர்களால் போற்றப்படுகின்றனர்.

சீர்காழிக்கு மேற்கே 3 கி.மீ. தொலைவில் உள்ள நிம்மேலி திருத்தலத்தில் அருள் புரியும் வருணலிங்கத்தை வழிபட மனநோய்கள் அகலும். சனிபகவானுக்கு ஏற்பட்ட மனநோயையும் உடல் நோயையும் நீக்கியவர் இந்த ஈசன்.

அரக்கோணம் அருகே உள்ள பள்ளூரில் தனிக்கோயில் கொண்டு அருளும் வாராஹி எனும் அரசாலையம்மனை பஞ்சமி தினத்தன்று தரிசிக்க, மனநோய்கள் நீங்குகின்றன.

கதிராமங்கலத்தில் அருளும் வனதுர்க்கையை உளமார வேண்டி வழிபட, நாள்பட்ட மனநோய்களும் தீர்ந்து விடும்.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தாலுகா, பேராவூரணி சாலையில் ரத்தினக்கோட்டையில் அருகில் தூத்தாக்குடியில் பூரணா, புஷ்கலாதேவியுடன் அருளும் வடவகூத்த ஐயனார் மனநோய்களை தீர்த்து அருள்கிறார்.

திருத்தணி அருகே உள்ள பொன்பாடி ரயில் நிலையத்திற்கு மேற்கே 2 கி.மீ. தொலைவில் உள்ள மத்தூரில் மஹிஷாசுரமர்த்தினி திருக்கோயில் கொண்டருள்கிறாள். பௌர்ணமி தினத்தன்று இந்த அன்னைக்கு செய்யப்படும் சங்காபிஷேகத்தை தரிசிக்க மன நோய்கள் தீர்கிறது.

கும்பகோணத்திலிருந்து 10 கி.மீ. தொலைவிலுள்ள சிவபுரத்தில் அன்னை சிங்காரவல்லி கோயில் கொண்டுள்ளாள். மன நோய்களைத் தீர்த்து மன அமைதியைத் தந்து சிந்தையைக் குளிர வைப்பவளாக இந்த அன்னை பக்தர்களால் வணங்கப்படுகிறாள்.

மன்னார்குடியிலிருந்து சுமார் 13 கி.மீ. தொலைவில் உள்ள அம்மாப்பேட்டையில் அருளும் வெள்ளெருக்கு நரசிம்மரை சுவாதி நட்சத்திர தினத்தன்று தரிசிக்க மனநோய்கள் அகலும்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ளது ஜேடர்பாளையம். இங்குள்ள வடகரையாழ்வார் கிராமத்தில் உள்ள மன்னார்சாமி ஆலயத்தில் உள்ள 69 அடி முனீஸ்வரரை தினமும் 30 முறை வீதம், ஒரு மண்டலம் வலம் வர, உடல் நோய்களும் மனநோய்களும் நீங்கும்.

கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி ஆலயம் மனநோய்கள் நீக்கும் தலமாக பக்தர்களால் போற்றப்படுகிறது. அதிலும் குறிப்பாக பாஸ்கரராயர் பூஜை செய்த ஸ்ரீசக்ரமேருவுடன் அருளும் மூகாம்பிகை சந்நதியை  வணங்க மனநோய்கள் மறைகின்றன.

ஆடுதுறை சூரியனார் கோயில் அருகே உள்ள திருமாந்துறை அட்சயநாதர் மனோகாரனான சந்திரனின் சாபத்தை தீர்த்தருளியதால் மனநோய்களை நீக்கியருள்பவராக பக்தர்களால் கொண்டாடப்படுகிறார்.

சிங்கப்பெருமாள் கோயில் அருகே உள்ள அனுமந்தபுரம் தலத்தில் அருளும் அகோரவீரபத்திர மூர்த்தி மனநோய்களை சூரியனைக் கண்ட பனிபோல் நீக்கியருள்பவர். இவருக்கு வெற்றிலை படல் பிரார்த்தனை விசேஷமாக செய்யப்படுகிறது.

சென்னை - திருவான்மியூரில் அருள்புரியும் மருந்தீஸ்வரர், உடல் நோய்கள் மட்டுமல்லாது மனநோய்களையும் தீர்த்தருள்பவர்.

Related Stories: