×

ஆசான் ஆகிய அனுமன்

அனுமன் ஜெயந்தி
12-01-2021


னுமன் ஒப்பற்ற ஒருவர் ஆவார். அவரைப் போல இரண்டாவது நபர் இல்லை. ரிக், யஜுர், சாமம் ஆகிய மூன்று வேதங்களைக் கற்ற பண்டிதர் அவர். நான்முகனின் அருளால் பஞ்சத்வம் எனப்படும் மரணத்தை வென்றவர். ஞானம், பலம், வீரியம், சக்தி, ஐஸ்வர்யம், தேஜஸ் ஆகிய ஆறு குணங்கள் நிறைந்தவர். ஏழு குதிரைகளைத் தேரில் கொண்ட சூரியனின் சீடர். எட்டு அங்கங்கள் கொண்ட யோகத்தில் வல்லவர். ஒன்பது இலக்கணங்களில் தேர்ச்சி பெற்றவர். பத்து தலைகளை உடைய ராவணனின் எதிரி. இத்தகைய அனுமன் நமக்கு ஆரோக்கியம் நிறைந்த நீண்ட ஆயுளை அருளட்டும்.

தமிழகம் போன்ற பகுதிகளில் மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. பாரத தேசத்தின் வடக்குப் பகுதிகளில் சித்திரை மாதம் பௌர்ணமியை ஒட்டி இது கொண்டாடப் படுகிறது. வரும் ஜனவரி 12ம் தேதி, மார்கழி மூலத்தன்று தமிழகத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் எல்லாம் அனுமன் ஜெயந்தி விமரிசையாகக் கொண்டாடப்பட உள்ள நிலையில், ராமாயணத்தில் அனுமனின் முக்கியத்துவம் என்ன என்பதைக் காண்போம்.ராமாயணம் எழுதிய வால்மீகி, அதிலுள்ள ஒவ்வொரு காண்டத்துக்கும் பெயர் சூட்டி வந்தார். முதல் காண்டத்தில், ராமனின் பால்யப் பருவத்தில் (இளமைப் பருவத்தில்) நடைபெற்ற சம்பவங்கள் பேசப்பட்டிருப்பதால், ‘பால காண்டம்’ என்று அதற்குப் பெயர் சூட்டினார். அயோத்தியில் நடைபெற்ற சம்பவங்கள் இரண்டாம் காண்டத்தில் விளக்கப்பட்டிருப்பதால், அதற்கு ‘அயோத்தியா காண்டம்’ என்று பெயரிட்டார். காட்டில் நடந்த சம்பவங்களைக் கூறும் மூன்றாம் காண்டத்துக்கு ‘ஆரணிய காண்டம்’ என்று பெயரிட்டார். (ஆரணியம் என்றால் காடு). கிஷ்கிந்தையில் நடைபெற்ற சம்பவங்களைச் சொல்லும் நான்காம் காண்டத்துக்குக் ‘கிஷ்கிந்தா காண்டம்’ என்று பெயரிட்டார். ராம-ராவண யுத்தத்தை விளக்கும் ஆறாம் அத்தியாயத்துக்கு ‘யுத்த காண்டம்’ என்று பெயரிட்டார். ராம பட்டாபிஷேகத்துக்கு மேல் நடைபெற்ற சம்பவங்களை விளக்கும் ஏழாம் காண்டத்துக்கு ‘உத்தர காண்டம்’ என்று பெயரிட்டார்.

அனுமன் இலங்கைக்குப் பறந்து சென்று, சீதையைத் தேடிக் கண்டறிந்து, கண்டேன் சீதையை என ராமனிடம் மீண்டு வந்து சொல்லும் வரலாற்றை விளக்கும் ஐந்தாம் அத்தியாயத்துக்கு மட்டும் இன்னும் பெயர் சூட்டவில்லை. அதில் ராமனின் பங்கோ, சீதையின் பங்கோ பெரிதாக இல்லை. முழுக்க முழுக்க அனுமனின் பெருமையைத் தான் அந்த ஐந்தாம் அத்தியாயம் கூறுகிறது. அதனால் பலமுறை சிந்தித்த பின், ‘ஹனுமத் காண்டம்’ என்று அதற்குப் பெயர் சூட்டினார் வால்மீகி.“ராம! ராம! நிறுத்துங்கள்!” என்றொரு ஒலி கேட்டது. வால்மீகிக்கு எதிரே அனுமன் வந்து நின்றார். “என் பிரபுவான ராமனைப் பற்றிக் காவியம் எழுதிவிட்டு, அதில் ஒரு காண்டத்துக்கு என் பெயரை வைக்கிறீரே! இது நியாயமா? இதை நான் ஏற்க மாட்டேன்!” என்றார் அனுமன்.“ஐந்தாம் காண்டம் முழுக்க முழுக்க உனது பெருமைகள் தானே இடம்பெற்றுள்ளன. அதனால் ஹனுமத் காண்டம் என்ற பெயரே அதற்குப் பொருத்தமாக இருக்கும்!” என்றார் வால்மீகி. ஆனாலும், அனுமன் அதை ஏற்கவில்லை. சற்றே சிந்தித்த வால்மீகி, அனுமனிடம், “ராமனின் சரிதம் முழுவதும் அழகு வாய்ந்தது என்றாலும், இந்த  ஐந்தாவது காண்டம்தான் மிகவும் அழகாக உள்ளது. எனவே, ‘சுந்தர காண்டம்’ என்று அதற்குப் பெயர் சூட்டி விடுகிறேன்!” என்றார். அதை அனுமனும் ஏற்றார்.

ராமாயணத்தை அரங்கேற்றம் செய்தபின், அனுமனை அழைத்த வால்மீகி, “உனது அன்னை அஞ்ஜனா தேவி உன்னை உடனடியாகப் பார்க்க வேண்டுமாம்! நீ சிக்கிரம் போய் அவளைப் பார்த்து விட்டு வா!” என்றார். தன் தாயின் இருப்பிடத்துக்கு அனுமன் செல்ல, அவரைப் பார்த்து, “சுந்தரா! வா!” என்று அழைத்தாள் அஞ்ஜனா தேவி.“தாயே! என்னைச் சுந்தரன் என்று ஏன் அழைத்தீர்கள்?” என்று அனுமன் கேட்க, “உன் இயற்பெயரே சுந்தரன் தான்!” என்றாள் அஞ்ஜனா தேவி. “இந்திரன் வஜ்ராயுதத்தால் தாக்கிய போது உனது தாடை வீங்கியதால் உனக்கு அனுமன் என்ற பெயர் உண்டானது (வடமொழியில் ஹநு என்றால் தாடை). மாருதர் எனப்படும் வாயுவின் மகனானபடியால் உன்னை மாருதி என்றும் வாயுபுத்திரன் என்றும் சொல்கிறார்கள். அஞ்ஜனையின் மகனானபடியால் உன்னை ஆஞ்ஜநேயன் என்கிறார்கள். ஆனால் நீ பிறந்தபோது நான் உனக்குச் சூட்டிய பெயர் சுந்தரன் என்பதே!” என்றாள் அஞ்ஜனா தேவி.
“காண்டத்திலுள்ள அழகைச் சொல்வதற்காகச் ‘சுந்தர காண்டம்’ என்று பெயர் வைப்பதாகச் சொல்லிவிட்டு, முடிவில் ‘சுந்தரன்’ என்ற நம் பெயரிலேயே அந்தக் காண்டத்தை வால்மீகி அமைத்துவிட்டாரே!” என அப்போது தான் அனுமன் புரிந்து கொண்டார்.

ராமாயணத்திலேயே மிகவும் சிறப்பு வாய்ந்த பகுதியாக ‘சுந்தர காண்டம்’ கருதப்படுகிறது. சுந்தர காண்டத்தை மட்டும் பாராயணம் செய்தாலே முழுமையாக ராமாயணம் படித்த பலன் கிட்டுகிறது. ஏனெனில், ராமாயணத்தில் சுந்தர காண்டத்துக்கு முன் நடைபெற்ற சம்பவங்களை, அசோக வனத்தில் சீதையைச் சந்திக்கும்போது அனுமன் பாடுகிறார். சுந்தர காண்டத்துக்குப் பின் நடைபெற உள்ள சம்பவங்கள் திரிசடையின் கனவில் வருகின்றன. எனவே சுந்தர காண்டத்துக்குள்ளேயே முழு ராமாயணமும் அடங்கி விடுகிறது.
அனுமனின் பெருமையைக் கூறும் இந்த சுந்தர காண்டத்தின் சாரத்தை ஒரே பாடலில் வெகு அழகாகப் பாடியுள்ளார் கம்பர்:
“அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறாக ஆருயிர்க் காக்க ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் நன்மை அளித்துக் காப்பான்!”

ஐம்பூதங்களுள் ஒன்றான காற்றின் மகனாகிய அனுமன், ஐம்பூதங்களுள் ஒன்றான நீரை (கடலைத்) தாவிச் சென்று, ஐம்புதங்களுள் ஒன்றான வானத்தை மார்க்கமாகக் கொண்டு ராமனின் ஆருயிரான சீதையைக் காக்கச் சென்று, ஐம்பூதங்களுள் ஒன்றாகிய நிலத்தின் மகளான சீதையை அயலார் ஊரான இலங்கையில் கண்டு, அந்த இலங்கைக்கு ஐம்பூதங்களுள் ஒன்றான தீயை வைத்த அனுமன் நமக்கு அனைத்து நன்மைகளையும் தந்து காத்தருளட்டும்.

ராமாயணத்தை வேதாந்த தத்துவ நோக்கில் ஆராய்ந்தால், அனுமன் ஏன் இவ்வளவு பெருமை பெற்று விளங்குகிறார் என்பதை அறியலாம்.
ராமாயணம் - வேதாந்தம்
ராமன் - பரமாத்மா
சீதை    - ஜீவாத்மா
அசோக வனம் - நமது உடல்
இலங்கை - உலகியல் வாழ்க்கை
அயோத்தி - வைகுண்டம்
ராவணன் - நம் புலன்களும் மனதும்
விபீஷணன் - சத்துவ குணம்
சூர்ப்பணகை - ரஜோ குணம்
கும்பகர்ணன் - தமோ குணம்
அனுமன் - குரு
சீதையை இலங்கை அசோகவனத்தில் ராவணன் சிறை வைத்தாற்போல், ஜீவாத்மாவை புலன்களும் மனதும் இவ்வுலக வாழ்க்கையில் உடலினுள்ளே சிறை வைத்துள்ளன.விபீஷணனை விலக்கி விட்டு, சூர்ப்பணகையையும் கும்பகர்ணனையும் ராவணன் தன் அருகில் வைத்துக் கொண்டதுபோல், நம் புலன்களும் மனதும், சத்துவ குணத்தை விலக்கி விட்டு, ரஜோ, தமோ குணங்களைக் கைக்கொள்கின்றன.சீதை ராமனைப் பிரிந்து துன்பப்பட்டதுபோல், ஜீவாத்மாவும் பரமாத்மாவைப் பிரிந்து துன்பப்படுகிறார்.அந்நிலையில், ராமன் அனுமனைத் தூது அனுப்பியதுபோல், பரமாத்மா குருவை அனுப்பி வைக்கிறார்.அனுமன் சீதைக்கு ராமனின் முத்திரை மோதிரத்தை வழங்கியதுபோல், குரு ஜீவாத்மாவுக்கு இறைவனின் சங்கு சக்கர முத்திரைகளை வழங்கி, அனுமன் சீதா - ராமர்களை இணைத்து வைத்தது போல், குருவானவர் ஜீவாத்மாவையும் பரமாத்மாவையும் சேர்த்து வைக்கிறார்.இத்தகைய குரு ஸ்தானத்தில் அனுமன் இருப்பதால்தான் அவருக்கு இவ்வளவு பெருமையும் முக்கியத்துவமும் அளிக்கப்படுகிறது.

இந்த வேதாந்தக் கோணத்தில் ஆராய்ந்தால் அஞ்சிலே ஒன்று பெற்றான் என்ற பாடலுக்கும் வேறொரு பொருள் கிட்டுகின்றது.பஞ்ச சம்ஸ்காரம் - 1. சங்கு சக்கர முத்திரை தோளில் பொறித்தல், 2. திருமண் அணியும் முறையைக் கூறுதல், 3. எட்டெழுத்து மந்திரம் உபதேசம் செய்தல், 4. இறையடியவனாகப் பெயர் சூட்டுதல், 5. இறைவனுக்குப் பூஜை செய்யும் முறையை உபதேசித்தல் ஆகிய ஐந்து சடங்குகள்.அர்த்த பஞ்சகம் - 1. பரமாத்மாவின் தன்மை, 2. ஜீவாத்மாவின் தன்மை, 3. இறைவனை அடையும் வழியின் தன்மை, 4. இறைவனை அடையத் தடையாயிருப்பதன் தன்மை, 5. இறைவனை அடைவதால் பெறும் பலனின் தன்மை ஆகிய ஐந்து அர்த்தங்கள்.

ஐந்து மார்க்கங்கள் - 1. கர்மயோகம், 2. ஞானயோகம், 3. பக்தியோகம், 4. சரணாகதி, 5. ஆச்சாரிய நிஷ்டை (குருவிடம் சரண்புகுதல்) என முக்தி அடைவதற்கான ஐந்து வழிகள்.
ஐந்து நிலைகள் - 1. வைகுண்டம், 2. பாற்கடல், 3. அவதாரங்கள், 4. அந்தர்யாமி (உள்ளிருக்கும் இறைவன்), 5. அர்ச்சாவதாரம் (கோயிலில் உள்ள இறைவன்) என இறைவனின் ஐந்து நிலைகள்.
ஐந்து இலக்குகள் - 1. சொர்க்கம், 2. நரகம், 3. பித்ருலோகம், 4. ஆத்ம அனுபவம், 5. வைகுண்டத்தில் இறைவனை அடைதலாகிய முக்தி என ஜீவாத்மா அடைகின்ற ஐந்து
விதமான இலக்குகள்.

இப்போது அஞ்சிலே ஒன்று பெற்றான் என்ற பாடலை இவற்றோடு பொருத்திப் பார்த்தால், ஐந்து சடங்குகளுள் ஒன்றான எட்டெழுத்து மந்திரத்தில் பிறக்கும் குருவானவர் (அஞ்சிலே ஒன்று பெற்றான்), தன் சீடனை ஐந்து அர்த்தங்களுள் ஒன்றாகிய முக்தித் தடையைத் தாண்ட வைத்து (அஞ்சிலே ஒன்றைத் தாவி), முக்திக்கான ஐந்து மார்க்கங்களுள் ஒன்றான குருவிடம் சரண்புகுதலை வழியாகச் சீடனுக்குக் காட்டி (அஞ்சிலே ஒன்றாக ஆருயிர்க் காக்க ஏகி), இறைவனின் ஐந்து நிலைகளுள் ஒன்றான அர்ச்சாவதாரத்தில் சீடனுக்கு அன்பை உண்டாக்கி (அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கை), ஜீவாத்மா அடையும் ஐந்து இலக்குகளுள் ஒன்றான முக்தியில் சீடனைக் கொண்டு சேர்க்கிறார் (அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் நன்மை அளித்துக் காப்பான்).இத்தகைய குரு ஸ்தானத்தில் இருக்கும் அனுமனை இந்த அனுமன் ஜெயந்தி நாளில் வழிபடுவோர்க்கு குருவருளும் திருவருளும் பரிபூரணமாய்க் கிட்டும் என்பதில் ஐயமில்லை.

குடந்தை உ.வே. வெங்கடேஷ்

Tags : teacher ,
× RELATED அரசு ஊழியர்கள் மீது கரிசனை போல...