×

சீரான வாழ்வருளும் சத்திய விரதேஸ்வரர்

பாரத  தேசத்தின் புண்ணியம் மிகுந்த புரிகளுள் ஒன்றாக விளங்கும் காஞ்சிபுரி ‘‘நகரேஷூ காஞ்சி’’ என்று வர்ணிக்கப்படுகிறது. புராண இதிகாச காவியங்களில் போற்றப்படும் இந்தப் புனிதமிகு காஞ்சியில்  சைவ- வைணக் கோயில்கள் எண்ணிலடங்காதவை. சான்றோர்கள் நிறைந்த தொண்டை மண்டலத்தின் தலையாயப் பதியாகத் திகழும் இந்த காஞ்சியை போற்றாத புலவர் இல்லை. எண்ணற்ற படலங்களைக் கொண்ட மிகப் பிரம்மாண்டமான புராணம் காஞ்சிப் புராணம். பஞ்சபூத தலங்களில் பிருத்வி (மண்) தலமாக விளங்கும் இக்காஞ்சி மாநகரில் எத்தனையோ சிவ - விஷ்ணு அடியார்கள் பிறந்துள்ளனர். சிற்பக் கலைக்கும் சோடை போகாத இக்காஞ்சியில் 5 தேவாரத் தலங்களும், 14 திவ்ய தேசங்களும் அடங்கும். பிரம்ம சூத்திரத்திற்கு பாஷ்யம் எழுதிய நீலகண்ட சிவாச்சாரியார் பிறந்த பதியும் இதுவே. சிவபாவமாக இவர் எழுதிய நூலே நீலகண்ட பாஷ்யம் எனப் புகழப்படுகின்றது. காஞ்சிக்கு வழங்கப்படும் பல சிறப்புப் பெயர்களுள் சத்தியவிரத ஷேத்திரம் என்பது ஒன்று. சத்தியவிரதர் எனப் போற்றப்படும் சிவபெருமான் குடிகொண்டுள்ள இத்தலம் இன்று திருக்காலிமேடு என்கிற பெயரில் காஞ்சிபுரத்தின் ஒரு பகுதியாக திகழ்கின்றது.

இங்கே கௌதமரின் சாபத்தால் இந்திரனுக்கு ஏற்பட்ட அவலநிலை நீங்கிட, இந்திரன் இங்கு தேவகுருவின் ஆலோசனைப்படி தவம்புரிந்து இத்தல ஈசனை பூஜித்து விமோசனம் பெற்றுள்ளான். ஒரு  யுகத்தின் 14 இந்திரர்களில் ‘சிபி’ என்கிற இந்திரன் வழிபட்ட திருத்தலம் இது. எனவே, ஆதியில் இத்தலம் இந்திரபுரம் என்றும் அழைக்கப்பட்டுள்ளது. சந்திரனுக்கும் தாராதேவிக்கும் பிறந்த புதன் கிரகப் பதவி பெற்றிட வேண்டி இத்தலத்தில் பலகாலம் தவம் இயற்றி இத்தல சிவபெருமானை துதித்துப் போற்றி கிரகப் பதவி பெற்றுள்ளதாக ஸ்தல புராணம் விவரிக்கின்றது. காஞ்சிக்கு நுழைவு வழியாக இவ்விடம் விளங்கியதால் நெறிகாட்டும் அதாவது வழிகாட்டும் காரைவனம் என்ற பெயரில் கச்சி நெறிக்காரைக்காடு என்று வழங்கப்படுகின்றது. தேவாரம் பாடல் பெற்ற காஞ்சியின் ஐந்து தலங்களுள் இதுவும் ஒன்றாக திகழ்கின்றது. சம்பந்தரும் தனது தேவாரத்தில் இப்பதியை திருக்கச்சி நெறிக்காரைக்காடு என்று போற்றுகின்றார்.

உமாபதி சிவத்தின் சிவத்திலக கலிவெண்பா, கலி விருத்தம், அறு சீரடியாசிரிய விருத்தம், பெரிய புராணம் ஆகியவற்றிலும் இத்தல மகிமைகள் பாடப்பட்டுள்ளன. வடலூர் வள்ளல் ராமலிங்க அடிகளும், ஐயடிகள் காடவர்கோனும் கூட இப்பதியை போற்றித் துதித்துள்ளனர். மேற்குப் பார்த்த திருக்கோயில். முதலில் பலிபீடம், கொடி மரம் மற்றும் நந்தி மண்டபம். அடுத்து மூன்று நிலைகள் கொண்ட ராஜகோபுரம் நம்மை வரவேற்கிறது. உள்ளே முதலில் இடப்புறமாக கிழக்கு பார்த்த வண்ணம் புதனின் தனிச் சந்நதி. எதிரே நவக்கிரக சந்நதி அமைந்துள்ளது. மூடுதளத்துடன் அமைந்த உட்பிராகாரத்தில் வடமேற்கில் வள்ளி - தெய்வானையுடனான கந்தன் சந்நதி. பின் சபாபதி மண்டபம். அற்புதமாய் அம்மை சிவகாமியுடன் பிரகாசிக்கின்றார். நடன சபாபதியான நடராஜப் பெருமான். அடுத்தபடியாக சைவ சமய நால்வர் வீற்றருள்கின்றனர். அதன்பின் சம்பந்தர், இந்திரன், புதன் மற்றும் பைரவர் சிலா ரூபங்கள் காணப்படுகின்றன. வடகிழக்கில் ஸ்ரீமகாகணபதி காட்சி அளிக்கின்றார். அருகே சில சிவலிங்கத் திருமேனிகள். தென் சுற்றில் நீலகண்ட சிவாச்சாரியார் கையில் அக்ஷமாலை மற்றும் சுவடியுடன் அமர்ந்த  நிலையில் வீற்றுள்ளார். இங்கு குரு தட்சிணாமூர்த்தி மிகுந்த வனப்புடன் திகழ்கின்றார்.

கருவறையில் கருணையே வடிவாக சிவந்த கோலத்தில் செம்மையாக தரிசனம் தந்தருள்கின்றார், ஸ்ரீசத்திய விரதேஸ்வரர். சத்தியத்தையே தனது விரதமாகக் கொண்டவர். போகங்களை அருளக்கூடிய  போக சக்தியாக ஸ்ரீபிரம்மராம்பாள் விக்கிரக வடிவில் எழுந்தருளுகின்றாள். காஞ்சியின் எல்லா சிவத்தலங்களுக்கும் பிரதான அம்பிகையாகத் திகழும் அன்னை காமாட்சியே இத்தலத்திற்கு நாயகியாக  திகழ்வதால் இங்கும் அம்பிகைக்கு தனியாக சந்நதி கிடையாது. இரண்டு பிராகாரங்களைக் கொண்டுள்ள இவ்வாலய கருவறை விமானம் கருங்கல்லால் ஆனது குறிப்பிடத்தக்கது. சோழர்கால  கல்வெட்டுகள் காணப்படுகின்றன. தலவிருட்சம் காரைமரம். இந்திரன் ஏற்படுத்திய இந்திர தீர்த்தம் வேப்பங்குளம் என்ற பெயரில் தற்போது பயனற்றுக் கிடக்கிறது. அனைத்து சிவாலய விசேஷங்களும்  இங்கு சிறப்புற அனுசரிக்கப்படுகின்றன. நவ நாயகர்களில் புதன் வழிபட்டு பேறு பெற்ற இத்தலம் காஞ்சிபுரத்தில் உள்ள நவகிரக க்ஷேத்திரங்களில் புதனுக்குரிய திருத்தலமாக திகழ்கின்றது. கல்வியில் தேர்ச்சி பெறவும், எந்தத் துறையிலும் முதன்மை தன்மையை அடையவும், கலைகளில் சிறந்து விளங்கவும் புத்திக்காரகனான புதன் வழிபட்டுப் பேறுபெற்ற இந்த சத்திய விரத க்ஷேத்திரத்திற்கு புதன்கிழமை வந்து, சுவாமிக்கும் தனி சந்நதியில் வீற்றிருக்கும் புதன் பகவானுக்கும் தேன் அபிஷேகம் செய்து, பச்சை பட்டு சாற்றி, சம்பா சாதமும் மொச்சை சுண்டலும் நிவேதித்து வழிபட அதிகமான பலன்களைப் பெறுவது நிதர்சனம். லக்னத்தில் புதன் நீசம் அடைந்து, எந்த விஷயத்திலும் கவனம் இல்லாமலும் பிடிப்பில்லாமலும் மந்தநிலையில் உள்ளோர் பலர் இங்கு வந்து வழிபாடு செய்து பலனடைந்திருக்கின்றனர். காஞ்சிபுரம் நகரின் ஒர் பகுதியாகத் திகழும் திருக்காலிமேட்டில் அருள்பாலிக்கின்றார் ஸ்ரீசத்தியவிரதேஸ்வரர்.

Tags : Satya Viradeswarar ,
× RELATED சுந்தர வேடம்