×

கண்நோய் தீர்க்கும் கருணைக் கோயில்கள்

திருக்காளத்தியப்பருக்காக தன் கண்ணையே தானமாகத் தந்தான், கண்ணப்பன் எனும் வேடன். அந்த காளஹஸ்தி தலத்தின் காளத்தியப்பர், கண்ணொளி அருள்வதில் நிகரற்றவர். திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்காரவாசல் கண்ணாயிரநாதர், நான்முகனுக்கு ஆயிரம் கண்களோடு தரிசனம் தந்தவர். இவரை அரைக்கீரைத் தைலத்தால் அபிஷேகித்து, அத்திப்பழம் நிவேதித்தால் கண் உபாதைகள் நீங்கும்.

விக்கிரவாண்டி - பனையபுரம் சிபிச்சக்ரவர்த்தி, புறாவிற்காகத் தன் சதையையே அறுத்துக் கொடுத்த தலம்,  இங்கு நேத்ர உத்ராணேஸ்வரர் எனும் பெயரில் அருளும் ஈசன் பக்தர்களின் பார்வைக் குறைபாடுகளைக் களைகிறார்.

மதுரை- மடவிளாகம் தெக்கன் எனும் பார்வையற்ற வேடுவனின் பிரார்த்தனைக்கு இணங்கி, அவனுக்குக் கண் பார்வை தந்த ஈசன், வைத்யநாதர் என்ற பெயரில் அருள்கிறார்.
 
தஞ்சை - கஞ்சனூர் அருகே உள்ள திரிலோக்கிக்குப் பக்கத்தில் கீழ்ச்சூரியமூலை சூர்யகோடீஸ்வரரை கண்ணொளிக்கு அதிபதியான சூரிய பகவானே வணங்கியிருக்கிறார். பருதியப்பர் என தமிழிலும், பாஸ்கரேஸ்வரர் என வடமொழியிலும் அழைக்கப்படும் இந்த ஈசனை வணங்க கண் பாதிப்புகள் நீங்கும்.
 
தேனி - வீரபாண்டியில் கௌமாரியாக அம்பிகை அருள்கிறாள். முல்லையாற்றில் நீராடி, இந்த அம்பிகையை வணங்கினால் கண் நோய்கள் காணாமல் போகின்றன. மதுரை, வீரபாண்டிய மன்னனுக்குப் பார்வை அருளியவள் இந்த தேவியே!

தஞ்சாவூர், பேராவூரணி, ரெட்டவயலில் கண்ணாயிரமூர்த்தி எனும் பெயரில் சிவபெருமான் ஆலயம் கொண்டருள்கிறார். ஆண்கள் மட்டுமே வழிபடும் இத்தலம், பக்தர்களின் கண் காக்கிறது.

மதுராந்தகம், கருங்குழியிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள கிணாரில் இந்திரனின் உடம்பில் ஏற்பட்ட கண் அடையாளங்களை நீக்கிய நேத்ரபுரீஸ்வரரை தரிசிக்கலாம். இந்திரன் தன் வாகனமான ஐராவதத்தின் மேல் அமர்ந்தபடி ஈசனுக்கும் நந்திக்கும் இடையில் காட்சி தருகிறார். கிணாரும் கண் நோய் தீர்க்கும் பரிகாரத் தலமே.

திருவாரூர் - மயிலாடுதுறை சாலையில், திருமருகல் வழியில், திருப்பயத்தங்குடியில் ஆட்சி புரியும் நேத்ராம்பிகை, பஞ்சதனதாவாணன் எனும் பார்வையற்ற பக்தருக்கு கண் பார்வை தந்தருளியவள். அஞ்சனாட்சி என்றும் வணங்கப்படும் இந்த அம்பிகையின் பெயரே பக்தர்களை கண் நோய்களிலிருந்து காப்பவள் என சொல்கிறது.

காஞ்சிபுரம் அருகே கூரத்தில் அருளும் கூரத்தாழ்வார் தரிசனம், கண் பார்வைக் கோளாறுகளை அறவே நீக்கும்.  தன் குருநாதர் ராமானுஜரின் உயிரைக் காக்க தன் கண்களையே தந்த அத்யந்த சீடன், இந்த கூரத்தாழ்வான்.
 
கும்பகோணத்திற்கு அருகே உள்ள திருவெள்ளியங்குடியில் சுக்கிரன் இழந்த கண்ணை பெற்றான். அவருக்கு கண்ணொளி தந்த தீபம் இன்றளவும் நேத்ர தீபமாக தொடர்ந்து எரிந்து வருகிறது. அதில் எண்ணெய் ஊற்றி வேண்டுவோரின் கண் உபாதைகள் விலகுகின்றன.
 
விருதுநகர், சாத்தூர் அருகே அருளும் இருக்கன்குடி மாரியம்மன், கண்கண்ட தெய்வம் மட்டுமல்ல; பக்தர்களின் கண்நோய்களையும் விரட்டுபவள்.
 
திருவாரூர், கொரடாச்சேரிக்கு அருகில், கண் கொடுத்தவனிதம் தலத்தில் அருளும் நயனவரதேஸ்வரர், ஒரு பெண் பக்தைக்காக அவள் குழந்தைக்கு பார்வை அருளியவர். கண்ணொளி அருளும் பேரருளாளன் இவர்.
 
திருச்சி, சமயபுரம் மாரியம்மனுக்கு கண்மலர் வாங்கி சமர்ப்பித்தால் கண் நோய்கள் நீங்குகின்றன.

புன்னைநல்லூர் துளஜா மகாராஜாவின் மகளின் கண்ணில் விழுந்த பூவை தன் கற்பூர தீபத்தை தரிசிக்கும்போது விழச் செய்து அவளுடைய கண்கண்ட தெய்வமாகத் திகழ்பவள் மாரியம்மன். தஞ்சாவூர் - திருவாரூர் பாதையில் 7 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது.

கோவை, அவிநாசியில் கருவலூர் மாரியிடம் கண் பிரச்னைகளை சமர்ப்பிக்க அவை  காணாமல் போய்விடுகின்றன.
 
கும்பகோணத்திற்கு அருகே, முருகனின் அறுபடை வீடுகளுள் ஒன்றான சுவாமிமலையில் நேத்ர விநாயகர் தனிச் சந்நதி கொண்டு, அஞ்சனக் குறைகளை அகற்றுகிறார்.

திருக்கச்சூர் சிங்கப்பெருமாள் கோயில் - ஸ்ரீபெரும்புதூர் பாதையில், உள்ள இருள்நீக்கும் அம்பிகை, பக்தர்களின் கண் இருளை நீக்குகிறாள்.
 
திருவையாறு - கல்லணை சாலையில், மேகளத்தூரில்  நேத்ரபதீஸ்வரரும், காமாட்சியும், கண் குறைகளை தீர்த்தருள்கிறார்கள்.

சிவகங்கை - நாட்டரசன் கோட்டையில் அருளும் கண்ணாத்தாள், கண்ணொளி இழந்த தன் பக்தர்களுக்கு பார்வை அருளும் பரோபகாரி.

Tags : Temples ,
× RELATED கோயில்களில் நாளை முதல் பக்தர்களுக்கு...