சிறப்புகள் அள்ளித்தரும் செங்கதிரோன்

உலகெலாம் படைத்த மூத்தோன் வாழ்க

உயிரெலாம் வணங்கும் அருளோன் வாழ்க

பொன்னிறம் ஒளிர உதித்தாய் வாழ்க

தன்னலமிலா தலைவன் வாழ்க!

நெற்றிப்பொட்டாய் தகிப்பவன் வாழ்க

ஒற்றைக்கால் தேரில் வருபவன் வாழ்க

முற்றிய நோயை நீக்குவான் வாழ்க

வெற்றிக்கு துணைவன் ஆதவன் வாழ்க!

மதிஒளி வழங்கும் ஆசான் வாழ்க

மனவொளி பரப்பும் சுடரே வாழ்க

அதிதியின் அழகுப்புதல்வன் வாழ்க

அகண்ட தீப செங்கதிர் வாழ்க!

காரிருள் விலக்கும் கதிரவன் வாழ்க

கர்ணன் போற்றும் தந்தையே வாழ்க

கருணையே, காந்தமே, சாந்தமே வாழ்க

காலத்தின் சாட்சியாய் நிலைப்பவன் வாழ்க!

தூயமணி மாலை போன்று

கதிர் கரம் சேர்ப்பாய் வாழ்க

தாய்முகம் கண்டு மலரும்

தாமரை மலர்கள் வாழ்க!

காலையில் தளிர்முகம் காட்டி

கடும்பகல் விழித்தீ மூட்டி

மாலையில் பொன்னாய் உருகி

விண்ணில் கலக்கும் சூரியன் வாழ்க!

தூயவர் நல்லிதயம் மகிழ

துலங்கிடும் ஒளியே வாழ்க

துஞ்சாத கண்கள் காட்டி

அஞ்சாது அறம்காப்பாய் வாழ்க!

நிலைக்கின்ற செல்வம் தழைக்க

கொடுக்க குறையாத அட்சயபாத்திரம் வாழ்க

மறைக்கின்ற பகைமை வீழ்த்தி

மலைக்கின்ற வாழ்வருளும் தேவா வாழ்க!

வாய்மையின் உருவே வாழ்க

வற்றாத நிதியம் வாழ்க

வள்ளல் கரங்கள் வாழ்க

வணங்கினார் உயர்ந்தார் வாழ்க!

தீமைகள் எரித்து அழித்து

நன்மைகள் வளர்ப்பாய் வாழ்க

நானிலத்தில் தர்மம் சூழ்ந்து

நற்குடி தழைக்க வாழ்த்துவோம் வாழ்க!

பொங்கல் பால்வளம் பொங்கி

வீட்டில் மகிழ்ச்சி செல்வம் தங்கட்டும்!

நாட்டில் அன்பும், அமைதியும் நிலவட்டும்!

ஏட்டில் எழுதாத சுவையும்

வாழ்வில் கூடட்டும்!

காட்டில் விளைந்த கரும்பின்

தத்துவம் உணரட்டும்!

உலக ஒளிவிளக்கு சூரியனால்

உயிர்கள் வாழட்டும்!

பசுமை பயிர்கள் செழித்து

பகுத்துண்ணும் தர்மம் பரவட்டும்!

- விஷ்ணுதாசன்

Related Stories:

>