தேவாரமும் உபநிஷதங்களும்

சிவபெருமான் சூரிய மண்டலத்தில் விளங்குகின்றார் என்பதை சாந்தோக்ய உபநிஷத்தும் தைத்ரீய சங்கிதையும் சிறப்புடன் குறிப்பிடுகின்றன. இனி அப்பகுதிகளையும் அதற்கிணையாக அமைந்த தேவாரப் பாடல்களையும் காணலாம்.சாந்தோக்ய உபநிஷதம் (1-6-6-7) பொற்கொடியோடும், பொன்வண்ணக் கேசத்தோடும், நகம் உள்ளிட்ட மேனி முழுவதும் (கபி எனப்படும்) சூரியனால் விகசிதமாகிய இரண்டு தாமரைபோலும் கண்களும் உடையவர். இந்தப் பொன் போன்ற புருஷர் ஞாயிறு மத்தியில் விளங்குகின்றார் என்று கூறுகிறது. இதில் சிவபெருமானைப் பற்றிய வர்ணனை நேரடியாக இல்லாவிட்டாலும் அடுத்து வரும் தைத்ரீய சம்ஹிதை பெருமானின் நீலகண்டத்தையும், செந்நிறத்தையும் சிறப்புடன் குறிப்பிடுவதைக் காண்கிறோம்.

இது சூரிய மண்டலத்துள்ளிருந்து உதய அஸ்தமனம் செய்விக்கும் பொருட்டுச் சிவபெருமான் அருள்கூட்டுகின்றார் என்கிறது. இவர் நீலகண்டமும் செந்நிறமும் கொண்டவர். சூரிய வடிவாக விளங்கும் இவரைக் கோபாலரும், மாலையில் தண்ணீர் எடுக்கும் பெண்களும் கண்டார்கள். அவரைப் பசு, எருமை முதலான உயிரினங்களும் பார்க்கின்றன. அந்த இயல்பினராகிய அவர் (அகக் கண்ணுக்குப் புலப்படிகன்) எங்களுக்கு ஆனந்தம் விளைப்பாராக’’ என்று கூறுகின்றது.

இந்தக் காட்சி மாலை காலத்தினை வர்ணிக்கின்றது. மாலை காலத்தில் முனிவர்கள் சூரியனையும் அவனுள் பிரகாசிக்கும் சிவபெருமானையும் வணங்குவதைக் குறிப்பிடுகிறது. இதற்கு இணையான தமிழ் மறையான தேவாரப் பாடலை இனிக் காணலாம்.

அருக்கன் பாதம் வணங்குவர் அந்தியில்

அருக்கனாவான் அரன்வுரு அல்லனோ

இருக்கு நான்மறை ஈசனையே தொழும்

கருத்தினை நினையார் கன்மனமாவரே

- திருவாவுக்கரசர் - ஆதி புராணக் குறுந்தொகை.

இதன் பொருள்: மாலை காலத்தில் (அருக்கன் எனப்படும்) சூரியனை அனைவரும் வணங்குகின்றனர். அந்த சூரிய வடிவம் சிவபெருமான் அல்லவோ? இருக்கு (ரிக் வேதம்) முதலான நான்கு மறைகளும் ஈசனைத்தான் தொழுகின்றன என்ற கருத்தை அறியாதவர்கள் கல் மனத்தைக் கொண்ட மூடரல்லவா? என்பதாகும். மேலும், தைத்ரீய ஆரண்யகம் எனும் உபநிஷதம், அண்டகடாகத்தைச் சூழ்ந்த இருளுக்கு மேலே ஆதித்தனின் வண்ணமாகப் பிராகாரத்துடன் விளங்கும் பரமேஸ்வரனாகிய அவரை அறிந்தவன் சிவமாகவே ஆகிறான். இதைத் தவிர மோட்சத்திற்கு வேறுவழியே இல்லை என்று கூறுகின்றது. இதற்கு இணையாக அப்பரடிகள், (சித்தத் தொகை திருக்குறுந்தொகையுள்)

அண்டமாரி ருளூடு கடந்தும்ப

ருண்டு போலுமோ ரொண்சுடரச்சுடர்

கண்டு இங்கு ஆர் அறிவார் அறிவாரெல்லாம்

வெண்திங்கள் கண்ணி வேதியரென்பரே

- என்று அருளிச் செய்துள்ளார்.

இதன் பொருள்: அண்டத்தின் மேல் ஓட்டையும் கடந்து பரவி நிற்கும் இருளில் சிவபெருமான் மிகுந்த கதிர்களையுடைய சூரியனைப்போல பிரகாசித்துக் கொண்டிருக்கின்றார். அவரை அறிந்தவர்கள் தலைசிறந்தவர்களாவர் என்பதாகும்.இதனையொத்த எண்ணற்ற வடமொழி, மறைகளிலும் அதற்கிணையான தென்மொழி மறையிலும் சிவசூரியனைப் பற்றிய சிறப்புச் செய்திகளைப் பரவலாகக் காண்கின்றோம்.

பூசை. அருணவசந்தன்

Related Stories: