கடலில் குளித்தால் கங்கையில் நீராடிய புண்ணியம் கிடைக்குமா?

நிச்சயமாகக் கிடைக்கும். கங்கை மட்டுமல்லாது ஏனைய புண்ணிய நதிகள் அத்தனையும் கலப்பது கடலில் தானே. கங்கை நதி கலப்பது வங்காள விரிகுடா கடலில், அதனால் அதைத்தவிர மற்ற கடல்களில் சமுத்திர ஸ்நானம் செய்தால் பலன் கிடைக்குமா என்ற சந்தேகமும் கூடாது. ஏனெனில், இந்த உலகில் உள்ள அத்தனை கடல்களும் ஒன்றோடொன்று ஒன்றாக இணைந்தவை.

அரபிக்கடல், இந்துமகா சமுத்திரம், வங்காள விரிகுடா மட்டுமல்லாது உலகில் உள்ள பசிபிக், அட்லாண்டிக் உட்பட அத்தனை கடல்களும் ஒன்றோடொன்று ஏதோ ஒரு இடத்தில் இணையத்தான் செய்கின்றன. அதே போல உலகின் மற்ற நாடுகளில் உள்ள அத்தனை நதிகளும் அந்தந்த பகுதிகளில் உள்ள கடலில் சென்று கலக்கின்றன. இதனால்தான் சமுத்திர ஸ்நானம் என்பது மிகவும் உயர்வாக சொல்லப்பட்டுள்ளது. சமுத்திர ஸ்நானம் செய்வதால் கங்கையில் நீராடிய புண்ணியம் கிடைக்கும் என்று சொல்லப்படுவது உண்மையே.

?மனிதப் பிறப்பின் சிறப்பு என்ன?

-  சு. பாலசுப்ரமணியன்,இராமேஸ்வரம்.

‘அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது’ என்கிறார் ஔவையார். ‘துர்லபம் மானுஷ ஜென்மா’ என்பது பிரஹலாதன் வாக்கு என மத் பாகவத புராணம் சொல்கிறது. இந்த உலகில் செடி, கொடி, புழு, பூச்சி, பறவை, விலங்கினம், மனிதன் உள்பட மொத்தம் எண்பத்தி நான்கு லட்சம் ஜீவராசிகள் உள்ளதாக சாஸ்திரம் சொல்கிறது.

இதை நாம் அறிவியல் பூர்வமாக டிஸ்கவரி, நேஷனல் ஜியாகிரஃபிக் உட்பட பல்வேறு தொலைக்காட்சி சேனல்களில் கண்கூடாகப் பார்த்தும் வருகிறோம். ஒருவன் மனிதப் பிறவியை அடைவதற்கு முன்னால் இத்தனை பிறவிகளையும் கடந்து வந்திருக்க வேண்டும். செடியாக, மரமாக, புழுவாக, பூச்சியாக, மிருகமாக என்று எல்லாவித பிறவிகளையும் கடந்தே இந்த மனிதப் பிறவியை அடைந்திருக்கிறோம். மற்ற ஜீவராசிகளுக்கு இல்லாத சிறப்பு மனிதப் பிறவிக்கு உண்டு என்றால் அது சிந்தித்து பார்க்கும் திறனைப் பெற்றிருப்பதே ஆகும். எது நல்லது, எது தீயது, எது புண்ணியம், எது பாவம் என்பதை தெரிந்துக் கொண்டு செயல்படும் அறிவு மனிதப் பிறவிக்கு மட்டுமே உண்டு.

மனிதப் பிறவியின் மூலம் மட்டுமே புண்ணிய காரியங்கள் பலவும் செய்து இறைவழிபாட்டின் மூலம் வீடுபேறு எனும் மோட்சத்தை அடைய இயலும். இந்தப் பாரததேசம் என்பது புண்ணிய பூமி என்பதை உலகத்தில் உள்ள எல்லோரும் ஒப்புக் கொள்கிறார்கள். ஞானமார்க்கத்தை தேடி வெளிநாட்டவரும் இங்கே வந்து சேர்கிறார்கள். அத்தகைய புண்ணிய பூமியில் மனிதப் பிறவி எடுப்பது என்பது இறையருள் இருந்தால் மட்டுமே நடக்கும். கிடைத்தற்கரிய இந்த பாக்கியத்தை பயன்படுத்திக் கொண்டு புண்ணிய காரியங்களில் ஈடுபடுவோம். மனிதப் பிறவியின் மாண்பினை உணர்வோம்.

?ஒரே சமயத்தில் பிறந்தவர்களில் சிலர் பணக்காரர்கள் ஆகவும் சிலர் ஏழைகள் ஆகவும் இருக்கிறார்களே, ஏன் அப்படி?

- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

இது அவரவர் கர்ம வினையைப் பொறுத்து அமைகிறது. அவரவர்கள் செய்த வினையின் பயனால்தான் இந்த ஜென்மத்தில் வாழ்க்கை முறை என்பது அமைகிறது. இதைத்தான் ஜாதகம் எழுதும்போது முதல் வரியில் குறிப்பிட்டிருப்பார்கள். “ஜெனனீ ஜென்ம சௌக்யானாம் வர்த்தனீ குல சம்பதாம், பதவீ பூர்வ புண்யானாம் லிக்யதே ஜென்ம பத்ரிகா” என்று எழுதிய பின்பே ஜனன ஜாதகத்தை எழுதத் துவங்குவார்கள். பூர்வ புண்ணியத்தின் அடிப்படையில்தான் இந்த ஜென்மாவில் ஒருவன் அனுபவிக்கின்ற பதவி மற்றும் வாழ்க்கை முறை என்பது அமையும் என்பதே அந்த வரியின் பொருள். ஒருவர் ஏழையாக இருப்பதற்கும் மற்றொருவர் பணக்காரர் ஆக இருப்பதற்கும் அவரவர் செய்த பாவ புண்ணியமே காரணமாகிறது.

இதையே ‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’ என்று சொன்னார்கள். அதேநேரத்தில் பணம் இருப்பவர்களால் நிம்மதியாக வாழ முடியவில்லை, ஏழையாக இருப்பவர்கள் எந்தக் கவலையும் இன்றி வாழ்கிறார்கள். எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும் விதியை வெல்ல முடியாது என்பதை உணர்த்தியது கொரோனா. அதே நேரத்தில் எல்லாவிதமான பாதுகாப்பு அம்சங்களையும் கடைபிடித்து குளிர்சாதன அறைக்குள்ளேயே முடங்கிக் கிடந்த பலரும் கொரோனாவால் இறந்து போனதை கண்கூடாகக் கண்டிருக்கிறோம்.

ஆக, அவரவருக்கான தலைவிதியையும் வாழ்க்கைமுறையையும் தீர்மானிப்பது அவரவர் செய்த கர்ம வினையே ஆகும். வினைப் பயனில் இருந்து தப்பிக்க யாராலும் இயலாது, ஆக இந்தப் பிறவியிலாவது முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவி செய்து புண்ணியம் தேட வேண்டும் என்பதையே ஆன்மிக உலகம் போதிக்கிறது.

?அதிகாலையில் எழுந்திருப்பது சிரமமாக உள்ளதால் மார்கழி மாத வண்ணக் கோலத்தை முதல் நாள் இரவே போட்டு வைத்து விடலாமா?

- அருந்தாச்செல்வி, திருமங்கலம்.

தவறு. நிச்சயமாக அவ்வாறு செய்யக்கூடாது. மனிதர்களாகிய நமக்கு ஒரு வருட காலம் என்பது தேவர்களைப் பொறுத்த வரை ஒரு நாள் கால அளவே ஆகும். அந்த வகையில் கணக்கிட்டால் நமக்கு ஒரு மாதம் என்பது தேவர்களுக்கு 2 மணி நேரம் மட்டுமே. (1 மாதத்திற்கு 2 மணி நேரம் வீதம் 12 மாதத்திற்கு 24 மணி நேரம் = 1 நாள்) இதில் தை மாதம் முதல் ஆனி மாதம் வரை வருகின்ற ஆறு மாத காலம் தேவர்களுக்கு பகல் பொழுதாக அமைகிறது. இந்தக் காலத்தை உத்தராயணம் என்று அழைக்கிறோம். ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை வருகின்ற ஆறு மாத காலம் தேவர்களுக்கு இரவுப் பொழுதாக அமைகிறது.

இதை தட்சிணாயனம் என்று சொல்கிறோம். இந்த தட்சிணாயனத்தின் நிறைவுப்பகுதி, அதாவது தேவர்களைப் பொறுத்த வரை இரவுப் பொழுது நிறைவடையும் காலமான அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரையான நேரமே மார்கழி மாதம் என்று பொருள் கொள்ளலாம். இந்தக் காரணத்தால்தான் தேவர்களை வரவேற்கின்ற விதமாக மார்கழி மாதத்தில் அதிகாலை 4 மணி முதல் 6 மணிக்குள் வீட்டு வாசலில் பெண்கள் வண்ணக் கோலமிடுவதை வழக்கமாகக் கொண்டனர். ஆனால், இன்றைய காலத்தில் அதிகாலையில் எழுவதை சிரமமாகக் கருதும் சில பெண்கள் முதல் நாள் இரவே கோலம் போட்டு வைத்துவிட்டு பின்னர் உறங்கச் செல்கின்றனர்.

இது முற்றிலும் தவறான ஒன்று என்பதை நினைவில் கொள்ள வேண்டியது அவசியம். மார்கழியின் தனிச் சிறப்பே அதிகாலையில் எழுந்து கோலமிடுவதுதான். அந்த நேரத்தில் கோலமிட்டு நடுவினில் விளக்கேற்றி வைத்துப் பாருங்கள். மனதினில் மட்டற்ற மகிழ்ச்சி பொங்கும். மகாலட்சுமியின் அருள் பூரணமாகக் கிட்டும்.

?தவிர்க்க முடியாத பட்சத்தில் ராகுகாலத்தில் ஏதேனும் ஒரு செயலைச் செய்ய நேர்ந்தால் அதற்கு பரிகாரம் உண்டா?

-  சுந்தர்ராமன், கோயமுத்தூர்.

அன்றாடம் செய்து வரும் பணிகளுக்கு ராகு காலம், எமகண்டம் பார்க்கத் தேவையில்லை. புதிதாக ஒரு முயற்சியில் இறங்கும்போது நல்லநேரம் பார்த்துச் செய்வது நல்லது. அப்படியும் தவிர்க்க முடியாத பட்சத்தில் ராகுகாலத்தில் ஒரு செயலைச் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகும்போது விஷ்ணு துர்க்கையை மனதிற்குள் பிரார்த்தனை செய்து கொண்டு காரியத்தைத் துவங்கலாம். அருகிலிருக்கும் ஏதேனும் ஒரு சுமங்கலிப் பெண்ணின் கையால் ஒரு குவளை சுத்தமான தண்ணீர் வாங்கிக் குடித்துவிட்டு செயலில் இறங்கினால் எடுத்த பணி வெற்றிகரமாக நடந்தேறும். செயலில் வெற்றி கண்டதும் அருகிலுள்ள ஆலயத்தில் துர்க்கைக்கு விளக்கேற்ற வேண்டியது அவசியம்.

?ஆடம்பர பக்தி, எளிய பக்தி இதில் எதைக் கடவுள் விரும்புகிறார்?

- சீனுவாசன், அத்திப்பள்ளி.

உண்மையான பக்தியில் ஏது வேறுபாடு? அனைத்தையும் கடந்தவனே கடவுள். எதையுமே இறைவன் விரும்புவதில்லை. தன்னை நம்பு

பவர்களை அவன் என்றும் கைவிடுவதுமில்லை. நம்பிக்கையும், சிரத்தையும் மட்டுமே பக்திக்கு முக்கியம். திருமங்கை மன்னன் திருவரங்கத்தானுக்கு திருப்பணி செய்வதையே குறிக்கோளாகக் கொண்டிருந்தான்.

அதற்காக தன், நாடு நகரம் அத்தனையும் இழந்து திருடனாக மாறி கொள்ளையடித்தாவது திருப்பணியை செய்து முடிக்க ஆயத்தமானான். திருட்டுத் தொழில் செய்தேனும் இறைவனின் திருப்பணியை செவ்வனே செய்து முடிக்க வேண்டும் என்ற அவனது பக்தியும், சிரத்தையுமே அவனை ஆழ்வார்களில் ஒருவராக இடம்பெறச் செய்தது. திருமங்கை மன்னன் திருமங்கையாழ்வார் என பெயர் பெற்றார். இதனை ஆடம்பரபக்தி என இறைவன் ஒதுக்கிவிடவில்லை.

தன்னிடம் செல்வம் ஏதும் இல்லாத நிலையில் இறைவனுக்கு கோயில் கட்ட நினைத்த பூசலார் நாயனாரின் பக்தியை எண்ணிப் பாருங்கள். தன் மனதிற்குள்ளேயே பூமிபூஜை முதல் ராஜகோபுரம் வரை அனைத்தையும் கட்டி முடித்து அதற்கு கும்பாபி ஷேகம் செய்யும் நாளையும் குறித்து மனதிற்குள்ளேயே பூஜை செய்த பூசலார் நாயனாரையும் இறைவன் ஏற்றுக் கொண்டார்.

இதனை எளிய பக்தி என தவிர்த்து விட முடியுமா..!  எவன் ஒருவன் நீயே கதி என்று இறைவனைச் சரண் அடைகிறானோ, எவன் ஒருவன் இறைவன் மீது முழு நம்பிக்கையையும் வைத்து பக்தி செலுத்துகிறானோ அதையே இறைவன் ஏற்றுக் கொள்கிறார். அவரவர் வசதிக்குத் தக்கவாறு இறைவனுக்குத் தொண்டு செய்கிறார்கள். அனைத்தையும் கடந்த கடவுளுக்கு ஆடம்பர பக்தி, எளிய பக்தி என்ற வேறுபாடு கிடையாது. உண்மையான பக்தியை மட்டுமே கடவுள் விரும்புகிறார்.

திருக்கோவிலூர்

K.B.ஹரிபிரசாத் சர்மா

Related Stories:

>