×

மயிலாக வந்த முருகன் : வாசகர்களின் ஆன்மிக அனுபவம்

அமிர்தகடேஸ்வரரின் அருள்பொழிவு

என் அறுபதாவது திருமண நிறைவு நாளை திருக்கடையூர் சென்று அமிர்தகடேஸ்வரரை வழிபட நானும் என் துணைவியாரும் எண்ணினோம். ஆனால், புயல், மழை என்று ஆன்மிகச் சுற்றுலா சில வாரங்கள் தள்ளிப் போனது. கடைசியாக குறைவான அன்பர்களுடன் சென்றோம். திருக்கடையூருக்கு எங்கள் வண்டி மதியம் 12  மணிக்குச் சென்றடைந்தது. பயண ஏற்பாட்டாளர் அரை மணி  நேரத்தில் இறைவனை தரிசனம் செய்துவிட்டு வர வேண்டும் என்றார். நானும் என் மனைவியும் கோயிலின் உள்ளே சென்றோம். ஞாயிற்றுக்கிழமையாதலால் எக்கச்சக்கமான கூட்டம். சந்நதிக்குள்  நுழையவே முடியவில்லை. டிக்கெட் வாங்கி அர்ச்சனை தட்டை கொண்டு சென்றாலும் ஈசனை தரிசிக்க முடியாத நிலை. அதனால் எதுவும் வாங்காமல் கூட்டத்தின் கடைசியில் நின்று கொண்டிருந்தோம். 

சில நிமிடங்கள் நின்று இறைவனை அரைகுறையாகப் பார்த்துவிட்டு திரும்ப எண்ணினோம். ஆனால், என்ன ஆச்சரியம்! இறைவன் சந்நதியில் மூத்த அர்ச்சகர் எங்கள் இருவரையும் சைகை காட்டி, கூட்டத்தினரை விலகச் சொல்லி அழைத்தார். எங்களுக்கு பரவச ஆனந்தம். எங்கள் வேண்டுகோளைச் சொன்னவுடன் இறைவனின்மீது அணிவிக்கப்பட்டிருந்த  மாலைகளைக் கொண்டு வந்து எங்களை மாலைமாற்றச் சொல்லி மந்திரங்களைக் கூறி எங்களை ஆசிர்வதித்தார். அங்கேயே கீழே விழுந்து வணங்கி மகிழ்ந்தோம். அது மட்டுமன்றி அடுத்தடுத்த சந்நதிகளிலும் சக அர்ச்சகர்கள் மூலம் முழுமையான தரிசனம் செய்தோம். மீண்டும் வண்டிக்குச் செல்ல நேரம் கடந்து விட்டது. இருப்பினும் ஏற்பாட்டாளரும், சக அன்பர்களும் எங்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து இனிப்பு வழங்கியது என்றும் மறக்க முடியாத நிகழ்ச்சி. நான் அனுபவத்தில் புரிந்துகொண்டது ஈசன் கருணை இருந்தால் எதுவும் நடக்கும்.

- இரா. ஜெனகராஜன், மதுரை - 625703.

யோகம் நல்கிய யோக நரசிம்மர்

‘‘நம்பினோர் கெடுவதில்லை இது நான்மறை தீர்ப்பு. நான் பணி நிறைவு நாளுக்கு முன்பே V.R.S பெற்று ஓய்வு பெற்றவன். எங்கள் பள்ளியில் இசை ஆசிரியப் பணி காலியான நேரம். தகுந்த கல்வித்  தகுதி பெற்றிருந்தும் என் மகளுக்கு பணி வாய்ப்பு கிடைக்குமா என்ற பயம் இருந்தது. ஏனெனில், ஏகப்பட்ட நபர்கள் ஒரு பணி இடத்திற்குப் போட்டி. இறைவனை வழிபட்டுவிட்டு ஆலயத்தில்  அமர்ந்திருந்தபோது யாரோ ஒரு நண்பர் யோக நரசிம்மருக்கு ஒரு துண்டுச் சீட்டில் பிரார்த்தனையை எழுதி தேங்காயுடன் யோக நரசிம்மர் ஆலயத்தில் வைத்து விடு 48 நாட்களுக்குள் உன் பிரார்த்தனை  நிறைவேறும் என்றார். அதன்படி 45 நாட்கள் கழித்து ஒருநாள் காலை எமது தலைவர் புலவரே உனது மகளுக்கு பணி கிடைக்க சுவாமிஜி அருளாசி வழங்கியுள்ளார். விரைவில் வந்து பணியில் சேரலாம்  என்றார். புளகாங்கிதம் அடைந்து இறைவனது அருள்தான் என்னே என வியந்தேன். வணங்கினேன்.

- புலவர். கி. வேங்கடகிருஷ்ணன், குடந்தை.

மயிலாக வந்த முருகன்

இரண்டு வருடங்களாக திருச்செந்தூர் முருகனைத் தரிசிக்க முயன்றோம். இறுதியில் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுவிடும். இந்த வருடம் குடும்பத்தோடு கண்டிப்பாகச் செல்ல வேண்டும் என்ற  முடிவுக்கு வந்தோம். பூஜை அறையில் முருகனிடம் இந்தக் கோரிக்கையை அனுதினமும் சொல்லிக் கொண்டிருந்தேன். எந்தத் தடங்கலும் இல்லாமல் போகும் நாளும் வந்தது. வீட்டிலிருந்து புறப்பட்டபோதே எதிரே மாமரத்தில் மூன்று மயில்கள் வந்து அமர்ந்தன. நாங்கள் காரை நகர்த்தியதும் அது பறந்து சென்றது. இத்தனைக்கும் எங்கள் பகுதியில் மயில்களின் சஞ்சாரம் இல்லாத பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று திருச்செந்தூரில் சுவாமி தரிசனம் முடிந்து நாங்கள் காரை கிளப்ப முயன்றபோது எங்கள் எதிரே மூன்று மயில்கள் வந்து அமர்ந்தன. முருகன்தான் எங்களை பத்திரமாக அழைத்து வந்தான் என்பதை உணர்ந்தோம். பரவசம் அடைந்தோம். என்னே! முருகனின் கருணை என அகம் மகிழ்ந்தோம்.

- கே. பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர் (குமரி மாவட்டம்)

நந்தியின் அருள் வெள்ளம்

புதிய மில்லினியம் தொடங்கிய 2000 ஆண்டு, புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் பள்ளி ஆசிரியையாக பணிபுரிந்தேன். நல்ல வேலையில் இருந்தும் சரியான வரன் அமையாமல் திருமணம்  தாமதமானது. எனக்குப் பிறகு திருமணத்திற்கு தயாராக இரண்டு தங்கைகள் இருக்கிறார்கள். என்னால் அவர்கள் பாதிக்கப்படக்கூடாதே! என்ற வருத்தம்தான் என்னை வாட்டியது. ஒரு பிரதோஷத்தன்று எங்கள் ஊருக்கு அருகேயுள்ள பிரபலமான வேந்தன்பட்டி நந்தீஸ்வரர் கோயிலுக்கு போயிருந்தோம். என் நிலையை விளக்கி மூலவர் சந்நதியில் உருகி ஈசனை வழிபட்டபோது, என் கண்கள் கலங்கின.
இதைக் கவனித்த என் தங்கை சௌந்தரவள்ளி திடீரென ஆவேசமாக கற்பூரத்தை எடுத்து, அவளது உள்ளங்கையில் வைத்து ஏற்றி, மூலவருக்கு ஆரத்தி காட்டி வேண்டினாள். பதறிப்போய் அவளை உடனே மருத்துவமனையில் சேர்த்து குணப்படுத்தினோம். என்ன ஆச்சரியம்!

 அடுத்த மாதமே என்னைப் பெண் பார்க்க வந்தவர்கள், ஒரே வாரத்தில் திருமணத்தையே முடித்துவிட்டனர். பட்டுக்கோட்டை  நாடியம்மன் கோயிலில் எங்கள் அக்கா ஏற்பாட்டில் திருமணம் நடந்து, எங்கள்  சொந்த ஊரான பொன்னமராவதியிலும், என் கணவரின் சொந்த ஊரான நாகப்பட்டினத்திலும் திருமண வரவேற்புகள் என மூன்று நாட்கள் கொண்டாட்டமானது. என் தங்கை சௌந்தரவள்ளி என்னைப்  போலவே இன்று ஆசிரியையாக பணிபுரிகிறாள். அவளது உள்ளங்கையில் கற்பூரம் ஏற்றிய வ(சூ)டு இன்னும், என் திருமணத்திற்கான அக்னி சாட்சியாக இருக்கிறது.

- மல்லிகை அன்பழகன், சென்னை - 600078.

Tags : Murugan ,Mayila ,
× RELATED சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு லிப்ட்...