வேல்மாறல் படித்தால் பேசாத குழந்தையும் பேசும்!

?என் மகனுக்கு விவாகரத்து ஆகி இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது. மறுமணத்திற்கு முயற்சித்து வருகிறோம். வயதும் 35 ஆகிறது. வழிபடாத தெய்வம் இல்லை. என் மகனுக்கு நல்வாழ்வு அமைய உரிய வழி காட்டுங்கள்.

 - ராமலிங்கம், திருப்பூர்.

பரணி நட்சத்திரம், மேஷ ராசி, கடக லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது ராகு தசையில் கேது புக்தி நடந்து வருகிறது. திருமண வாழ்வினைப் பற்றிச் சொல்லும் ஏழாம் பாவகத்தில் நீசம் பெற்ற குருவின் வக்ர சஞ்சாரமும் ஏழாம் பாவக அதிபதி சனி உச்ச பலத்துடன் கேதுவுடன் இணைந்திருப்பதும் பிரச்னையைத் தந்திருக்கிறது. அவருடைய முதல் திருமணம் நடந்த தேதி மற்றும் விவாகரத்து ஆனதற்கான காரணத்தை நீங்கள் குறிப்பிடவில்லை.

அவருடைய ஜாதக பலத்தின்படி தற்போது உத்யோக ரீதியாக முன்னேற்றம் காண வேண்டிய நேரமாக உள்ளது. ஜென்ம லக்னத்தில் சூரியன் மற்றும் செவ்வாயின் இணைவும், ஜீவன ஸ்தானம் ஆகிய  பத்தாம் வீட்டில் சந்திரனோடு ராகுவின் இணைவும் உயர்ந்த உத்யோகத்தை அடைவார் என்பதை உணர்த்துகிறது. உங்கள் மகனிடம் பிரதி சனிக்கிழமை தோறும் விரதமிருந்து வேத பண்டிதர் ஒருவருக்கு வஸ்திரம் வாங்கித் தந்து நமஸ்கரிக்கச் சொல்லுங்கள். இவ்வாறு 13 வாரங்களுக்கு வாரம் ஒருவர் வீதம் வஸ்திரம் வாங்கித் தந்து நமஸ்கரிக்க தோஷம் விலகுவதோடு நல்வாழ்வும் அமையும்.

அவருடைய ஜாதகத்தின்படி 08.11.2021 முதல் மறுமண வாழ்வில் சுகம் காண்பார்.

?என் மகளின் வாழ்வில் எல்லாமே தடங்கலாக உள்ளது. எம்.எஸ்.சி. படித்த பெண்ணுக்கு முதலில் ஒரு வரன் பார்த்தோம். முதலாவதாக வந்த வரன் தனது ஜாதகத்தையே மாற்றித் தந்து குளறுபடி செய்தார். இறைவன் அருளால் கண்டுபிடித்து தடுத்து நிறுத்தினோம். இரண்டாவதாக வந்தவன் நல்ல பையன் என்பதால் மணம் முடித்து வைத்தோம். அவன் இல்லற வாழ்க்கை நடத்தத் தகுதியற்றவன் என்பது பிறகுதான் தெரிந்தது. மனநிம்மதி இழந்து தவிக்கும் எங்களுக்கு நல்ல வழி காட்டுங்கள்.

- ராணிப்பேட்டை வாசகர்.

பூராடம் நட்சத்திரம், தனுசு ராசி, கடக லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகளின் ஜாதகத்தின்படி தற்போது சந்திர தசையில் சனி புக்தி நடந்து வருகிறது. அவருடைய ஜாதகத்தில் திருமண வாழ்வினைப்

பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டிற்கு அதிபதி ஆகிய சனியின் வக்ர சஞ்சார நிலையும் ஏழாம் வீட்டில் குருவின் நீச பலமும் பிரச்னையைத் தந்திருக்கின்றன. அவருடைய திருமணத் தேதி மற்றும் மருமகனின் ஜாதகம் பற்றிய விவரங்களை நீங்கள் கடிதத்தில் குறிப்பிடவில்லை. உங்கள் மகளின் ஜாதகப்படி தற்போதுதான் திருமண யோகம் என்பதே துவங்கி உள்ளது. வருகின்ற சித்திரை மாதம் முதல் அவரது மண வாழ்வு என்பது துவங்கிவிடும். மருமகன் குணத்தால் மிகவும் நல்லவன் என குறிப்பிட்டுள்ளீர்கள். அவரை ஒரு நல்ல மருத்துவரிடம் அழைத்துச் சென்று வைத்தியம் பாருங்கள். அவசரப்பட்டு முடிவெடுக்காமல் நிதானித்துச் செயல்படுங்கள்.

உங்கள் மகளின் ஜாதகத்தில் உள்ள தோஷங்களின் நிலையை புரிந்துகொண்டு முடிவெடுப்பது நல்லது. உங்கள் மகளை பிரதி வாரம் வெள்ளிக்கிழமை தோறும் விரதமிருந்து மாரியம்மனை வழிபட்டு வரச் சொல்லுங்கள். 21 வாரங்களுக்கு தொடர்ந்து விரதமிருந்து கடைசி வாரத்தில் வேலூருக்கு அருகில் உள்ள வெட்டுவானம் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோயிலுக்கு சென்று முதல்நாள் வியாழன் அன்று இரவு கோவில் வாயிலில் தங்கி மறுநாள் காலையில் ஸ்நானம் செய்து அம்மனை தரிசித்து மாவிளக்கு ஏற்றி வழிபட்டு பிரார்த்தனை செய்துகொள்ளச் சொல்லுங்கள். மணவாழ்வினில் சுகம் காண்பதோடு வம்சவிருத்தி என்பதும் உடனடியாக உண்டாகும். 29.06.2022ற்குள் உங்கள் மகளின் நல்வாழ்வினைக் கண்கூடாகக் காண்பீர்கள்.

?மூன்று வயதாகும் என் பேரன் இதுவரை சரியாகப் பேசவில்லை. பேசவே முடியவில்லை. அப்பா, அம்மா, தாத்தா, ஆயா இதுதான் அவன் பேசும் வார்த்தைகள். மற்றபடி சொல்லும் வார்த்தைகளை  புரிந்துகொண்டு எல்லா வேலையும் செய்வான். அவன் நன்றாகப் பேச என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

- மாணிக்கம், பெரம்பலூர்.

உத்திராடம் நட்சத்திரம், மகர ராசி, மீன லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் பேரனின் ஜாதகத்தின்படி தற்போது சந்திர தசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. அவரது ஜாதகத்தில் வாக்கு ஸ்தான அதிபதி  செவ்வாய் எட்டாம் வீட்டில் லக்னாதிபதி குருவுடன் இணைந்து அமர்ந்துள்ளார். தெரிந்தோ தெரியாமலோ அந்தணர் ஒருவரின் சாபத்திற்கு குழந்தையின் பெற்றோர் ஆளாகி உள்ளதுபோல் தெரிகிறது.  அதேபோல முருகப் பெருமானுக்கு நேர்ந்துகொண்ட வேண்டுதல் ஒன்றையும் இன்னமும் செய்து முடிக்காமல் நிலுவையில் வைத்துள்ளீர்கள் என்பதையும் அறிந்துகொள்ள முடிகிறது. காலதாமதம்  செய்யாமல் உடனடியாக குழந்தையையும் பெற்றோரையும் அழைத்துக்கொண்டு விராலிமலை முருகன் கோயிலுக்குச் சென்று அபிஷேக ஆராதனைகள் செய்து மனமுருகி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். அத்துடன் நிலுவையில் உள்ள நேர்த்திக்கடனை நினைவூட்டிப் பார்த்து நிறைவேற்றுங்கள்.

வளர்பிறை சஷ்டி நாளில் வேதபாடசாலையில் படிக்கும் அந்தணச் சிறுவர்கள் எவரேனும் ஆறுபேருக்கு வஸ்திரம் வாங்கித் தந்து நமஸ்கரிக்கச் சொல்லுங்கள். தினமும் உங்கள் பேரனை அமரவைத்து மாலை நேரத்தில் வேல்மாறல் பதிகங்களைப் படித்து வாருங்கள். முருகப்பெருமானின் திருவருளால் உங்கள் பேரன் வெகுவிரைவில்  பாடவே துவங்கி விடுவார். 19.09.2021 முதல் அவரது வாக்கு வன்மையை காணத் துவங்குவீர்கள்.

?25 வயது ஆகும் எனக்கு வேலை நன்றாக உள்ளது. எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், மனதில் நிம்மதி இல்லை. மனம் எதையோ சிந்தித்துக் கொண்டிருக்கிறது. திருமணம் நடந்து வாழ்வினில்  நல்லபடியாக இருப்பேனா? என் மனக்குழப்பம் தீர என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

- மயிலாடுதுறை வாசகர்.

புனர்பூசம் நட்சத்திரம், கடக ராசி, மேஷ லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தின்படி தற்போது புதன் தசையில் சுக்கிர புக்தி முடிவுறும் தருவாயில் உள்ளது. உங்கள் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்தில் அமர்ந்திருக்கும் கேது இதுபோன்ற சஞ்சலங்களைத் தருகிறார். அதோடு லக்னாதிபதி செவ்வாயும் வக்ர கதியில் நீசபலத்துடன் சஞ்சரிப்பதும் மனதில் தைரியக் குறைவினை உண்டாக்கி உள்ளது. செவ்வாய் நீச பலம் பெற்றாலும்நீசபங்க ராஜ யோகம் என்பது உங்கள் ஜாதகத்தில் உள்ளது. அதனால் நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. 29வது வயதில் திருமணம் நல்லபடியாக நடந்தேறும். மணமகள் தந்தை வழி உறவில் இருந்து அமைவார். எதைப் பற்றியும் கவலைப்படாமல் உங்கள் அலுவல் பணியில் முழுக்கவனத்தையும் செலுத் துங்கள். உண்மையான உழைப்பிற்கான

பலன் என்பது நிச்சயமாக உங்களுக்குக் கிடைக்கும். அத்துடன் நிரந்தர உத்யோகம் என்பதும் நன்றாக உள்ளதால் அரசுத்துறை சார்ந்த பணிக்கும் நீங்கள் முயற்சிக்கலாம். தினமும்காலையில் எழுந்தவுடன் குளித்து முடித்து108முறை ராமநாமத்தினை ஜபம் செய்து வாருங்கள். செவ்வாய்க்கிழமை தோறும் அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்று வெண்ணெய் சாற்றி வழிபடுவதோடு ஆஞ்சநேயர் மேல் சாற்றப்பட்ட வெண்ணெயில் இருந்து சிறிதளவு பிரசாதமாகப் பெற்றுக்கொண்டு சாப்பிடுங்கள். தொடர்ந்து ஏழுமாத காலத்திற்கு விடாமல் செய்து வாருங்கள். ஏழாவது மாதம் முடியும் தருவாயில் நல்லதொரு மாற்றம் வாழ்வினில் உண்டாகக் காண்பீர்கள்.

வாசகா்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பரிகாரமும் சொல்கிறார்  திருக்கோவிலூர்

ஹரிபிரசாத் சர்மா

Related Stories:

>