கல்யாண பசுபதீஸ்வரர்

கரூர்

பசுபதீஸ்வரர், பசுபதி நாதர், பசுபதி, ஆனிலையப்பர் என்ற பெயர்களில் இங்கே மூலவர் வணங்கப்படுகிறார். சோழர்கள் காலத்தில் வீரசோழபுரம் என்றும் வஞ்சி மரங்கள் நிறைந்திருந்ததால் வஞ்சுளாரண்யம் எனவும் மலை, காடு, ஆறு, தீர்த்தம், நகரம், கோயில் போன்ற ஆறு மங்கலப் பொருட்கள் உள்ள ஊராதலால் ஷண்மங்கல க்ஷேத்திரம் என்றும் இத்தலம் வழங்கப்பட்டது. கோயிலுக்குள் நுழைந்ததும் காணப்படும் கல்தூணின் ஒரு பக்கத்தில் புகழ் சோழ நாயனார் கையில் ஒரு தலை தாங்கிய தட்டுடன் நிற்கும் சிற்பம் உள்ளது. மறுபக்கத்தில் காமதேனு சிவலிங்கத்தை நாவால் வருடுவது போலவும் அதன் பின் கால்களுக்கிடையே பால் மடிக்கு நேர் கீழே இத்தல ஈசன் வீற்றிருக்கும் சிற்பமும் தலபுராணத்தை நினைவுறுத்துகின்றன.

திருக்கோயிலின் உட்புற நுழைவாயிலில் உள்ள நாலாயிர சக்கர பந்தனம், தரிசிக்க வேண்டிய ஒன்று. இங்கு ஈசன் சுயம்பு திருமேனியாக திருவருள் புரிகிறார். ஈசனின் திருமேனி சற்று சாய்வாக உள்ளது. சதுர வடிவுடைய ஆவுடையார் மேல் ஈசன் அருள்கிறார். காமதேனுவால் வழிபட்ட ஈசனாதலால் இக்கோயில் மூலக் கருவறையில் உள்ள லிங்கத்திருமேனியில் காமதேனுவின் கால் குளம்பு பட்ட குழிவான தழும்பு உள்ளது. ஆனிலையப்பரை வழிபட்டால் மனத்துயரங்கள் நீங்கும். திருமண வரத்தோடு, குழந்தை வரமும் பெறலாம். கருவூரார் இக்கோயிலின் தென்மேற்கு மூலையில் கோயில் கொண்டுள்ளார்.

பற்றற்றவராக வாழ்ந்த அவர் மீது சிலர் மன்னரிடம் குறை கூற, மன்னன் கருவூராரின் பெருமை அறிந்து குறை கூறியவர்களைத் தண்டித்தான். அவர்கள் தொல்லை தரவே தைப்பூசத்தன்று கருவூரார் ஆனிலையப்பருடன் இரண்டறக் கலந்தார் என தலபுராணம் கூறுகிறது. மாசி மாதத்தில் ஐந்து நாட்கள் ஈசனைத் தன் கிரணங்களால் ஆராதிக்கிறான் ஆதவன். இத்தலத்தில் சௌந்தரநாயகி, கிருபா நாயகி என இரு அம்பிகையர் அருள்புரிகின்றனர். பங்குனி மாதம் ஆறாம் நாள் பசுபதீஸ்வரர், சௌந்தரநாயகியின் ஊரான அப்பிபாளையத்துக்கு எழுந்தருளும் உற்சவம் விமரிசையாக நடக்கிறது. வைணவத்தில் ஆண்டாள் போல, இந்த தேவி அப்பிபாளையத்தில் பிறந்து தவமிருந்து பசுபதீஸ்வரரை மணந்ததாக வரலாறு.

இத்தல தேவியருள் ஒருவரான கிருபாநாயகியின் திருவடியில் சிங்க உருவம் பதிக்கப்பட்டது. தேவி மத்ஸிம்ஹாஸனேஸ்வரி என்பதை உணர்த்தும் குறிப்பு இது. நான்முகனுக்கு தன் படைப்புத் திறனால் ஏற்பட்ட கர்வத்தை அடக்க நினைத்த ஈசன் காமதேனுவை படைக்கும் தொழில் செய்ய வைத்தார். அதன் மூலம் நான்முகனின் அகந்தை நீங்கிய தலம் இது. தலவிருட்சம், வஞ்சி மரம். தடாகைக் குளமும் அமராவதி நதியும் இங்கே இரு தீர்த்தங்கள். திருஞான சம்பந்தரால் தேவாரத்திலும் கருவூர் சித்தரால் திருவிசைப்பாவிலும் அருணகிரிநாதரால் திருப்புகழிலும் பாடப் பெற்ற தலம். இத்தல மயில் மீது வீற்றிருக்கும் ஆறுமுகப் பெருமான் அபூர்வ வடிவம் கொண்டவர். மேலும் அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப்பட்டவர்.

திருப்பரங்குன்ற தெய்வானை-முருகப்பெருமான் திருமண அழைப்பிதழ் முசுகுந்த சக்ரவர்த்திக்கு அனுப்பப்பட்டதாக புராணச் செய்தி கூறுகிறது. அந்த முசுகுந்த சக்ரவர்த்தி எழுப்பிய ஆலயம் இது என்பதிலிருந்தே இத்தலத்தின் பழமை நமக்கு விளங்குகிறது. இங்குள்ள நூற்றுக்கால் மண்டபம், புகழ்ச்சோழர் மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. சோழர்கள் ஐந்து தலைநகரங்களை உருவாக்கி தம் பரந்த தேசத்தை ஆண்டார்கள். அவற்றில் கரூரும் ஒரு தலைநகரமாகத் திகழ்ந்திருக்கிறது. வேண்டுதல் நிறைவேறியவர்கள் இத்தல ஈசனுக்கும் அம்பிகைகளுக்கும் வேஷ்டி, புடவை சாத்தி நன்றி செலுத்துகிறார்கள்.

Related Stories: