×

சொர்ணாகர்ஷ்ண பைரவர்

பைரவர் திகம்பரராகத் திகழ்ந்த போதிலும் அன்பர்களுக்குப் பொன்னையும் பொருளையும் அள்ளித்   தருபவர். பண்டை நாட்களில் அரசர்கள் பொக்கிஷ சாலைகளில் பைரவரை நிறுவிச் சிறப்புப் பூசைகள் செய்து வழிபட்டனர். அதனால் நிதிச் சாலையில் பொன் குவிந்து கொண்டேயிருக்கும் என்பது நம்பிக்கையாகும். அவர் பொன்னை இழுத்துத் தருபவர் என்னும் பொருள்பட  ‘‘சுவர்ண ஆகர்ஷ்ண  பைரவர்’’ என்று அழைக்கப்படுகின்றார்.

தத்துவநிதி என்னும் நூலில் சுவர்ணாகர்ஷண பைரவரைப்  பற்றிய விளக்கம் உள்ளது இதன்படி :- இவர் (பொன்) மஞ்சள் நிறம் கொண்டவர். மஞ்சள்நிறப் பீதாம்பர ஆடைகளை அணிந்தவர். மூன்று கண்களும் நான்கு கரங்களும் கொண்டவர். மாணிக்க மணிகள் இழைத்த பொன்னாலான அட்சய பாத்திரம் ஏந்தியவர். இரும்பு ஏர், சூலம், சாமரம், தோமரம்(ஈட்டி) ஆகியவற்றைத் தரித்தவர். அனைத்து தேவர்களாலும் வணங்கப்படுபவர். எல்லையில்லா மகிழ்ச்சியில் திளைப்பவர். சகல சித்திகளையும் அருள்பவர் ஆவார்.

மகாலட்சுமி மந்திரகோசம் என்ற நூலில் சுவர்ணாகர்ஷண பைரவருக்கான மந்திரம் யந்திரம்  முதலியன விரிவாகக் கூறப்பட்டுள்ளன. இதில் சுவர்ணாகர்ஷண பைரவர் தேவியைத் தனது மடிமீது அமர்த்திக் கொண்டுள்ளார். பொன் நிறமாகப் பிரகாசிக்கும் அவள் ஸ்வர்ணா என்றும் சுவர்ணபைரவி என்று அழைக்கப்படுகிறாள்.

இவள் சகல அணிமணிகளைப் பூண்டவளாகவும் பொன் கொட்டும் குடம், தாமரை, அபயமுத்திரை தரித்தவர்களாவும் பைரவரைத் தழுவிக் கொண்டு இடதுபாகத்தில் வீற்றிருப்பவளாகவும் தியானிக்கப்படுகிறாள். சொர்ணாகர்ஷ்ணண பைரவர் - பைரவிக்குரிய யந்திர ‘‘ச்ரேச்வரி’’ என்றழைக்கப்படுகிறது.

Tags : Sornakrishna Bhairav ,
× RELATED சொர்ணாகர்ஷ்ண பைரவர்