உலகளாவிய சூரிய வழிபாடு (Sun Worship in Ancient World)

கதிரவன் என்ற ஒளிப் பிழம்பை ஆதிகாலம் தொட்டு மக்கள் அச்சத்தோடும் ஆனந்தத்தோடும் வணங்கி வந்தனர். ஞாயிறு வழிபாடு அன்று தொட்டு இன்றுவரை நடத்தப்பெறுவதற்கு காரணங்கள் இரண்டு. ஒன்று இருளைக் கண்டு அச்சம் கொண்ட மனிதனுக்கு ஒளி நம்பிக்கை ஊட்டியது. இது அன்றாட நிகழ்வாகும். இரண்டாவது மனிதகுலம் ஓரிடத்தில் தங்கி பயிர் செய்யத் தொடங்கியதும் வேளாண்மைக்கு கதிரொளி மிகவும் இன்றியமையாதது என்பதை உணர்ந்தான். இதனால், வேளாண்மை செழிக்க மழையையும் வெயிலையும் அவன் போற்றி வணங்கினான்.

வேளாண் கடவுளான கதிரவன்உலகெங்கும் வேளாண்மை செழித்த நாடுகளில் கதிரவன் வழிபாடு என்பது அன்றாடக் கடமைகளில் ஒன்றாகவே காணப்பட்டது. வேளாண் திருநாளான பொங்கல் திருநாள் கதிரவனுக்கு நன்றி தெரிவிக்கும் நாளாகக் கொண்டாடப்படுகிறது. சிலர் மறுநாள் கொண்டாடப்படும் மாட்டுப் பொங்கலைக் கதிரவனுக்குக் கொண்டாடப்படும் திருநாளாகக் கருதுகின்றனர். இன்றைக்கும் சூர்ய நமஸ்காரம், சந்தியா வந்தனம் என்ற பெயர்களில் அன்றாடக் கடமையாக இருந்துவருகின்றது. காயத்ரி ஜபம் மற்றும் யோகப் பயிற்சியிலும் கதிரவன் வழிபாடு இடம்பெற்றுள்ளது. தமிழகக் கிராமங்களில் பெரியவர்கள் காலையில் பல் தேய்த்து முகம் கழுவியதும் காபி குடிப்பதற்கு முன்பாக சூரியனைப் பார்த்து வணங்கும் மரபு காலம் காலமாக இருந்துவருகிறது.

இன்கா இனத்தவர் மேட்டுப் பகுதியில் வாழ்ந்தவர்கள் ஆவர். அவர்களுக்கு சோளமும், தினையும் விளைய நல்ல வெயில் தேவைப்பட்டது. அவர்கள் மழையைத் தருவதும் நல்ல வெயில்தான் என்று நம்பினர். எனவே கதிரவனை தமது முழுமுதல் கடவுளாக வணங்கினர். ஆப்பிரிக்கரும் வெயிலின் மதிப்பை நன்கு உணர்ந்த வேளாண் குடிகள் என்பதால் கதிரவனை முக்கியக் கடவுளாகக் கொண்டனர். ஐரோப்பாவில் மனித உழைப்பும் வேளாண்மையும் இணைந்திருந்த காலத்தில் (தொழிற்புரட்சிக்கு முன்பு) கதிரவனைக் கடவுளாகக் கருதினர்.

உரோமர்களும் கிரேக்கர்களும் தமது கடவுள் கூட்டத்தில் கதிரவனை முதன்மைக் கடவுளாகக்கொண்டிருந்தனர். ரோமர்கள் இலத்தீன் மொழியில் சோல் (sol) என்று சூரியனையும் இக்னி (igni) என்று நெருப்பையும் அழைத்தனர். ஆங்கிலத்தில் இச்சொல் ignite என்று மருவியது. igniயின் மருவிய வடிவமே சமஸ்கிருதத்தில் அக்னி என்று வழங்குகிறது. கிரேக்கத்தில் அப்போலோ சூரியக் கடவுளாகவும் இணைந்து இரட்டைக் குழந்தையாகப் பிறந்த தங்கையான அர்டேமிஸ் வெண்ணிலவாகவும் வழங்கப்பட்டது. வேளாண்மைக்கு (மழைக்கு) அப்போலோவும் வேட்டைக்கு அவனது தங்கை அர்டேமிசும் தெய்வங்களாக விளங்கினர்.

சூரியனை வழிபட்ட டிசம்பர் 25ஆம் நாள்ஐரோப்பிய நாடுகளில் கிறிஸ்தவம் பரவுவதற்கு முன்பு இருந்த நாட்டுப்புறச் சமயங்களில் கதிரவன் வழிபாட்டு விழா (Feast of unconquered Sun) ஆண்டுதோறும் டிசம்பர் 25 ஆம் நாள் கொண்டாடப்பட்டது. இதனைக் கிறிஸ்துவ சமயம் தனதாக்கிக் கொண்டது. இதுபோல வசந்த விழாவை ஈஸ்டர் (புதுப் பிறப்பு விழா) என்று பெயர் மாற்றியது.

உலகெங்கும் சமய விழாக்களின் பெயர் மாற்ற நடைமுறை வழக்கில் உள்ளதைக் காணலாம். அதாவது சமயம் மறைந்தாலும் சமய விழாக்கள் இன்னொரு பெயரால் அழைக்கப்பட்டு நின்று நிலைக்கும். மக்களுக்கு சமய நடவடிக்கைகளும் செயற்பாடுகளும் முக்கியமே தவிர அவை என்ன பெயரில் வழங்கப்படுகின்றன என்பது முக்கியமல்ல. சமயம் மாறினாலும் சம்பிரதாயங்கள் மாறாது. பெயர் மட்டுமே மாற்றப்படும். ஒரு சமயமும் இந்தியாவிலும் இவ்வாறு பௌத்தர்கள் கொண்டாடிய விழாக்களும் சமய நடைமுறைகளும் சைவ, வைணவ எழுச்சிக்குப் பிறகு வைதிக சமய விழாக்களாக மாறியிருப்பதைக் காண்கிறோம்.

சௌரவம் என்னும் சூர்ய மதம்சூரியனை வழிபடு கடவுளாகக் கொண்டு இந்தியாவில் அறுவகைச் சமயங்களில் ஒன்றான ஸௌரம் என்ற மதம் விளங்கியது. அக்காலத்தில் சூரியனார் கோயில் என்று தனிக் கோயில்கள் கட்டப்பட்டன. பதிமூன்றாம் நுற்றாண்டுக்கு பிறகு ஸௌரம் மறையத் தொடங்கியது. அதன் பிறகு சூரியனார் கோயில்கள் சூரிய நாராயணர் கோயில்கள் என்றும் சிவன் கோயில்கள் என்றும் அழைக்கப்பட்டன. ஒரிசா கலிங்கா ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் சூரியனுக்கென்று தனிக்கோயில்கள் கட்டப்பட்டு பின்னர் அவையும் மதம் மாற்றப்பட்டன.

ஈரான், ஈராக், எகிப்து போன்ற நாடுகளில் சூரிய வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. ஈரானில் நெருப்பை, கதிர் ஒளியை வணங்கியோர் ஜோராஸ்திரியர் எனப்பட்டனர். இவர்கள் நெருப்பை ஒளியின் வடிவமாக வணங்கிவந்தனர். பின்பு இவர்கள் கட்ச் தீபகற்பம் வழியாக

இந்தியாவுக்குள் வந்து பார்சிகள் என்ற பெயரில் ராஜஸ்தான், பஞ்சாப், டில்லி பகுதிகளில் தனி இனமாக வாழ்ந்தனர். கட்ச் தீபகற்பத்தில் தங்கியவர்கள் சௌராஷ்டிரர் என்று பெயர் பெற்றனர். இவர்கள் இந்து சமய நடைமுறைகளை ஏற்றுக்கொண்டு தமது கடவுளின் பெயரைச் சூரியநாராயணர் என்றாக்கிக் கொண்டனர். இந்தோ இரானியர் என்ற பேரினத்தவர் சூரிய வழிபாட்டுக்கு பழகியிருந்தனர். ஆப்பிரிக்காவில் கதிரவனை கடவுளாக மதித்துப் போற்றியதற்கு முக்கிய காரணம் அங்கு வேளாண்மை செழித்திருந்ததால் ஆகும். கிழக்கு ஆப்பிரிக்காவில் குறிப்பாக எகிப்தில் கதிரவனை ரே என்ற பெயரில் அழைத்தனர்.

காலை இளங்கதிரவனை கேபேர் (kheper) என்றும் உச்சிக் கதிரவனை ரே (Rae) என்றும் மாலை அந்திச் சூரியனை அந்துன் (Antun) என்றும் அழைத்தனர். வல்லூறு முகங்கொண்ட கதிரவனை தலைக்குப் பின்னால் ஒளிக்கதிர்களோடு வரைந்து வழிபட்டு வந்தனர். நைல் நதியின் கரையெங்கும் கதிரவனுக்கென்று தனிக்கோயில்கள் அமைத்தனர். எகிப்திய நாகரிகத்தில் கதிரவன் வழிபாடு தனித்துவமானது.

கதிரவன் வழி வந்த மன்னர் பரம்பரைபழங்காலத்திலிருந்து அதிகாரம் மிக்க மன்னர்களை தெய்வ குலத்தவர் என்றும், சூரியகுலம், சந்திரகுலம் என்றும் அழைப்பது மரபு. கதிரவன் யாராலும் தோற்கடிக்க முடியாதவன் என்பதால் தங்களை கதிரவனின் பரம்பரை என்று அழைத்துக் கொள்வதை பெருமையாக பண்டைய இன மக்கள் கருதினர். மூவேந்தர்களில் சோழர்கள் தங்களை சூரியகுலத்தவர் என்றனர்.

பாண்டியர் தங்களை சந்திரகுலத்தவர் என்றனர். சேரர், வானவர் பரம்பரையினர் என்றும் அழைத்தனர். இளங்கோவடிகள் தான் இயற்றிய சிலப்பதிகாரம் என்னும் குடிமக்கள் காப்பியத்தில் இறை வாழ்த்துப் பகுதியில்ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்

காவிரி நாடன் திகிரி போற் பொற்கோட்டுமேரு வலந்திரித லான்என்று கதிரவனை வழிபடும் முறையைப் பின்பற்றுகிறார்.

எகிப்து, ஜப்பான் போன்ற பழைய அரச பரம்பரை இருந்த நாடுகளில் மன்னர்கள் தம்மை சூரிய குலத்தவர் என்று குறிப்பிட்டனர். இன்றுவரை அறுந்து போகாமல் தொடர்ந்து வரும் ஜப்பான் நாட்டின் அரச வம்சத்தினர் தம்மைச் சூரிய குலத்தில் உதித்தவர் என்று நம்புகின்றனர். அதனால், ஜப்பான் நாடும் சூரியன் நாடு (land of the rising sun) எனப்படுகிறது. ஜப்பானில் பவுத்தம் பரவுவதற்கு முன்பிருந்த பூர்வீகச் சமயமான ஷிந்தோ சமயம் கதிரவனை அமதெரெசு (Amataresu) என்ற பெயரில் கடவுளாகக் கொண்டாடுகிறது.

இந்நாட்டில் பவுத்த சமயத்தில் கதிரவனை ஜுனி தென் என்கின்றனர்.கதிரவன் ஆணா? பெண்ணா?

இந்தியாவில் கதிரவன் ஆணாகக் கருதப்படுகிறான். ஆனால், பல நாடுகளில் பெண்ணாகக் கருதி வழிபடும் மரபு உள்ளது. இலத்தீனில் கதிரவனை பெண்ணாகக் குறிக்கும் Sol என்ற பெயரால் அழைக்கின்றனர். இச்சொல்லில் இருந்து ‘சோலார்’ என்ற ஆங்கிலச் சொல் உருவாகியது. கிரேக்கத்தில் அப்போலோ என்ற பெயரில் சூரியனை ஆணாகக் கருதி வணங்கினர். இருப்பினும் அங்கு Helius என்ற பெயரில் கதிரவனை பெண்ணாகவும் கருதும் மரபு இருந்தது. இச்சொல்லில் இருந்து கதிரவனில் இருக்கும் வாயு ஹீலியம் வாயு என்று பெயர் பெற்றது.

சிரியாவில் அரின்னா (Arinna) என்றும், இன்கா இனத்தவர் இன்தி (Inti) என்றும், மேற்கு ஆப்ரிக்காவில் லிசா என்றும் ஈரான், பாரசீகம் மித்ராஸ் என்ற பெயரிலும் பெண்ணாகவும் சூரியக் கடவுள் வணங்கப்படுகிறார்.  மெசபடோமியாவில் உது என்றும் ஷாமாஷ் என்றும் சூரிய தேவதை என்றும் அழைக்கப்படுகிறாள். ஸ்லேவிக் இனத்தவர் ஒளி என்ற பொருளில் சூர்யாவை ஜோர்யா என்கின்றனர். ஜெர்மனியில் வாழ்ந்த பழங்குடியினர் சுனோ என்ற பெயரில் சூரியக் கடவுளை பெண்ணாகக் கருதி வழிபட்டு வந்தனர். சந்திரனை ஆணாகக் கருதினர்.

கதிரவனின் பண்புகளும் செயற்பாடும்கதிரவனை ஒளி, இசை, உண்மை, அறிவு, ஞானம், இளமை, விளையாட்டு, நீதி, அதிகாரம், அரசாங்கம் என்ற பல பண்புகளின் சின்னமாக கொண்டு போற்றினர். கதிரவன் அனைத்து உலகங்களின் தலைவனாகக் கருதப்பட்டான். அவனே மேல் உலகங்கள் மற்றும் கீழ் உலகங்களின் தலைவன் ஆவான். மனிதகுலம் தோன்றிய காலத்தில் அவன் படகில் வலம் வந்தான். பின்னர் மனிதகுலம் நாகரிகம் அடைந்ததும் அவன் குதிரைகள் பூட்டிய தேரில் வளம் வரத் தொடங்கினான்.

இத்தகைய மாற்றங்களே இறைவன் மனிதனைப் படைக்கவில்லை. மனிதனே இறைவனைப் படைத்தான் என்ற கருத்துக்கு வழி வகுக்கிறது. நோர்ஸ் பாரம்பரியத்தில் அவனுடைய தேருக்கு அரவக், அட்ச்வித் என்று இரண்டு குதிரைகள், இந்தோ ஐரோப்பிய கதைகளில் நான்கு குதிரைகள் (பிரியோஸ், ஏயியோஸ், ஏதான் ஃப்லேகொன்). இந்தியாவில் ஏழு வர்ணத்துக்குமாக ஏழு குதிரைகள் உண்டு.கதிரவன் பகலில் பூவுலகிலும் இரவில் பூமிக்குக் கீழே உள்ள பாதாள லோகத்திலும் தன் தேரில் வலம் வந்து அரசனாகத் திகழ்கிறார் என்று ஆதிகாலத்தில் மக்கள் நம்பினர்.

இந்தியாவில் சூரியனார் வழிபாடும் கோயில்களும் இந்தியப் புராணங்கள் காஷ்யப முனிவருக்கும் அதிதிக்கும் பிறந்தவர் என்று கதை சொல்கிறது. சூரியனுக்கு சந்தியா, சாயா என்றும் உஷா, பிரத்யுஷா என்றும் மனைவிகள் உண்டு. சூரியனின் புதல்வர்களாக ஒரு பட்டியல் நீளுகிறது. ஸ்ராத்த தேவா, மனு, யமா, யமி, அஷ்வின், ரேவந்த், சனி, தபதி, சுக்கிரீவன் மற்றும் கர்ணன் ஆவர். ராஜஸ்தான், குஜராத், மத்தியபிரதேசம், ஒடிஸா, பிஹார், உத்தரப் பிரதேசம், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் சூரியன் முழுமுதல் கடவுகளாக வழிபடப்பட்டான். மாதங்களில் ஆவணி மாதம் அவனுக்குரியது. அவன் சிம்ம ராசியில் வலம்வரும் ஆவணி மாதத்தில் அந்த ராசியில் ஆட்சி நாயகனாகவும் விளங்குகிறான்.

கிழமைகளில் ஞாயிற்றுக்கிழமை சூரியனுக்குரியதாகும். அன்றைய நாள் சூரிய ஹோரையில் தொடங்கும். ராசிக் கட்டத்தில் மேஷத்தில் அதாவது ஆண்டின் தொடக்கத்தில் சித்திரை மாதம் முழுவதும் சூரியன் உச்சத்தில் இருக்கிறான். மகர சங்கராந்தி, ரத சப்தமி, அட்சய திருதியை போன்றவை சூரியனின் பெயரால் கொண்டாடப்படுகின்ற விழாக்கள் ஆகும்.

பவுத்தத்தில் கதிரவன் வழிபாடுபவுத்த சமயம் ஏழை எளிய மக்களை தனது இலக்காகக்கொண்டு சமயத்தைப் பரப்பியது. அதனால் வேளாண்குடிகளும் கைவினைக் குடிகளும் பவுத்த சமயத்தைத் தழுவினர். பவுத்தம் பரவிய கம்போடியா நேபாளம், தாய்லாந்து போன்ற நாடுகளிலும் வேறு மாநிலங்களில் தேவராஜனான இந்திரனுக்கும் சூரியனுக்கும் தனிக் கோயில்களை அமைத்தனர். எல்லோரா குகையில் சூரியனின் தனி உருவங்கள் வரையப்பட்டுள்ளன. ஆந்திராவில் காகுளம் அருகே அரசவல்லி நேர ஊரில் சூரியனுக்கென்று தனிக்கோயில் உண்டு.

கலிங்க நாட்டில் கலிங்கப்பட்டினம் என்ற கடற்கரை நகரில் சூரியனுக்கு தனிக் கோயில் உள்ளது. மெகஸ்தனிஸ் தனது பயணக் குறிப்புகளில் இக்கடற்கரைக் கோயில் பற்றி குறிப்பிட்டுள்ளார். ஒரிசாவில் உள்ள கோனார்க், சூரியனார் கோயில் பலருக்கும் தெரிந்த கோயில் ரத வடிவில் அமைந்த கோயிலாகும். இந்த ரதத்தை ஏழு குதிரைகள் இழுக்கின்ற வடிவில் அமைந்துள்ளது. பன்னிரண்டு சக்கரங்கள் இந்த ரதத்திற்கு உள்ளன.

கோட்டயத்தில் ரவிமங்கலம் என்ற ஊரில் ஆதித்யபுர சிவன் என்ற சூரியனார் கோயில் உண்டு. இன்று அக்கோயில் சிவன் கோயிலாக உள்ளது.

ஒரிசா, கலிங்கா, கேரளா ஆகிய மாநிலங்களில் பவுத்தம் செல்வாக்குடன் திகழ்ந்த காரணத்தால் அங்கெல்லாம் சூரியனார் கோயில்கள் கட்டப்பட்டன.

ஐரோப்பாவில் கதிரவன் வழிபாடுபண்டைய காலத்தில் ஐரோப்பிய மக்களிடம் கதிரவன் வழிபாடு செழித்துக் காணப்பட்டது. லித்துவேநியரும், லாத்வியரும் Saule என்ற பெயரில் கதிரவனை வணங்கினர். ஃபின்லாந்தை சேர்ந்த ஃபின்னிஷ் இனத்தவரும் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்தவரும் Beime (beams) என்ற பெயரில் கதிரவனை அழைத்தனர். ஆஸ்திரேலிய பழங்குடிகள் bila என்றும் walo என்றும் கதிரவனைக் குறிப்பிட்டனர்.

வேட்டைத் தொழிலும், மீன்பிடிதொழிலும் சிறப்புற்று விளங்கும் குறிஞ்சி (மலை) மற்றும் நெய்தல் (கடற்கரை) பகுதிகளில் கதிரவன் வழிபாடு செல்வாக்கு  பெறவில்லை. எனவே, வேளாண்மை சிறந்து விளங்கும் பழனம் எனப்படும் மலையடிவார  விளைநிலங்கள் நிறைந்த பகுதியிலும் ஆற்றுப் பாசனமும் நெல் வயல்களும்  நிரம்பிய மருத நிலப்பகுதியிலும் மேட்டு நிலங்களிலும் கதிரவனுக்கு தனிக்கடவுள் தகுதி கிடைத்தது. உலகெங்கும் வேளாண் குடியினர் கதிரவனை கொண்டாடி  மகிழ்ந்தனர்.

ஆதியில் இருட்டின் அச்சத்தைப் போக்க வந்த ஒளி தேவதையாக கதிரவனை வணங்கி மகிழ்ந்தனர். வேளாண்மை செழித்திருந்த காலத்தில் கதிரவனை மக்கள் மழைக்கும் வெயிலுக்கும் உரிய கடவுளாகப் போற்றி வணங்கினர். சூரிய வழிபாடு இயற்கை வழிபாட்டின் முக்கிய அம்சமாகும். சூரியன், சந்திரன், மழை, காற்று, நெருப்பு என அக்காலத்தில் மக்கள் இயற்கையைத் தெய்வமாகக் கொண்டு வணங்கி வந்தபோது தோன்றிய சூரிய வழிபாடு இன்றும் நிலைத்துள்ளது.

முனைவர் செ. ராஜேஸ்வரி

Related Stories: