கொடை கொடுத்த கோமான்

கோரைக்கால் என்ற ஊரில் ஆழ்வான் என்ற பெருஞ் செல்வந்தன் இருந்தான். அவன் பலரும் தன்னைப் புகழ்ந்து பாடிப் போற்ற வேண்டுமென விரும்பினான். ஆனால், அடுத்தவனுக்கு ஒரு பருக்கையும் கொடுக்க மனம் இல்லாத கருமி. ஆகையால் யாருக்கும் தம்படி காசு வழங்க மாட்டான். இத்தகைய பண்புடையவனை ஔவையாரும் சென்று பாடினார். அவன் பரிசு தருவதாக வாக்களித்தான். இறுதியிலே அவள் தந்த பரிசையும் மிக ஏளனமாகக் கூறுகிறார்.

கரியாய்ப்  பரியாகிக்  காரெருமை  தானாய்

எருதாய்  முழப்  புடவை  யாகித்  திரிதிரியாய்த்

தேரைக்கால் பெற்றுமிகத் தேய்ந்து கால் ஓய்ந்ததே

கோரைக்கால் ஆழ்வான் கொடை.

ஔவையார் பாடிய கவிதை மனதிற்கு இன்பத்தை தரவும் மகிழ்ந்தான், கோரை ஆழ்வான். வாக்களித்தபடி பரிசு தருகிறேன். பெற்றுக் கொள்ளுங்கள் யானையை என்றான். யானையா? என்று எண்ணும் போதே மூதாட்டியே! நாளை வரும் என்றதும். ஔவையும் தவறாமல் சென்றார். அவனோ! அம்மையே நன்கு சிந்தித்தேன். யானையைக் கட்டி தீனி இடமுடியாது. ஒரு குதிரையைத் தருகிறேன். மறுநாள் வந்து பெற்றுக்கொள் என்றான். அடுத்தநாள் குதிரையை விட எருமை மாடு உபயோகமாக இருக்கும். அதனைத் தருகிறேன் என்றான். உண்மையே... குதிரையை வைத்து என்ன செய்யப் போகிறேன். எருமை பயனுடையது அல்லவா சரி என்றார். தற்போது தர இயலாது நாளை வாரும் என்றான்.

அதற்கு, அடுத்த நாள் எருமைக்குப் பதிலாக எருதைத் தருகிறேன் என்றான்.மூதாட்டியும் சளைக்காமல் சென்றார். எருதும் வேண்டாம். உங்களுக்கு மிகவும் பயனுடையது. நீங்களே அணிந்து மகிழ புடவையைத் தருகிறேன் என்றதும். கொடுத்த வாக்கை காப்பாற்றும் கோரைக்கால் ஆழ்வானே’ நாளைக்கு நீ தரும் சேலை, திரிதிரியாக கிழிந்துபோகும் என்று தோன்றுகிறது.

எனவே, நீ தரும் பரிசுக்காக என் கால்களோ நடந்து நடந்து தேரைக்காலின் (யானைக்கால் போன்று) தன்மையை அடைந்து விட்டன. மிகவும் தேய்ந்து தேய்ந்து ஓய்ந்தும் போனது. யானை, குதிரை, எருமை, எருது, புடவை என்று பெரிய யானை அளவில் குறைந்து இறுதியில் எதுவும் தரவில்லை. ஆனால், என் கால்கள் யானைக் காலாக பெருத்துக் கொண்டு போகிறது என எள்ளி நகையாடினாள்.ஈயாதார் மனம் எத்தகையது என்பதைச் சுட்டிக் காட்டினாள்.

*பொன்முகரியன்

Related Stories: